சரித்திரம் பேசுகிறது! –யாரோ

பாண்டியன்

pa1
முற்கால பாண்டிய நாட்டுக் கதைகளைச் சற்றுப் பார்ப்போம்.

இவைகள் எல்லாம் கி மு 300 – கி பி 100 வாழ்ந்த பாண்டிய மன்னர்கள் பற்றி.

pa2

பாண்டியர்கள் சந்திர குலத்தைச் சேர்ந்தவர்கள்!

 • ஆதி காலத்தில், குமரிக் கண்டத்தில் பாண்டியர்கள் அரசாண்டனர். இந்தியப்பெருங்கடலில் மூழ்கிவிட்டதெனக் கருதப்படும் குமரிக்கண்டத்தில் பாண்டிய தலைநகர் தென்மதுரை.
  ஒரு கடற்கோளினால் (tsunaami) இது அழிவுற்றது.
 • இக் கடற்கோளில் அழியாது இருந்த கபாடபுரம் பாண்டியர்களின் இடைச்சங்ககாலத் தலைநகரம்.
 • கபாடபுரத்தில் – அகத்தியர், தொல்காப்பியர் இருந்து சங்கம் வளர்த்தனர்.
 • இராமாயணம்:
  சீதையைத் தேடி தென்திசை செல்லும் வானரப்படைகளிடம் சுக்கிரீவன்:
  “நீங்கள் தென்திசை நோக்கிச் செல்லும் போது தங்கம், முத்து, ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்ட மதில்களைக் கொண்ட ஒரு நகரத்தைக் காண்பீர்கள். அந்தப்பேரரசான பாண்டியனின் கபாடபுரத்திலும் சீதையைத் தேடிப்பாருங்கள்!”
 • இரண்டாம் கடற்கோளால் அந்நாடும் கபாடபுரமும் அழிவுற்றது.
 • பின்னர் தற்போதுள்ள மதுரை பாண்டியர்களின் தலைநகராயிற்று.                           pa3

மதுரை மாநகரம்!

 • மகாபாரதம் :
  கொடுமுடியின் புறநகரில் வன்னி மரத்தில்தான் பாண்டவர் தம் ஆடைகளையும் ஆயுதங்களையும் மறைத்து வைத்தனர்.
 • அர்ஜுனன் பாண்டிய மன்னன் ஒருவன் மகளையும் மணந்தான்!
  ஆஹா! எந்த நாடு இளவரசியையும் விட்டு வைக்கக் கூடாது என்ற என்னே ஒரு உத்தமமான கொள்கை!
 • பாண்டவர் அணியில் இருந்து மலையத்துவசப் பாண்டியன் துரோணர் மகன் அசுவத்தாமனுடன் போர் புரிந்ததாகக் கதை உள்ளது.
 • சிவபெருமான் ஒரு பாண்டியன்!
 • உமையவள் மலையத்துவசப் பாண்டியன் மகள் மீனாட்சியாகப் பிறந்தாள்.
  பின்னர் சோமசுந்தரப் பெருமானை மணந்தாள்
  பாண்டிய நாட்டை சோமசுந்தரர் ஆண்டார்
  – என்று புராணங்கள் கூறும்.

“கண்ணுதற் பெருங்கடவுளும் கழகமோடமர்ந்து
பண்ணுறத் தெரிந்து ஆய்ந்த இப் பசுந்தமிழ்”

 • சிவபெருமான் கழகத்தைச் சேர்ந்த்தவர்!
 • அந்நாளில் ‘கழகம்’ தமிழை வளர்த்தது!
 • மதுரையை ஆண்ட பாண்டியர் மன்னன் ஒருவன் ரோமாபுரியின் அகஸ்டஸ் மன்னனுக்குத் தூதன் ஒருவனை அனுப்பினான்.
 • நிலந்தரு திருவிற் பாண்டியன் அரசவையில் தொல்காப்பியம் அரங்கேற்றப்பட்டது.

pa4

மீன் கொடி!

