கண்களை நம்பாதே – ஈஸ்வர்

Image result for eateries near besant nagar beach

சரவணனுக்கு நம்ப முடியவில்லை. இந்த வயதிலேயே வாழ்க்கை அவனுக்கு இவ்வளவு பெரிய ஆச்சரியத்தை அளிக்குமா? கற்பனைகூட செய்ய முடியவில்லை . இதே பணியாள் சீருடையில் இந்த ஃபுட் ஹவுஸில் வெளிவாயில்  கதவைத் திறந்துபோய் கடற்கரைக் காற்றை ரசிக்கவேண்டும் போலிருந்தது. அவன் முதலாளி இத்தாலிக்காரனா பிரஞ்சுக்காரனா என்று கூட சரவணனுக்குத் தெரியாது. ஆனால் இவனுடைய பட்லர் இங்கிலீஷைக் கேலி செய்யாமல் அவனும் ஐரோப்பிய வாடையில் தமிழில் பேசுவான். வேலையில்  படு கறாராக இருந்தாலும் , இளகிய மனசுக்காரன்தான். முதலாளி கடைசியாகச் சொன்னதைக் கேட்டபிறகு , தன் எண்ணத்தை வெளிப்படுத்த , முதலாளியும் கோபிக்காமல் சிரித்தவாறே ‘சரி ‘ என்கின்றான். சீருடையிலேயே  வெளியே வருகிறான் சரவணன்.

மே மாத சூடு பின் மாலைக் கடற்காற்றிலும் தெரிந்தது. சௌமியிடம் எப்படி அவனால் இப்படிக் கேட்க முடிந்தது?  ஆண் என்ற குருட்டுத் தைரியமா? அவள் செருப்பைக் கழட்டியிருந்தால் கூட, வார இறுதிக் கடற்கரைக் கூட்டம் முழுக்க அவள் பின்னால்தான் நின்றிருக்கும். அதைக்கூட அவனால் யோசிக்க முடியாமல் போயிருந்தது.

எதிரே சாலையின் வலப்பக்க ஒர முடிவில் இருந்த மாதாகோவில் மணியோசை இப்போது ஏனோ கேட்கிறது. இதுநாள் வரை அவன் இதுபோல் வெளியே வந்து நின்றதே கிடையாது. மணி அடிக்கும் நேரம் அவனுக்குத் தெரியாமலே போயிருந்தது .

நாளைக்கு அவன் அம்மா ஆற்காடு கிராமத்திலிருந்து இந்நேரம் வந்திருப்பாள். அவன் வேலை பார்க்கும் இதே  ஃபுட் ஹவுஸில் , அவனுக்குப் பிடித்த, சௌமியாவுக்குப் பிடித்த, இதே ஃபுட் ஹவுஸின் அந்த மூலை ஓரத்து இருக்கையில் தயங்கியவாறு உட்கார்ந்திருப்பாள். நீளம், பச்சை, ஊதா என்று தினமும் அவன் யாருக்காவது ஆர்டர் எடுத்துக் கொண்டு  வந்து  வைக்கும் மெலிதான உயர்ந்த வண்ணக் கோப்பையில் இருக்கும் ஏதாவது ஒரு பழ ரசத்தைப் பருகிக் கொண்டிருப்பாள் . எதிரே மேஜையில்,  அவள் இதுவரை சுவைத்து அறிந்திராத ஏதாவது ஓர் ஐரோப்பிய உணவுவகை,  பஃப்பாகவோ, பீட்ஸாவாகவோ , சிக்கன் ஃப்ரையாகவோ , நன்கு அலங்கரிக்கப்பட்டுக் காகித அட்டைப்பெட்டி தட்டுகளாக, துடைத்துக் கொள்ள சௌகரியமாக ஒரு சிறு முக்கோண கண்ணாடி டிரேயில்  டிஷ்யு பேப்பராக பக்கத்தில் இருக்கும். அவனுக்குத் தெரிந்து அவன் அம்மா வாழ்க்கையில் இதேபோன்ற உணவகத்தில் காலடி எடுத்துக்கூட வைத்திருக்க மாட்டாள். நல்ல சேலை உடுத்திக்கொண்டு , தலையை நன்றாக வகிடு எடுத்து சீவி வாரி , பளிச்சென்று வரவேண்டும் என்று பலமுறை எடுத்துச் சொல்லியிருக்கிறான். சௌமியைப் பார்த்தால் அம்மா அரண்டு போய்விடலாம். அவர்கள் இருவரையும் அந்த ஃபுட் ஹவுஸில் எதிரும் புதிருமாகப் பார்க்கப் போகும் யாரும், என்ன வேண்டுமானாலும் எண்ணிக்கொள்ளலாம்.

