அப்புசாமி கதை – ஒலிப்புத்தகம்

பாக்கியம் ராமசாமி  (ஜ.ரா. சுந்தரேசன்) எழுதிய அப்புசாமியின் கதையைக் கேட்க விரும்புகிறீர்களா? 

நண்பர் பாம்பே கண்ணன் உங்களுக்காகப் படிக்கிறார்.  காத்தாடி ராமமூர்த்தி அப்புசாமியாகப்  பேசுகிறார்.

 தமிழ் ஒலிப் புத்தகத்தின் அருமையையும்  உணருங்கள்!  

 

எண்ணோடு(என்னோடு) உரையாடு – சிவா

 


நாளைக்கு ப்ராக்டிக்கல்ஸை வைத்துக்கொண்டு ஃபிபோனஸி சீரீஸின் சி ப்ரோக்ராமை நவீன் மனப்பாடம் செய்துகொண்டிருந்தான். “சை! இதெல்லாம் என்ன ______ க்கு படிக்கணும். பைசா பிரயோஜனம் இருக்கா? வாழ்க்கைக்கும் இதுக்கும் சம்பந்தம் இருக்கா?” கடுப்போடு புக்கை மூடி வைத்துவிட்டுக் கைபேசியை எடுத்து நண்பனுக்கு டயல் செய்ய எத்தனித்தான். டயல் பேடில் 0,1,2,3,5,8 ஆகிய எண்களைக் காணவில்லை. ஏதும் கோளாறாக இருக்குமோ? லாக் செய்து திரும்ப அன்லாக் செய்து மறுபடியும் போய்ப் பார்த்தான். காணவில்லைதான். “ஏதும் புது வைரஸோ? போன மாசம்தானே வாங்குனேன்” என்று நினைத்தபடியே அதன் பின்மண்டையில் நாலு தட்டு தட்டினான்.


தட்டிக்கொண்டே இருக்கையில் பின்னிருந்து ஒரு புது குரல். “நவீன்”. “யாருடா அது?” என்று திரும்பிப் பார்த்தால் காணாமல் போன எண்கள் அங்கே நின்று கொண்டிருந்தன. சதுரமாய் ஒரு உடல், அதில் எண்கள் எழுதப்பட்டு, கைகால் மட்டும் முளைத்து. நவீனுக்கு ஒன்றும் விளங்கவில்லை. கண்ணைக் கசக்கிக் கொண்டு பார்த்தான். கிள்ளிப் பார்த்துக் கொண்டான். கனவில்லை. நிஜம்தான். ஆனால் ஏன்? “நீங்க?” என்று இழுத்தான். “இவ்வளவு நேரம் திட்டினியே? ஒரு கெட்ட வார்த்தை கூட சொன்னியே? நாங்கதான் ஃபிபோனஸி எண்கள். பேச்சு கேக்க முடியாம, சில விஷயங்களச் சொல்லி புரிய வைக்க நாங்களே வந்துட்டோம்.” பேசியது எண் 1.

தலையைச் சொறிந்துகொண்டே நின்றவனை உட்காரச் சொல்லியது எண் 2. எண் 3 தொண்டையைச் செறுமியபடி பேச ஆரம்பித்தது. முதல்ல எங்களப் பத்தி சொல்லிடுறோம். நாங்க ஒரு பெரிய கூட்டம். எவ்ளோ பேருன்னு எங்களுக்கே தெரியாது. ஆனா எங்களோட எண் குடும்பம் எங்ககிட்டயிருந்துதான் தொடங்குது. 0,1 ல ஆரம்பிச்சு இரண்டுத்தையும் கூட்டி வர்ற எண் 1. அது ரெண்டுத்தையும் மறுபடியும் கூட்டுனா 2, இப்படியே கடைசியா இருக்கற இரண்டு எண்களக் கூட்டினா புது எண் கிடைக்கும். இப்டியே செஞ்ச்சுகிட்டே இருக்கலாம். எங்களை இயற்கையில இருந்து கண்டுபிடிச்சவர் பேருதான் ஃபிபோனஸி. அவர் பேரையே எங்களுக்கு வச்சுட்டாங்க. ஆனா நாங்க இந்த பிரபஞ்சம் முழுக்க பரவியிருக்கோம். . 3 நிறுத்த 5 தொடர்ந்தது. உங்க வாழ்க்கையில பல இடங்கள்ல நாங்க குறுக்க வர்றோம். உங்க உடல்லயே சில இடங்கள்ல நாங்க இருக்கோம். “என் உடம்புலையா? நீங்களா?” நவீன் தன்னைத்தானே சந்தேகத்தோடு பார்த்துக்கொண்டான்.
“உன் காது இருக்குல்ல காது. அதோட வடிவம் எங்களுடைய ஜியமெட்ரி வடிவமான ஃபிபோனஸி ஸ்பைரல் மாதிரி இருக்கும். 8 அவனுடைய ஃபோனை அவன் கையிலிருந்து எடுத்து ஃபிபோனஸி ஸ்பைரலை இணையத்தில் தேடிக் காட்டியது. “காது மாதிரி இருக்கு” என தன் காதைத் தொட்டுத் தடவிப் பார்த்துக்கொண்டான். “காதோட வெளிப்புற அமைப்பு மட்டும் இல்ல. காதுக்குள்ள இருக்கற காக்லியா அப்டிங்கற எலும்புலயும் இந்த ஃபிபோனஸி சுருள் இருக்கு.

