ருசி…..! நித்யா சங்கர்

 

‘சாமி… பிச்சை போடுங்க சாமி…நாலு நாளா சாப்பிடவேஇல்லே… உங்களை தெய்வம் நல்ல போலே காப்பாத்தும் சாமி..”

சுந்தர் திரும்பிப் பார்த்தான்.

நியாயத்தை நிலை நிறுத்தி, அநியாயம் செய்பவரைத் தண்டிக்கும் மாஜிஸ்டிரேட் கோர்ட் வாசலில் சாவகாசமாக உட்கார்ந்து கூவிக் கொண்டிருந்தான் அந்தப் பிச்சைக்காரன். அவனைப் பார்த்தால் நாலு நாள் பட்டினியாகத் தோன்றவில்லை. ஆள் வாட்ட சாட்டமாக ‘கிண்’ணென்று இருந்தான். வயது இப்போதைக்கெல்லாம் இருபத்தைந்து
இருக்கும்.

‘ஏம்பா…? ஆள் வாட்டசாட்டமா இருக்கே.. ஏன் இப்படிப் பிச்சை எடுக்கிறே..? ஏதாவது வேலை செய்து பிழைக்கக் கூடாதா?’ என்றான் சுந்தர்.

அந்தப் பிச்சைக்காரன் சுந்தரை ஏறிட்டுப் பார்த்தான். ஆச்சரியத்தோடு. இதுவரை அவனிடம் இந்தக் கேள்வியை யாரும் கேட்டதில்லை. வக்கீல்கள் அணியும் கறுப்பு அங்கிக்குள் புகுந்திருந்த முப்பது வயதுக் காளை சுந்தரை அறைந்தால் தேவலாம் என்று தோன்றியது அவனுக்கு.
‘பிச்சை போட்டால் போடுவது .. இல்லையென்றால் போய்க்கொண்டே இருப்பதுதானே.. நானென்ன கையைப் பிடித்து நிறுத்தினேனா…’ என்று மனதிற்குள் திட்டிக் கொண்டான்.

சுந்தர் விடுவதாக இல்லை. ‘ஏன்பா.. நான் கேட்டதற்குப் பதில் சொல்லவில்லையே’

‘என்னடா இது..? விடமாட்டார் போலிருக்கே’ என்று அவனை சபித்துக் கொண்டு சுற்று முற்றும் பார்த்தான்.  அவனுடைய சக பிச்சைக்காரர்கள் – உடல் ஊனமுற்றவர்கள் – ‘பயல் வசமாக மாட்டிக் கொண்டான்’ என்ற
பொருளோடு அவனை ஏளனமாகப் பார்த்தார்கள்.

பொறுக்கவில்லை நமது ஹீரோவிற்கு. ‘என்ன சாமி.. இப்படி சொல்லிட்டே.. யார் சாமி எங்களுக்கெல்லாம் வேலை தராங்க. வேலை தந்தா நாங்க எதுக்கு இந்தப் பொழப்பு பொழைக்கிறோம்..? நீ வேலை தருவியா சாமி..’ என்றான் ரோசத்துடன்.

‘அப்படியா … பார்க்கலாம்.. உன் பேரென்ன..?

‘என் பேர் ஆதீங்க..’

‘ஆதி.. நல்ல பெயர்.. ஓகே…’ என்று சொல்லி ஊனமுற்றவர்க்கெல்லாம் பைசா போட்டு விட்டு கோர்ட்டின் படிகளில் ஏறினான் சுந்தர்.

‘சாமி.. சாமி.. எனக்கு மட்டும் போடலையே சாமி..’ என்று கூவிய ஆதி தலையைத் தொங்கப் போட்டுக் கொண்டான்.

சக பிச்சைக்காரர்கள் சிரிப்பொலி அடங்க வெகு நேரமாயிற்று.
‘ஏம்பா… நான் இந்தக் கோர்ட்டிலே மாஜிஸ்டிரேட்டாக வந்து ஐந்து வருஷமாச்சு… நீ அட்லீஸ்ட் பத்து தடவையாவதுதிருட்டுக் குற்றத்திற்காக இந்தக் கைதி கூண்டில் நின்னுருப்பே.. ஏம்பா நீ திருந்தவே மாட்டியா..?’

