2015 ஆம் ஆண்டு மொழிபெயர்ப்புக்கான சாகித்ய அகாதமி விருது திருமதி கௌரி கிருபானந்தனுக்கு வழங்கியதை நாம் பிப்ரவரி குவிகம் இதழிலேயே கூறினோம்.
அந்த விருது வழங்கும் விழா இந்த ஆகஸ்ட் மாதம் 4 ந் தேதி மணிப்பூரின் தலைநகர் இம்பாலில் நடைபெற்றது.
தெலுங்கில் வோல்கா என்பவர் எழுதிய கதையை மீட்சி என்ற தலைப்பில் எழுதியதற்காகக் கிடைத்த விருது இது இதற்காக கௌரி கிருபானந்தனை எத்தனை முறை பாராட்டினாலும் தகும்.
(ஆகஸ்ட் 7 அன்று சென்னையில் நடந்த ஒரு விழாவில் எடுத்த புகைப்படம் )
மணிப்பூரில் சாகித்ய அகாதமி நிகழ்வு
இந்திய அரசினால் 1954ல் இலக்கியத்திற்காக ஒரு தேசீய அமைப்பாக தொடங்கப்பட்ட சாகித்ய அகாதமி இந்திய மொழிகளில் படைப்பு உலகத்திற்கு ஒரு சீரிய பணியை ஆற்றி வருகிறது. இடையிடையில் பல விவாதங்களுக்கும் உள்ளாகி வருகிறது.
அகாதமி யின் முக்கியச் செயல்பாடுகளுகளில் ஒன்றாக ஆங்கிலம் மற்றும் 23 இந்திய மொழிகளில் படைப்பு, இளைஞர்கள் படைப்பு, குழந்தைகளுக்கான இலக்கியம் மற்றும் மொழிபெயர்ப்பு என்று நான்கு விருதுகள் ஆண்டுதோறும் வழங்கப் படுகிறது.
அகாதமி யின் ஒரு சில நிகழ்ச்சிகளில் பார்வையாளனாகக் கலந்துகொள்ளும் வாய்ப்பு அவ்வவ்போது? கிடைக்கும். 2015 ஆண்டிற்கான மொழிபெயர்ப்பு விருது வழங்கும் விழா மணிப்பூர் மாநிலத்தில் இம்பால் நகரத்தில் ஆகஸ்ட் மாதம் 4 தேதி நடைபெற்றது. விருது வழங்கும் நிகழ்ச்சியைத் தொடர்ந்து 5 ஆம் தேதி கௌரவிக்கப்பட்ட மொழிபெயர்பாளர்கள் உரை மற்றும் ‘அபிவ்யக்தி’ என்னும் நிகழ்வின் முதல் பகுதியான கவிதை வாசிப்பு நடைபெற்றது. ஆறாம் தேதி நிகழ்வுகளான சிறுகதை வாசிப்பு, நான் எழுதுவதற்கான தூண்டுகோல் மற்றும் கவிஞர்கள் சந்திப்பு ஆகிய நிகழ்ச்சிகளைக் காண இயலவில்லை.
மகாராஜா சந்த்ரகீர்த்தி அரங்கில் அரங்கிலும் வெளியிலும் அருமையான அலங்காரங்கள். நிகழ்ச்சி தொடங்கும் முன் நடந்த மணிப்பூரின் பரம்பரிய கலையான நடனமாடும் தாள இசைக்கலைஞர்களின் நிகழ்ச்சி (‘பங்க் சோலோம்’) கண்ணிற்கும் காதிற்கும் நல்ல விருந்தாக இருந்தது. அங்கீகரிக்கப்பட்ட 24 மொழிகளிலில் மொழிபெயர்ப்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார்கள் அதில் வந்திருந்த 22 விருது பெற்றவர்களுக்கும் அவர்களைப் பற்றிய குறிப்புகளை வாசிக்கப்பட, திரு திவாரி (சாகித்ய அகாதமியின் தலைவர்) மற்றும் ஞானபீட விருது பெற்ற குஜராத்தி எழுத்தாளர் திரு சவுதரி ஆகியோர் பூங்கொத்து, பட்டயம் மற்றும் பரிசுத்தொகை வழங்கினார்கள்.
பல்வேறு மொழிகள் பேசப்படும் இந்தியாவின் ஒருங்கிணைப்பிற்கு மொழிபெயர்பாளர்களுக்குக் குறிப்பிடத்தக்க பங்களிப்பு இருப்பதை தலைவர் திவாரி குறிப்பிட்டார். சிறப்புரையாற்றிய திரு சவுத்ரி விருது பெரும் படைப்பாளிகளில் 13 ஆண்களும் 9 பெண்களும் என்று குறிப்பிட்டு இது இனி வரும் ஆண்டுகளில் தலைகீழாக மாறலாம் என்று கருத்து தெரிவித்தார். மேலும் புதினங்களும், கவிதைத் தொகுப்புகளும், சிறுகதைத் தொகுப்புகளும் நிறைய இருந்தாலும் ஒரே ஒரு கட்டுரைத் தொகுப்புதான் உள்ளது என்றார். நாடகம் இல்லவே இல்லை என்பதும் கவனிக்கத்தக்கது என்றார்.
