படைப்பாளி -(எஸ் கே என் )

ம வே சிவக்குமார்

 

சென்ற ஆண்டு மறைந்த ம.வே  நெய்வேலியைச் சேர்ந்தவன். (என் இனிய நண்பன் என்பதால் ‘ன்’ விகுதி). ஒரு வித்தியாசமான துடிப்பான நண்பன். தற்செயலாகக் கணையாழியில் வெளிவந்திருந்த “கடவுளும் கையாட்களும்” என்னும் சிறுகதையைப் படித்த பிறகுதான் அவன் எழுதுவான் என்றே தெரியும். அடுத்தமுறை சந்தித்தபோது வெகுநேரம் உரையாடிக் கொண்டிருந்தோம்.  தான் காணும் விஷயங்களில் ஒரு வேறுபட்ட பார்வை மற்றும் எது எழுதினாலும் அதனூடே ஒரு நகைச்சுவை. கதைகளுக்குப் பெயரிடுவதிலும் ஒரு வேறுபாடு. ஆகியவை குறிப்பிடத்தக்கன.

வேடந்தாங்கல் (வேடம் தாங்கும் மனிதர்கள்), வட்டம்   (அந்தகால அறிவுஜீவிகள் – அவர்கள் எழுதுவதும் பேசுவதும் மற்றவரைச் சென்றடையாத குழூஉக்குறி), கடைச் சங்கம் (இளைஞர்கள் பொழுதுபோக்கும் டீ கடை பெஞ்ச்) என்று சில உதாரணங்கள். பல பொது நண்பர்களும் உண்டு என்பதால் அவன் கதைகளில் யாரைக் குறிக்கிறான் என்றும் புரியும். பெரிதாகச் சாதிக்கக் கூடியவன் என்று எழுத்தாளர் சுஜாதா, ‘குமுதம்’ எஸ்.ஏ.பி போன்றோரால் எதிர்பார்க்கப்பட்டவன். தொலைக்காட்சி நகைச்சுவைத் தொடர் ஒன்றுக்கு வசனம் எழுதியவன். சிறிதுகாலம் திரைப்படத்துறையிலும் இருந்தவன். தனக்கு உரிய அங்கீகாரம்  இல்லை என்பதால் தற்கொலை செய்துகொள்ளப்போவதாக அறிவித்தது, தனது நாடகத்தை ஒளிபரப்ப மறுத்த தூர்தர்ஷன் முன் உண்ணாவிரதம் என்று பல தடாலடிகள்.

“உன்னை நம்பு’ என்னும் சிறுகதை

“கொஞ்ச நாட்களாகவே எதைத்தொட்டாலும் பிசகிக்கொண்டு இருந்தது.” என்று தொடங்குகிறது. அடுத்தடுத்து பல சறுக்கல்களில் பொருளாதாரம் மோசமாகி, கடனுக்கு வாய்தா சொல்லும் பொய்களும் தீந்துபோன நிலை.  தொட்டதற்கெல்லாம் சிடுசிடுப்பு. அடுத்தமாதம் சீட்டு எடுத்துவிட்டால் பிரச்சினைகளிலிருந்து வெளியே வந்துவிடலாம் என்கிற  நம்பிக்கையில் தூங்கிப்போகிறான் . சிறு சிறு நகைகளையும் அடகு வைத்துக் கட்டிவரும் சீட்டு அது.

சீட்டு பிடித்துவந்த பால்கார சங்கர பாண்டியின் குடும்பமே காணாமல் போய்விட்டது. சீட்டுக்கட்டிய எல்லோரும் அதிர்ந்து போகிறார்கள். கதவை உடைத்து உள்ளே இருந்த சாமான்களை எடுத்துப்போகிறார்கள். இவன் எடுத்து வந்தது ஒரு கிரைண்டர். மனைவி அதை வீட்டில் சேர்க்கவில்லை. எல்லாமே போயிற்றே என்ற பெரும் துக்கத்தில் ஆழ்கிறார்கள்.

