சட்டென மலர்ந்த பவளமல்லி பூக்கள் – லதா ரகுநாதன்

 

வெகு நேரமாக பஸ்ஸுக்குக் காத்திருந்ததில் அவளுக்குக் கால்கள் நிறையவே வலித்தது. வெள்ளை போர்ட் பஸ் தூரத்தில் வருவது தெரிந்தது… சாளேஸ்வரம்… கண்ணாடி இல்லாமல் படிக்கமுடிவதில்லை… கிட்டப் பார்வை, தூரப்பார்வை….இருந்துவிட்டுப் போகட்டும்….. பார்வையே இல்லாது இருந்தாலும் பரவாயில்லை, காதும் கேட்காவிட்டால் அபாரம் … என்ற நிலைக்கு மருமகள் செய்கைகள் தள்ளிவிட்டிருந்தது…..

pavazamalli-new


கட்டி இருந்த கிழிந்து போன தேவேந்திரன் புடவை சோப்பைப் பார்த்து மிக அதிக காலம் ஆகி இருக்கும் என்று சிக்கு வாடை காட்டிக்கொடுத்தது.

“இந்த பஸ் போகுமா….??”

போனில் எதையோ பார்த்து கேனத்தனமாகச் சிரித்துக் கொண்டிருந்த பையன் வேண்டா வெறுப்பாகத் தலையைத் தூக்கிப்  பார்த்து…. தலை அசைத்தான்.

அது மேலும் கீழும் போலும், வலது இடது போலவும் இருக்கச் செய்தது அவன் கற்ற கலையே….

“ போகுங்களா…??”

”ம்……”

”எங்கே அந்த ஒடிசலா ஒரு அம்மா இருந்தாங்களே…அம்மா…சேவா கேன்த்ரா  இஸ்டாபிங் இதான்….எறங்கிக்கிங்க…..”

சேவா கேன்த்ரா பார்வை எட்டும் தூரம் வரை நீண்டு கிடந்தது. ஒத்தையடி மண் பாதைபோல் ….பேருக்கு அங்காங்கே சிமின்ட் திட்டுக்கள். உயர்ந்து வளர்ந்திருந்த மரங்கள் பெயரையும் வயதையும் வெள்ளை பெயின்ட் தடவல்களில் பெருமைப் பட்டபடி….

தன் பெயர்… அது என்றோ மறந்துவிட்ட ஒன்று …. மரங்களைப் போல் யாரும் பெருமைப்படுத்த வேண்டாம்… மாற்றாமல் இருந்திருக்கலாம்… சனியன், கழுத்தறுப்பு, வேலைக்காரி, தண்டச்சோறு…. இன்னும்….. மறந்துதான் போய்விட்டது அவைகளும்…. இவ்வளவு இருந்தால் …..???

“யாரும்மா அது…?’

அதட்டலாகக் கேட்கப்பட்டது.

இது என்ன புதுசா…? அன்பான குரல் பேசப்பட்டிருந்தால் அங்கேயே உடைந்து அழுதிருக்கக்கூடும். வறண்டு வெறிக்கும் கண்களில் எங்கேயோ அந்தக் கண்ணீர் துளி உற்பத்தித் தொழிற்சாலை அமைத்திருக்கக்கூடும்..

“அம்மாவப் பாக்கணும்….”

” யாரு… உன் அம்மாவையா… உனக்கே எட்டு கழுத வயசிருக்கும் போல…?”

” இல்ல… பிரின்சிபால் மேடத்தை….”

”பார்ரா… இச்கோலு படிக்க வந்தியா…..?”

பதிலுக்குத் தடுமாறியபடி நிற்க…..

மெலிதான ஒரு பெளடர் வாசம் முன்னே வர…

“யசோதா…. வாயாடாத… இன்னும் ஒரு தடவை இப்படி செய்வதைப்பார்த்தேன் ……  அது சரி…யாரும்மா நீங்க…?”

”புகலிடம் தேடி வந்திருக்கேன்….”

” இங்கியா….. யார் சொன்னாங்க…?”

”தெரிஞ்சவங்க….”