( Since these spirals have the Divine Proportion of 1.618 seeds per turn, counting the seeds any spiral will result in getting a Fibonacci Number.)

அப்றம் வீட்ல என்ன சமையல் எண்ணை? கோல்ட் வின்னரா? ஒரு சூரிய காந்திப் பூவை கைல எடுத்துப் பார்த்திருக்கியா? 1 திரும்பவும் கேள்வி கேட்டது. “இல்ல” என்றான் நவீன். வட்டம் வட்டமா பூவுக்கு நடுவுல விதைகள் இருக்கும். ஒவ்வொரு வரிசையில் இருக்கும் விதைகளின் எண்ணிக்கையும் ஃபிபோனஸி எண்கள்தான். எல்லா விதையும் முளைச்சு வர்ற செடி வளரும்போது விடக்கூடிய கிளைகளின் எண்ணிக்கை ஃபிபோனஸிதான்.அப்படி இருக்கும்போதுதான் எல்லா இலைகளுக்கும் அதிகபட்ச சூரிய ஒளி கிடைக்கும். ஆக நாங்க எல்லா இடத்துலையும் இருக்கோம்.

“இதுல இன்னொரு விஷயம் இருக்கு” ஒரு காலை மடக்கி சுவற்றில் சாய்ந்து நின்றுகொண்டிருந்த 2 சொல்ல ஆரம்பித்தது. “மூளைக்கு இயல்பாவே எங்களைப் புடிக்கும் தெரியுமா? எங்க அஞ்சு பேருக்கு அப்புறம் வர்ற எந்த ஒரு ஃபிபோனஸி எண்ணையும் எடுத்து அதுக்கு முந்தின ஃபிபோனஸி எண்ணால வகுத்தா, 1.6ன்னு ஒரு மதிப்பு தோராயமா கிடைக்கும். அதுக்கு தங்கப் பின்னம்னு பேரு. உனக்குப் புரியற மாதிரி சொல்லனும்னா golden ratio. டாவின்ஸி தெரியுமா டாவின்ஸி. மோனாலிஸா வரஞ்சாரே அவர்தான். அவர் ஒரு கணக்கு சொல்றார். முகத்தோட நீளத்தை முகத்தோட அகலத்தால வகுத்து கிடைக்கற எண் 1.6 ங்கற அளவுல இருந்தா, அவங்களுக்கு அழகான, பிறரைக் கவரக் கூடிய முகம் இருக்குமாம். பிரபலங்கள்ல, நல்ல கவரக்கூடிய முக அமைப்பு இருக்கறவங்களோட முக அளவுகள எடுத்துப் பார்த்தா அவர் சொன்னதோட ஒத்துப் போகுது. அவர் இந்த முக அளவுகளை வைச்சு ஒரு ஆள் குற்றவாளியா இல்லையான்னு சொல்லலாம்னு கூட சொன்னார். அதுவும் கொஞ்ச நாள் அமல்ல இருந்தது.” 2 கொஞ்சம் மூச்சு வாங்கிக் கொண்டது.