மூன்று கதைகளைப் பார்ப்போம்.

முதல் கதை:

ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன்

 • சிலப்பதிகாரக் காவியத்தில் கூறப்படும் பாண்டிய மன்னன்.
 • பட்டத்து ராணி கோப்பெருந்தேவி.
 • வடநாட்டு ஆரிய மன்னர்களைப் போரில் வென்றதனால் ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் என்ற சிறப்புப்பெயரைப் பெற்றான்.
 • பெரும்படை மிக்கவனாகத் திகழ்ந்த இவன் தென்னாட்டு அரசர்கள் பலரை அடக்கி சேர,சோழர்கள் பலரையும் வென்றவனும் ஆவான்.
 • சேரன் செங்குட்டுவன் காலத்தில் வாழ்ந்தான்.
 • சரியாக ஆராய்ந்து அறியாது கோவலனைக் கொல்ல ஆணையிட்டு, நீதி  தவறியமைக்காகத் தன்னுயிர் நீத்த பாண்டிய மன்னன்.
 • கல்விச்சிறப்பினை முதன் முதலில் உலகினுள் உணர்த்திய மன்னன்.

இவனது புறப்பாடலில் இவன் கல்வியின் சிறப்புகளைக் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது. அப்பாடலில்:

“உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும்
பிற்றை நிலை முனியாது கற்றல் நன்றே!
பிறப்போரன்ன உடன்வயிற்றுள்ளும்
சிறப்பின் பாலால் தாயும் மனம் திரியும்
ஒரு குடிப் பிறந்த பல்லோருள்ளும்
மூத்தோன் வருக என்னாது அவருள்
அறிவுடையோன் ஆறு அரசும் செல்லும்
வேற்றுமை தெரிந்த நாற்பா லூள்ளும்
கீழ்ப்பால் ஒருவன் கற்பின்
மேல் பால் ஒருவனும் அவன் கண்படுமே”

இந்த பாடலின் பொருள்:

“ஆசானுக்கு உதவி செய்யவேண்டும்;
மிக்க பொருளைத் தரவேண்டும்.
பணிவோடு கற்பது நல்லது!
ஒரு குடும்பத்தில் பிறந்தாலும் கற்றவனையே தாய் விரும்புவாள்.
ஒரு குடும்பத்தில் மூத்தவனைக் காட்டிலும் கற்ற ஒருவனையே, இளையவனே ஆகிலும் உரிமை தந்து போற்றுவாள்.
அறிவுடையோன் வழியில்தான் ஆட்சி செல்லும்!
கீழ் இனத்தவன் கற்றால் மேலினத்தவனைவிட மேலாக மதிப்பர்!”

என கல்வியின் சிறப்பினைப் போற்றி உயர்த்திக் கூறியுள்ளான் இப்பாண்டிய மன்னன்.
இவனது ஆற்றலை வியந்து இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்தில்:

“வடவாரிய படை கடந்து
தென்தமிழ் நாடு ஒருங்கு காணப்
புரைதீர் கற்பின் தேவி தன்னுடன்
அரசு கட்டிலிற் றுஞ்சிய பாண்டியன்
நெடுஞ்செழியன்”

என இப்பாண்டிய மன்னனைப் போற்றியுள்ளார்.

 

இரண்டாம் கதை:

தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன்

 

தனது தந்தையின் இறப்பிற்குப் பின்னர்,  சிறு வயதிலேயே முடிசூட்டப்பட்டவன் இவன்.

