கையிலிருந்த பிளானை மேல் வாரியாகப் பார்த்து
விட்டுத் திறந்து வைத்திருந்த தன் மேஜை டிராயரில் அலட்சிய-
மாக எறிந்த பின், தலை நிமிர்ந்து எதிரே உட்கார்ந்திருந்த
மதனை நோக்கிப் புன்னகைத்தான் மோகன்.
‘எஸ்;; மிஸ்டர் மதன்… அடுத்த மாதம் பத்தாம் தேதி
வாங்க.. அதற்குள்ளாக உங்க வீட்டுப் பிளானை ஸாங்ஷன்
வாங்கி வைக்க டிரை பண்ணறேன்…’
‘ஆனா.. மிஸ்டர் மோகன்.. இது ஆவணி மாதம்..
ஹௌஸ் கன்ஸ்ட்ரக்ஷன் ஆரம்பிக்க நல்ல மாதம்.. பிளானும்
உங்க ரூல்ஸ்படிதான் போட்டிருக்கோம்.. ஒரு டீவியேஷனும்
இல்லே… அதனாலே ஒரு வாரத்துலே நீங்க அப்ரூவல்
வாங்கிக் கொடுத்தீங்கன்னா நான் கன்ஸ்ட்ரக்ஷன் வேலையை
ஆரம்பிச்சுடுவேன்… ‘
‘பட்… அது எப்படி ஸார் முடியும்.. நாங்க பிளானை
ஸ்டடி பண்ண வேண்டாமா..? நீங்க ஒருத்தர்தான் பிளான்
கொடுக்கறீங்களா..? எக்கச்சக்கமா பேப்பர்கள் வந்து
குவியுது. கண்டிப்பா அட்லீஸ்ட் ஒரு மாதமாவது ஆகும்..’
‘நீங்க அப்படிச் சொல்லக் கூடாது.. நீங்க மனசு வெச்சா
கண்டிப்பா செய்யலாம். என் ·பிரண்டு முரளிக்குக் கூட நீங்க
தான் பிளானுக்கு ஒரு வாரத்துலே அப்ரூவல் வாங்கிக்
கொடுத்தீங்களாம்..’
‘மிஸ்டர் மதன்.. நான் என்ன செய்ய முடியும் சொல்-
லுங்க. ஆல்ரெடி, நிறைய பிளான்கள் அப்ரூவலுக்காக
பென்டிங்கிலே இருக்கு.. நான் அவற்றை யெல்லாம் ஓவர்லுக்
பண்ணி இந்த பிளானை எடுத்தா என் மேலதிகாரிகள்
மட்டுமல்ல… உங்களைப் போல பப்ளிக்கும் என்னைத்
தாளிச்சுடுவாங்க….’
‘என்னமோ ஸார்… நான் உங்களைத்தான் நம்பி
இருக்கேன். நீங்க மனசு வெச்சா எனக்குக் கண்டிப்பா
ஹெல்ப் பண்ண முடியும்….’
‘என்ன ஸார்… இப்படி யெல்லாம் பேசி என்னை ஒரு
இக்கட்டிலே கொண்டு வந்துட்டீங்களே… ‘ என்றவன் தன்
குரலைத் தாழ்த்திக் கொண்டு, ‘சரி ஸார்.. இவ்வளவு தூரம்
நீங்க கேக்கறதாலே ஒரு டிப் கொடுக்கறேன்… இந்த
பேப்பரை முதலில் எடுத்து ஆபீஸருக்குப் போடணும்னா
எங்க ஆபீஸிலேயுள்ள மற்ற ஸ்டா·புக்குத் தெரியாம
பண்ண முடியாது. நான் உங்களுக்காக – நீங்க இவ்வளவு
தூரம் கேட்கறதுக்காகச் செய்யறேன். ஆனா அவங்களுக்கு
இதனாலென்ன லாபம்..? அவங்களுக்கு ஏதாவது ஸம்திங்க்
கொடுத்து வாயை மூடிடலாம்…’
நிமிர்ந்து உட்கார்ந்தான் மதன். ‘இந்த ஸம்திங்க்’ அப்ப-
டியே மோகனுக்குத்தான் போகப் போகிறது என்று நன்றாகத்
தெரியும் அவனுக்கு. ‘தங்கள் டியூடியை செய்யக் கூட
லஞ்சமா..? நம் நாடு எப்போதுதான் உருப்படப் போகிறது?’
என்று நினைத்து நொந்து கொண்டான். ஆனால் என்ன
செய்வது? அவனுக்கு வேலை நடக்க வேண்டுமே..
‘எவ்வளவு செலவாகும்..? என்றான் தயங்கியபடியே..