திடீரென சங்கரபாண்டி திரும்பிவந்து   குடும்பத்தோடு வெளியூர்  சென்றிருந்த சமயத்தில் இவர்கள் எல்லாம் வீட்டிலிருந்த லட்சக்கணக்கான  பணம் பண்டங்கள் எல்லாவற்றையும்   சூறையாடிவிட்டதாகப் புகார் கொடுக்க சூறையாடிவர்கள் பட்டியலில் இவன் பெயரும்.

மனைவியின்  தோழி சொன்னாள் என்று ஒரு சாமியாரைப் பார்க்கிறார்கள்.

நாக்கு வெளியில் தள்ளிய காளி படம், நடுவில் சூலம் குத்தப்பட்ட அம்பாரமாய்  குங்குமம், அந்த சூலத்தில் குத்தப்பட்ட எலுமிச்சம்பழம், சாம்பிராணிப்புகை,    சப்பணமிட்டு தியான நிலையில் கண் மூடியிருந்த சாமியார் …

“சாமியார் இப்போது கடவுள் மாதிரி. அதுக்கு ஒளிவு மறைவு கிடையாது. கூச்ச நாச்சமும் தெரியாது. பொட்டில அடிச்ச மாதிரி கேள்வி கேட்கும். அது கிட்டே பொய் சொல்லமுடியாது. எதிர்லே  ஆள் வந்து உட்கார்ந்ததுமே  அவன் யாருன்னு அதுக்குத் தெரிஞ்சுடும். வந்தவனுக்கு என்ன பிரச்சினை அதுக்கு என்ன தீர்வுன்னு டக்குன்னு பிடிபட்டுவிடும். அது உன்னப் பார்க்காது. தியானத்தில இருக்கு. உன் வார்த்தைகள்  அதுக்குக் கேட்கும். காதுல விழற வார்த்தைக்கு அது வாய்ல சொல்ற வார்த்தைதான்  பதில்.  தலையை ஆட்டிட்டு தட்சணையை வெச்சுட்டுப் போயிகிட்டே இருக்க வேண்டியதுதான்”    

இவன் டோக்கன் 132. வரிசையில் கூப்பிடப்பட்டாலும், சாமியாரே திடீரென  அறிவிப்பு செய்து யாரையாவது கூப்பிடுவார். அதுபோல கூப்பிடப்பட்ட ஒரு சேலத்துக்காரரை  -நீ தம்பிக்கு  துரோகம் செய்தாய். அவன் உன்னை  பதிலுக்கு  துரோகம் செய்தான். தானிக்குத் தீனி சரியாப் போச்சு. இங்கு வந்ததே தப்பு.  ஓடு’ என்று மானத்தை வாங்குகிறார்.

வரிசையில் சிலருக்குப் பிறகு,

” … சீட்டுப்பணம் கட்டி சிக்கல்லே இருக்காரு ஒருத்தரு. அவரை வரச் சொல்லு” என்று அறிவிக்கிறார். 

“வாய்யா. கிரைண்டரு. உனக்கு உன்  சம்சாரம்தான் ஆதரவு. இவளை விட்டுவிடாதே. இவதான் உனக்கு அச்சாணி. ரெண்டு மாடும் இணையா  இருந்தா எதையும் ஜெயிச்சுரலாம். மழை அடிக்கறப்போ உப்பும் காத்தடிக்கறப்போ மாவும் வித்துட்டுப் போனானே ஒருத்தன். அவனுக்குச் சொன்னதுதான் உனக்கும். தப்பு எங்கேன்னு யோசி. எல்லாம் சரியாயிடும்.  இப்ப  இல்லேன்னா அடுத்த தடவை. ஓடிட்டே இருந்தாத்தான் நிக்க முடியும் புரியுதா? உழைப்புதான் ஜெயிக்கும்.”       

