தமிழில் நாடகங்கள் அதிகமாக மேடையேறியது எழுபது எண்பதுகளில்தான். அவற்றில் பெரும்பாலானவை ‘துணுக்குத் தோரணம்’ என்று வகைப்படுத்தப்பட்டன. அந்தக் காலகட்டத்தில் பெரும்பாலோர் நாடகங்களுடனோ சபாக்களுடனோ ஏதோ ஒரு வகையில் சம்பந்தப்பட்டு இருந்திருப்பார்கள். தொலைக்காட்சி வந்தபிறகு நாடகங்கள் குறைந்தன. நல்ல நாடகம் பார்க்கவேண்டும் என்ற ஆவல் பலருக்கு உண்டு.
இந்த ஆண்டு அல்லயன்ஸ் ஃப்ராங்சைஸ் ஒரு குறுநாடகவிழா நடத்தியது. சுமார் பத்து நிமிடங்கள் கொண்ட முப்பது நாடகங்கள் மூன்று வாரங்கள் நடத்தப்பட்டன. பெரும்பாலும் இளைஞர்கள் பங்குகொண்ட தமிழ் மற்றும் ஆங்கில நாடகங்கள் மிகுந்த புத்துணர்ச்சியை அளித்தது. அதில் எட்டு நாடகங்களை மீண்டும் ‘CRISPY THEATER’ அரங்கேற்றியது. அந்தக் குறுநாடகங்கள் நல்ல வரவேற்பைப் பெற்றன.
‘ஷ்ரத்தா’ நாடகக் குழு கடந்த ஒரு சில ஆண்டுகளாக சில நல்ல நாடகங்களை மீண்டும் ரசிகர்களுக்குப் பார்க்க வாய்ப்பு அளித்தது. ஒருமுறை மூன்று சிறுகதைகளை நாடகமாக்கி சிறப்பாக அரங்கேற்றினார்கள். இந்த ஆண்டு எட்டு குறுநாடகங்கள் மேடை ஏற்றினார்கள்.
எட்டு நாடகங்கள் துண்டுப் பிரசுரத்தில் இருந்தாலும் நாங்கள் சென்ற தினத்தில் ஏழு நாடகங்களே இருந்தன.
- சுந்தர ராமசாமியின் ‘சீதை மார்க் சீயக்காய்தூள்’ ஒரு நபர் நாடகமாக (மோனோ ஆக்டிங்) ரசிக்கும் வகையில் இருந்தது. ஓவியர், அவரது மனைவி மற்றும் படம் வரையச் சொன்ன வியாபாரி ஆகிய மூன்று பாத்திரங்களையும் அந்த நடிகர் சிறப்பாகச் செய்தார்.
- ‘அது’ – ‘ஸ்கைலேப்’ பூமியில் விழுந்து உலகமே அழியப்போகிறது என்ற பீதி உலவியது. அதுபோல் விண்வெளியிலிருந்து மாபெரும் ‘அது’ விழுந்து உலகம் அழியவிருப்பதாக அஞ்சும் நிலையில் ஒரு இளம் தம்பதியர் அதனை எதிர்கொள்ளும் காட்சியும், மற்றவர்கள் எப்படி நடந்துகொள்கிறார்கள் என ஒரு பிச்சைக்காரன் மூலமாகவும் இந்த நாடகம் சித்தரித்தது, ரசிக்கமுடிந்தது. பிறக்கப்போகும் குழந்தைக்காக நம்பிக்கையுடன் காத்திருப்போம் என அந்த தம்பதியினர் முடிவு செய்கிறார்கள். எளிய வசனங்களும் இயல்பான நடிப்பும் ரசிக்கும்படியாக இருந்தது.
- ‘மெல்லத் தமிழ் இனி …’ பாரதியார் பாடல்களில் தவறாகப் பயன்படுத்தப்படும் ‘மெல்லத் தமிழினி’, நல்லகாலம் பாரதியாரை இழுக்கவில்லை. தமிழ் படிக்காத ஒரு மாணவி தமிழைக் கற்றுக்கொள்ள முயற்சிக்க, ஒரு ஆட்டோ ஓட்டுனரின் தமிழால் ஈர்க்கப்படுவதாக சென்னைத் தமிழ் கிண்டலுடன் காண்பிக்கப்பட்டது. பரவாயில்லை. (ஒரு வேண்டுகோள் ‘மெல்லத்தமிழினி சாகும்’ என்று எவனோ சொன்னதாக கூறுபவர்களைப் பாரதி சாடியல்லவா இருக்கிறான். பாரதியாரே அப்படிச் சொன்னார் என்று மேடையிலும் உரையாடல்களிலும் சொல்லுவோரை முழுப் பாடலையும் படிக்கச் சொல்லுங்கள். புண்ணியமாய் போகும்)
- ‘கைபேசி’ – ‘மைமிங்’ வகையில் வசனமே இல்லாத வகை நாடகம் இது. பங்கேற்றவர்கள் சிறுவர்கள் என்பதால் ‘எனர்ஜி லெவல்’ மிகச் சிறப்பாக உற்சாகமாக இருந்தது. பிணம்தூக்கிகள் ஒவ்வொருவராகக் கைபேசியில் பேசப்போவதும், அம்போ என்று விடப்பட்ட பிணம் தானும் ஒரு செல்போன் எடுத்து பேசத்தொடங்குவதும் நல்ல கற்பனை. சொல்ல முயற்சிக்கப் பட்டவைகளில் பல பார்வையாளர்களைச் சென்றடைய வில்லை என்று தோன்றிற்று.
- ‘அறியா சனம்‘ தலைப்பு ஒரு சிலேடை என்று நினைக்கிறேன். ஒரு மைக் தான் கதைசொல்லி. மற்ற ‘சனங்கள்’ வந்துபோக, மேலிருந்து தொங்கும் ஒரு நாற்காலி – ‘அறியாசனம்’ கொஞ்சம் கொஞ்சமாக கீழே இறங்குகிறது. வித்தியாசமான நாடகம். வசனங்கள் நினைவில் நிற்காததால் காட்சியுடன் ஒன்ற முடியவில்லை.
- ‘தாலிக்கொடியும் தொப்புள்கொடியும்’ மற்றும் ‘கடைசிக் கடிதம்’ ஆண்டாள் பிரியதர்சினியின் இரு கதைகள் நாட்டிய அபிநயங்களோடு ஒரே கலைஞரால் நிகழ்த்தப்பட்டன. எனக்கு ரசனை பற்றாது என்பதால் ‘ஜகா’ வாங்கிக்கொள்கிறேன்.
நல்லவேளை ஏழு நாடகங்களுடன் விட்டார்களே என்ற ஆசுவாசத்துடன் அரங்கத்தை விட்டு அகன்றோம். நாம் அதிகப்படியான எதிர்பார்ப்புடன் சென்றதுதான் தவறோ?