‘அதிகம் ஒண்ணுமில்லே ஸார்.. ஒரு பத்தாயிரம்
ரூபாய் இருந்தால் சமாளித்து விடலாம்.. உங்களுக்கு
வேலையும் முடிந்து விடும்.. எனக்கும் தொந்தரவு இருக்காது’
என்றான் மோகன் அவனைப் பார்த்தபடியே.
அப்படியே அயர்ந்து உட்கார்ந்து விட்டான் மதன்.
மோகனின் பக்கத்திலிருந்த டெலி·போன் மணி
அடித்தது. ரிஸீவரை எடுத்து ‘ஹலோ..’ என்றான் மோகன்.
‘ …………..’
‘ஓ… பிரபுவா… நமஸ்காரம் ஸார்… பிரைமரி கான்
வென்டில் விசாரிச்சீங்களா..? நாளைக்கு என்னை வந்து
பார்க்கச் சொன்னாங்களா..? ஓகே.. ஸார்.. நான் பார்த்துட்டு
வரேன்.. தாங்க் யூ ஸார்.. ஸாரி பார் தி டிரபிள்.. தாங்க் யூ
உங்களை நாளைக்கு சாயந்திரம் வந்து வீட்டிலே பார்க்கி-
றேன்.. ‘ என்றபடியே ·போனை வைத்து விட்டு மதனைப்
பார்த்து அசட்டுச் சிரிப்புச் சிரித்தான் மோகன்.
‘அதையேன் கேட்கறீங்க ஸார்.. ஒரு எல். கே. ஜி.
அட்மிஷனுக்கு நாயா அலைய வேண்டியிருக்கு. என்
·பிரண்ட் ஒருத்தர் ·போன் பண்ணினார்.. பிரைமரி
கான்வென்டில் இன்னும் அட்மிஷன் க்ளோஸ் பண்ணலை-
யாம்.. அந்த பிரின்ஸிபலைப் போய் பார்க்கச் சொன்னார்..’
‘அப்படியா..’ என்று யோசித்தபடியே ஒரு நிமிடம்
உட்கார்ந்திருந்தான் மதன். ‘ஆமாம்.. அப்படிச் செய்தால்
என்ன.?’ என்ற எண்ணம் அவன் மனதில் தலைதூக்கியது.
‘ஓகே… மிஸ்டர் மதன்.. நாளைக்கு நான் லீவ்..
அந்தக் கான்வென்டிற்குப் போகணும். நாளன்னிக்கு வந்து
உங்களாலே அந்தப் பணத்தை அட்ஜஸ்ட் செய்ய முடியு-
மான்னு சொல்லுங்க. அப்புறம் ஒரு வாரத்துலே அப்ரூவ்டு
பிளான் உங்க கையிலே இருக்கும்.. பெஸ்ட் ஆ·ப் லக்..’
மெதுவாக எழுந்து வெளியேறினான் மதன்.
இரண்டாவது நாள்.. மோகனின் முன்னால் வந்து
அமர்ந்தான் மதன்.
ஏதோ ·பைலைப் பார்த்துக் கொண்டிருந்த மோகன்
தலையைத் தூக்கி மதனை நோக்கிப் புன்னகைத்தான்.
‘என்ன முடிவு பண்ணினீங்க ஸார்..?
‘வேறே என்ன வழி..? நீங்க சொன்ன பணத்தோடு
வந்திருக்கேன்’ என்று கூறிய படியே ஒரு நூறு ரூபாய்
கட்டை எடுத்து அவன் முன்னே வைத்தான்.
அலட்சியமாக அந்த நோட்டுக் கட்டைப் பார்த்தபடியே
‘என்ன ஸார்.. ஒரு கட்டுதான் கொண்டு வந்திருக்கீங்க..
ரெண்டு கட்டல்ல வேணும்.. ஒரு கட்டு குறையுதே..’ என்றான்
மோகன்.
‘என்ன நீங்க..? முந்தா நாள் பத்தாயிரம் ரூபாய்
செலவாகும்னுதானே சொன்னீங்க..?’
‘யூ ஆர் கரெக்ட்.. அப்ப அப்படித்தான் சொன்னேன்.
இந்த ரெண்டு நாளிலே என்னென்னவோ நடந்து போச்சு..
அன்னிக்கு நீங்க இங்கே இருக்கும்போதுதானே பிரைமரி
கான்வென்டிலே அட்மிஷன் க்ளோஸ் பண்ணலேன்னு எனக்கு
என் ·பிரண்டு ·போன் பண்ணினார்..’
‘ஆமாம்..’
