அத்தியாயம் 03. புரியாத புதிர்
(குவிகத்திற்காக லதா பிரத்யேகமாக வரைந்த படத்துடன் இந்த மாத மணிமகுடம் தொடங்குகிறது )
குடந்தையின் அரசாங்க விடுதிக்கு முன்னிரவு வேளையில் வந்து சேர்ந்தான் வந்தியத்தேவன். தன்னிடமிருந்த அரசாங்கத்தின் மிக உயர்ந்த பதவி வகிப்பவர்களுக்கு மட்டுமே கொடுக்கப்பட்டிருந்த புலி வெள்ளி பதக்கத்தைக் காண்பித்தான். அங்கிருந்தவர்கள் மிகுந்த பய பக்தியுடனும், தடபுடலான மரியாதையுடனும் நடந்துகொண்டார்கள்.
அங்கிருந்த அரச சேவகர்களிடம், மாண்ட பாண்டியர் சதியாளர் கூட்டத்தைச் சேர்ந்தவனைப்பற்றியும், சோழ ஒற்றனின் மரணத்தையும், சோழ முதன் மந்திரி அன்பில் அநிருத்தபிரும்மராயரிடம் தெரிவிக்கும்படி உத்தரவு பிறப்பித்தான். மற்றும் தன் குதிரையை அடுத்த நாள் விடியற் காலைப் பயணத்திற்கு தயார்படுத்தச் சொன்னான்.
அவனுக்காக ஒதுக்கப்பட்டிருந்த அறைக்குப் பணியாள் அழைத்துச் சென்றான். பணியாள் மறுபடி உணவு எடுத்து வந்து வைத்துவிட்டு, அங்கிருந்த அகலில் நிறைய எண்ணைவிட்டுத் திரியை ஏற்றி விளக்கை நன்றாக எரியவிட்டுச் சென்றான்.
உணவை உண்டபின், வல்லவரையன் அவனுக்காகப் போடப்பட்டிருந்த கட்டிலில் அமர்ந்தபடியே இடுப்பிலிருந்து பையை எடுத்து ஓலைகளைப் படுக்கையில் கொட்டினான். ஒவ்வொரு ஓலையிலும் ஒரு மூலையில் சிறு துவாரம் ஒன்று இருந்ததைக் கவனித்து அவைகள் ஒரு கயிற்றினால் கட்டியிருந்திருக்கவேண்டும் என்று அனுமானித்தான். ஆனால் இப்போது கயிறு காணப்படாததினால் தனித்தனியாய் இருப்பதையும் புரிந்து கொண்டான். எனவே ஓலையின் மேற்பாகம் எது என்பதை துல்லியமாய் கண்டுபிடித்து ஓலைகளைப் படுக்கையில் கீழே தனித்தனியாகப் பரப்பி வைத்தான்.:
தனது முழு கவனத்தையும் செலுத்தி ஓலைகளை ஆராய ஆரம்பிக்கத் தொடங்கினான்.
வந்தியத்தேவன் மனம் வினாக்களை எழுப்ப ஆரம்பித்தது. ‘இந்த குறிப்பேடுகளில் பத்து சித்திரங்கள் இருக்கின்றன.அவைகள் கைதேர்ந்த நிபுணனால் வரையப்பட்டவை அல்ல. சித்திரக்கலை என்றால் என்ன என்று தெரியாதவர் கிறுக்கிய படைப்பு இது. ஒருவேளை மாண்ட ஒற்றன் வரைந்தவை போலும்! அவன் சித்திரக்கலையில் பழக்கம் இல்லாதவனாக இருந்திருக்கலாம்! ஏன் இவ்வாறு செய்ய வேண்டும்? இது நிச்சயமாக பாண்டிய சதிகாரர்களைப் பற்றியதாக இருக்க வேண்டும்’ என்று எண்ணியவாறு யோசனையில் ஆழ்ந்தான்.
கத்தியைப் பாய்ச்சியபின் அதை உருவப்போன சதிகாரனின் நினைவு அவனுக்கு வந்தது.
‘ஒற்றனின் உடலிலிருந்து கத்தியை உருவ முயன்ற சதிகாரன் ஏன் சட்டென்று முகத்தை அடையாளம் தெரியாதவாறு துணியால் மூடிக்கொண்டான்?அவன் கண்களைப் பார்த்த போது எங்கேயோ பார்த்தது போல் தோன்றியதே! முகத்தைப் பார்த்த போது அவ்விதம் தோன்றவில்லையே! ஏன்?’ என்றவை போன்ற எண்ண அலைகள் வந்தியத்தேவன் மூளையை வட்டமிட்டன.
கண்களை இறுக்க மூடினான். மனதில் புதைந்து கிடக்கும் லட்சோப லட்சம் எண்ண நினைவுகளுக்குள், புத்தியை உள்ளே புகுத்திக், கூர்மையாக்கித் தீவிரமாக அந்தக் கண்களுக்குரியவனைப் பற்றிய விவரங்களை அலசினான்! வெற்றி கிட்டியது!