கைதிக் கூண்டில் நின்றிருந்த முனுசாமி விரக்தியாகச் சிரித்தான்… ‘என்ன செய்யறது சாமி.. வயிற்றுப் பிரச்னை’

‘ஏன் வேலைக்குப் போகக் கூடாதா…?’

‘நானா.. வேலைக்கா…? திருடனை யார் சாமி வேலைக்கு வெச்சுக்குவாங்க.. எனக்கு மட்டும் ஆசை இல்லீங்களா.. மரியாதையா மதிப்போடு வாழணும்னு… ச்.. நான் கொடுத்து வெச்சது அவ்வளவுதான்..’ என்றான் முனுசாமி.

அடப்பாவி உலகமே.. திருடன் எப்போதும் திருடனாகத்தான் இருக்க வேண்டுமா..? பிச்சைக்காரன் எப்போதுமே சோம்பேறியாகத்தான் இருக்க வேண்டுமா..? திருடன் மனம் திருந்தி நல்லவனாக ஒழுங்காக வேலை செய்யக்கூடாதா? பிச்சைக்காரன் சுறுசுறுப்பாய் அலுவல் புரியக்
கூடாதா?

சுந்தர் ஒரு தீர்மானத்திற்கு வந்தான்.

கட்டடமே விழுந்து விடுமோ என்று பயமாக இருந்தது. அவ்வளவு பெரிதாகச் சிரித்தார் அட்வகேட் ஆத்மநாதன்.

எதிரே அமர்ந்திருந்த சுந்தரின் முகத்தில் சிரிப்பிற்கு பதில் கோபமே பொங்கி வழிந்தது. ‘டாடி.. நானென்ன பெரிய ஜோக்கா சொன்னேன்..? இப்படி சிரிக்கிறீங்க..?’

‘எஸ்.. எஸ்.. அ·ப் கோர்ஸ்.. திஸ் ஈஸ் தி பெஸ்ட் ஜோக் ஆ·ப் தி டே..’ என்று மீண்டும் கடகடவென்று சிரித்தார். அவர் கண்களிலிருந்து நீர் சிறிது சிறிதாக வழிய ஆரம்பித்தது.

‘டாடி.. ஸ்டாப் இட்.. ஐ ஆம் ஸீரியஸ்.. வெரி வெரி ஸீரியஸ்.. ஐ மீன் வாட் ஐ ஸே..’ என்று கத்தினான் சுந்தர்.

ஆத்மநாதனின் சிரிப்பு டக்கென்று நின்றது. சுந்தரின் பார்வையிலே இருந்த உறுதியைப் பார்த்தார் ஆச்சரியத்தோடு.

‘மை ஸன்.. நீ என்ன சொல்றே..? தெருவிலே பிச்சை எடுத்து திரிகின்ற ஆதி போன்றவர்களையும், திருடிக்கொள்ளையடிக்கின்ற முனுசாமிகளையும் சேர்த்துக் கொண்டு ஒரு சிறு தொழிற்சாலை – ஸ்மால் ஸ்கேல் இன்டஸ்ட்ரி ஆரம்பிக்கப் போறே இல்லையா..?’

‘எஸ்.. எக்ஸாக்ட்லி..’

ஆத்மநாதன் விட்டத்தைப் பார்த்துக் கொண்டு ஐந்து நிமிடங்கள் மௌனமாக இருந்தார்.

‘அப்பா என்ன சொல்லப் போகிறார்..’ என்று ஆர்வமாகக் காத்திருந்தான் சுந்தர்.

மேஜை மேலிருந்த டேபிள் வெயிட்டைச் சுற்றிக்கொண்டே, ‘சுந்தர்.. நீ இளைஞன்.. உனக்கு அனுபவம் போதாது.. உனக்கு உலகத்தைப் பற்றித் தெரியாது. எல்லோரையும் தூக்கி விட வேண்டும் என்று நீ நினைக்கிறே.. பட், இன் தி ப்ராஸஸ் நீதான் கீழே விழுவே. குருடன் ராஜ முழி முழிக்கணும்னு பார்த்தா முடியுமா..?’ என்றார் ஆத்மநாதன்.