“உனக்குப் புரிஞ்சிருக்கும்னு நினைக்கிறேன். நீ செய்யாததுனால இதெல்லாம் படிச்சு என்ன பண்ணப் போறேன்னு நினைக்கிற. நீ விவசாயம் பண்றதில்ல. ஆனா யாரோ ஒருத்தன் விளைச்சல் செஞ்சாதானே உனக்கு சோறு. அதேமாதிரி தான். உனக்கு தேவையில்லாம இருக்கலாம். தெரிஞ்சுக்க முயற்சி பண்ணு. தேடு, கேள்விகேளு. அப்போதான் எங்களைப் பத்தி இன்னும் நல்லாப் புரியும் உனக்கு. எண்கள் இல்லாம எதுவும் இல்ல. ஒட்டுமொத்த பிரபஞ்சமும் இயங்கறது எண்களாலதான். நாங்க இப்போ போயிடுவோம். நீ யாருக்கோ ஃபோன் பண்ணப் போனியே. அவனப் பார்க்கப் போகும்போது வழியில சிக்னல்ல எரியற சிகப்பு விளக்க உத்துப்பார்” இதுவரை பேசாமலிருந்த 0 தான் இறுதியாக வந்தால்தான் மதிப்பு எனத் தெரிந்து இதைச் சொல்லிவிட்டு சட்டென்று அவன் போனுக்குள் குதித்து மறைந்தது. தொடர்ந்து 1,2,3,5,8 வரிசையாக உள்ளே குதித்து மறைந்தன.

 

தெளிவாகக் குழம்பித் தெளிந்திருந்தான் நவீன். ஃபோன் எடுத்துப் பார்த்தால் எல்லா எண்களும் அதனதன் இடத்தில் இருந்தன. நண்பனுக்கு ஃபோன் போட்டு “மச்சான்! நம்ம டீக்கடைக்கு வந்துடுடா அஞ்சு நிமிஷத்துல” எனச் சொல்லிவிட்டு பைக் எடுத்துப் புறப்பட்டான். முதல் சிக்னலை இவன் கடப்பதற்குள் சிகப்பு விழுந்துவிட்டது. சிகப்பை உற்றுப் பார்த்தான். சின்னச் சின்ன சிகப்பு ஒளியுமிழிகள்(light emitting diode) ஒளிர்ந்து கொண்டிருந்தன. கொஞ்சம் கூர்ந்து நோக்குகையில் சூரிய காந்திப் பூவின் அமைப்பு. வட்ட வட்டமாக அடுக்கி வைக்கப்பட்ட ஒளியுமிழிகள். சட்டென்று ஃபிபோனஸி எண்கள் வந்துபோயின. 3,2,1 ல் மின்னி எரியும் சிகப்பு விளக்கு தன்னைப் பார்த்துக் கண்ணடிக்கிறாற்போல் தோன்றியது நவீனுக்கு.

சாட் போட் – chatbot – செயற்கை நுண்ணறிவு (Atificial Intelligence)

ரோபோட் என்பதிலிருந்து வந்தது தான் போட் .  நம்முடைய செய்திகளைப் படித்துப் புரிந்துகொண்டு அதற்குச் சரியான பதிலை அளிக்கும் மென்பொருள்தான் போட் .  அத்துடன் நாம் தொடர்ந்து டெக்ஸ்ட் செய்து உரையாடினால்  அதற்குப் பெயர்தான் சாட்போட்   (CHATBOT) 

CHATBOT க்கு  நான் வைத்த பெயர் ” அரட்டை எந்திரா” 

உங்கள் டி‌வி சரியாக வேலை செய்யவில்லை. நீங்கள் கம்பெனி ஆட்களுடன் போனில் பேசி விஷயத்தைக் கூறலாம் . இல்லையேல் இமெயில் அனுப்பலாம். அல்லது கம்பெனி பிரதிதிகளுடன் சாட்  செய்யலாம். அதாவது டெக்ஸ்ட் அனுப்பலாம் – உரையாடலாம்.  அரட்டை அடிக்கலாம்.   அல்லது அவர்கள் அழைப்பு மையம் ( கால் சென்டர்) ஆட்களுடன் பேசலாம். 

இதெல்லாம் பழங்கதை. வந்துவிட்டது புது கலக்கல் –  CHATBOT – அரட்டை எந்திரா. செயற்கை நுண்ணறிவுடன் உங்களுடன் உரையாடும் ஒரு கருவி. கிட்டத்தட்ட ரஜினிகாந்த் எந்திரனில் பேட்டி கொடுப்பது போல  இது நீங்கள் கேட்கும் கேள்விக்குப் பதில் சொல்லும் .  

