ஒரு அயர்வு தரும் வேலைநாளின் முடிவில் சட்டென்று அலுவலக நண்பர்கள் முடிவெடுத்து எங்காவது போவது வழக்கம். அப்படித்தான் இந்த வெள்ளிக்கிழமை செகண்ட் ஷோ இருமுகன்
ஆனந்த் ஷங்கர் எடுத்த கதைக்களம் நல்ல கதைக்களம். ஒரு ஆளை ஐந்து நிமிடத்திற்குப் பறந்து பறந்து அடிக்கும் சக்தி தரும் மருந்து. அதை பயங்கரவாத அமைப்புகளுக்கு வில்லன் விற்கிறான். ஹீரோவும் வில்லனும் ஒரே உரு. கொஞ்சம் முற்பகை. இறுதியில் சுபம். ஆனால் சமீபமாக விக்ரமைச் சுற்றி சயின்ஸ் ஃபிக்ஷனும், மருந்து சோதனைகளுமாகவே வருகிறதே என ஒரு எண்ணமும் வராமலில்லை.
விக்ரமைப் பொறுத்தவரை வயது அவரைக் கண்டால் கடன்கொடுத்தவனைக் கண்டவன்போல் ஓடி ஒளிகிறது. உடற்கட்டு செம்ம. நயன் அள்ளிக் கொண்டு போகிறார்.
நயனுக்கு அறிவாளி, அப்பாவி எது கொடுத்தாலும் போகிற போக்கில் செய்துவிட்டுப் போய்விடுவார். படத்தில் நித்யா மேனன் எழுத்துக் கூட்டிப் படிப்பதுபோல் பேசுகிறார். ஆனால் பொம்மை போன்ற முகம் பேசுகையில் காதெல்லாம் கொஞ்சம் கம்மியாகத்தான் வேலை செய்கிறது. ஆனால் பாவம் ஸ்டண்ட் காட்சியில் பூச்செண்டோ கண்ணாடியோ வந்தால் உடைந்து போகுமல்லவா? அதுபோல அந்தப் பதுமை பாதியிலேயே போய் விடுகிறது. மனசு வைத்திருக்கலாம்.
தம்பி ராமையாவை மைனாவில் பிடித்த சிரிப்பு போலீஸ் விடவில்லை இன்னும். கருணாகரனின் அனாயாசமான நடிப்பை வீணடித்திருப்பதாய் தோன்றியது. நாசர் எப்போதும் விமரிசனத்துக்குள்ளேயே வரக்கூடாது. எப்போதும்போல் அருமை.
இசை வில்லனுக்கான ட்ராக்குகளில் பொருந்தியிருக்கிறது. பாடல்கள் இன்னும் கவனித்திருக்கலாம்.
கதை தமிழுக்குப் பழசு என்றாலும் சரியான ஆளிடம் ஒப்படைத்திருப்பதால் அற்புதமாக வந்திருக்கிறது. ஹீரோ விக்ரமை விட வில்லன் விக்ரம் உடல்மொழியில் அசத்துகிறார். நர்ஸ் உடையணிந்து ஆஸ்பிடலில் இருக்கையில் போலீஸ் ஒருவன் ஜொள்ளு விடுவதைக் காண்பிப்பது நச்.
குறைகள் அங்கங்கே தென்பட்டாலும் படம் ஒரு அறுசுவை எண்டர்டெயினர் வகை.
இனிப்பு : நயன்தாரா, விக்ரமின் உடற்கட்டு, வசனங்கள்
காரம் : ஹீரோ விக்ரமை ஏதோ ஜில்லா வஸ்தாது மாதிரி எதற்கெடுத்தாலும் அடிப்பதாய்க் காண்பிப்பது
கசப்பு : அங்கங்கே இசை, க்ளீஷேவான சீன்கள்
உப்பு : சரிவரக் கலக்காமல் இருக்கும் வேதியியல். லாஃபிங் கேஸ் பயன்படுத்துதல் போன்ற சீன்களைத் தவிர்த்திருக்கலாம்.
புளிப்பு : சும்மா சுர்ரென்று ஏறிய சீன்கள் இருந்தன. தொய்விலிருந்து அதுதான் தட்டிக் கொண்டு வந்தது. நயன்தாரா அதை செவ்வனே செய்திருக்கிறார்.
துவர்ப்பு : எல்லாவற்றையும் விட துவர்ப்புதான் ரொம்ப நேரம் தெரியுமல்லவா? நித்யா மேனன் கொஞ்சம் துவர்க்கிறார். விக்ரமின் தாடி எனக்குத் துவர்க்கிறது.
இருமுகன் : ஜாலிக்காகப் பார்க்கலாம்
படம் டிக்கட் கிடைக்காதவர்கள் இந்த டீசரைப்பார்த்து ஆறுதல் அடையுங்கள் !