‘ஆமாமா.. எல்லோரும் இப்படியே நினைக்கிறதாலேதான் நம் நாடே முன்னேற முடியறதில்லே.. நாமென்ன நிறைய பணத்தை இன்வெஸ்ட் பண்ணப்போறோமா..? இல்லையே.. ஒரு எக்ஸ்பெரிமென்டாகத்-
தான் எடுத்துக்குவோமே..’

‘பீ கேர் ·புல் மை ஸன்.. நாய் வாலை நிமிர்த்தப்பார்க்கறே நீ… திருட்டுத்தனத்திலே ருசி கண்டவர்களைத் திருத்தலாம்னு பார்க்கிறே.. பிச்சைக்கார சோம்பேறிகளை திடீரென்று சுறுசுறுப்பானவங்களா. பொறுப்புள்ளவங்களாமாற்றிடலாம்னு பார்க்கிறே.. இம்பாஸிபிள்..’

‘தென் ஹௌ டு இம்ப்ரூவ் அவர் கன்ட்ரி, அன்டு கன்ட்ரிமென்?’

‘அதுக்கு கவர்ன்மென்ட் இருக்கு..’

‘எல்லாத்துக்கும் கவர்ன்மென்ட் கவர்ன்மென்ட் என்று சொல்லிட்டிருந்தா எப்படி..? நாமும் முடிந்ததை கான்ட்ரிபியூட் பண்ணலாமே..? பின்னே இவங்க எப்பத்தான்  மாறுவாங்கண்ணு சொல்றீங்க..?’

‘இன் கோர்ஸ் ஆ·ப் டைம் அவங்களுக்குள்ளே, அவங்க சந்ததிக்குள்ளே யாருடைய திணிப்பும் இல்லாம ஒரு சேஞ்ச் வரும்.. இந்த சேஞ்சை – மனமாற்றத்தை – நம்ம யார் மேலேயும் சுமத்த முடியாது. வீ கான்ட் இம்போஸ்.. அது தானாக வரணும்.. ஸோ டோன்ட் டிரை இம்பாஸிபிள்
திங்க்ஸ் அன்டு கெட் டிஸப்பாயிண்டட்…’

‘நோ டாடி.. நான் ஒத்துக்க மாட்டேன். நான் பார்த்து ஆளுங்களை ஸெலக்ட் பண்ணப் போறேன்.. இந்த ஈனத்தொழிலை விட்டு மதிப்போடும், மரியாதையோடும் வாழணும்னு பல பேர் துடிக்கிறாங்க… அவங்கள்ளே சில பேருக்காவது வாழ்வு கொடுக்கத்தான் போறேன். எனக்கு நீங்க ஐந்து லட்சம் ரூபாய் தந்தா போதும். கடனாகப் போதும்.. வட்டியோடு திருப்பி விடுவேன்..’

‘ஏய் ஸில்லி.. உனக்கு அவ்வளவு நம்பிக்கையும் உற்சாகமும் இருந்தா காரி ஆன்.. நீ இந்த வேலையிலே வெற்றி பெற்றால் என்னை விட சந்தோஷப் படறவங்க யாருமே இருக்க மாட்டாங்க..’ என்றார் ஆத்மநாதன்.

‘தாங்க் யூ டாடி..’ என்று சந்தோஷத்தால் அவரைக் கட்டித் தழுவிக் கொண்டான் சுந்தர்.
‘மூன்று மாதங்கள் ஓடி இருக்கும். ஒரு நாள் காலை சுந்தர் தன் தந்தையின் அறைக்கு வந்தான். ஆத்மநாதன் ஏதோ ·பைலில் மூழ்கி இருந்தார்.

‘டாடி..’ என்ற சுந்தரின் குரல் கேட்டு நிமிர்ந்து பார்த்தார்.

‘என்னப்பா.. உன்னுடைய இன்டஸ்ட்ரி எப்படி இருக்கு..?’

