சரித்திரம் பேசுகிறது! –யாரோ

அசோகருக்கு அப்புறம் …

 

அசோகர் வில்லனாக வாழ்க்கையை ஆரம்பித்தாரென்றாலும் சரித்திரத்தில் அவர் ஒரு ஹீரோ தான்.

ரஜினி வில்லனாக வந்து ‘தலைவா’ ஆனதைத்தான் நாம் பார்த்திருக்கிறோமே!

அடுத்த 500 வருடங்கள் இருண்ட காலத்தில் உருண்டாலும் …

சரித்திரம் உறங்கி விடவில்லை.

அந்நேரத்தில் உலகில் மற்ற பல சாம்ராஜ்யங்கள் சக்கைப் போடு போட்டன.

தமிழகத்தில் சேர சோழ பாண்டியர்கள் வீரம் வளர்த்து – சங்கத் தமிழ் வளர்த்து – காவியங்கள் படைத்துப் பொற்காலத்தை உருவாக்கினர்.

ரோமாபுரியில் சீசர்கள் மூன்று கண்டங்களில் ஆதிக்கம் செலுத்தி- கலாச்சாரத்தைப் பெருக்கி வெற்றி நடை போட்டனர்.

இயேசுநாதர் கொள்கைக்காக உயிர்த்தியாகம் செய்து பின் உயிர்த்து எழுந்து உலகுக்கு ஒளியூட்டினார்!

புத்த மதம் பரவினாலும் ஹிந்து மதமும் பரவிப் பறந்தது,

மகாயான புத்த பிக்ஷுக்கள்

 

அசோகருக்குப் பின்?

நடந்தது என்ன?

பெரும்பாலான சரித்திரக் கதாசிரியர்கள் நேராக குஷானர்களைப் பற்றிச் சொல்லி… உடனே குப்த சாம்ராஜ்யம் என்று குடு குடுவென்று ஓடி விடுவார்கள்..

நாம் சற்று நிறுத்தி யோசிப்போம்!

சின்னஞ்சிறு செய்திகளை அசை போட்டுச் சுவைப்போம்.

சரித்திரத்தின் நிழலில் …நின்று நிதானமாக…கதைப்போம்.

Image result for king ashoka family tree

அசோகர்:

வருடம்: 232 BC

பாடலிபுத்திரம் பெரும் சோகத்தில் மூழ்கியிருந்தது.

தக்ஷசீலத்திலிருந்து செய்தி பறந்து வந்தது.

சக்கரவர்த்தி அசோகர் காலமானார்.

அவரது உடல் வெகு வேகத் தேரில் பாடலிபுத்திரம் வந்தது.

அசோகரது மகன் கூனாலா மற்றும் அவன் மகன் சம்ப்ரதி – உஜ்ஜயினியில் இருந்தனர்.

அவர்களுக்கும்  செய்தி சேர அவர்களும் பாடலிபுத்திரம் விரைந்து வந்தனர்.

அசோகரது மற்றொரு பேரன் தசரதா அசோகரது இறுதி யாத்திரையை நிர்வகித்தான்.

அசோகரின் உடலில் மயில்படமிட்ட மௌரியக் கொடி சுற்றப்பட்டு, அலங்காரம் செய்யப்பட்டு அரண்மனை உப்பரிகையில் வைக்கப்பட்டது.

மகத மக்கள் அரண்மனை வாயிலில் பெருந்திரளாகக் கூடித் தங்கள் கண்ணீர் அஞ்சலியைச் செலுத்தினர்.

அடுத்த நாள் மாலை ஆதவனின் தங்கக் கிரணங்கள் மெல்ல மறையும் நேரம். அசோகரின் உடல் தகனம் செய்யப்பட்டது.

சாம்பல் காசியில் கங்கையில் கரைக்கப்பட்டது.

 

மறுபடியும் அரசாட்சி உரிமை யாருக்கு?

எல்லாத் தலைமுறைகளிலும் இந்த பிரச்சினை கடினமான ஒன்று தானே!

இந்தக் கேள்வி இல்லை என்றால் சரித்திரம் என்றுமே சுவாரஸ்யமாக இருந்திருக்காது!

அசோகருக்கு மூன்று மகன்கள்.

முதல் மகன் ‘மகேந்திரா’.

இரண்டாவது மகன் ‘டிவாலா’.

மூன்றாவது மகன் ‘கூனாலா’.

மகள் ‘சங்கமித்ரா’.

மகேந்திரன், சங்கமித்ரா இருவரும் மகாராணி தேவியின் மக்கள்.

இருவரும் பாடலிபுத்திரத்தை விட்டு விலகி சாமான்ய குடி மக்களாக வாழ்ந்தனர்.