இப்போது இந்தத் துறைதான் மிகவும் சூடான தலைப்பு.   செயற்கை நுண்ணறிவும் ( Artificial Intelligence) கருவி மொழியும் (Machine Language ) இணைந்து மிக வேகமாக முன்னேறிவருகிறது.  நாளையத் தொலைத் தொடர்பின் ஆணிவேர் இதுதான். 

 ஆப்பிள் ஐ போனில் வரும் ‘சிரி’ விண்டோஸ் சிஸ்டத்தில் வரும் ‘கோர்ட்டானா.’ கூகிளின் ‘கூகிள் நௌ’ , அமேஜானின்  அலெக்ஸ் எக்கோ போன்றவையும்  போட் வகைதான்.

இது எப்படி வேலை செய்கிறது என்று பார்க்கவேண்டும் என்று தோன்றுகிறதல்லவா ?

மிட்ஸுகு என்ற ஜப்பானிய எந்திரா (BOT ) உங்களுடன் உரையாடக் காத்திருக்கிறது.

செல்லுங்கள்    http://www.mitsuku.com/

நீ யார்? என்று கேட்டதற்கு மிட்ஸுகு சொன்ன பதில் : 

நான் செயற்கை நுண்ணறிவின் புதிய வரவு.  மனித மூளையின்  திறமையோடு அதி வேகமாகவும் சரியாகவும் செய்யக் கூடிய மனித எந்திரம். 

உங்களுக்குப் பொழுது போகவில்லையா ? ஒரு நல்ல எந்திராவுடன் அரட்டை அடியுங்கள்.

 கண்ணம்மாப்பேட்டைக்கு எப்படி போகணும்னு வழி தெரியலையா? (வேற உதாரணமே கிடைக்கலையா என்று எந்திரா திட்டினாலும் திட்டும்) . எந்திரா கிட்டே கேட்டால் ரோட்டை மட்டுமல்ல ரூட்டையும் காட்டும். அது இணைய தளத்தில தேடித்தான் காட்டுது. 

பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் கோச்சிங் சென்டரிலும் இந்த போட்டுக்கு நல்ல வரவேற்பு. மாணவர்களுக்கு வீட்டுப்பாடம் கொடுப்பதிலிருந்து, அவர்கள் அவற்றைச் சரிவரச் செய்து விட்டார்களா, எங்கே எல்லாம் தப்பு செய்திருக்கிறார்கள் ,எங்கு அவர்களுக்கு ஆசிரியரின் உதவி தேவைப்படுகிறது, சரியான விடை இருக்கும் இணையதளம் போன்ற பல நிகழ்வுகளை நிகழ்த்துகிறது இந்த எந்திரா. மனித குறுக்கீட்டைக் கிட்டத்தட்ட 90 சதவீதம் குறைக்கிறது . 

இப்போதைக்கு ஆங்கிலத்தில்தான் நீங்கள் இதனுடன் உரையாடலாம். கூடிய விரைவில் தமிழில்

” என்னம்மா கண்ணு சௌக்கியமா ? ” என்று நீங்கள் செய்தி அனுப்பினால் எந்திரா ”  ஆமாம்மா  கண்ணு சௌக்கியம்தான்” என்று பதில் எழுதும்  காலம் ரொம்ப தூரத்தில் இல்லை. 

 

படைப்பாளி -(எஸ் கே என் )

ம வே சிவக்குமார்

 

சென்ற ஆண்டு மறைந்த ம.வே  நெய்வேலியைச் சேர்ந்தவன். (என் இனிய நண்பன் என்பதால் ‘ன்’ விகுதி). ஒரு வித்தியாசமான துடிப்பான நண்பன். தற்செயலாகக் கணையாழியில் வெளிவந்திருந்த “கடவுளும் கையாட்களும்” என்னும் சிறுகதையைப் படித்த பிறகுதான் அவன் எழுதுவான் என்றே தெரியும். அடுத்தமுறை சந்தித்தபோது வெகுநேரம் உரையாடிக் கொண்டிருந்தோம்.  தான் காணும் விஷயங்களில் ஒரு வேறுபட்ட பார்வை மற்றும் எது எழுதினாலும் அதனூடே ஒரு நகைச்சுவை. கதைகளுக்குப் பெயரிடுவதிலும் ஒரு வேறுபாடு. ஆகியவை குறிப்பிடத்தக்கன.