கைகளில் ஒரு மஞ்சள் பை…. அழுத்தமாகச் சுற்றப்பட்டு…இன்னும் அழுத்தமாகக் கைகளில் பிடிபட்டு….. தோள்பட்டையில் கிழிந்த ப்ளவுஸ், நுனியில் நூல்களாகத்  தொங்கிய புடவை… எண்ணை தீபாவளிக்குக் கூட காணாத பரட்டை முடிக்கற்றைகள்…நெற்றியில் கருப்பாக ஒரு புள்ளி சாந்து பொட்டு…கழுத்தில் தங்க நிறத்தில் ஒரு நாளில் மினுக்கி, இன்று முலாம் கரைந்து மூலப் பொருளாகப் பல்லிளித்த ஒற்றைச் சங்கிலி……

”தப்பா வந்திருக்கீங்கம்மா….இங்கே யாரையும் இப்போ சேக்கரதில்ல….”

”அம்மா அப்படிச் சொல்லக்கூடாது…வீட்டை விட்டு வந்துட்டேன்.    திரும்பப்  போக முடியாது .”

” ஓ… அப்போ வேகன்சி இருந்தாலுமே நீங்க சேர முடியாது..இங்கே யாரும் இல்லாத அநாதைங்களுக்குத்தான் புகலிடம்…வீடு இருக்குங்கிறீங்க….யாரு அது?’

” என் மகன்தான்… உயிரோடுதான் இருக்கான்… என்ன… அவன் பார்வையிலே நான்தான் செத்துட்டேன்.. அப்போ… யாரும் இல்லை தானே…..”

” பாருங்கம்மா…ரூல்ஸ் மாத்த முடியாது..கேட்டீங்களா…போங்க போங்க…”

அவள் கண்களில் பசியைப் பார்த்திருக்கக்கூடும்….

”காலையிலே எதுனாச்சும் சாப்டீங்களா….டீ இவளே… பொங்கலும் காப்பியும் கொடு…தின்னுட்டுப் போகட்டும்”

”ரொம்ப நன்றீங்கம்மா… சாப்புட்றேன்…அதுக்கு ஏதானும் ஒரு வேல செய்ய அனுமதிங்க…”

சிறிது நேரம் இவளைப்பார்த்தாள்….

” சரி… எங்கே போவீங்க…?”

”தெரியலை… அந்த வீட்டுக்குப் போக முடியாது….”

”என்ன வேல செய்வீங்கோ…?”

“நன்னா சமைப்பேன்”

”பிராமின்ஸ்ஸுங்களா?”

”ஆமாம்…”

”இங்கே அவங்க யாரும் கிடையாது… கறி சோறு ஏதும் செய்யமாட்டோம்..ஆனால் ஸேவா கேன்திரா நடுநிலைப்பள்ளி இருக்குது. அதுலே சமையல் வேலை செய்யறீங்களா…? இங்கே தங்க அனுமதியும் கிடைக்கும். “

” அப்பா..எவ்ளோ நாள் ஆச்சு…இப்புடி ஒரு சமையல் சாப்பிட்டு….சமையலுக்கு ஆள் இருக்கா….?”

”அது…வந்து……” மாட்டுப்பெண் தடுமாற……..

” மா…சொல்லேம்மா… நம்ம வீட்டுலே ஒரு ஆல் இன் ஆல் வேலைக்காரி வீட்டோடு இருக்கிறாள் என்று…… பேத்தி சொல்லிற்கு மகன் அசெளகர்யமாகத் தலை ஆட்ட……

எங்கோ ஒரு நூலிழையாக ஒட்டி நின்ற பந்தம் சடாரென்று அறுபட்டு நின்றது.

“சுமாரா சமைப்பேன்..சாப்டு பார்த்துட்டுச் சொல்லுங்கோ…..”

”சரி… டீ…இவளே…மாமிய ஓல்ட் ஏஜ் ஹோமுக்கு அழைச்சுப்போ…..”

இதில் அவ்வளவாக ஏற்பு இல்லாத பெண் ஒருத்தி முன்னே நடக்க….

கொஞ்சம் தயங்கினாலும் போகச்சொல்லிவிடுவார்களோ என்ற அச்சத்தில் இவள் பின் ஓட…..

