உண்மைச் சம்பவம் – ஊரைச் சொன்னாலும் பேரைச் சொல்லமாட்டோம் !

அது ஒரு அழகான சுற்றுலாத் தலம்!

அன்றைக்கு மதியம் நானும் என் மனைவியும்  கடலில் நீச்சலடித்துவிட்டு சற்று ஓய்வு எடுத்துக் கொள்வதற்காக அருகில் இருந்த பாறையில் அமர்ந்திருந்தோம். எங்களைச்  சுற்றி சுமார் 50 பேர் இருந்தார்கள்.

அருகில் ஒரு பெண்.  கொஞ்சம்  வித்தியாசமாகக் காணப்பட்டாள்.

அவள் மெல்ல நடந்தாள். அவள் தலை பொன் வண்ணத்தில் குட்டையாக பாப் செய்யப்பட்டிருந்தது. அந்த மதிய நேரத்திலும்  அவளது சிவப்பு லிப்ஸ்டிக்  மற்றும் மேக்கப் எல்லாம்  மிகவும் கச்சிதமாக இருந்தது. அவள் கடற்கரைக் குளியலுக்குத் தகுந்தவாறு நீச்சலுடையில் இருந்தாள். அவள் ஆசியப்  பெண் என்பது நன்றாகவே  தெரிந்தது. வயது இருபத்தைந்து,   இருக்கலாம். எங்களுக்குப் பக்கத்தில்   நின்று கொண்டிருந்தாள். அவள் தன்னுடைய  அழகான  கேமராவை எடுத்து செல்ஃபி   ஸ்டிக்கில் சொருகிக்  கொண்டாள். சுதந்திரப் பெண்மணிச் சிலையின் தீப்பந்தத்தைப் போல  அந்தக் காமிராவை உயர்த்திப் பிடித்தாள். அவள் என்ன செய்யப் போகிறாள் என்று நாங்கள் ஊகிக்குமுன் அவள் அப்படியே  தொபுகடீர்  என்று தண்ணீருக்குள் குதித்தாள்.

சில வினாடிகள்.

தண்ணீருக்கு மேல் கையில் கேமராவுடன் வெளியே வந்தாள். நல்ல செல்ஃபிப்  படம் வந்திருக்கக்கூடும்.

அவள் தலை தண்ணீரில் மறைந்தது, டிக் டிக் என்று  வினாடிகள் போய்க் கொண்டிருந்தன. இன்னும் சில வினாடிகள்.

 

இது தான்  கார்னிகிலியா என்ற இத்தாலியின் சான்ஸே இல்லாத அழகான கடற்கரைக் கிராமம். புகைப்படப் பிரியர்களுக்கு அல்வா. சுற்றுலாப் பயணிகளின் சொர்க்கம் .  ரம்மியமான பகல் பொழுது. வெது வெதுப்பான  33 டிகிரி  வெயில். தண்ணீரில் 28 டிகிரி இருக்கலாம். அதிகக் குளிரில்லை. வானமும்  மேகமூட்டம்  எதுவும்   இல்லாமல் பளிச் என்று இருந்தது. அழகான மத்திய தரைக் கடல். பாறைகள் நிறைந்த கடல்வெளி. இரு மலைப் பாறைக் குன்றுகள்.  கிட்டத்தட்ட இருபது அடி   தூரத்தில்  கடல் அலைகள் அந்தப் பாறைக் குன்றில் மெதுவாக மோதிக் கொண்டிருந்தன. இயற்கையாகவே அந்தப் பாறைகளில்   ஆங்காங்கே தண்ணீரில் குதித்து விளையாட நீச்சல் பலகைகள் அமைத்தது போல் இருந்தது. கடலில் குஷியாகக் குதித்து நீச்சலிட  இதைவிட அருமையான இடம் கிடைப்பது அரிது.

இன்னும் சில துல்லிய  தகவல்கள். தண்ணீர் கிட்டத் தட்ட 30 அடி ஆழம் இருக்கலாம். உயிர் காக்கும் காவலர்கள் பக்கத்தில் யாரையுமே காணோம். செங்குத்தான அந்தப் பாறைகள் கரடுமுரடாக  இல்லாமல் கொஞ்சம் வழுவழு என்று  வேறு இருந்தன. தண்ணீரிலிருந்து    பாதுகாப்பான இடத்திற்குச் செல்லத்  தேவையானவை கயிறு அல்லது ஏணி . அவை இரண்டும் எங்களுக்கு அருகில்  இல்லை.