வேடந்தாங்கல் (வேடம் தாங்கும் மனிதர்கள்), வட்டம்   (அந்தகால அறிவுஜீவிகள் – அவர்கள் எழுதுவதும் பேசுவதும் மற்றவரைச் சென்றடையாத குழூஉக்குறி), கடைச் சங்கம் (இளைஞர்கள் பொழுதுபோக்கும் டீ கடை பெஞ்ச்) என்று சில உதாரணங்கள். பல பொது நண்பர்களும் உண்டு என்பதால் அவன் கதைகளில் யாரைக் குறிக்கிறான் என்றும் புரியும். பெரிதாகச் சாதிக்கக் கூடியவன் என்று எழுத்தாளர் சுஜாதா, ‘குமுதம்’ எஸ்.ஏ.பி போன்றோரால் எதிர்பார்க்கப்பட்டவன். தொலைக்காட்சி நகைச்சுவைத் தொடர் ஒன்றுக்கு வசனம் எழுதியவன். சிறிதுகாலம் திரைப்படத்துறையிலும் இருந்தவன். தனக்கு உரிய அங்கீகாரம்  இல்லை என்பதால் தற்கொலை செய்துகொள்ளப்போவதாக அறிவித்தது, தனது நாடகத்தை ஒளிபரப்ப மறுத்த தூர்தர்ஷன் முன் உண்ணாவிரதம் என்று பல தடாலடிகள்.

“உன்னை நம்பு’ என்னும் சிறுகதை

“கொஞ்ச நாட்களாகவே எதைத்தொட்டாலும் பிசகிக்கொண்டு இருந்தது.” என்று தொடங்குகிறது. அடுத்தடுத்து பல சறுக்கல்களில் பொருளாதாரம் மோசமாகி, கடனுக்கு வாய்தா சொல்லும் பொய்களும் தீந்துபோன நிலை.  தொட்டதற்கெல்லாம் சிடுசிடுப்பு. அடுத்தமாதம் சீட்டு எடுத்துவிட்டால் பிரச்சினைகளிலிருந்து வெளியே வந்துவிடலாம் என்கிற  நம்பிக்கையில் தூங்கிப்போகிறான் . சிறு சிறு நகைகளையும் அடகு வைத்துக் கட்டிவரும் சீட்டு அது.

சீட்டு பிடித்துவந்த பால்கார சங்கர பாண்டியின் குடும்பமே காணாமல் போய்விட்டது. சீட்டுக்கட்டிய எல்லோரும் அதிர்ந்து போகிறார்கள். கதவை உடைத்து உள்ளே இருந்த சாமான்களை எடுத்துப்போகிறார்கள். இவன் எடுத்து வந்தது ஒரு கிரைண்டர். மனைவி அதை வீட்டில் சேர்க்கவில்லை. எல்லாமே போயிற்றே என்ற பெரும் துக்கத்தில் ஆழ்கிறார்கள்.

திடீரென சங்கரபாண்டி திரும்பிவந்து   குடும்பத்தோடு வெளியூர்  சென்றிருந்த சமயத்தில் இவர்கள் எல்லாம் வீட்டிலிருந்த லட்சக்கணக்கான  பணம் பண்டங்கள் எல்லாவற்றையும்   சூறையாடிவிட்டதாகப் புகார் கொடுக்க சூறையாடிவர்கள் பட்டியலில் இவன் பெயரும்.

மனைவியின்  தோழி சொன்னாள் என்று ஒரு சாமியாரைப் பார்க்கிறார்கள்.