Image result for sitting in a beach restaurant in indiaவாசலில் நடைபாதை தாண்டி ஏராளமான இருசக்கர வாகனங்கள், கார்கள் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டிருக்கின்றன. அவற்றின் மேல் கிறக்கத்துடன் சாய்ந்தவாறு இருக்கும் இளஞ்ஜோடிகள் . இடுப்பை, தோளைத்  தழுவியவாறு மெல்லப் பறக்கும் நிலையில் சில இளம் காதலர்கள். அந்தக் கடற்கரைக்கு அவன் உணவகத்தில் வரும் பெண்கள் மீது சரவணனுக்கு ஒருவகை மோகம் உண்டு. ஆனால் நல்ல எண்ணம் இருந்ததே இல்லை. பெரும்பாலான பெண்கள் அவன் கற்பனைக்கு எட்டாத அழகுப் பதுமைகள்தான் என்பதை அவனால் மறுக்க முடியாது. இறுக்கமான பனியன்களில், அதைவிட இறுக்கமான ஜீன்ஸுகளில் , உடலின் சகல வளைவுகளும் அசைந்து குலுங்க, அவர்களின் ஜில்லென்ற சிரிப்பொலி ஓசை அதைவிட மயக்கும், இந்தச் சூழ்நிலைக் கைதிகளாகவே அங்குள்ள உணவகங்களில் , கிரெடிட் கார்டுகளை இளைக்கவைத்து, ஃபுட்ஹவுஸ் முதலாளி போன்றவர்களைக் கொழிக்க வைக்க, ஒரு பெருங்கூட்டமே அங்கு ஊர்ந்து வருவதும், அதனாலேயே அவனைப்  போன்ற சாதாரணர்களுக்கு அங்கு வேலைகள் கிடைத்துக்கொண்டிருந்ததும், அவனுக்கு நன்கு தெரியும்.

அவன் பிறந்து வளர்ந்தது ஆற்காடு மாவட்டத்தில் ஒரு கிராமத்தில். கல்லூரி இறுதிப் படிப்பு வரை அருகில் இருந்த ஒரு சிற்றூர் அரசினர் கல்லூரியில். அங்கெல்லாம் இதேபோன்ற பெண்களைப் பார்ப்பது சற்று அரிதே. ஆனால் இங்கு வேலையில் சேர்ந்த பிறகு இதைப்போன்ற   பெண்கள்தான் இந்த உலகமே, என்ற அளவிற்குத் திகட்டியே போயிருந்தது.

