வால் – அழகியசிங்கர்

வால்

val2

 

ஞானம் என் நண்பர். அவருடன் நேரம் தெரியாமல் பேசிக் கொண்டிருந்தேன். வெளியில் மழை பெய்து கொண்டிருந்தது. ஓரளவிற்குமேல் பேசி முடித்தபின்னும், பேசியதையே இன்னும் பேசிக்கொண்டிருந்தோம். மழை ஒரு வழியாக நின்றபிறகு வீட்டிற்குக் கிளம்ப எத்தனித்தேன்.

ஞானம் அப்போது சொன்னார். “உனக்கு வால் முளைத்து விட்டது!” என்று. எனக்கு அவர்மீது தாங்கமுடியாத கோபம். அவர் சொல்லிவிட்டாரே என்பதற்காக அல்ல. அவர் கண்டுபிடித்துவிட்டாரே என்று. நான் பதில் பேசாமல் நழுவினேன். சொன்னவுடன் அவர் என் முகமாற்றத்தைக் கவனித்திருக்கலாம்.

இரண்டு வாரங்கள் கழித்து திரும்பவும் ஞானத்தைப் பார்க்கச் சென்றேன். இருவரும் வழக்கம்போல் பல விஷயங்களைக் குறித்துப் பேசிக்கொண்டிருந்தோம். சுவாரஸ்யமாகப் பேசிக்கொண்டிருந்தவர், நடுவில் ஆத்திரம் வந்ததுபோல், “உனக்கு வால் முளைத்துவிட்டது” என்றார்.

இந்த முறை நானும் அவரைப் பார்த்துக் கோபத்துடன், “உங்களுக்கு எப்படித் தெரியும்?” என்று கேட்டேன்.

“நீ மறைக்கலாம். ஆனால் என் பார்வைக்கு அது தெரிந்துவிட்டது, நண்பனே” என்றார்.

நானும் கோபம் தணியாமல், “வால் இருந்தால் என்ன?”என்று கேட்டேன்.

“அதைக் குறித்து எனக்கு அக்கறை இல்லை. நீ சாமர்த்தியமாய் மறைக்கிறாய். ஆனால் எனக்குத் தெரியும் உனக்கு வால் முளைத்திருப்பது.”

அன்று முதல் அவருடன் நான் பழகிய முறையில் வித்தியாசம் ஏற்பட ஆரம்பித்தது. அவரும் இதைப் புரிந்துகொண்டிருப்பார். அவர் என்னைவிட வயதில் பெரியவர். அவரிடம் எனக்கு மதிப்பும், மரியாதையும் எப்போதும். பல விஷயங்களில் நாங்களிருவரும் ஒரே கருத்துடையவர்கள். திரும்பவும் அவரைப் பார்க்கச் செல்லும்போது என் உடைமேல் உடை அணிந்து வாலை மறைத்துக்கொண்டேன். அடக்கமாகச் சிரித்தேன். அதிகமாகப் பேசுவதைத் தவிர்த்தேன்.
அவரும் என்னுடன் பேசுவதிலிருந்து மிகமிக மாறிவிட்டார்.

மிஸஸ். ஞானம் என்னைப் பார்த்து, “என்ன நீங்கள் முன்பு மாதிரி இங்கு வருவதில்லை” என்று கேட்டார்.

“இல்லை எனக்கு ஒழிவதில்லை. வீட்டில் பிரச்சினை” என்றேன்.

ஞானத்துடன் பேசும்போது காரணத்துடன் பேசத் தெரிந்து கொண்டேன். உண்மையில் அவரைப் பார்க்க ஏதாவது காரணம் இருக்கும். தேவைக்கு அதிகமாக ஒரு வார்த்தை பேசுவதில்லை. அவர் முறைத்து ஒருவரைப் பார்க்கும்போது, எதிராளியை ஊடுருவதுபோல பார்வையில் தீர்க்கம் இருக்கும்.

நான் வாலை மறைத்துக்கொண்டிருக்கும் விதம் அவருக்குத் தெரியாது. அவரும் அதைக் குறிப்பிடவில்லை. அதற்கு இரண்டு காரணங்கள் இருக்கலாம். ஒன்று, அவருக்கு என் வால் இருப்பது பற்றி குறிப்பிட்டது மறந்து போயிருக்கக்கூடும். இரண்டு, அது குறித்து பேச விரும்பாமல் இருக்கலாம். இரண்டாவது காரணம் சரி என்று பட்டது.

ஒரு நாள் அவர் குறிப்பிட்டார்.

“நான் சொல்கிறேன் என்று தப்பாக நினைக்காதே! உன் வாலை வெட்டிவிடு”

கேட்டு நான் சிரித்தேன்.

“அது முடியாது. இருந்துவிட்டுப் போகட்டும் வால்.”

அவர் பேசாமலிருந்தார் நான் சொல்வதைக் கேட்டு. இப்படி எதையாவது சொல்லிவிட்டு, என் பொறுமையின்மையை அவர் சோதிப்பதாகத் தோன்றியது.

“இது மோசமான உலகம். ஒரு மனிதன் வால் இல்லாமல் இருப்பதை பார்ப்பது அரிது” என்றார் அவர்.

