அப்பாவின் டைப்ரைட்டர் என்ற புத்தகத்தை எழுதி ஏராளமான பாராட்டுக்களைக் குவித்த டாக்டர் ஜெ . பாஸ்கரன் ஒரு மருத்துவர். இவரிடம் நல்ல ஸ்டெத்தும் இருக்கிறது; நல்ல பேனாவும் இருக்கிறது.
ஒரு மாறுதலுக்காகக் குவிகத்தின் கடைசிப் பக்கத்தில் ஸ்டெத்துக்குப் பதிலாக பேனாவால் நம் இதயத்தைத் தொட வந்திருக்கிறார். தொடர்ந்து எழுத வாழ்த்துக் கூறி வரவேற்கிறோம்.
” குவிகம் மின்னிதழில் கடைசி பக்கம் நீங்கள் ஏதாவது எழுதுங்கள் – புதுமையாகவும், புதியதாகவும் இருந்தால் நல்லது “ என்றார் திரு சுந்தரராஜன். மகிழ்ச்சியாக இருந்தாலும், உள்ளுக்குள் ஏதோ உதைத்தது – பயம்தான். புது, புதி இரண்டுக்கும் இடையில் ஒரு ‘த்’ சேர்த்து மனம் மிரண்டது – அவர் சொல்படி எழுத, ‘புத்து’ வாகிய எனக்கு ‘புத்தி’ இருக்கிறதா என்ற கவலை என்னைச் சூழ்ந்துகொண்டது!
இதுதான் என் முதல் ’கடைசி’ பக்கக் கட்டுரை – இதற்குப் பிறகு படிக்க ஒன்றும் இல்லை என்று சொல்லாமல் சொல்லும் பத்தி – இதைப் படித்த பிறகு இதிலேயே ஒன்றும் இல்லையே என்று தோன்றினால் நான் பொறுப்பல்ல!
புகழ் வாய்ந்த கடைசி பக்கங்களை எழுதியவர்கள் நினைவுக்கு வந்ததும் உதைப்புக்கு இன்னொரு காரணம்! கல்கியின் கடைசி பக்கங்களில் கவிஞர் கண்ணதாசன், சமீபத்தில் மாலன், கணையாழியின் கடைசி பக்கங்களில் சுஜாதா, தற்பொழுது இ.பா. என்று இந்த சிங்கங்களின் உறுமலில், என் ’மியாவ்’ காணாமல் போய்விடுகின்ற காமெடியை வாசகர்கள் ரசிக்கக்கூடும்! இன்று முகநூலில் சிறப்பாக எழுதும் பலருக்கும் – சுருக்கமாகவும், ‘சுருக்’ கென்றும், நகைச்சுவையாகவும், நம்பகமாகவும் எழுத – இம்மாதிரிக் கடைசி பக்கக் கட்டுரைகளே முன்னோடிகள்!
முதல், நடு அல்லது எந்த ஒரு பக்கமானாலும், தன் பக்கமாக எழுதுவோரும் உண்டு – லேனா தமிழ்வாணனின் ஒரு பக்கக் கட்டுரைகள் (ஆயிரத்தையும் தாண்டி இன்னும் பக்கம் பக்கமாக ஒரு பக்கக் கட்டுரைகள் எழுதுபவர் – கின்னஸில் இடம் பிடித்து விடுவாரெனத் தோன்றுகிறது!) ஏர்வாடியார் கவிதைஉறவில் தனக்கென ஒரு பக்கம் எழுதுகிறார்! ஆனாலும் கடைசி பக்கத்துக்கென்று ஒரு தனி அந்தஸ்த்து வந்து விடுகிறதோ?
‘ கடைசி ‘ ( அது ‘சி’ யா ‘சீ’ யா?) என்ற சொல்லுக்குக் க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி “ (தொடர்ச்சியில், வரிசையில், காலத்தில்) முடிவு; இறுதி “ என்று பொருள் கூறுகிறது.
பரீட்சைக்குப் பணம் கட்டக் கடைசி நாள், ரேஷன் வாங்க இன்றே கடைசி நாள் என்று காலக் கெடுவைக் குறிப்பது இந்த கடைசி என்ற சொல் – வரிசையில் கடைசியில் வருபவருக்கு, இலக்குக்கு அருகில் வரும் வரையில் ‘திக்’ திக்’ தான் ! விறு விறுப்பாகப் படித்துக்கொண்டிருக்கும் மர்ம நாவலின் கடைசிப் பக்கம் முக்கியமானது ! கடைசிக்கும் ஒரு முக்கியத்துவம் இருக்கத்தான் செய்கிறது.
இப்படித்தான் இந்தக் கடைசி பக்கத்துக்கும் ஒரு காலக்கெடு உண்டு – அதற்குள் எழுதிக் கொடுக்க வேண்டும்! எல்லாப் பக்கங்களையும் சுவாரசியமாகப் படித்துக் கொண்டு வருபவர்கள், கடைசி பக்கத்திலும் அதே சுவாரசியத்தை எதிர்பார்ப்பது இயல்பு – அதற்கேற்ப எழுதவேண்டுமே என்ற கடைசி பக்கக் கவலை முதலிலேயே வந்துவிடும்! ஒரு திரைப்படத்தின் கடைசி சீன், மகிழ்ச்சியாகவும், சுபமாகவும் முடிந்தால் அது அந்தப் படத்தின் வெற்றிக்கு உதவும் – அப்படித்தான் கடைசி பக்கமும் படித்த பிறகு ஒரு நிறைவைத் தர வேண்டும் என்ற குறு குறுப்பும் இருக்கத்தான் செய்கிறது.
பக்கம் கடைசியாக இருந்தாலும், பக்கம் பக்கமாக சொல்லாத ஒரு விஷயத்தை நல்லபடியாக சொல்லவேண்டிய கட்டாயமும் இருக்கிறது!
முயற்சிக்கிறேன்!
கடைசியாக எஸ் வி சேகர் நாடக ஜோக் ஒன்று: “ அப்டீன்னா, கடைசில அவர் தான் உங்கப்பான்னு சொல்லு! “ “ ம்ஹூம், ஆரம்பத்திலேர்ந்தே அவர்தான் எங்கப்பா! “ “ ஙே ! “