நாக்கு வெளியில் தள்ளிய காளி படம், நடுவில் சூலம் குத்தப்பட்ட அம்பாரமாய்  குங்குமம், அந்த சூலத்தில் குத்தப்பட்ட எலுமிச்சம்பழம், சாம்பிராணிப்புகை,    சப்பணமிட்டு தியான நிலையில் கண் மூடியிருந்த சாமியார் …

“சாமியார் இப்போது கடவுள் மாதிரி. அதுக்கு ஒளிவு மறைவு கிடையாது. கூச்ச நாச்சமும் தெரியாது. பொட்டில அடிச்ச மாதிரி கேள்வி கேட்கும். அது கிட்டே பொய் சொல்லமுடியாது. எதிர்லே  ஆள் வந்து உட்கார்ந்ததுமே  அவன் யாருன்னு அதுக்குத் தெரிஞ்சுடும். வந்தவனுக்கு என்ன பிரச்சினை அதுக்கு என்ன தீர்வுன்னு டக்குன்னு பிடிபட்டுவிடும். அது உன்னப் பார்க்காது. தியானத்தில இருக்கு. உன் வார்த்தைகள்  அதுக்குக் கேட்கும். காதுல விழற வார்த்தைக்கு அது வாய்ல சொல்ற வார்த்தைதான்  பதில்.  தலையை ஆட்டிட்டு தட்சணையை வெச்சுட்டுப் போயிகிட்டே இருக்க வேண்டியதுதான்”    

இவன் டோக்கன் 132. வரிசையில் கூப்பிடப்பட்டாலும், சாமியாரே திடீரென  அறிவிப்பு செய்து யாரையாவது கூப்பிடுவார். அதுபோல கூப்பிடப்பட்ட ஒரு சேலத்துக்காரரை  -நீ தம்பிக்கு  துரோகம் செய்தாய். அவன் உன்னை  பதிலுக்கு  துரோகம் செய்தான். தானிக்குத் தீனி சரியாப் போச்சு. இங்கு வந்ததே தப்பு.  ஓடு’ என்று மானத்தை வாங்குகிறார்.

வரிசையில் சிலருக்குப் பிறகு,

” … சீட்டுப்பணம் கட்டி சிக்கல்லே இருக்காரு ஒருத்தரு. அவரை வரச் சொல்லு” என்று அறிவிக்கிறார். 

“வாய்யா. கிரைண்டரு. உனக்கு உன்  சம்சாரம்தான் ஆதரவு. இவளை விட்டுவிடாதே. இவதான் உனக்கு அச்சாணி. ரெண்டு மாடும் இணையா  இருந்தா எதையும் ஜெயிச்சுரலாம். மழை அடிக்கறப்போ உப்பும் காத்தடிக்கறப்போ மாவும் வித்துட்டுப் போனானே ஒருத்தன். அவனுக்குச் சொன்னதுதான் உனக்கும். தப்பு எங்கேன்னு யோசி. எல்லாம் சரியாயிடும்.  இப்ப  இல்லேன்னா அடுத்த தடவை. ஓடிட்டே இருந்தாத்தான் நிக்க முடியும் புரியுதா? உழைப்புதான் ஜெயிக்கும்.”       

குலதெய்வம் எது என்று கேட்டுத் தெரிந்துகொள்ளும் சாமியார் 

“…   மேட்டுத் தெருவிலேர்ந்து  இன்னார் மகன் இன்னார் பேரன் நேர்ல வந்து ஆஜர் ஆவாம அவனுக்கு நாம் ஒண்ணும் பண்ண முடியலையேன்னு ஏங்கிக்கிட்டு இருக்கு. அப்பிடி விடலாமா? அதனால் அவளைப் போய் பார்.   உன் சீட்டுப்பணம் போனது போனதுதான். புத்திக் கொள்முதல். இனி யாரையும் நம்பாதே. உன்னை நம்பு. குல தெய்வத்தை கூட வெச்சுக்க. அடுத்து ஒரு முயற்சி செய். அதுலேர்ந்து படிப்படியா நல்லாயிடுவே. கிளம்பு”  

என்கிறார்.

 

கையில் காசில்லாததால் குலதெய்வத்தைப் பார்க்கத் தாமதமாகிக் கொண்டே வந்தது. அடகிலிருந்த நகைய விற்று சொந்த ஊர் போகிறார்கள். குலதெய்வத்தைப் பார்க்க வருபவர்கள் முன்கூட்டியே ஐயரிடம் தகவல் சொல்லி வரவழைப்பார்களாம். செல் நம்பர் கிடைக்கிறது.

