என் இரு சக்கர வாகனம் நின்றுவிட்டது.
இத்தனை நாள் இருந்து வந்த எங்கள் தோழமை முடிந்துவிட்டதா?
மக்கர் செய்ததும் கொஞ்சம் தட்டிக் கொடுத்தவுடன் புறப்படுமே, அது மாதிரித் தற்காலிக வேலை நிறுத்தமா? இல்லை, முற்றிலும் பழுதாகிவிட்டதா?
இயந்திரக் கோளாறா ? இயக்கக் கோளாறா? காற்றுப் போய் விட்டதா? தீனி தீர்ந்துவிட்டதா? நரம்பு தெறித்து விட்டதா? துடிப்பு நின்றுவிட்டதா? முகம் கோணிக்கிடக்கிறது. உருவமே மாறிப்போய் விட்டது.
வெளிச்சமே இல்லை. எல்லா ஓட்டைகளிலிருந்தும் பிசிக் பிசிக்கென்று ஏதேதோ வழிகின்றன.
இதை என் அம்மா அப்பா தான் வாங்கிக் கொடுத்தார்கள். அவர்களுக்குத்தான் எவ்வளவு சந்தோஷம். எவ்வளவு சீராட்டல்கள்? பாராட்டல்கள் ?
திருமணமானதும் என் மனைவிக்குத்தான் இதன் மீது கொள்ளை கொள்ளையாய் ஆசை. அவள் இதைக் கொஞ்சித் தழுவும் போது எத்தனை ஆனந்தம்? மகிழ்ச்சி? சந்தோஷம்? குதூகலம்?
என் மகனும் மகளும் இதில் பவனி வரும்போது புதிதாக ஒன்று தெரிந்ததே ? அது என்ன? ஓ ! அதுதான் சொர்க்கமா?
இன்று,
இதைத் தூக்கி எறிந்துவிடு என்று எல்லோரும் சொல்லத் தொடங்கி விட்டார்கள்.
என்னைவிட, இதனால், இவர்களுக்குத் தான் கஷ்டம் அதிகம் போலிருக்கிறது.
இத்தனை காலம் இதனுடன் பழகிய எனக்கு இதைத் தூக்கி எறிவது அவ்வளவு சுலபமாயில்லை. முடியவும் முடியாது. முடியவே முடியாது.
என் மகன் வந்தான். ” நீ தானடா அதனை எடுத்து எறிய வேண்டும்” என்று எல்லோரும் அவனிடம் சொன்னார்கள். அதனை அப்படி எறிய விடுவேனா?
என் மகள் வந்தாள். அவள் கண்ணீர் அதன் மேல் பட்டது. இனி அது கண்ணீருக்கும் தகுதியற்றது என்பது அவளுக்குப் புரிந்துவிட்டது .
கட்டின மனைவி வந்தாள்.அவளுக்குத் தானே அதன் மேல் முதல் உரிமை. துயரம் கண்ணில் தெறிக்க அதைக் கட்டிப் பிடித்து அழுதாள். பிறகு உண்மையின் நிதர்சனத்தைப் புரிந்து கொண்டாள் .
மற்ற உறவினர்கள் எல்லாரும் வந்தார்கள். ‘இது இப்படித்தான். என்றைக்காவது வாய் பிளக்கும் ‘ என்று ஆளாளுக்குச் சொல்லிக் கொண்டு புறப்பட்டார்கள்.
எனக்கே புரிந்துவிட்டது. அதன் துடிப்பு மட்டுமல்ல இயக்கமும் நின்றுபோய் விட்டது.
நேரமாகிவிட்டது. மணி அடித்தாகி விட்டது. எங்கோ ‘ஊ’ என்று ஊளையிடும் ஓசை கேட்கிறது. நாலு பேர் அதைத் தூக்கிக் கொண்டு போகிறார்கள்.
அதில்லாமல் நானா?
நான் எங்கே?