அத்தியாயம் 04. அரசிலாறு.
வந்தியத்தேவனின் ஆழ்ந்த உறக்க நிலை அடுத்த ஒன்றரை ஜாமத்திற்கு மட்டுமே நீடித்தது. அவன் அடிமனதில் பதிந்து மறைந்து வெகுவாக பாதித்திருந்த ஒரு துக்ககரமான சம்பவம் மேல்மனதிற்கு வந்து அவனை அப்படியே ஸ்வப்பன நிலைக்குக் கொண்டு சென்றது. அதில் ஒரு சுந்தர வதனம் படைத்த ஒரு பெண்ணின் உருவம் தெரிந்தது. அவனுடைய மடியில் அவள் தலை சாய்ந்திருந்தது. ஆ! அது என்ன? அவளின் கண்கள் ஏன் மூடிவிட்டன? அய்யோ! அவளின் உயிர் உடலைவிட்டுப் பிரிந்துவிட்டதே! அதற்கு நாம் காரணமாகிவிட்டோமே என்றெல்லாம் எண்ணிய வந்தியத்தேவனுக்குத் துக்கம் தொண்டையை அடைத்தது. தலை சுற்றியது. திடுதிப்பென்று எழுந்து உட்கார்ந்தவன் சுய நினைவு நிலைக்கு வந்தான்! ஸ்வப்பன உலகத்தில் நிகழ்ந்த உண்மையான சம்பவங்கள் அவன் மனதில் பவனி வந்தன.
**************************************************************
ஆதித்த கரிகாலனின் மர்ம மறைவு கடம்பூர் சம்புவரையர் மாளிகையில் நிகழ்வதற்கு முன் அவனைக் கண்ணும் இமையுமாக வந்தியத்தேவன் கண்காணித்து வந்தான். அதற்கு வேண்டிய பல உத்திகளை அவன் கையாள வேண்டியிருந்தது. அதற்காக சம்புவரையர் மகள் – நண்பன் கந்தமாறனின் சகோதரி மணிமேகலையின் நட்பைச் சம்பாதித்துக் கொண்டான். அதன் விளைவு மணிமேகலையின் மனதில் அது ஒருதலைக் காதலாக மலர்ந்தது. சதிகாரர்கள் ஆதித்த கரிகாலனைக் கொன்று பழியை வந்தியத்தேவன் மேல் விழும்படியான சந்தர்ப்பத்தை ஏற்படுத்தியிருந்தார்கள். அவ்வாறே பழி அவன் மேல் விழுந்தது. வந்தியத்தேவன் மேல் கொண்ட அளவிலாக் காதல் மற்றும் வந்தியத்தேவனின் பழியை தாங்க இயலாத நிலை, பழியைத் தானே ஏற்க முயன்று அது மணிமேகலையைப் பிச்சியாக்கியது. கரிகாலன் மறைவிற்கு வந்தியத்தேவன் காரணமல்ல என்று நிரூபிக்கப்பட்டு அவன் விடுவிக்கப்பட்டதை அறியாத மணிமேகலை அவனை மனதில் நினைத்தவளாகவே மற்றும் அவன் மடியில் தலை வைத்தவாறே மறைந்தும் போனாள்!
**************************************************************
நிகழ்ந்தவை வந்தியத்தேவனின் மனதை மேலும் மேலும் உருக்கியது. தன்னால் ஒரு இளம் பெண் பலியானதை அவனால் ஏற்கவே முடியவில்லை. துக்கம் தொண்டையை அடைத்தது.
கடைசியாக அந்த நினைவு அவனை விவேகமடைய வைத்து ஒரு வைராக்கியசாலியாய் மாற்றியது! பழைய நினைவுகளில் இருந்து தன்னை விடுவித்துக் கொண்டு, ‘நமக்கு ஏன் இந்த வாழ்வு? பாண்டியர் சதிச்செயல்களைப் பற்றிய உண்மைகளைக் கையாளுவது மாமந்திரி அநிருத்தர் மற்றும் ஒற்றர் தலைவன் திருமலை போன்றவர்களின் வேலை. அவர்களிடம் கணித்தவைகளைச் சமர்ப்பித்துவிட்டு நாம் வல்லத்திற்குச் சென்று நிம்மதியான வாழ்க்கையை மேற்கொள்ளலாம்’ என்று வந்தியத்தேவன் வைராக்கியம் கொண்டான்!