கோயில்  பாழடைந்து இருந்தது. கூட வந்திருந்த மனைவியும் அவள் தாயாரும் அருகே ஒரு வீட்டில் திண்ணையில் உட்கார்ந்து கொள்கிறார்கள். குழந்தைகள் ஓடிப்பிடித்து தூண்களைச் சுற்றி விளையாடுகிறார்கள்.   ஐயரும் வருகிறார், ஆனால் சற்று தாமதமாக. அதற்குள் காட்டுச் செடிகளை வெட்டிச் சுந்தம் செய்கிறான் .

கோவிலில் விநாயகர் தலையிலிருந்து ஓணான் குதித்து ஓடுகிறது. அம்மன் ஓட்டடைக்கு நடுவில் மூக்குத்தி  காணமல் போய் இவன் மனைவியைப் போலவே துவரம் தூர்ந்துவிடாமல் குச்சி ஒன்று வைத்திருந்தாள்.

பூஜையும் கற்பூரமும் முடிந்து கோவிலுக்கு ஏதாவது செய்யவேண்டும் என்று இவனுக்கும் மனைவி லலிதாவிற்கும் தோன்றுகிறது.

குறைந்த பட்சம் கோவிலைச் சுத்தம் செய்ய இரண்டாயிரம் ரூபாய் செலவாகும் என்று ஐயர் சொன்னார். லலிதா யோசித்தாள். குழந்தை ரம்யாவைக் கூப்பிட்டு கொலுசு, வளையல், தோடு முதலியவற்றைக் கழற்றினாள். முதலில் அழுத குழந்தை அது அம்மனுக்கு என்று தெரிந்தவுடன் அமைதியாகிவிட்டது. மெயின் ரோடு வரை கூட வந்து அடகுக் கடையில் ஐயர் பணத்தை வாங்கிக்கொண்டார் .

எங்கள் குலதெய்வ நேர்த்திக்கடன் இவ்வாறு இனிதே முடிந்தது. பதிலுக்கு வரலக்ஷ்மி செய்கிறபோது செய்யட்டும்.

என்று கதை முடிகிறது

இந்தக் கதையினை முழுதும் படிக்க    உன்னை நம்பு.

இணையத்தில் கிடைக்கும் இன்னொரு கதை  கடவுள்

சாதிக்க வேண்டிய உயரத்தை எட்டாவிட்டாலும் ‘வட்டம்’, ‘வேடந்தாங்கல்’, ‘அப்பாவும் இரண்டு ரிக்ஷாகாரர்களும்   ‘பாப்கார்ன் கனவுகள்’ , ‘இறங்கப் போறீங்களா?’  மற்றும் போன்ற படைப்புகளுக்காக நினைவில் இருப்பான் ம.வே.சிவக்குமார்

 

பத்து நிமிட நாடகப் போட்டி முடிவுகள்

 

சிறந்த தயாரிப்பு : முதல் பரிசு :  Evam Lab : 27/ஃப்/5’11”

 

சிறந்த தயாரிப்பு : ரன்னர்ஸ் -அப் : QUID PRO QUO: தமயந்தி  & The Ordinary City 

 

பரிசு பெற்ற மற்றவர்கள்: 

சிறந்த பொதுத் தோற்றம் : F D F S ( First Day First Show) 

சிறந்த இயக்குனர்:பார்க்கவ் ராமகிருஷ்ணன்  (Shakespeare As You Like It ) 

சிறந்த மேடைக்கதை : சென்னைப்பட்டினம் 

சிறந்த நடிகர் (ஆண்) : கோகுல் ஆனந்த், வைத்யா எம் சுந்தர் , வெங்கடராமன் பாலகிருஷ்ணன் 

சிறந்த நடிகர் (பெண்) : லக்ஷ்மிப்ரியா சந்த்ரமௌலி 

இவை மீண்டும் பி‌எஸ் பள்ளி நாடக மன்றத்தில் செப்டம்பர் 17,18 தினங்களில் நடக்க உள்ளன.  

கபாலிடா !

Image result for kabali

இதுவரை ரஜினி நடித்த படங்களில் ரஜினி தான் இருந்தார்.

கபாலியில் கபாலி தான் இருக்கிறார்.

அதுதான் படத்தின் வெற்றிக்கும் மாறுபட்ட விமர்சனத்துக்கும் காரணம் !