Image result for eateries near besant nagar beach

இப்படித்தான் கடந்த பல சனி ,ஞாயிறு மற்றும் விடுமுறை நாட்கள் தவறாமல் ,அவள், சௌமி என்ற சௌம்யாவைப்  பார்க்க நேரிட்டது. சொல்லி வைத்தாற்போல் அவன் ஆர்டர் எடுக்கும் மேசைகளில், குறிப்பாக அந்த மூலை  ஓரத்து இருக்கையில்தான் வந்து சௌம்யா அமர்வாள். ஆனால் இதுவரை அவன் பார்த்த பெண்கள், பெரும்பாலும் ஏதோ ஓர் ஆணுடன் மாத்திரந்தான் அங்கு வருவதை அவன் கண்டிருந்தான். ஆனால், இந்தப்பெண்ணோ , வந்த எல்லா நாட்களிலும் வேறுவேறு ஆண்களுடனோ, அவர்களுடன் வரும் பெண்களுடனோ மாத்திரமே அங்கு வருவதை அவன் கண்டான். தவிரவும், சிரிக்கச் சிரிக்க அவர்களுடன் பேசுவது, அவர்களுக்காக அவளே ஆர்டர் செய்வது, நானூறு ஐந்நூறு என்று பில்லுக்குச் செலவழிப்பது, பின்பு போகும்பொழுது அவர்களிடமிருந்து பெரும் பணமோ , காசோலையோ பெற்றுக்கொண்டு, கைப்பையில் அடக்கிக் கொள்வது , மற்றும் லேப்டாப்பில் அவர்கள் விலாசம் மற்றும் தொடர்பு எண்களைப் பதிவு செய்து கொள்வது என்றெல்லாம் அவன் பார்க்க நேரிட,  அதிச்சியாகவும் இருந்தது. உடைகள் அணியும் விதத்திலும் அவள் யாருக்கும் குறைந்தவளாகத் தோன்றவில்லை. ஏதோ இரண்டே முறைதான் அவளைச்  சல்வார் கம்மீசில் பார்த்ததாகச் சரவணனுக்கு ஞாபகம். பார்க்க மிகவும் நாகரீகமாக, மிக நளினமான உடல்வாகுடன் இருக்கும் அந்த அழகிய பெண்ணிற்குள் கண்ட கண்ட ஆடவர்களையும் சிரித்து வளைத்துப்போட்டு, பெரும் பணம் கறக்கும் ஒரு மோசமான ……………… அந்தத் தொழில் செய்யும் பெண் இருக்கிறாளோ என்றுகூட அவன் நினைக்க நேரிட்டது.  

இந்த சூழ்நிலையில் அவள் நண்பர்களுக்காக ‘ஆர்டர்’ கொடுத்து, லேப்டாப்பைத் திறந்து ஏதோ தட்டியவாறே  இருக்க, அவள் மேஜையில் அவள் கேட்டவற்றை அழகாக சரவணன்  அடுக்கியவாறு இருக்க, அவன் பார்க்க நேரிட்டது அவள் பேஸ்புக் பக்கம். மென்மையாக சிரித்துக்கொண்டு சௌமி என்கின்ற சௌம்யா நிற்கிறாள். Image result for a girl and a boy in a car with a laptopகீழே 18 ஃபான்டில் ,CALL THIS GIRL என்ற வாசகம். கண்கள் காணும் அந்த வாசகம் ஆழமாக, வேதனையுடன் அவனுள் இறங்குகிறது. அவன் பணிபுரியும் ஃபுட் ஹவுஸ் மாதிரி , உணவகங்கள் , அவர்கள் அறியாமல், இதெற்கெல்லாம்கூட பயன்படுத்தப் படுகின்றனவோ? CALL GIRL என்ற வார்த்தை அவன் அரசுக் கல்லூரி ஆங்கில அறிவுக்கு எட்டாத வார்த்தை இல்லை. ரேட்டுத் தான் தெரியவேண்டுமோ?

அவன் பிறந்து வளர்ந்த ஆற்காடு கிராமத்தில் , அவன் நினைத்தாலும் சிலரின் கீழ் பணியில் அமர, அவனால் முடியாது. அங்கு ஊர்க்கட்டுப்பாடு அப்படி. ஆனால் எந்த ஊர் என்றே தெரியாத இந்த முதலாளி உணவகத்தில் அவன் யார் யார்யாருக்கெல்லாமோ, ஆர்டர் எடுப்பதுடன், சப்ளை செய்யவும் வேண்டியிருக்கிறது.

சின்ன மீனைப் போட்டு பெரிய மீன் பிடிப்பவளாக இருக்கிறாள் இந்தப் பெண். நானூறு ஐநூறு ரூபாய்களை அவன் தட்டில் வைத்துவிட்டு  , அந்த ஃபுட் ஹவுஸில் அமர்ந்தாவாறே நாற்பதினாயிரம், ஐம்பதினாயிரம் என்று இளைஞர்களிடம் கறக்கிறாள். தெரிந்து கொள்ளவேண்டும்.  என்ன நடக்கிறது என்று தெரிந்துகொள்ள வேண்டும். நாடு எப்படிப் போனால் எனக்கு என்ன என்று சரவணால் இருந்துவிட முடியாது.