‘காலில் சக்கரம் கட்டிக்கொண்டிருக்கும் திருமலை இப்போது எங்கே இருப்பான்?தஞ்சையில்தான் இருக்கக்கூடும்! அங்குதான் அவனைச் சந்திக்க வேண்டும்’ என்று எண்ணிய வந்தியத்தேவன் கதிரவன் உதிக்கு முன் எழுந்து குளித்துவிட்டு அரசாங்க விடுதியிலிருந்து திருவையாறு வழியாகத் தஞ்சையை நோக்கிச்செல்ல, பயணத்தைத் தொடங்கினான். களைப்படைந்திருந்த குதிரை இரவு ஓய்விற்குப் பின் நன்றாக சுறுசுறுப்பைப் பெற்றிருந்தது. வந்தியத்தேவனையும் அவன் மனதின் சுமையையும் தாங்கிக் கொண்டு பறந்து சென்றது.
திருவையாற்றை அடையுமுன் குதிரை அரசிலாற்றங்கரையை நெருங்கியது. அங்கு வந்தியத்தேவனின் குதிரை மரங்கள் நிறைந்த அடர்த்தியான நதியின் கரை ஓரமாக சிறிது தூரம் வந்ததும் அவன் மனதில் கிளுகிளுப்பை உண்டாக்கிய சம்பவம் நிகழ்ந்த இடத்திற்கு வந்திருப்பதை உணர்ந்தான். கடிவாளத்தைப் பிடித்து நிறுத்தினான் -இல்லை.. ஏதோ ஒரு சக்தி அவனை நிறுத்த வைத்தது.
‘இந்த இடத்தில்தான் ‘அய்யோ முதலை..’என்ற பெண்களின் அபயக்குரலைக் கேட்டுக்குதிரையை வாயு வேகமாய்விட்டுக் கொண்டு சம்பவ இடத்திற்கு விரைந்தோம்! பஞ்சு அடைக்கப்பட்ட பொய் முதலையை நிஜ முதலை என்று எண்ணி குறிபார்த்து வேலைப் பாய்ச்சினோம்!’ என்றெல்லாம் எண்ணிக்கொண்டு எந்த மரத்திற்கு முன்னால் வாயைப் பிளந்து கொண்டு நின்ற முதலை வைக்கப்பட்டிருந்ததோ அங்கு வந்தடைந்தான். குதிரையிலிருந்து இறங்கி வசதியான வேர் ஒன்றில் அமர்ந்தான். ‘வேலுக்கு இழுக்கு நேர்ந்து மனம் நொந்திருந்தபோது இளைய பிராட்டி சொன்ன ஹிதமான வார்த்தைகள் இப்போது நினைத்தாலும் பரவசப்படுத்துகிறதே!’ என்று ஒரு கணம் மெய்மறந்தான். மறுகணம் மணிமேகலையின் நினைவுகள் அவன் மனதை மீண்டும் நிறைத்தன. கண்ணிலே நீர் மல்கியது. வளைந்து செல்லும் நதிப்ராவகத்தின் ஓசை சோககீதம் பாடுவதாகத் தோன்றியது. துக்கத்தில் தீவிரமாக ஆழ்ந்து தன்னை மறந்த நிலைக்குச் சென்றான்.
வந்தியத்தேவன் அமர்ந்த அடர்த்தியான மரத்திற்குச் சிறிது தூரத்திற்கு முன்னால் இருந்த ஓடத்துறையில் ஒரு அழகிய அன்ன வடிவமான வண்ணப்படகு வந்து நின்றது. இது என்ன மாயம்! அதில் அவன் மனம் கவர்ந்த இளைய பிராட்டி குந்தவை அமர்ந்திருந்தாள்! படகில் வந்த காவல் ஆட்களிடம் அங்கேயே காத்திருக்கும்படி பணித்துவிட்டு, கரையில் இறங்கி மெல்ல வந்தியத்தேவன் அமர்ந்திருந்த மரத்திற்கு அருகில் வந்தாள். வந்தியத்தேவனை அங்கு எதிர்பாராமல் பார்த்த அவளின் அகன்ற கண்கள் மலர்ந்து பவளச் செவ்வாய்கள் வியப்பினால் விரிந்தன. மகிழ்ச்சியை அடக்க முடியாமல் மெல்ல அவன் அருகில் வந்து அமர்ந்தாள்.