‘நேத்து நான் அங்கே போனேனா.. அந்த பிரின்ஸிபல்
கூலா, ‘அட்மிஷன்லாம் க்ளோஸ் ஆயிடுச்சு.. ஸாரி’ ன்னு
சொல்லிட்டாங்க. ‘அவர் ரொம்ப தங்கமானவங்க.. ஸ்டிரெய்ட்
·பார்வார்டு.. பண விஷயத்துலே ரொம்ப ஸ்ட்ரிக்ட்’னெல்லாம்
கேள்விப் பட்டிருக்கேன். அவங்ககிட்டே கெஞ்சிக் கூத்தாடி
அவங்க காலைப் பிடிக்காத குறையா நின்னேன். கடைசி –
யிலே சுற்று முற்றும் பார்த்தபடி, தயங்கித் தயங்கி ஒரு
பத்தாயிரம் ரூபாய் கொடுத்தா ஹெல்ப் பண்ணறேன்னு
சொன்னாங்க. நீங்க – அதாவது பப்ளிக் – எங்களையெல்லாம்
திட்டறீங்க. அவரைப் பாருங்க.. ஸ்கூல் பிரின்ஸிபால்.
குழந்தைகளுக்கு லஞ்சம் வாங்கக் கூடாதுன்னு அறிவுரை
சொல்ல வேண்டியவங்க.. அவங்களே லஞ்சம் வாங்கினா..?
எனக்கு வேறென்ன வழி..? அந்தப் பத்தாயிரம் ரூபாயையும்
அவருக்கு அழுது பையனுக்கு அட்மிஷன் வாங்கினேன்.
அந்தச் செலவை நான் எப்படிச் சரிக் கட்டறது? உங்களை
மாதிரி தாராள பிரபுக்கள் யாரிடமாவதுதானே வாங்க
முடியும்…’
மதன் முகத்தில் ஈயாடவில்லை.
அடப் பாவமே.. பிள்ளையார் பிடிக்கப் போய் குரங்-
காய் மாறின கதை ஆயிடுத்தே..!
முந்தாநாள் மோகனைப் பார்த்து விட்டு வெளியே
வந்ததும் பிரைமரி கான்வென்ட் பிரின்ஸிபாலை ·போனில்
தொடர்பு கொண்டான் மதன். கான்வென்ட் பிரின்ஸிபல்
மாயா மதனின் ·பிரெண்டு. மதன் சொல்வதை யெல்லாம்
கேட்டுக் கொண்டாள்.
‘ஓகே.. மதன் அதுக்கு நான் என்ன பண்ணணும்னு
சொல்றே..?
‘மோகன் நாளைக்கு அட்மிஷன் கேட்டு உன்கிட்டே
வருவான்.. ஹீ ஈச் ஸோ டெஸ்பரேட்.. அவன்கிட்டே அட்-
மிஷனெல்லாம் முடிஞ்சு போச்சு.. ஆனா ஒரு பத்தாயிரம்
ரூபாய் எக்ஸ்டிரா கொடுத்தா வேலையை முடிச்சுடலாம்னு
சொல்லு.. இந்தப் பசங்களுக்கு இது மாதிரி டிட் ·பார் டாட்
கொடுத்தாத்தான் புத்தி வரும்..’
‘மை காட்.. மதன் .. வாட் ஆர் யூ டாக்கிங்..?
என்னை லஞ்சம் வாங்கச் சொல்றியா..?’ கொதித்துப்
போனாள் மாயா.
‘தப்பேயில்லே .. நீ இந்த சமுதாயத்திலே
ஒருத்தனைத் திருத்தறதுக்குத்தான் கேட்கறே..! நார்மல்
கோர்ஸ்லே கிடைக்க வேண்டிய ஒன்று.. அதுக்கு லஞ்சம்
கொடுக்க வேண்டியிருக்கிறதே என்ற உணர்வு அவனுக்கு
வந்தாத்தான் அவன் திருந்துவான். நீ வேணா பார்.. நான்
சொன்னபடி செய்.. நாளன்னிக்கு அந்தப் பத்தாயிரம் ரூபாய்
வேண்டாம்னு சொல்வான் பார்.. அப்போ அவன்கிட்டே
எல்லாத்தையும் விளக்கி அவன் உனக்குக் கொடுக்கப் போற
பத்தாயிரம் ரூபாயையும் திருப்பிக் கொடுத்து விடலாம்..’
மாயாவை ஒத்துக் கொள்ள வைக்கப் பெரிதும்
போராட வேண்டியிருந்தது மதனுக்கு.
ஆனால் இன்று நடந்தது விபரீதமாகவல்லவா
இருக்கிறது? மோகன் திருந்துவதற்குப் பதில் மேலும்
பத்தாயிரம் ரூபாய் கேட்கிறான். இந்த ஸொஸைட்டியில்
மாயாவிற்கு இருந்த நல்ல பெயரும் ரிப்பேராகி விட்டது.
தலை சுற்றியது மதனுக்கு. அப்படியே நாற்காலி-
யில் கண்ணை மூடியபடி சாய்ந்தான்.