************************************************************************
வந்தியத்தேவன் கரிகாலனைக் கொன்ற பழிக்காக தவறாகத் தஞ்சை பாதாளச்சிறையில் சில நாட்கள் அடைக்கப்பட்டிருந்தான் என்பதை ஏற்கெனவே குறிப்பிட்டிருந்தோம். அப்போது வேறு காரணத்திற்காகச் சிறைப்பட்டிருந்த ஒரு கிருக்கனின் தொடர்பு கிடைத்தது. அவனுடைய சிகை பெரியதாக வளர்ந்து இரு பக்கங்களிலும் தொங்கியது. தாடி மீசை அபரிதமாக வளர்ந்து அவன் முகத்தை மறைத்தது. அவனுடைய கூர்மையான கண்கள் மட்டுமே வந்தியத்தேவன் மனத்தில் பதிந்திருந்தது. அவன் வருவோர் போவோர் எல்லோரிடமும் ‘பாண்டிய நாட்டுப் புராதன பொக்கிஷங்களான மணிமகுடமும் இரத்தின ஹாரமும் மறைத்து வைக்கப்பட்டிருக்கும் இடம் எனக்குத் தெரியும், என்னை விடிவியுங்கள்’ என்று கூறிக்கொண்டிருந்தான். ஒருவரும் அதை நம்பவில்லை. ஏளனமாகச் சிரித்தார்கள். அதனால் அவனுக்கு ‘பைத்தியக்காரன்’ என்ற பட்டம் மட்டுமே கிடைத்து பாதாளச் சிறையில் அடைக்கப்பட்டிருந்தான். அவன் உண்மையிலேயே பைத்தியக்காரன் அல்ல என்பதையும், அவன் பொக்கிஷங்களைப் பற்றிக் கூறுவது உண்மை என்பதையும், அவனுடைய உண்மையான பெயர் ‘கருத்திருமன்’ என்பதையும் வந்தியத்தேவன் பின்னர் அறிந்தான்.
பல தடவை ஈழத்திற்கு வீரபாண்டியன் பொருட்டுத் தூது சென்றிருக்கிறான். இவையெல்லாம் கருத்திருமன் வாயிலாகவே கேட்டு வல்லவரையன் தெரிந்துகொண்டான். குற்றவாளி போல் வேண்டுமென்றே நாடகம் நடித்து வந்தியத்தேவன் கருத்திருமனுடன் வெளியே தப்பினான். பொக்கிஷங்களின் இருப்பிடத்தின் உண்மைகளை அவனிடமிருந்து வரவழைத்துப் பின் சமயம் பார்த்து, அவனை மறுபடியும் சிறைப்படுத்தும் வாய்ப்பை ஏற்படுத்த வேண்டும் என்று எண்ணியிருந்தான். ஆனால் ரகசியத்தை அவனிடமிருந்து தெரிந்து கொள்ளுமுன் கருத்திருமன் தப்பி ஓடிவிட்டான்!
***********************************************************************
பதிந்திருந்த அனுபவங்கள் ஒன்றன் பின் ஒன்றாக வந்தியத்தேவன் மனதில் பவனி வந்தன. ‘கருத்திருமனா அவன்!முடி, தாடி மீசை எல்லாம் மறைந்து இப்போது முகம் லட்சணமாகத் தென்பட்டது. பரட்டைத் தலையும் தாடி மீசையும் இல்லாததால் அவனை அடையாளம் கண்டு கொண்டிருக்க இயன்றிருக்காது! ஆம்! ஆழமாக நம் மனதில் பதிந்திருந்த கண்கள் மட்டுமே அவனைக் காட்டிக் கொடுத்துவிட்டது! பாண்டிய சதிகாரக் கும்பலுடன் சேர்ந்த அவனுடைய வேலையா இது? அப்படியானால் சோழ ஒற்றன், மறைத்து வைக்கப்பட்டிருக்கும் பொக்கிஷங்களைப் பற்றி சதிகாரர்களால் பேசப்பட்ட ஏதோ ஒரு உண்மையை, அவர்கள் அறியாமல் தெரிந்து கொண்டிருக்க வேண்டும்!’ என்று முடிவு கட்டிய வந்தியதேவன் மீண்டும் சித்திரங்களை நோக்கினான்.
‘முதல் சித்திரம் ஒரு மலையைப் பற்றியது.அந்த மலைக்கு நடுவே ஓர் உருவம் தீட்டப்பட்டிருக்கிறது. அது ஆணா அல்லது பெண்ணா? இரண்டு கால்கள் இருக்கின்றன. ஆனால் இரண்டிற்கும் அதிகமான கைகள் இருக்கின்றனவே? இதற்கு என்னிடம் இப்போது விடை இல்லை. இரண்டாவதில் ஒரு மேலும் கீழுமாக வளைந்த ஒரே கோடு சித்திரத்தின் மேல் பகுதியில் வரையப்பட்டிருந்தது. எதையோ குறிக்கிறது. மூன்றாவது, ஆகா! இப்படியும் இருக்கமுடியுமா? இது கழுத்தில் அணியும் ஹாரமாகத்தான் இருக்கவேண்டும்! சந்தேகமில்லாமல் இது இரத்தின ஹாரம்தான்!!’ இவ்வாறு எண்ணிய வந்தியத்தேவன் முதல் படியைத் தாண்டிய பெருமிதத்துடன் மற்ற சித்திரங்களைப் பார்க்கலானான்.