‘கோயிங் வெரி ஸ்ட்ராங் டாடி.. நான் சொன்ன மாதிரி  அந்த ஆதி, முனுசாமி உட்பட இருபத்தைந்து பேரை வேலைக்கு சேர்த்திருக்கேன். வேலை ஆரம்பித்து ஒரு வாரமாகி யிருக்கும். என்ன உற்சாகமாக வேலை
செய்யறாங்க தெரியுமா..? அவர்கள் ப்ரொடக்ஷன் ஸ்டாடிஸ்டிக்ஸைப் பாருங்க டாடி..’ என்று ஒரு ·பைலை பெருமையோடு நீட்டினான்.

‘ஏதோ ஸபர்ஸ்டீஷியஸ் அன்டு கன்ஸர்வேடிவ் ஐடியாவை வெச்சுண்டு நான் அனுபவஸ்தன்னு சொன்னாப் போதுமா..? ரெவலூஷனரி ஐடியாஸ் வேண்டாமோ..? இங்கே பாருங்க. நான் புரட்சி செய்து காட்டி இருக்கேன். என்னைப் பார்த்து பலபேர் இதே போலே இன்டஸ்டிரீஸ் ஆரம்பிப்-
பாங்க. நம்ம நாடு ராம ராஜ்யமாக ஆகிவிடும்..’ என்றெல்லாம் ஏதேதோ இன்ப நினைவுகள் மனதிலே அலை புரண்டு அவன் முகத்திற்கு ஒரு தேஜஸை கொடுத்தன.

‘ஆமா.. டெய்லி ப்ரொடக்ஷன் குறைஞ்சுன்டே இல்லே வருது. முதல் நாளிலிருந்த ப்ரொடக்ஷன் இப்போ இல்லியே..’ என்ற ஆத்மநாதனின் குரல் அவனை இந்த உலகத்திற்கு கொண்டு வந்தது.

‘அதுவா டாடி.. புதுசு இல்லையா.. இப்போ அப்படி ஒன்றும் ஸ்ட்ரிக்டா பார்க்க முடியாது. இன்னும் மூன்று நான்கு மாதம் போனால்தான் நாம் எதுவும் சொல்ல முடியும்..’

‘புதுசுன்னா முதல் நாள் புரொடக்ஷன் குறைவாக இருக்கும். அப்புறம் மெதுவாக அதிகமாகவல்லவா வேண்டும்… இங்கே தலைகீழா இருக்கே..’

சுந்தர் பதில் சொல்ல வாயெடுத்தான். அதற்குள், ‘சுந்தர் ஐயா.. சுந்தர் ஐயா..’ என்று மூச்சிரைக்க ஓடி வந்தான் அவன் ·பாக்டரி அட்டென்டர் ரங்கன்.

‘என்னடா..?’ என்றான் சுந்தர்.

‘ஐயா… எல்லா சாமான்களும் திருட்டுப் போயிட்டுது ஐயா… ·பாக்டரியில் ஒரு சாமானில்லே.. இன்னிக்கு யாருமே வேலைக்கு வரலே..’ என்றான் ரங்கன்.

திக்கென்றது சுந்தருக்கு. ‘வாட்.. இரு நான் ஸ்கூட்டரை எடுத்துக் கொண்டு பத்து நிமிடத்திலே வந்துடறேன்’ என்று காரேஜை நோக்கி விரைந்தான்.

ஆத்மநாதன் திகைத்து நின்றார். ‘அட்லீஸ்ட் திருடனல்லாத ஒருத்தனை அட்டென்டராக வைத்துக்கொண்டானே… இல்லேன்னா திருட்டுப் போனதைச்சொல்லக் கூட ஆளிருந்திருக்காது..’ என்று எண்ணிக்
கொண்டார்.
சுந்தர் ஸ்கூட்டரில் ·பாக்டரியை நோக்கிப் போய்க்கொண்டிருந்தான். பில்லியனில் அந்த அட்டென்டர். அவர்கள் வழியிலே ஒரு பார்க் பக்கமாக வந்து கொண்டிருந்தார்கள்.

‘ஐயா.. கொஞ்சம் நிறுத்துங்க. அங்கே அந்த மரத்தடியில் ஆதியும் முனுசாமியும் இருக்கிறாப்போலே தெரியுது..’ என்றான் ரங்கன்.