“மனித தர்மங்கள் குலைந்துவிட்டன. ஒவ்வொருவரும் வால் வைத்துக்கொள்வது அவசியம்”

“நான் மனித தர்மங்களைப் பற்றிக்கவலைப்படவில்லை. ஆனால் எனக்கு வால் முளைக்கவில்லை” என்றார் ஞானம்.

“நீங்கள் எப்படி முயற்சி செய்தாலும், உங்களுக்கு வால் முளைக்காது” என்றேன்.

“எப்படி?” என்றார் ஞானம் வியப்போடு.

“உங்களுக்கு வயதாகிவிட்டது. வால் முளைக்காது. வேண்டுமென்றால் போலியாய் வாலை ஒட்ட வைத்துக் கொள்ளலாம்.”

“ஓஹோஹோ” வென்று பலமாகச் சிரித்தார் அவர்.

அவருடைய சிரிப்பலைகளால் உட்கார்ந்த இடமெல்லாம் அதிர்ந்து. அறையில் எதிரொலித்தது. மிஸஸ் ஞானம் பயந்து விட்டார்.

“என்ன ஆயிற்று உங்களுக்கு?” என்று ஞானத்தைப் பார்த்து பதட்டத்துடன் கேட்டார்.

“ஒண்ணுமில்லை, இவன் சொல்றான். எனக்கு வால் முளைக்காதாம்”
“ஆனால் மிஸஸ் ஞானத்திற்கு வால் முளைத்து விட்டது” என்றேன் நான்.

மிஸஸ் ஞானத்திற்குக் கோபம்  “எப்படித் தெரியும் உங்களுக்கு எப்படித் தெரியும்” என்று  என்னை முறைத்தார்.
“எனக்குத் தோன்றுகிறது. உங்கள் பேச்சு பழக்கவழக்கங்கள் மூலம் அறியலாம். ஏன் ஞானத்துக்கும் இது தெரியும்” என்றேன்.
ஞானம் நான் சொன்னதை ஆமோதிப்பது போல் தலையாட்டினார்.

“அப்படியென்றால் உலகத்தில் யாருக்கு வேண்டுமானாலும் வால் முளைக்கலாம், என்கிறீரா?” என்று கேட்டார் மிஸஸ் ஞானம்.

“நிச்சயமாக. ஒருவருக்கு வால் முளைத்ததை அவரால் புரிந்துகொள்ள முடியும். மறுப்பது வேண்டுமென்று மறைக்கிற விஷயம்.”

“எப்படி…?”

“நமக்கு வால் முளைத்த விதத்தை நம்மால் எளிதில் உணரமுடியும். அதை நம்புவதில்லை.”

மிஸஸ் ஞானம், நான் சொன்னதை எப்படிப் புரிந்துகொண்டார் என்பது தெரியவில்லை. அவர் சாதாரணப் பெண்மணி. டி.வி.பார்த்துக்கொண்டு லோக்கல் சினிமாக்களைப் பற்றிப் பேசிக்கொண்டு, எல்லாப் பெண்களையும் போல நகை, புடவை முதலிய விஷயங்களில் ஆர்வம் உள்ளவராக இருப்பவர். என் மனைவியும் அப்படித்தான்.

வழக்கம் போல நான் ஞானத்தைப் பார்க்கப் போவதில்லை. அதற்கு எந்தக் காரணமும் இல்லை. சில சமயம் ஞானம் இருப்பதே மறந்து போய்விடும். சந்திப்பதற்கு எந்தக் காரணமும் இல்லாததால், தோன்றும்போது சந்திக்கத் தோன்றும். வீட்டில் நான் இல்லையென்றால், எங்கே ஞானத்தைப் பார்க்கப் போயிருப்பான் என்பார் என் அப்பா. எந்த விஷயத்தையும் உடனே ஞானத்தைப் பார்த்துச் சொல்லாமலிருக்க முடியாதே? என்பாள் மனைவி. அப்படிச் சொல்வதும் இப்போதெல்லாம் குறைந்துவிட்டது.

வெகு நாட்கள் கழித்து நான் ஞானத்தைப் பார்க்கச் சென்றபோது, தூக்க முடியாத கனத்துடன் வாலுடன் ஞானம் காத்திருந்தார். என்னைப் பார்த்தவுடன் அவருக்குச் சந்தோஷம்.

“என்ன இப்படித் தூக்க முடியாத கனத்துடன் வாலைத் தைத்துக் கொண்டிருக்கிறீர்கள்?”

“எல்லோval3ருக்கும் வால் இருக்கும்போது, எனக்கு மாத்திரம் வால் இல்லாமலிருப்பது சரியில்லை. அதனால் ஒரு வாலை ஒட்டி வைத்துக்கொண்டேன். இப்போதுதான் எனக்குத் திருப்தி.”

“உங்களுடைய செயற்கை வாலைப் பார்த்து எனக்கு வருத்தம். ஆனால் வால் என்ற ஒன்று உள்ளதே? என் வீட்டில்கூட, என் மனைவி, குழந்தைகளுக்கு வால்கள் முளைத்துவிட்டன. அப்பாவிற்கு வால் உதிர்ந்து கொண்டிருக்கிறது” என்றேன்.

ஞானம் சிரித்தபடி இருந்தார் . அவர் மகிழ்ச்சியாக இருந்தார்.

 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.