முப்பதுக்கு முப்பது விஸ்தாரமான பெரிய ஹால். இரு புறமும் சிறியது சிறியதாகச் சின்னச் சின்ன அறைகள்.

” தா… ஓரமா குந்து. துன்ன எடுத்தாறேன்…..”

”யாருடி….இது?”

”அக்காங்….புது அட்மிஸன் தான்”

”பாருடி… எடமில்லம நாமே அவஸ்தையிலே இருக்கம்…. இவ வேறயா…?”

“பல்லி கணக்கா தான் இருக்கா… சுவத்துல ஒட்டிடலாம்…சபக்குனு…”

பெரிய கூட்டம் சுற்றி அமைந்தது

அவளுக்கு அவர்கள் பேசுவது அவ்வளவாகப் புரியவில்லை. ஆனால் தன்னை அவர்களுக்குப் பிடிக்கவில்லை என்பது சர்வ நிச்சயமாகப் புரிந்தது.

” அய்யோ….அம்மாடி…நாசமா போறவளே….தண்ணியா கொட்டற… இரு வெளியார வந்து ஒன் தலையிலே பக்கெட்ட போடல……நான்……..”

” பின்ன என்னாடி…எம்புட்டு நேரமா கக்கூசுக்குள்ள என்னா பண்ணுற..? அவள் அவள் இங்கே நாறிகிட்டு கெடக்கா……”

“அய்ய… என்னா பயந்துட்டியா புது அட்மிஸனு…. ஒனக்கும் ஒருநா தலையுல தண்ணி விழும்…பாத்துக்க…”

”யாருடி…என் பாடீஸ எடுத்தது…?”

”நான்தேன்….நா மறைச்சு வெச்ச சாக்லேட் எடுத்து தின்ன இல்ல… பனிஸ்மென்ட்…….”

”பன்னாட… புத்திய காண்பிச்சுட்ட பாத்தியா…. புதுச போட்டு நா எடுப்பா நிக்கிறது ஒனக்கு ஆவுல….”

”பொத்திகிட்டு போவியா….”

” அட , இத தனியா வேற சொல்லணுமா… ஒண்ணும் போடாத என்னாத்த காட்டுறது….. பொத்திகிட்டு தான் போவணும்….”

புதிதாக வந்த பல்லி என்று நாமகரணம் இடப்பட்ட அவள் மறக்கப்பட்டு…அங்கே…..”கொல்”

“அய்ய…. நிறுத்துங்கடி…. இந்த புது அட்மிஸன் எப்புடி சமைக்கிறாங்க பாக்கணுமாம் . இந்தாடி… யாரு சமையல் டூட்டி… இநத அம்மாவையும் சேத்துக்க….”

”நீங்க பிராமின்ஸ்ஸா….?’”

” ஆமாம்…”.

” சரிபட்டு வராது அக்கா…”

” அக்காங்…நானும் அதைத்தான் நெனச்சேன்….நமக்கு ஏன் பாலிடிக்ஸ்ஸு….சமையல் முழுசா செய்யட்டும்… வெசயம் சபைக்கு வந்துடுமில்ல….”

“இந்தா…இப்ப நாப்பது பேரு துன்ன வருவாங்கோ… ஒண்டியா சமைப்பியா…?”

“புது எடம். பாத்திரம் பண்டம் பழகணும்…கொஞ்சம் ஒத்தாசையா இருந்தா….”

”மாமீ…. தெரியும் …நீங்க லேசுப்பட்ட ஜாதியில்ல….ஒத்துவராது….போய்கினே இருங்க….”

” இல்ல… சமையல் ருசி பார்க்கறேன்னு சொல்லியிருக்கா…. ஏதாவது செய்யறேன்….”

கத்திரி பொடி இடித்த கறி, முருங்கை அரைத்துவிட்ட சாம்பார் அங்கே வாசமளிக்க ஆரம்பித்தது.

”இன்னாடி…. இன்னா கறி…?”

”ஆங்…. கத்திரிக்காய் தான்..”