 

‘நெடுஞ்செழியன் இளையவன், வயது முதிராதவன் ஆற்றல் இல்லாதவன்’ என இகழ்ந்து சோழநாட்டை ஆண்ட இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி, சேர நாட்டை ஆண்ட மாந்தரஞ்சேரல் இரும்பொறை, கொங்கு நாட்டினை ஆண்ட திதியன், எழினி, எருமையூரன், இருங்கோவேள், பொருநன் ஆகிய குறுநில மன்னர்கள் போன்றோர் கூறினர்.
இவ்வனைவரும் சேர்ந்து பாண்டிய நாட்டின் மீது படையெடுத்துத் தலையாலங்கானம் என்னுமிடத்தில் தாக்கினர்.
இவன் போருக்குச் செல்லும் போது,  சிறுவர்கள் அணியும் ஐம்படைத் தாலியைத் தன் காலில் இருந்து கழட்டவில்லை.

 

இவன் புலவனாகவும் விளங்கினான். இவனது ஒரே ஒரு பாடல் புறநானூறு 72 எண்ணுள்ள பாடலாக உள்ளது. அதில் அவன் வஞ்சினம் கூறுகிறான்.
‘இது’ செய்யாவிட்டால் எனக்கு ‘இன்னது’ நேரட்டும் என்று ‘பலர் முன்’ கூறுவது வஞ்சினம்.

 

“நாற்படை நலம் உடையவர் என்று தன்னைத் தானே புகழ்ந்துகொண்டு செருக்கோடு என்னைப்பற்றிச் சிறுசொல் கூறி, என்னோடு போரிடுவோர் எல்லாரையும் ஒன்றாகச் சிதைத்து, என் அடிக்கீழ் நான் கொண்டுவராவிட்டால்,

என் குடிமக்கள் என்னைக் கொடியன் என்று தூற்றுவார்களாக!

மாங்குடி மருதனைத் தலைவனாகக் கொண்ட என் புலவர்-சங்கம் என்னைப் பாடாது போகட்டும்!

என்னைப் பாதுகாப்போர் துன்பம் கொள்ள, இரவலர்களுக்கு வழங்கமுடியாத வறுமை என்னை வந்தடையட்டும்!”
எதிர்த்துப் போரிட்ட அனைவரையும் நெடுஞ்செழியன் தோற்கடித்தான்.

ரஜினி மாதிரி… செய்யறதைத் தான் சொல்வார் போலும்!

மூன்றாம் கதை:

உக்கிரப்பெருவழுதி:

உக்கிரப் பெருவழுதி என்னும் பாண்டிய அரசன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனின் மகன் ஆவான். படைக்களத்தில் சூறாவளி எனப் போரிடும் ஆற்றல் உள்ளவன். எனவே இவனை ‘உக்கிர’ என்னும் அடைமொழியுடன் அழைப்பது வழக்கம். அகநானூறு தொகுப்பித்த உக்கிரப்பெருவழுதி பெரும் புலவனாகவும் விளங்கினான்.

இவன் காலத்தில் பாண்டிய நாட்டின் கிழக்குப் பகுதியில் உள்ள கானப்பேரெயில் என்னும் கோட்டை உள்ள பகுதியை வேங்கைமார்பன் என்ற குறுநில மன்னன் ஆண்டு வந்தான். உக்கிரப் பெருவழுதி வேங்கை மார்பனை வென்று கானப் பேரெயிலைக் கைப்பற்றினான். எனவே இவன் கானப்பேரெயில் கடந்த உக்கிரப் பெருவழுதி எனப்பட்டான். கானப் பேரெயில் தற்போது சிவகங்கைக்குக் கிழக்கே 16 கி.மீ தொலைவில் காளையார் கோயில் என்னும் பெயரில் உள்ளது.

பாண்டியன் உக்கிரப் பெருவழுதி யாவருடனும் பகைமை பாராட்டாமல் மாரி மாவெண்கோ என்ற சேர மன்னனுடனும், இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி என்ற சோழ மன்னனுடனும் நட்புப் பூண்டிருந்தான். இப்பாண்டிய மன்னன் சிறந்த புலவனாகவும், புலவர்களைப் போற்றிய புரவலனாகவும் இருந்தான். எல்லாவற்றிற்கும் மேலாக எட்டுத்தொகையுள் ஒன்றான அகநானூற்றைத் தொகுப்பித்தவன் இம்மன்னனே என்றும் கூறுவர். இப்பாண்டிய மன்னனைப் பற்றிய குறிப்புகள் இறையனார் அகப்பொருள் உரையிலும், சிலப்பதிகார உரையிலும் காணப்படுகின்றன. உக்கிரப் பெருவழுதியைப் பற்றி ஐயூர் மூலங்கிழாரும், ஔவையாரும் புறநானூற்றில் பாடியுள்ளனர்.