கொஞ்சம் சிரித்து வையுங்க பாஸ் -சிவமால்

 

டேய் நேத்திக்கு நான் பெண் பார்க்கப் போனேனே..
அந்தப் பெண்ணுக்கு என்னைப் பார்த்ததும் பரவ-
சத்தில் வாயெல்லாம் பல்…

‘பின் ஏண்டா.. அவளை வேண்டாம்னு ரிஜக்ட்
பண்ணினே !’

‘அடப் போடா.. அவ வாயிலே முப்பத்திரண்டில்லே
அறுபத்து நாலு பல்….’

!!!!

தலையங்கம் – தங்கம் வாங்கலையோ தங்கம்?

1எடிட்

உலகத்திலேயே அதிகமாகத்  தங்கம் வாங்கும் நாடு நம் இந்தியாதான்! ஆனால் ஒலிம்பிக்கில் மட்டும் ஏன் நம்மால் தங்கம் வாங்க முடியவில்லை?

அதற்கான வீரம் இல்லையா,  விவேகம் இல்லையா, தரம் இல்லையா, தகுதி இல்லையா ?   அல்லது சாதிக்கப் பிறந்தவர்கள்  யாருமே இல்லையா ? அனுமனும்  பீமனும் கதை நாயகர் மட்டும் தானா? உதாரண புருஷர்கள் இல்லையா ? நாம் பழமை பேசித் திரியும் பஞ்சாங்கமா?

விளையாட்டுக்கும் உடற்பயிற்சிக்கும் பள்ளியிலிருந்து முக்கியத்துவம் கொடுத்து நம்மை நாமே தயார் செய்யவில்லை என்றால் நம் இந்தியா வல்லரசானாலும் வெறும் சொல்லரசாகவே இருக்கும்.

ஏட்டுச் சுரைக்காய் போல டாக்டரையும் இஞ்சினியரையும்  தயாரிக்கும் தொழிற்சாலையாக இல்லாமல் உண்மைக் குடிமக்களை உருவாக்க நாம் முயலவேண்டும்.

செய்வோமா ? செய்வீங்களா?

Image result for rio olympicsIndia players carrying the Indian flag at the opening ceremony of the 2012 London Olympics

 

யார் அந்த சிவப்பு டாப் மற்றும் நீல ஜீன்ஸ் பெண் ? எப்படியோ நமது டீம் கொடியெடுத்து வரும் போது கலந்து கொண்டு ஜாம் ஜாம் என்று மார்ச் பாஸ்டில் நடை போட்டு வருகிறாரே?  யாருக்கும் தெரியவில்லையாம்.

அடுத்த குளிர் கால ஒலிம்பிக்ஸ் எங்கே தெரியுமா ? பையோங்க்ஸங்க் என்ற சிறு  நாட்டில் 2018இல் நடக்க உள்ளது.

அதற்கு அடுத்த கோடைகால ஒலிம்பிக்ஸ் பீஜிங்கில் 2020இல் நடைபெற உள்ளது.

அதற்கு இப்போதே தங்கப்பையன்களையும் தங்கப்பெண்களையும் தயார் செய்வோம்.

 

நா முத்துக்குமார் – ஓர் அஞ்சலி

  “ஆனந்த யாழை மீட்டுகிறாய் ” என்று எழுதிய இவரது கரங்கள் தற்போது இறைவனுக்காகப்  பாடல் புனையப் போய்விட்டன !

“அழகே அழகே எதுவும் அழகே : என்று அழகை ஆராதித்த இவர் சொர்க்கத்தின் அழகை வர்ணிக்கப் போய்விட்டார் !

‘காவிரி நாட்டைInline images 1யும் கைக்குத்தல் அரிசியையும்’  பல்லெலக்கா என்று பாடிய இவர் இவற்றையெல்லாம் உதறித் தள்ளிவிட்டு  வேறு உலகம் சென்றுவிட்டார்!

இரண்டு தேசிய விருதுகள் ! தமிழக அரசு விருதுகள்! பிலிம்பேர் விருதுகள்! என்று விருதுகள் வாங்கிக் குவித்தவர் இன்று ஆண்டவன் கையில்  விருது வாங்கப் புறப்பட்டுவிட்டார் ! 

நல்ல கவிஞரை நாடு இழந்துவிட்டது!

 

அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்திற்கும் ரசிகர்களுக்கும் குவிகம் தனது ஆழ்ந்த வருத்தங்களைத் தெரிவித்துக் கொள்கிறது.