Image result for a boy and girl in eateries near besant nagar beachஇப்படித்தான், தனக்கு ஓய்வான ஒரு நாளில் சரவணன் அவள் கார் அருகே அவளுக்காகக் காத்திருந்தான். எல்லாம் முடித்துக்கொண்டு  கார் கதவைத் திறந்து உள்ளே ஏறப்போன அவள் முன் வந்து நின்றான். அவள் இயல்பாகப் பேச ஆரம்பித்தாள்.

“என்ன , இன்னிக்கு வேலைக்கு ஜூட்டா?”

:அப்படியில்லை. உங்ககிட்டே கொஞ்சம் பேசணும்”

“என்னிடமா? “ – ஆச்சரியம் கலந்திருந்த பார்வை கூட அழகாக இருந்தது.

“சரி, கார்லேயே உக்காந்து பேசுவோம்.. எனக்கு அதுதான் சௌகரியம்”

குளிர்சாதனத்தை இயக்கியவாறே, இடக்கைப் பக்கக் கதவைத் திறந்தாள்.

தயங்கியவாறே அவன் ஏறி அமர ,

“என்ன வேணும்?  வேறு ஏதாவது வேலை..?”

“இந்த வேலையில் நான் நிம்மதியா இருந்தேன்,  உங்கள் லேப்டாப்பில உங்களைப் பாக்கிறவரை”

“மை காட், அடுத்தவங்க லேப்டாப்பைக்கூடப் பார்ப்பாங்களா?”

“ வேணும்னு பாக்கலை. ஆர்டரை டேபுள்ல வைக்கரப்போ , நீங்க லேப்டாப்பைத்  தொறந்து வைச்சிருந்தீங்க .பேஸ்புக் , உங்க பக்கம் கண்ணுல பட்டிடுச்சு. சங்கடமாப் போச்சு. அதான் “

” அதுல என்ன சங்கடம்?” – லேப் டாப்பைத் திறந்தவாறே கேட்டாள்.

பேஸ்புக் .. அவள் பக்கம்.. அவள் புகைப்படம்.. சௌமி என்கின்ற சௌம்யா. CALL THIS GIRL .. எழுத்துக்கள்.

“நல்லாத்தானே இருக்கேன்?”  

“ ஆமாங்க நல்லாவே இருக்கீங்க. இதே போட்டோதான். சமூக வலைத் தலங்கள்ல உங்களை மாதிரி பொண்ணுங்க படம் போட்டுக்கறதே தப்பு. அதுவும் உங்க புரபஷனோட CALL GIRL னு வேறே போட்டிருக்கீங்க.. தப்பில்ல?.. வாழ்க்கைல அப்படி என்னங்க கஷ்டம் உங்களுக்கு? நல்லதே இல்லீங்க “

நிதானமாக அவனைப்  பார்க்கிறாள். சிரிக்கிறாள்.

“இங்கிலீஷ்ல இப்படியெல்லாம்கூட சங்கடம் வரும்னு இதுவரை எனக்கும் தோணலை ..” நிறுத்துகிறாள். . பிறகு, இன்னும் ஓர் இருபத்தைந்தாயிரம் கலெக்ட் பண்ணணும், சரவணா. சனிக்கிழமைக்குள்ள முடிக்கணும், நீதான் கலெக்ட் பண்ணிக்குடேன்.  CALL THIS GIRL … காணாமப் போயிடுவா.”

“என்ன சொல்றீங்க?”

“முழுசாப் படிடா, மண்டு “ லேப்டாப்பை அவன் பக்கம் திருப்புகிறாள். படிக்கிறாள். வரிசையாக ஏதேதோ பெயர்கள். விலாசங்கள். தொலை தொடர்பு எண்கள் . கோடிட்டு பத்தாயிரம் முதல் ஐம்பதாயிரம் வரை எண்கள்.