ஒரு நாள்:

மந்திரி: மன்னர் பிரானே! இன்று நம் அரசவைக்கு ஒரு புலவர் வருகை தந்திருக்கிறார்.

உக்கிரப் பெருவழுதி….
புலவரை நோக்கினார்.
முகமலர்ந்து வரவேற்றார்!

குறைந்த உயரம்
முகத்தில் கறுந்தாடி
அதைத் மீறிய வெண்பற்கள்
தலையில் தலைப்பாகு
வெள்ளை உடை
கரங்களில் ஓலைச்சுவடிக் கட்டு

மன்னர்: “புலவரே! தாங்கள் யார்? எங்கிருந்து வருகிறீர்கள்?”

புலவர்: “நான் மயிலையையிலிருந்து வருகிறேன்! தமிழ் மீது உங்களது காதல் அறிந்து உங்களைக் காண வந்தேன். நான் குறுங்கவிதைக் கொத்து ஒன்று படைத்துள்ளேன்! அதை உங்கள் சமூகத்திற்கு அளிக்க வந்துள்ளேன்”

மன்னர் அந்த குறுங்கவிதையில் ஒன்றைப் படித்தார்.
சுவைத்தார்!
மற்றொன்று!
சுவை கூடியது!
மற்றொன்று!
சுவையோ சுவை!
ஒவ்வொன்றும் இரண்டு அடிகள்!
ஆயினும் கோடி கருத்துகள்!
ஆயிரக்கணக்கான கவிதைகள்.

மன்னர் : “தமிழில் இப்படி இது வரை ஒருவர் எழுதியது இல்லை!
சுருக்கத்தில் பெருக்கம் இதுதானோ? காலம் அழியும் வரை இந்த கவிதைகள் தமிழுக்கு அலங்காரமாக இருக்கும். தெய்வப் புலவரே! என் பெயர் சரித்திரத்தில் இல்லாமல் போகலாம். ஆனால் உங்கள் பெயரும் இந்த குறள் தொகுதியும் தமிழர் மற்றுமல்லாது உலகெங்கும் பரவி புகழ் மணக்கும். தங்கள் பெயர்?”

“வள்ளுவன்”

மன்னர்: “ஆஹா! இதைத் திருவள்ளுவரின் திருக்குறள் என்று உலகம் போற்றும்”

மன்னன் உடனே திருக்குறளைப் பாராட்டும் வகையில் ஒரு வெண்பா இயற்றிப் பாடினான்.

கற்றாரைக் கற்றாரே காமுறுவர்!

இந்த பாடல் திருவள்ளுவ மாலையில் காணப்படுகின்றது.

pa5

 

பெருவழுதி நாணயம்

(நன்றி: https://ta.wikipedia.org/w/index.php?curid=136793)

 

 

பாண்டியர் தங்கள் பெயரில் மாறன், வழுதி, சடையவர்மன், மாறவர்மன், வர்மன், செழியன், முது குடுமி என்ற ஒட்டுக்களைக் சேர்த்துக் கொண்டனர்.