சுந்தர் ஸடனாக ப்ரேக் போட்டு வண்டியை நிறுத்தினான். ரங்கன் இறங்கி அவர்களைக் கூப்பிடுவதற்கு ஓட முற்பட்டான்.

‘ரங்கா.. சத்தம் போடாதே.. என் பின்னால் வா..’ என்ற சுந்தர் மெதுவாக அவர்கள் பார்வையில் படாமல் அந்த மரத்திற்கு பின்னால் நின்று அவர்கள் பேச்சைக் கவனித்தான்.

‘என்ன வேலையப்பா.. இடுப்பெல்லாம் போகுது. குஷாலா ‘சாமி பிச்சை போடுங்க..’ என்று கத்தி காலத்தை ஓட்டிட்டிருந்தேன். என்னைப் போய் இந்தப் பாவிப் பயகூட்டியாந்து ‘வேலை செய்டா’ன்னு சொல்லிட்டான்.. ஆமா.. அன்னிக்கு ஒரு பேச்சுக்கு ரோசமாக் கேட்டேன்.. ‘எனக்கு வேலை போட்டுத் தருவியா’ன்னு.. இவன் உண்மையாவே செஞ்சுடுவான்னு நமக்குத் தெரியுமா என்ன..? அலட்டிக்காம பிச்சையெடுக்குறத விட்டு… வேலையாம் வேலை..தூ..’ என்றான் ஆதி.

‘எனக்கு மட்டும் என்னான்னு சொல்றே..? திருடறதிலேயுள்ள ருசி.. த்ரில்.. வேலை செய்யறதிலே வந்துருமா? ஒரு நாள் போய் எங்காவது திருடிட்டு வந்துட்டா பதினஞ்சு நாள் கவலையில்லே… ஹாய்யா காலை நீட்டிட்டு படுத்துக்கிடக்கலாம். அப்படி போலீஸ் பிடிச்சு மாமியா வீட்டுக்கு
அனுப்பிச்சாலும் அங்க போய் பேசாம களியை தின்னுட்டு இருக்கலாம். யாருடா இவன்..? காலையிலே எட்டு மணியிலிருந்து சாயங்காலம் அஞ்சு மணி வரை வேலை செய்யணும்னு சொல்லிட்டு… போக்கத்த பய.. ஏதோ இந்த உலகத்தையே உயர்த்திடப் போறதா நினைப்பு.. சீ….’ என்று
சிரித்தான் முனுசாமி.

‘எப்படியோ அண்ணே.. நம்ம எல்லாத் தொழிலாளிகளும் ·பாக்டரியிலே உள்ளதையெல்லாம் திருடி பங்கு போட்டுக்கிட்டோம்.. ஒரு மாதத்திற்கு கவலையில்லாம நிம்மதியா படுத்துக் கிடக்கலாம்… அந்த விஷயத்துக்கு
சுந்தர் ஐயாவைக் கும்பிடணும்..’ என்று சிரித்துக் கொண்டே  கிளம்பினான் ஆதி.

‘ஆமாமா..’ என்றபடியே முனுசாமியும் கிளம்பினான்.

சுந்தர் முகத்தில் ஈயாடவில்லை. ‘எதற்குக் கும்பிடணும். எல்லாவற்றையும் திருடு கொடுத்ததன் மூலம் அவர்களை மேலும் சோம்பேறிகள் ஆக்கியதற்கா?’

‘பீ கேர் ·புல் மை ஸன். நாய் வாலை நிமிர்த்தப் பார்க்கறே.. ருசி கண்டவர்களை திருத்தலாம்னு பார்க்கறே.. அவங்களுக்குள்ளே, அவங்க சந்ததிக்குள்ளே ஒரு சேஞ்ச் வரணும். இந்த சேஞ்சை நம்ம யார் மேலேயும் சுமத்த முடியாது. இம்பாஸிபிள்..’ என்ற தந்தையின் – ஒரு அனுபவஸ்தரின் – குரல் அவன் காதுகளில் ரீங்காரமிட்டது.

 

 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.