நம்பிக்கை என்னும் மந்திரச் சாவி!
அது வானம் பார்த்த பூமி!
மழை பொய்த்து, பூமியும் அந்தக் கிராமத்து மக்களின் மனங்களும் வறண்டு கிடந்தன.
இயற்கையை எதிர்த்து மனிதன் என்ன செய்து விட முடியும்?
ஊரே ஒன்றுகூடி, ஊரின் நடுவிலிருக்கும் கோயிலின் முன் கூட்டுப் பிரார்த்தனை செய்வது என முடிவு செய்தது கிராமப் பஞ்சாயத்து. குழந்தை முதல் முதியோர் வரை அனைவரும் மழை வேண்டி கோயில் முன் திரண்டனர்.
கூட்டத்தின் நடுவில் ஒரு சிறுவன் மட்டும் தாழங்குடை ஒன்றைப் பிடித்தபடி நின்றுகொண்டிருந்தான்!
பிரார்த்தனை நிச்சயம்; மழை வரப்போவதும் நிச்சயம்! நனையாமலிருக்கக் குடை கொண்டுவந்த சிறுவன்தான் ‘நம்பிக்கை’ யின் மறு உருவம். மற்றவர்களின் நம்பிக்கையில் சந்தேகம் கலந்திருக்கிறது.
ஒன்றின் மீது நமக்கிருக்கும் உறுதியான பிடிப்பு, எண்ணம், எதிர்பார்ப்பு – FAITH, HOPE, TRUST, CONFIDENCE – நம்பிக்கையாகும்.
அம்மாவினால் அடையாளம் காட்டப்படும் அப்பா – குழந்தையின் முதல் நம்பிக்கை!
அழுதால் பால் கிடைக்கும் – அம்மாவின் மீது குழந்தையின் நிஜ நம்பிக்கை!
மேலும் மேலும் உயர்த்தும், மாணவன் ஆசிரியர் மீது வைக்கும் நம்பிக்கை!
சீரான வாழ்க்கைக்கு ஆதாரம், கணவன் மனைவி இடையில் நிலவும் பரஸ்பர நம்பிக்கையே!
ரயிலிலோ, பேருந்திலோ, விமானத்திலோ பயணம் செய்வதும் ஒருவித நம்பிக்கையில்தான்!
விடாமுயற்சியுடன் ஓடி, வியர்த்து உழைப்பதுவும், வெற்றிபெறுவோம் என்ற நம்பிக்கையில்தானே!
மறுநாள் காலை கண் விழிப்போம் என்ற நம்பிக்கையுடனேயே முதல் நாள் இரவு தூங்கிப் போகிறோம்!
நம் ஒவ்வொரு எண்ணத்திலும், செயலிலும் நம்பிக்கையே ஆதார சுருதியாக இருக்கிறது!
நம்பிக்கைதானே வாழ்க்கை!
ஓட்டப்பந்தயத்தில் ஓடத் தயாராய் நிற்கும் ஒருவர், இரண்டு பக்கமும் பார்த்துவிட்டு, ‘நான் எங்கே ஜெயிக்கப் போகிறேன்’ என்று நம்பிக்கை இழந்தால், அவர் அந்தக் கணமே மற்றவர்களைத் துரத்திக் கொண்டு ஓடுவதற்குத் தயாராகிவிட்டார் என்பது உறுதியாகி விட்டது!
எல்லோருக்கும் முதலில் வேண்டியது ‘தன்னம்பிக்கை’.
மகாகவி பாரதியின் நம்பிக்கையே, சுதந்திரம் அடைவதற்கு முன்பாகவே, ‘ஆடுவோமே, பள்ளுப் பாடுவோமே, ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட்டோமென்று ‘ என்று பாடவைத்தது!
“நம்பிக்கை நிறைந்த ஒருவர், யார் முன்னேயும் எப்போதுமே மண்டியிடுவது இல்லை “ சொன்னவர் அப்துல் கலாம் அவர்கள்!
பத்திரிகையில் வேலைக்குச் சேர்ந்தபோது, ‘ப்ரூப் படிக்கத் தெரியுமா?’ என்றார்கள்; ‘தெரியும்’ என்றேன். பழக முடியும் என்று நம்பினேன். பழகிக்கொண்டேன்.
‘கவிதை எழுதத் தெரியுமா?’ என்றார்கள்; நம்பினேன். எழுதினேன்.
‘முடியும்’ என்றால் முடிகிறது; தயங்கினால் சரிகிறது. – இது கவிஞர் கண்ணதாசன் அவர்கள் சொன்னது!
தன்னம்பிக்கையுடன் முயற்சி செய்வது ஒன்றே வெற்றிக்கு வழி.
நம்பிக்கைகளில் முதன்மையானது ‘இறை நம்பிக்கை’. இருக்கிறானா இல்லையா என்பதல்ல கேள்வி – நம்பிக்கை அவசியம்! எதையாவது நம்பித்தானே ஆகவேண்டும்! எதை நீ நம்புகிறாயோ அதுவே ‘இறைவன்’ என்பேன் நான்!
‘உண்டென்றால் அது உண்டு; இல்லை என்றால் அது இல்லை’ என்பார் கண்ணதாசன் – உன் நம்பிக்கையைப் பொறுத்தது அது!
“கபடமற்ற மனம் இல்லாவிட்டால் இறைவனிடம் சட்டென்று நம்பிக்கை வராது! “ “ இறைவனின் திருநாமத்தில் நம்பிக்கை இருந்தால் தீர்த்த தலங்களுக்குப் போவது கூட அவசியமில்லை “ என்கிறார் இராமகிருஷ்ண பரமஹம்சர்.
புதிதாய்ச் சேர்ந்த அந்த ஆசிரியைக்கு, கப்போர்டு பூட்டைத் திறக்கும் நம்பர் காம்பினேஷன் தெரியவில்லை அல்லது மறந்து விட்டது. சிறிது நேர முயற்சிக்குப் பின், அந்தப் பள்ளியின் பாதிரியாரிடம் சென்று உதவி கேட்டார். உள்ளே வந்த பாதிரியார், இரண்டு எண்களைத் திருப்பிவிட்டு, சிறிது நேரம் அமைதியானார் – மேலே நிமிர்ந்து பார்த்து ஏதோ முணுமுணுத்தார். பின்னர், குனிந்து, மூன்றாவது எண்ணைத் திருப்பிப் பூட்டைத் திறந்து விட்டார்.
பாதிரியாரின் நம்பிக்கையில் ஆசிரியை வியந்து போனார்! சிரித்தபடியே பாதிரியார் சொன்னார்,”இதில் வியப்பதற்கு ஒன்றும் இல்லை. மேலே கூரையில் இந்தப் பூட்டின் நம்பர் எழுதி ஒட்டப்பட்டுள்ளது!”
நம்பிக்கை சிறியதோ, பெரியதோ – அது கொண்டுவரும் மாற்றம் மிகவும் உன்னதமானது!