வந்தியத்தேவன் குந்தவை வந்ததையோ, பக்கத்தில் வந்து அமர்ந்ததையோ கவனிக்கவில்லை. கண்களில் தாரையாக உருண்ட நீர்த்துளிகளோடு மணிமேகலையின் சோக நினைவினால் ஆற்றின் ப்ரவாகத்தை வெறித்து நோக்கிக்கொண்டிருந்தான்.
குந்தவை அவன் முகத்தை நோக்கினாள். அவன் கண்களில் வழிந்த நீர் அவள் மனதை நெகிழவைத்தது. ஒரு நொடியில் அவன் மனதில் ஓடும் துயரச் சிந்தனைகளைப் புரிந்துகொண்டாள். குந்தவை திரும்பி வந்தியத்தேவன் கண்களிலிருந்த கண்ணீரை இடுப்பிலிருந்து எடுத்த துணியினால் ஒத்தி எடுத்தாள். குந்தவையின் கை ஸ்பரிசமும் கை வளைகள் எழுப்பிய நாதமும் அவனை இந்த உலகிற்குக் கொண்டுவந்து சேர்த்தன. இன்ப அதிர்ச்சியால் உந்தப்பட்ட வந்தியத்தேவன் மனதில் இந்த உலகத்தில்தான் இருக்கிறோமா என்ற கேள்வி எழுந்தது.
குந்தவை “வல்லத்து அரசர் வந்தியத்தேவரே, உங்களுடைய துக்கத்தை நான் அறிவேன்” என்றாள்.
வந்தியத்தேவன் “இது கனவா.. அல்லது நினைவா” என்றான்.
“இது நினைவுதான்..”
“எப்படி இங்கே..”
“கடம்பூரில் நடந்த துக்க செய்தி எங்களுக்கு வந்தது முதல் எனக்கு உங்கள் ஞாபகமாகவே இருந்தது.சஞ்சலம் அடையும் போதெல்லாம் என் உள்ளத்தைக் கொள்ளை கொண்ட நீங்கள் எங்களைக் காப்பாற்ற வீரச்செயல் புரிந்த இந்த இடத்திற்கு வருவதுண்டு.மனமும் அமைதி அடையும். அதற்காகவே இன்றும் வந்தேன்.”
குந்தவையின் சொற்கள் வந்தியத்தேவனை சொர்க்க பூமிக்குக் கொண்டு சென்றது. சிறிது நேரம் அதிலேயே திளைத்திருந்தான். ‘மணிமேகலையின் மறைவிற்கு நான் காரணமாகிவிட்டேனே!இதற்கு எனக்கு மன்னிப்பே கிடையாது” என்று துக்கம் பொங்கக் கூறினான்.
அதற்குக்குந்தவை சரியான மறுமொழி கூறினாள். “மணிமேகலை இறந்ததற்குத் தாங்கள் காரணமல்ல. அந்த பாபச்செயலைப் புரிந்தவர்கள் நாங்களே. எங்கள் கோரிக்கையை சிரமேற்கொண்டு, உயிரைப் பணயமாய் வைத்து, பெரிய பழியையும் சுமந்து, எடுத்த காரியத்தில் ஓரளவு வெற்றியும் கண்டீர்கள். கரிகாலன் மரணத்திற்கு அவனே காரணம். எடுத்த காரியத்தினை முடிக்க மணிமேகலையைச் சிறிது பயன்படுத்தியபோதிலும் அவளிடம் மிகவும் கௌரவமாகவும், கண்ணியத்துடனும் நடந்து கொண்டீர்கள். மேலும் கந்தமாறன் உங்களின் வீரச் செயல்களைப் பற்றி அவளிடம் வர்ணித்தபோது மணிமேகலை தன் மனதை உங்களுக்குப் பறிகொடுத்திருந்தாள். ஆகவே அவனுக்கும் இதில் பங்கேயின்றி தாங்கள் ஒருக்காலும் மணிமேகலையின் மரணத்திற்குப் பொறுப்பேற்க முடியாது” என்றாள்.