சில வினாடிகள் கழித்து அந்தப் பெண்ணின் பொன்னிறத் தலை தண்ணீருக்கு மேல் தெரிந்தது. எங்கேயோ ஏதோ  தப்பு என்று புரிகிறது; ஆனால்  என்ன என்று தெரியவில்லை .  அவள் கை  இன்னும் அந்த செல்ஃபி ஸ்டிக்கைப்  பிடித்தவண்ணமே இருந்தது.  அவை ஆடவில்லை -அசையவில்லை . அவள் கால்கள் தெரியவில்லை.அப்படியே நின்றவாறே இருந்தாள். அவள் நீச்சலடிக்கவும் முயலவில்லை. சில வினாடிகளில் அவள் தலை மீண்டும் தண்ணீரில் மறைந்தது.

சுற்று தூரத்தில் ஆண்களும் பெண்களும் சிறுவர்களும்  நீச்சலுடையில் கும்மாளமிட்டுக் கொண்டிருந்தார்கள். சிலர் பாறைகளில் சாய்ந்து சூரிய வெப்பத்தைப்  பருகிக்  கொண்டிருந்தார்கள். இன்னும் சிலர் சும்மா  ஜாலியாக நடந்து கொண்டிருந்தார்கள். அந்த  அகலமான  கடல்வெளியில் ஹோ என்ற கடல் காற்றின் இரைச்சல்  வேறு. முப்பது நாற்பது அடி சுற்றுவட்டாரத்தில்  எங்கள் மூன்று பேரைத் தவிர வேறு யாருமே இல்லை.

.நானும் என் மனைவியும் அந்த சிவப்பு லிப்ஸ்டிக் முகம் மறுபடி ஒருமுறை கடலுக்கு மேலே வருவதைப் பார்த்தோம்.  ஓரிரு  நொடிகள் தான். மறுபடியும் அவள் தலை தண்ணீருக்குள்  முழுகப் பார்த்தது. ” நீ ஒகேயா?” என்று கத்தினேன். என் குரலில் இருந்த பயம் எனக்கே தெரிந்தது.

மறுபடியும் அவள் தலை வெளியே வந்தது . வாயை  அகலத் திறந்துகொண்டு மூச்சுவிடத் திணறுவது போல் இருந்தது.  கொஞ்சம் தண்ணீரையும் குடிக்கிறாளோ? அவள் தலை மீண்டும் தண்ணீருக்குள் முழுகியது. என்னால் அதற்கு மேல் பொறுக்க முடியவில்லை. தண்ணீருக்குள் குதித்தேன். என் மனைவி பாறையில் அவளுக்கு எவ்வளவு தூரம்  அருகில் வர முடியுமோ அந்த இடத்துக்கு வந்தாள்.

காற்றுக் குமிழிகளைத் தேடி அவள் இருக்கும் இடத்தைக் கண்டு பிடித்தேன்.  தண்ணீருக்கு அடியில் இருந்தாள்.  அவளைத் தூக்கினேன். அவள் என் கையைப் பிடித்துக் கொண்டு மூச்சு வாங்குவதற்காகத் தண்ணீருக்கு வெளியே வந்தாள். நான் அவளைத் தூக்கிப் பிடித்துக்கொண்டு பாறைக்கு அருகில் வந்தேன். அங்கே என் மனைவி ஒரு கையால் அந்த வழவழப்பான பாறையைப் பிடித்துக் கொண்டு மறு கையை அந்தப் பெண்ணிடம் நீட்டினாள். அந்தப் பெண் சட்டென்று என் மனைவியின் கையைப்  பற்றிக் கொண்டாள். அந்த  மின்னல் அதிர்ச்சியில் தானும்  தண்ணீரில் விழுந்து விடுவோமோ  என்று  என் மனைவிக்குத் தோன்றியது. . நல்ல வேளையாக அப்படி  நடக்கவில்லை. என் மனைவி தன் முழு பலத்தையும் திரட்டி அந்தப் பெண்ணின் கையைப் பிடித்து கொஞ்சம் கொஞ்சமாக அவளை அந்தப் பாறையில் பத்திரமாகக் கரையேற்றினாள்.