CHILDREN  CANCER HELPLINE . Total Funds Collected so far … Rs 9,75,000/

“எல்லாருமே புதுப்புது நண்பர்கள். ஒவ்வொரு நாளும் ஒருத்தர் மூலம் ரெண்டு பேராவது அறிமுகம் ஆவாங்க. உங்க  ஃபுட் ஹவுஸில எனக்கு செலவு நானூறோ ஐநூறோதான் . ஆனால் இந்த Cancer Helplineக்கு வரவு லட்சத்தில. ஏதோ பீச்சில ஜாலியா நேரத்தை  வீணடிக்கற  கூட்டம்னு நீ இவங்களை நினைச்சியா? வர்ற ஞாயித்துக்கிழமை மாதாகோயில்லேர்ந்து பல்கலைக்கழகம் வரை மாரத்தான் ஓட்டத்தில கலந்துக்கறவங்க  இவங்க. ஏன், இந்த இருபத்தைந்து அஞ்சாயிரம் நீயே கலெக்ட் பண்ணிக்குடு. பேஸ்புக்கில நீயும் என் ஃபிரண்ட் ஆயிடலாம். என் நண்பர்கள் உனக்கும்நண்பர்கள் ஆயிடுவாங்க. என் ஃபிரண்ட் நீ, சொல்றதைக் கேட்டு CALL THIS GIRL காணாமப் போயிடுவா. என்னால யார் மனசும் வருத்தப்படக்கூடாது. அதுதான் எனக்கு வேணும். ஜொள்ளு விடாம, என்கூட மாரத்தான்ல ஓட வர்றியா? இருபத்தஞ்சு தான் டார்கெட். முடிச்சுக் கொடு. உன்கூட கையைப்  பிடிச்சுக்கிட்டு, ஒரு கிலோமீட்டராவது ஓட நான் தயார், ஃப்ரண்டா. வர்றியா? “

ஆடிப்போனான் சரவணன். அன்றிரவே ஆற்காடு கிராம அம்மாவிடம் பேச நேரிடுகையில் இதையும் சொல்கிறான். அம்மா இன்னும் அதிர்ச்சி தருகிறாள்.

“ சரவணா! .. நல்ல காரியம் யார் மூலமா நடந்தா என்னப்பா? அந்தப் பொண்ணுகிட்டே சொல்லு. நம்ம கிராமத்து சனங்க லேசுப்பட்டவங்க இல்லை. சரவணா, சனிக்கிழமை அதே டேபுள்ல அந்தப் பொண்ணுகூட நான் வந்து உக்கார்றேன். நீ ஆர்டர் எடு. பில்லு  நான் கட்டறேன். அந்தப் பொண்ணு லட்சியம் நிறைவேறிடிச்சுன்னு தைரியமா சொல்லு. நம்ம ஊர் சாதி சனம் சார்பா நீயே அவ கூட ஓடு. ஆனால் ஒண்ணு,  இந்தக் கையைப் பிடிச்சு ஓடறதெல்லாம் வேணாம். நம்ம சனம் ஏத்துக்காது. கைகுடு. நல்ல காரியத்துக்கு நண்பனா  கைகுடு.  முடிஞ்சா நானே ஓடப்பாக்கறேன். டேபுளை மாத்திரம் இப்பவே ரிசர்வ் பண்ணிடு. சனிக்கிழமை பொட்டியோட வர்றேன்”

சரவணன் அரைகுறை ஆங்கிலத்தில் முதலாளியிடம் எல்லாம் சொல்லியிருந்தான். கேட்டு சிரிக்கும் அவன் ஐரோப்பியத் தமிழில் சொல்கிறான்.

“ஜமாய், சரவணா! ஆயா வரட்டும். நீ ஆர்டர் எடு. பில்லு பணம் என் கான்ட்ரிபூஷன். நல்ல காரியம். என்  ஃபுட் ஹவுஸுக்குப் பெருமை. வேற என்ன வேணும்? விடாதே… நீ ஓடு சரவணா! “

கடலையே பார்க்கிறான் சரவணன். காற்று இப்போழுது ஜில்லென்று வீச ஆரம்பிக்கிறது.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.