 • நீதி காக்க பாண்டியன் நெடுஞ்செழியன் உயிர் கொடுத்தான்.
 • பொற்கைப் பாண்டியன் நீதிக்குத் தலை வணங்கி தன் கையை வெட்டிக் கொண்டான்.

pa6

 

 

 

 

 

 

 

சில சில்லறைக் கதைகள்:

வியட்நாம் வீடு:

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு பாண்டிய மன்னன் வியட்நாம் நாட்டை ஆண்டிருக்கிறான்! அவன்தான் வரலாறு அறிந்த முதல் வியட்னாமிய மன்னன். அவனுடைய பெயர் ஸ்ரீமாறன். இவன் இடைச்சங்கத்தின் கடைசி மன்னன். அவன் அரசாண்ட காலத்தில் கடல் பொங்கி தென் மதுரையை அழித்ததால் அவன் தற்போதைய மதுரையில் கடைச்சங்கத்தை அமைத்தான். இந்த மன்னனோ இவனது குலத்தினரோ வியட்னாமில் ஒரு அரசை நிறுவியிருக்கலாம்.

தென்கிழக்கு ஆசியா முழுவதும் அகத்திய முனிவரின் சிலைகள் கிடைக்கின்றன. அகத்தியர் “கடலைக் குடித்த” கதைகளும் பிரபலமாகியிருக்கின்றன.

pa7

 

 

 

 

 

முதல்முதலில் கடலைக் கடந்து ஆட்சி நிறுவியதை “கடலைக் குடித்தார்” என்று பெருமையாக உயர்வு நவிற்சியாக குறிப்பிடுகின்றனர். வேள்விக்குடி செப்பேடு இந்தக் கதைகளைக் குறிப்பிட்டுவிட்டு அகத்தியரை பாண்டியரின் “குல குரு” என்றும் கூறுகிறது.

பாண்டியர் கால வரிசைப் பட்டியல்

முற்காலப் பாண்டியர்கள்

 • வடிம்பலம்ப நின்ற பாண்டியன்
 • நிலந்தரு திருவிற் பாண்டியன்
 • முதுகுடுமிப் பெருவழுதி
 • பசும்பூண் பாண்டியன்
 • கடைச்சங்க காலப் பாண்டியர்
 • முடத்திருமாறன்
 • மதிவாணன்
 • பெரும்பெயர் வழுதி
 • பொற்கைப் பாண்டியன்
 • இளம் பெருவழுதி
 • அறிவுடை நம்பி
 • பூதப் பாண்டியன்
 • ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன்
 • வெற்றிவேற் செழியன்
 • தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன்
 • உக்கிரப் பெருவழுதி
 • மாறன் வழுதி
 • நல்வழுதி
 • கூட காரத்துத் துஞ்சிய மாறன் வழுதி
 • இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறன்
 • குறுவழுதி
 • வெள்ளியம்பலத்துத் துஞ்சிய பெருவழுதி
 • நம்பி நெடுஞ்செழியன்

Ref: http://kallarperavai.weebly.com/298630062979302129753007299129923021-299729922994300629933009.html

வாசக நண்பர்களே!
வட இந்தியாவில் மௌரியப் பேரரரசு அசோகருக்குப் பின் மெல்ல அழிந்த பின் ஒரு இருண்ட காலம் பிறந்தது. அதே காலக்கட்டத்தில் தமிழ் நாட்டில் நாம் இது வரை பார்த்த சேர சோழ பாண்டியர் -சங்கம் வளர்த்தும்- வீரம் போற்றியும் பொற்காலத்தை உருவாக்கினர். இதற்குப் பிறகு தமிழகம் இருண்ட காலத்திற்குத் தள்ளப்படுகிறது. ஒற்றுமை இல்லாத மன்னர்கள் தமிழகத்தை இருளில் தள்ளினர். அதே நேரம் வட இந்தியாவில் ஒரு பொற்காலம் உருவாகியது.

ஆக, அடுத்த இதழில் சரித்திரம் என்ன பேசப்போகிறது?
‘யாரோ’ அறிவர்?

Advertisements

One response to “சரித்திரம் பேசுகிறது! –யாரோ

 1. The author presents history in such a way that is makes one sit up and pay attention! The lines like அந்நாளில் ‘கழகம்’ தமிழை வளர்த்தது! adds the modern touch. Pl keep up this good work!

  Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.