வந்தியத்தேவன் உடலும் உள்ளமும் ஒருவாறு பரவசமடைந்த போதிலும் சமாதானமடையாமல் “இருப்பினும் இந்த பொய், புரட்டு வேலைகளை என் மனது விரும்பவில்லை. அதற்கெல்லாம் அநிருத்தர், திருமலை போன்றவர்கள் இருக்கிறார்கள்’ நான் அமைதியான வாழ்க்கையைத் தொடங்கத் தீர்மானம் செய்துள்ளேன்” என்று கூறிவிட்டு, குடந்தை சாலையில் நடந்தவைகளிலிருந்து அரசாங்க விடுதியில் தான் கணித்தவைகளையும் எடுத்துரைத்தான்.
குந்தவை அதனை வியப்பாகவும் வந்தியத்தேவனின் மதிநுட்பமான கணிப்புகளை கேட்டும் பெருமிதமடைந்தாள்.
கடைசியாய் வந்தியத்தேவன் “நடந்தவைகளையும் கணித்தவைகளையும் அநிருத்தரிடமும், திருமலையிடமும் சமர்ப்பித்துவிடப் போகிறேன். மேலும் எனக்குக் கொடுக்கப்பட்ட ஈழச் சேனாதிபதி பதவியிலிருந்தும் விடுதலை தரச் சொல்லிக் கேட்டுக் கொள்ளப் போகிறேன்” என்று பெரியதொரு குண்டைத் தூக்கிப்போட்டான்.
அதிர்ச்சி அடைந்தாள் குந்தவை. மனதைக் கவர்ந்தவனின் உணர்ச்சிகளை மதிக்கத் தெரிந்திருந்தபோதிலும் ,‘மாபெரும் வீரனின் மகத்தான சேவையை சோழர்குலம் இழக்க நேர்ந்துவிடும் போலிருக்கிறதே. வெண்ணை திரண்டு வரும்போது தாழி உடைந்தது போலவும், மஹாபாரதப் போருக்கு முன் கௌரவர்களின் சேனையை வீழ்த்த பாண்டவர்கள் மலை யைப் போல் நம்பியிருந்த அர்ஜுனன், வில்லைக் கீழே எறிந்துவிட்டு, ‘காட்டுக்குச் சென்று சன்யாசம் மேற்கொள்ளப்போகிறேன்’ என்று ஸ்ரீகிருஷ்ணரிடம் உரையிட்டது போல் அல்லவா இது இருக்கிறது! ஸ்ரீகிருஷ்ணர் எப்படி அர்ஜுனனுக்குப் பகவத் கீதையை உபதேசித்து அவன் கடமையை உணரவைத்தாரோ அப்படி வந்தியத்தேவனின் இந்த முடிவை மாற்றி அவனுக்கு உண்மையை உணரவைத்து, ஊக்குவித்து சமநிலைக்குக் கொண்டுசேர்க்கும் முக்கியப் பணி தனக்கு இப்போது இறைவனால் இடப்பட்டிருக்கிறது’ என்பதை உணர்ந்தாள்.