‘நான்காவதில் நீண்ட கோடுகள் தென்படுகின்றன.ஆங்காங்கே சில வளைவுகளும் காணப்படுகின்றன. ஒரு புள்ளி கூட இருக்கிறது! அந்த ஒற்றன் ஏதோ ஒரு விவரத்தை இதன் மூலம் தெரியப்படுத்தியிருக்கிறான். அதை அறிந்து கொள்ள அதிக கவனம் தேவை. மற்றவைகளைப் பார்த்தபின் மறுபடி இதனிடம் வரலாம்’ என்று மற்றவைகளில் கவனம் செலுத்தினான்.
ஐந்தாவதில் ஒரு முழு சந்திரன் – ‘ஆ!! இது என்ன மற்றும் ஒரு முழு சந்திரனைப் போல் அல்லவா இருக்கிறது! இதில் மிகப் பெரியதோர் புதிர் புகுத்தப்படிருப்பது என்னவோ உண்மை! இவ்விரண்டு சந்திரன்களையும் பிணைத்திருக்கும் விவரம் அதில் அடங்கியிருக்க வேண்டும் என்று முடிவு கட்டினான். ஆனால் அது என்ன என்பது அவனுக்கு விளங்கவில்லை. ஆறாவதில் நிறைய மனிதர்களைக் கண்டான். அதில் ஒருவர் நின்றுகொண்டு ஏதொ விளக்கிக்கொண்டிருப்பது போலத் தோன்றுகிறது! மற்ற எல்லோரும் ஒன்று கூடி அமர்ந்திருப்பதும் தெளிவாகிறது..அது எதைக் குறிக்கிறது என்பதும் அவனுக்குப் புரியவில்லை!
‘ஏழாவது, இது என்ன?ஒரு கோவிலைப் போலல்லவா இருக்கிறது! அதற்கு அடியில் ஒரு கோவிலின் நுழைவாயில் போல் தோன்றுகிறது’ என்று இவ்வாறெல்லாம் அலசிக் கொண்டிருந்தபோது கதவு தட்டப்படும் ஓசை கேட்டது.
வந்தியதேவன் “உள்ளே வரலாம்” என்று உரக்கச் சொன்னான். கதவைத் திறந்துகொண்டு ஒரு பணியாள் உள்ளே வந்தான்.
உணவு கொண்டு வந்து வைத்திருந்த தட்டு முதலான பண்டங்களை அடுக்கி எடுத்தவாறே “தாங்கள் படுத்துறங்குமுன் ஏதேனும் தேவையா?” என்றான். வந்தியத்தேவன்
“ஆம்.ஒரு மரப்பலகையும் சிறு கரித்துண்டுகளும், கிழிந்த துணிகள் சிலவும் தேவை” என்றான்.
சிறிது நேரத்தில் கேட்டவைகளைக் கொடுத்துவிட்டுப் பணியாள் வந்தியத்தேவனை வணங்கிவிட்டு வெளியேறினான்.
வல்லவரையன் மறுபடியும் கவனத்தை சித்திரங்களின் மேல் திருப்பினான். ‘எட்டாவது!ஆகா! நமக்கு வேண்டிய விவரம் இதில் இருக்கிறது போலிருக்கிறதே! சந்தேகமில்லாமல் இது ஒரு கிரீடம்தான். பாண்டியர்களின் மணிமகுடம்! நாம் நினைத்தது போல் ரகசியம் பொக்கிஷங்களைப் பற்றி இருப்பதாகத் தெரிகிறது!’ என்று கணித்தான்.
‘அடுத்தது ஒன்பதாவது. மறுபடியும் ஒரு முழு நிலாவாகத் தென்படுகிறதே! ஐந்தாம் சித்திரத்தைப்போல் இதில் மற்றும் ஒரு சந்திரன் இல்லை. ஒன்றும் புரியவில்லை. கடைசியில் பத்தாவது. இரண்டாவது சித்திரத்தைப்போல் மேலும் கீழுமாக வளைந்த ஒரே கோடு சித்திரத்தின் கீழ்ப் பகுதியில் வரையப்பட்டிருந்தது. இந்த இரண்டு சித்திரங்களுக்கும் ஏதாவது தொடர்பு இருக்குமோ?’ என்று சிந்தித்தான்.
முதல் கட்ட பரிசோதனை முடிவடைந்தது. இரண்டாவது கட்டத்திற்குச் செல்வதெப்படி?’ என்பதை வந்தியத்தேவன் கண்களை மூடிக்கொண்டு சிறிது நேரம் யோசித்தான்.
(தொடரும்)