மறுநாள் முதல் அமர்வில் 22 விருதாளர்களும் தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார்கள். உரைகள் ஆங்கிலத்திலோ அல்லது ஹிந்தியிலோ இருந்தது. (படைப்பின் ஆங்கில அல்லது ஹிந்தி மொழிபெயர்பிலிருந்து மறு மொழிபெயர்ப்பு செய்வதைவிட படைப்பு வெளிவந்த மொழியிலிருந்து நேரடியாக மொழிபெயர்த்தலே சிறந்தது என்ற பொதுக் கருத்து நிலவியது. மொழிபெயர்ப்பில் எடுத்துக்கொள்ள வேண்டிய கவனங்கள், படைப்பு மொழி பேசுபவர்களின் கலாச்சாரம் மற்றும் இருமொழிகளிலும் நிலவும் சொலவடைகள் தெரிந்திருத்தல் , படிப்பினை ஆழ்ந்து படித்து உணரவேண்டிய தேவை, சரியான சொல் அல்லது சொற்றொடர் ஆராய்ந்து பயன்படுத்துதல் ஆகியவற்றின் அவசியம் பலரது சொற்பொழிவுகளில் குறிப்பிடப்பட்டது. ஒரே ஒரு மொழிபெயர்ப்பாளர் தவிர மற்றவர்கள் இலக்கு மொழியினரின் புரிதலுக்காக தேவைப்படும் இடங்களில் அடிக்குறிப்பு கொடுப்பதுதான் சிறந்தது என்று எல்லோரும் கருத்து தெரிவித்தார்கள். ஒருவர் மட்டும், இலக்கு மொழியினரின் புரிதலுக்காக சொல்லப்பட்டவைகளில் கூட்டல் கழித்தல் மற்றும் மாற்றலும் கடைபிடித்து மொழிபெயர்ப்பு ஒரு மொழியாக்கமாக இருக்கவேண்டும் என்றார்.
மாலையில் ‘அபிவ்யக்தி’யின் முதல் அமர்வாக கவிதை வாசிப்பு நிகழ்வு. அபிவ்யக்தி என்றால் வெளிப்பாடு என்னும் பொருள் என்று சொன்னார்கள். கருத்து என்பது எல்லோருக்கும் இருந்தாலும் அதை வெளிப்படுத்துபவர்கள் குறைவு. அவர்கள்தான் படைப்பாளிகள். சொல், இசை, சித்திரங்கள், சிற்பம் போன்ற பல சாதனங்களில் அந்த வெளிப்பாடு இருக்கக்கூடும். மொழிபெயர்ப்பு என்பது ஒருங்கிணைப்பு ஆயுதம் என்றும் சொல்லப்பட்டது. தொடர்ந்து தவிர அஸ்ஸாமிய, போடோ, மணிப்புரி, நேபாளி, டோங்க்ரி, ஹிந்தி கவிஞர்கள் தவிர தமிழகத்தை சேர்ந்த கவிஞர் யூமா வாசுகி கவிதைகளை வாசித்தார்கள். முதல் கவிதையை தங்கள் மொழியிலும் பிறவற்றின் ஆங்கில அல்லது ஹிந்தி மொழிபெயர்ப்புகளை வாசித்தார்கள்.
எல்லா நிகழ்வுகளும் சிறப்பாக இருந்தன. ஏற்பாடுகள் மிகுந்த கவனத்துடன் செய்யப்பட்டிருந்தன. மூன்றாவது நாள் நிகழ்வுகளை தவறவிடும் மனக்குறை இருந்தது. பணி நிமித்தமாக கொஞ்சம் ஹிந்தி பேசக் கற்றிருந்தது மிக உதவியாக இருந்தது. இல்லையெனில் ரசிப்பது மற்றுமின்றி மற்றவர்களுடன் உரையாடுவதே மிகக் கடினம்.
இடையில் கிடைத்த சிறிது நேரத்தில், இம்பாலின் காங்க்லா கோட்டை, அருங்காட்சியகம், முழுவதும் பெண்களே நடத்தும் கடைகள் கொண்ட சந்தை RKCS கலைக்கூடம் ஆகிய இடங்களுக்குச் சென்று வந்தோம். (பெண்கள் நடத்தும் சந்தை மற்றும் அருங்காட்சியம் இரண்டுக்கும் இடையே எங்கள் வாகனம் நின்றிருந்த இடத்தில் மறுநாள் குண்டு வெடிப்பு நடந்தது)
தீர்க்கரேகை 94ல் அமைந்திருப்பதால் ஐந்து மணிக்கு முன்பே பொழுது விடிந்தது விடுகிறது. மிக அருமையான இயற்கை எழிலுடன் கூடிய மணிப்பூர் மாநிலம் சோகங்கள் நிறைந்த வரலாறும், பழமை வாய்ந்த கலாச்சாரமும் உடையது.
சில மாதங்களுக்கு முன்னால் சதுரங்கம் என்னும் நாடகம் பார்க்கும் வாய்ப்பு கிட்டியது. மணிப்பூரில் அமலில் இருக்கும் ராணுவம் (விசேஷ அதிகாரங்கள்) சட்டம் 1958 தொடர்பான சிக்கல்களை மையமாகக் கொண்ட நாடகம் அது. கடந்த வாரத்தில் எல்லா தினசரிகளிலும் மணிப்பூர் போராளி இரோம் ஷர்மிளா பற்றிய செய்திகள் வந்துள்ளன. வரலாறும் அரசியல் சமூகச் சிக்கல்களும் குறித்த ஒரு கட்டுரை தனியாக எழுத வேண்டும்.