வந்தியத்தேவனைப் பார்த்து “உத்தமசோழர் ராஜ்யப் பொறுப்பை ஏற்றாலும் அவருக்கு உறுதுணையாய் அருள்மொழி இருக்கப்போகிறான். அவனுக்கு வலக்கையாகத் தாங்கள் இருக்க வேண்டாமா? எந்த சந்தர்ப்பமும், நிகழ்ச்சியும் அரசியலில் சகஜம் அல்லவா? எந்தச் சூழ்நிலையிலும் தங்கள் மனதைத் தளரவிடலாமா? இது போன்ற எண்ணற்ற விஷயங்களைத் தாங்கள் சந்திக்க வேண்டிவரும். அவைகளில் சில இன்பத்தை அளிக்கவல்லது. பல துன்பங்களைத் தரக்கூடியவை. சில கோபங்களை வரவழைக்கும். பல மனத்தைத் தளர வைப்பவை. அவைகளைச் சீர்தூக்கிப் பார்த்து சம நிலையில் நல்ல முடிவுகளை எடுக்க வேண்டாமா? என் மனம் கவர்ந்த வந்தியத்தேவரே! நிமிர்ந்து நில்லுங்கள். உங்கள் கடமைகளையும் எதிர்பார்ப்புகளையும் சிந்தித்துப் பாருங்கள்! பாண்டியர் உயிர்நாடியான மணிமகுடத்தையும் இரத்தின ஹாரத்தையும் ஈழத்திலிருந்து மீட்டு வருவது தங்கள் ஒருவராலேயே முடியும்! அதற்குத் தங்களைத் தயார் படுத்திக்கொள்ளுங்கள். ஈழச் சேனாதிபதிப் பதவி ஏற்று அருள்மொழிக்குப் பக்க பலமாய் இருங்கள். மணிமேகலையாகிய தெய்வம் உங்களுக்கு என்றும் உறுதுணையாக இருந்து உங்களை நடத்திச் செல்வாள். என் இந்த நம்பிக்கையைத் தகர்த்து விடாதீர்கள்!!!” என்று உணர்ச்சிவசமாய்ப் பேசி முடித்தாள்.
குந்தவையின் கொவ்வை மலர்களை ஒத்த இதழ்களிலிருந்து பொங்கிய ஒவ்வொரு வார்த்தையும் வந்தியத்தேவன் நரம்புகளை முறுக்கி அவனை நிமிர்ந்து நிற்க வைத்தன. வைராக்கியம் தகர்ந்தது!! மனம் சமச்சீர் தெளிவை அடைந்தது. !!! தன் கடமை என்ன என்பதை உணர்ந்து, நிலை தடுமாறியதை நினைத்து வருத்தப்பட்டான்.
“தேவி!உங்களின் வார்த்தைகள் எனக்கு ஊக்கமளித்து உண்மையை விளக்கின. என் கடமையை உணர்த்தியதற்கு உங்களுக்கு நான் மிகவும் கடன்பட்டிருக்கின்றேன். என் சித்தம் நிலை குலைந்து தடுமாறியதற்காக வருத்தப்படுகிறேன்” என்றான்.
குந்தவை வந்தியத்தேவன் சோக உலகத்திலிருந்து மீண்டதை உணர்ந்தாள். அவன் பேசியதைக் கேட்டுப் பெருமிதம் கொண்டாள்.
“வெற்றியோடு திரும்பி வாருங்கள்.உங்களுக்காக நான் என்றென்றும் காத்திருப்பேன்” என்று குந்தவை தன் திருக்கரங்களை நீட்டினாள். வந்தியத்தேவன் தன் சொல் செயலிழந்து கைகளைப் பற்றிக்கண்களில் ஒற்றிக்கொண்டான்.
“திருமலையை முதலில் தஞ்சையில் சந்தித்துப்புதிரில் மறைந்திருக்கும் சில வினாக்களின் விவரங்களைப் பற்றிக் கலந்தாலோசித்துவிட்டுப் பிறகு என் நீண்ட பயணத்தைத் தொடங்குவேன்” என்று கூறி விடை பெற்றுக்கொண்டு குதிரையில் தாவி ஏறினான். விருட்டென்று திரும்பி குதிரையைத் தட்டிவிட்டான். குதிரை பிய்த்துக்கொண்டு பறந்தது.
வந்தியத்தேவனின் குதிரை மறையும்வரை பார்த்திருந்துவிட்டு நிம்மதியான பெருமூச்சுவிட்டாள். என்றும் இல்லா ஆனந்தத்துடன் ஓடத்துறைக்குத் திரும்பினாள் குந்தவை.
(தொடரும்)