குலதெய்வம் எது என்று கேட்டுத் தெரிந்துகொள்ளும் சாமியார் 

“…   மேட்டுத் தெருவிலேர்ந்து  இன்னார் மகன் இன்னார் பேரன் நேர்ல வந்து ஆஜர் ஆவாம அவனுக்கு நாம் ஒண்ணும் பண்ண முடியலையேன்னு ஏங்கிக்கிட்டு இருக்கு. அப்பிடி விடலாமா? அதனால் அவளைப் போய் பார்.   உன் சீட்டுப்பணம் போனது போனதுதான். புத்திக் கொள்முதல். இனி யாரையும் நம்பாதே. உன்னை நம்பு. குல தெய்வத்தை கூட வெச்சுக்க. அடுத்து ஒரு முயற்சி செய். அதுலேர்ந்து படிப்படியா நல்லாயிடுவே. கிளம்பு”  

என்கிறார்.

 

கையில் காசில்லாததால் குலதெய்வத்தைப் பார்க்கத் தாமதமாகிக் கொண்டே வந்தது. அடகிலிருந்த நகைய விற்று சொந்த ஊர் போகிறார்கள். குலதெய்வத்தைப் பார்க்க வருபவர்கள் முன்கூட்டியே ஐயரிடம் தகவல் சொல்லி வரவழைப்பார்களாம். செல் நம்பர் கிடைக்கிறது.

கோயில்  பாழடைந்து இருந்தது. கூட வந்திருந்த மனைவியும் அவள் தாயாரும் அருகே ஒரு வீட்டில் திண்ணையில் உட்கார்ந்து கொள்கிறார்கள். குழந்தைகள் ஓடிப்பிடித்து தூண்களைச் சுற்றி விளையாடுகிறார்கள்.   ஐயரும் வருகிறார், ஆனால் சற்று தாமதமாக. அதற்குள் காட்டுச் செடிகளை வெட்டிச் சுந்தம் செய்கிறான் .

கோவிலில் விநாயகர் தலையிலிருந்து ஓணான் குதித்து ஓடுகிறது. அம்மன் ஓட்டடைக்கு நடுவில் மூக்குத்தி  காணமல் போய் இவன் மனைவியைப் போலவே துவரம் தூர்ந்துவிடாமல் குச்சி ஒன்று வைத்திருந்தாள்.

பூஜையும் கற்பூரமும் முடிந்து கோவிலுக்கு ஏதாவது செய்யவேண்டும் என்று இவனுக்கும் மனைவி லலிதாவிற்கும் தோன்றுகிறது.

குறைந்த பட்சம் கோவிலைச் சுத்தம் செய்ய இரண்டாயிரம் ரூபாய் செலவாகும் என்று ஐயர் சொன்னார். லலிதா யோசித்தாள். குழந்தை ரம்யாவைக் கூப்பிட்டு கொலுசு, வளையல், தோடு முதலியவற்றைக் கழற்றினாள். முதலில் அழுத குழந்தை அது அம்மனுக்கு என்று தெரிந்தவுடன் அமைதியாகிவிட்டது. மெயின் ரோடு வரை கூட வந்து அடகுக் கடையில் ஐயர் பணத்தை வாங்கிக்கொண்டார் .

எங்கள் குலதெய்வ நேர்த்திக்கடன் இவ்வாறு இனிதே முடிந்தது. பதிலுக்கு வரலக்ஷ்மி செய்கிறபோது செய்யட்டும்.

என்று கதை முடிகிறது

இந்தக் கதையினை முழுதும் படிக்க    உன்னை நம்பு.

இணையத்தில் கிடைக்கும் இன்னொரு கதை  கடவுள்

சாதிக்க வேண்டிய உயரத்தை எட்டாவிட்டாலும் ‘வட்டம்’, ‘வேடந்தாங்கல்’, ‘அப்பாவும் இரண்டு ரிக்ஷாகாரர்களும்   ‘பாப்கார்ன் கனவுகள்’ , ‘இறங்கப் போறீங்களா?’  மற்றும் போன்ற படைப்புகளுக்காக நினைவில் இருப்பான் ம.வே.சிவக்குமார்

 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.