தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதா அவர்கள் அப்பல்லோ மருத்துவ விடுதியில் உடல்நலம் சரியில்லாததால் இருபது நாட்களுக்கு மேலே சிகித்சையில் இருக்கிறார்.
முதலில் , அவர் எல்லா நலன்களும் பெற்று விரைவில் குணமாகி வரவேண்டும் என்று அனைவரும் வேண்டிக் கொள்வோம்.
அவருக்கு இருக்கும் மன வலிமை அவரைப் பலமுறை விளிம்பின் எல்லையிலிருந்து மீட்டிருக்கிறது. இம்முறையும் அது அவரை மீட்கும் என்பதில் ஐயமில்லை.
இதில், இப்போது முக்கிய நிகழ்வு என்னவென்றால், அவரது உடல்நிலையைப் பற்றி வதந்திகளை ஊடகத்தில் பரப்பும் சிலரை அரசு கைது செய்திருக்கிறது.
இதை முழு மனதுடன் வரவேற்கிறோம்.
ஊடகம் ஒரு பொறுப்பான சாதனம். அதைத் தவறாகப் பயன்படுத்துவது சட்டத்திற்குப் புறம்பான செயல். வாட்ஸ் அப்பிலும் முகநூலிலும் மக்கள் எவ்வளவு அலட்சியமாகப் பொய்யை மெய் போல் எழுதிக் குவிக்கிறார்கள். அவர்களைத் திருத்துவது எப்படி?
அந்தக் காலத்தில் மதிப்பும் மரியாதையும் நிரம்பிய குமுதம் ஆசிரியர் அவர்கள் ஒருமுறை ஏப்ரல் முட்டாள் தினத்துக்காக குஷ்புவையும் பாலச்சந்தரையும் இணைத்து எழுதிய கட்டுரைக்காக அவர் பலமுறை நீதி மன்றத்துக்குச் சென்று மன உளைச்சலில் தவித்தார் என்று கூறுவார்கள். இது அனைவருக்குமே சரியான பாடமாகும்.
விளம்பரத்துக்காக எதை வேண்டுமானாலும் எழுதலாம் என்று அலையும் சிலரின் வக்கிரத்துக்குக் கிடைக்கவேண்டிய தண்டனையே வதந்தியைப் பரப்புபவர்களுக்குக் கிடைக்கப் போகிறது.
இது வரவேற்கப்படவேண்டிய விஷயம் !