” என்னாச்சு ? நீ ஒகேயா? ” என்று அவளிடம் என் மனைவி கேட்டாள். அவள் மெதுவாக  மூச்சு வாங்கிக் கொண்டே கூறினாள்.  “தாங்க்ஸ்”.  மறுபடியும் மூச்சை இழுத்துக் கொண்டு ” தாங்க்ஸ் .  இப்போ நான் ஓகே.”  என்றாள்.

பரவாயில்லை. ஆங்கிலம் தெரிந்த பெண். அவள் வார்த்தைகளும் புரிந்தன.

தண்ணீரிலிருந்தபடியே ,  ” என்ன ஆயிற்று?” என்று கத்தினேன்.

 “எனக்கு நீச்சல் தெரியாது. உங்க ரெண்டு பேர் உதவிக்கும்  நன்றி”  என்று சொல்லிக் கொண்டே மெதுவாக  எழுந்தாள். கால்கள் தடுமாறின. ஆனால் ஆபத்தில்லை. பிழைத்துக் கொண்டாள்.

“நிறைய பேர் தண்ணீரில் மிதக்கறதைப் பாத்தேன். ஆழம் இருக்காதுன்னு நினைச்சு சும்மா குதிச்சேன்”  என்று சொல்லிக் கொண்டே எங்களை விட்டுச் சென்றாள்.

“சும்மா குதிச்சேன்”

………. 

அரை மணி நேரத்துக்கு முன்:

 நானும் என் மனைவியும் அந்தக் கடலில்  குளித்துக் கொண்டிருந்தோம். 

அவள்:  சும்மா  இங்கே வா. ஆழமாத் தான் இருக்கும். காலை லேசா உந்தினா போதும் . அப்படியே தண்ணியில மிதக்கலாம் ” 

நான்: உனக்கென்ன ஈஸியா சொல்லிட்டே. . நான் இப்ப  தான் முதல் தடவையா காலில தரை தொடாத இடத்துக்கு வந்திருக்கேன். “

அவள்:  இதில ஒரு கஷ்டமும் இல்லை. நீ இதை ஈஸியா செய்யலாம். ஆனா உனக்கு பயம்”

நான்: ” கரெக்ட் தான். அது சரி.. நீ எப்பவாவது பாறையிலிருந்து தண்ணீரில குதிச்சிருக்கியா?”

அவள்: ” அவ்வளவு உயரத்திலிருந்தா? சாரி! அது வேற சமாசாரம் ”   

நான்: ” அந்த மாதிரி தான் எனக்கும்.” 

அவள்:  ” நாம ரெண்டு பேரும்  பயத்தைப் பாத்துப்  பயப்படாம இருக்க பயிற்சி எடுத்துக்கணும்.”

 நான்  இன்னும்  அந்தக் கடலிலிலேயே இருந்தேன். பயம் இல்லாமலில்லை.  தரையில் கால் படவில்லை தான் . நீச்சல் குளத்தின் ஆழமான பகுதி என் மனக் கண்ணில் தோன்றியது. சற்று தூரத்தில்  ஏணிப்படிகள் தெரிந்தன.

மெதுவாக நான் மிதக்க ஆரம்பித்தேன்.  ஏணியை நோக்கிச் சென்றேன்.  

எனக்குப் பதிலாக நீச்சல் தெரிந்த  என் மனைவி குதித்திருக்க வேண்டும் 

நான் பாறையிலிருந்து அந்தப் பெண்ணைத்  தூக்கி விட்டிருக்க வேண்டும் 

அந்தப் பெண்ணும் ஜாக்கிரதையா இருந்திருக்க வேண்டும்.

ஆனால் , சில சமயங்களில் நாம் அதிகமாக யோசிப்பதில்லை 

“சும்மா குதித்து விடுகிறோம்” 

பின்குறிப்பு:

” தண்ணியில  விழுந்தவங்களைக் கையைப் பிடிச்சுத் தூக்கக்கூடாதுன்னு எனக்கு நல்லாத் தெரியும். ஆனா அவ தலை முடி ரொம்ப அழகா வாரியிருந்தது; அதை எப்படிக் கலைக்கறதுன்னு தயக்கமா இருந்தது.” என்று என் மனைவி சொன்னாள்,  அந்த சிவப்பு லிப்ஸ்டிக்காரி  எங்களை விட்டுப் போன பிறகு !

 
 
 
 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.