” மனுசன் துன்னுவான்….வாரம் முழுசூட்டும் இத்தேதாநாடி….”

”புது அட்மிஸன் செஞ்சிருக்கு….துன்னுப்பாரு…..”

அப்போதே அங்கே தங்க அவளுக்கு அனுமதி வழங்கப்பட்டது….

“எங்கே நான் இருந்துக்கறது…?”

”இதப் பாரு… யாரு ரூமிலேயும் எடமில்ல….இத்தோ…ஒரு ஓரமா இருந்துக்க”

மகன் வீட்டில் கக்கூஸ் வாசலில் ஒரு கிழிந்துப்போன புடவையை விரித்து, அதன் தலப்பை சுருட்டி தலைக்கு வைத்து, ஒண்ணுக்கு வீச்சத்தையும் மீறி லேசாக கண் அசந்த நேரம் “சனியன் பரத்திண்டு தூங்கறது பார்” என்று காலை மிதித்துச்செல்லும் மருமகள் நினைவுக்கு வந்தது .

இங்கேயும் யாருக்கும் பிடிக்கவில்லை…. துரத்திவிட்டுவிடுவார்கள் என்றே தோன்றியது. ஜாதி வேறு பிரச்சனை. எப்போதோ பாடி வைத்து விட்டு போய்விட்டார்கள்…மாதராய் பிறப்பதற்கு மா தவம் செய்தல் வேண்டும்…..

“ஏய்…. அம்மா ஆபீசுக்கு கூட்டியாரச் சொன்னாங்க… வா….”

” உங்களை சமையல் வேலைக்கு எடுத்துவிட்டேன்.சாப்பாடு, படுக்கை,தங்க வசதி எல்லாம் உண்டு. உங்க வேலைக்குக் கொடுக்கப்படும் சம்பளம் இதற்காக எடுக்கப்படும். மீதம் இருந்தால் கைகளில் கொடுப்போம்.. “ ஏதோ சொல்லிக்கொண்டே போனார்கள். மையமாக தலை அசைப்பு மட்டும் கொடுத்தாள்.

” என்னை போகச்சொல்ல மாட்டேள் இல்ல…”

அவள் திரும்பிச் சென்ற போது அவள் மஞ்சள் பை அக்கு வேறு ஆணி வேறாக பிரிக்கப்பட்டுக் கிடந்தது . போட்டோ ஒன்றும் வீசப்பட்டுக் கிடந்தது. பொறுக்கி எடுத்தபோது சில கண்ணீர் துளிகளுடன் பளபளத்தது.

“ஏய்… புது அட்மிஸனு… ரொம்ப தான் பிலிம் காட்டாத….தோ பார்ரா….என்னமோ பெரீய்ய சொத்து வச்சிருக்க…நாங்க எடுத்துட்டோம்….இங்கப் பாரு… நீ தான் எங்க சோறுக்குப் போட்டியா வந்திருக்கே…. ரூல்ஸ்படி நாங்கதான் அழுவோனும்…..வா…வா…குந்து…”

வேலை முடிந்து யாவரும் இருந்தார்கள். எங்கோ தூரத்தில் தவளையின் கறக். அழுது வடிந்த ஓர் மஞ்சள் விளக்கு. தலைக்கு மேல் முழு நிலவு….

”அய்ய…. யாருநாச்சும் பாடறது….”

”ரோசி….பாடு…நல்லாத்தானே பாடுற….”

”புது அட்மிஸன் பாடுமா…கேளு….”

மெல்லப் பாடினாள்…. சின்ன வயதில் ரேடியோவில் கேட்டு, பின் மகன் தூங்கப் பாடி… எப்போதாவது ஓர் அரிய நேரத்தில் கணவனுக்காகவும் பாடிய…அமுதைப் பொழியும் நிலவே…..

எல்லோரும் சுற்றி….மிக அருகில்… சுற்றி அமர்ந்தார்கள்.

சட்டென்று இரவில் மலர் விடும் பவழமல்லிகையாக, நட்பும் அங்கே மலர்விட்டது.

Image result for பவழமல்லிImage result for பவழமல்லிImage result for பவழமல்லி

 

 

 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.