அவசரம் அவசரமாக விழுங்கி
வெந்தது வேகாதது பாதிபாதியாய்
சுவை கொஞ்சமும் உணராமல்
கிடைச்சது நிலைக்குமோ என்றபயத்தில்
பற்கள் நாக்கை ஒதுக்கிவிட்டு
இரைப்பை ரொப்பினா போதும்
அப்பாடா என்ற திருப்தியில்
மாட்டைவிடக் கேவலமானவன் நான் !
ஆனாலும் மாட்டுக்கு அறிவுண்டு
முழுங்கினதைத் திருப்பி எடுத்துவந்து
வாய்க்கே அதையும் கொண்டுவந்து
காலைச் சுகமாப் பரப்பிக்கொண்டு
வாலையும் மெதுவாய் ஆட்டிக்கொண்டு
தாடை ஆசையா அசைய அசைய
அசை போடும் அழகு வித்தையை
சாமி எனக்குச் சொல்லித் தரலை !
ஆனா நினைவுகளைப் பிடித்து
திரும்பத் திரும்பக் கொண்டுவந்து
அசைபோடத் தெரியுமே எனக்கு
நானும் புத்திசாலிதான் ஹையா
மாட்டுக்கு கொடுத்தான் ஓர் அசை !
எனக்குக் கொடுத்தான் வேற அசை !