அசோகர் புத்தமதத்தைத் தழுவிய போது – அசோகர் இருவரையும் சந்தித்து:

“மகேந்திரா, சங்கமித்ரா … நீங்கள் இருவரும் நமது பிரதிநிதியாக இருந்து புத்த மதத்தை உலகெங்கும் பரப்ப வேண்டும். இலங்கைக்குச் செல்லுங்கள். திரும்பி வந்து மௌரிய அரசாட்சியை ஏற்றுக் கொள்ளவேண்டும்” என்று பணித்தார்.

மகேந்திரன்:

“தந்தையே…மகிழ்ச்சி.. ஆனால் ஒரு வேண்டுகோள்.. புத்தரின் போதனைகள் எங்கள் உள்ளத்தில் ஆழ்ந்திருக்கின்றது. ஆகவே அரசாட்சியில் என் மனம் ஈடுபடவில்லை. என்னை வற்புறுத்த வேண்டாம்’

அசோகரின் கண்களில் நீர் கசிந்தது.

‘அரசு வேண்டும் என்பதற்காக கொலைகள் மலிந்திருக்கும் இந்தக் காலத்தில்..இப்படி ஒரு தியாகமா? எனக்குப் பெருமை சேர்த்தீர்கள்”

மகேந்திரன் – சங்கமித்ரா சென்ற பின் அசோகரது இரண்டாவது மகன் ‘டிவாலா’ – அசோகருடைய பிரியமான மகன். மகாராணி ‘கருவாக்கி’ யின் மகன். தக்ஷசீலத்திற்கு அவன் ஆளுனராக இருந்து வந்தான். அசோகர் அவனை தனக்குப் பின் அரசன் என்று எண்ணி மகிழ்ந்திருந்தான். அவனது அகால மரணம் அசோகரை உலுக்கி விட்டது.
அவன் மகன் தசரதா ஒரு இளைஞன்.

கூனாலா அசோகரின் மூன்றாவது மகன். மகாராணி பத்மாவதியின் மகன்.

பத்மாவதி முன்னமே இறந்து விட்டதால் மகாராணி ‘அசந்திமித்ரா’ கூனாலாவை வளர்த்தார்.

(ராணிகளுக்குத் தான்  பஞ்சமே இல்லையே!)

அசந்திமித்ராவின் மறைவிற்குப் பின் ஒரு ‘மோகக் கதை’ விரிந்தது.

காமத்தின் சக்தி அபரிமிதமானது.

அசந்திமித்ரா அசோகரை அன்புடன் ‘கவனித்து’ இன்பம் அளித்தாள்.

அவள் மறைவு அசோகரை பெரிதும் வாட்டியது.

ராணியின் பணிப்பெண் ‘திஷ்யரக்ஷா’ அழகி.

அழகுடன் இளமை சேர்ந்தால் அதன் விளைவை சொல்லவும் வேண்டுமோ?

அந்தப்புரம் அழகு ராணிகளால் நிரம்பி வழிந்தாலும் புது மலர் போல் இருந்த பணிப்பெண் அசோகரது கண் பார்வையில் பட்டாள்.

வயது கூடியிருந்தாலும் அசோகரது ஆசை அடங்க வில்லை.

என்ன தான் புத்த பக்தராக இருந்தாலும் –ஆசையை அடக்கலாம் … ஆனால் மோகத்தை?.

மன்றம் வந்த தென்றல் அவள்… அசோகரின் மஞ்சத்தில் விழுந்தாள்.

மோகத்தின் உச்சியில் அசோகர் கூறினார்:
’இளம் பூவே…உன்னை என் ராணியாக்குகிறேன்’

திஷ்யரக்ஷா அசோகரின் ஆசைக்கிழத்தியாக இருந்தபோதும் அவள் இளமை அவளை சும்மா விடவில்லை.

கண்கள் அலை பாய்ந்தது.

பருவம் பாய் விரித்தது.

இளவரசன் கூனாலா முப்பது வயதுக் காளை.

திடகாத்திரமான தோள்களும் – விரிந்த மார்பும் –சிங்கம் போல் நடையும்!.

அவனது உடலின் வெகு அழகிய அங்கம் – அவனது கண்கள்!

தாமரைக் கண்கள் என்று இதிகாச நாயகர்களின் கண்களைப் பற்றிக் கூறுவதை அன்று அவள் உணர்ந்தாள்.

அந்தக் கண்களில் ‘அவள்’ விழுந்தாள்.

மகேந்திரன் , டிவாலா இருவரும் அரசுரிமையிலிருந்து மறைந்து விடவே கூனாலாவுக்குத்தான் மௌரிய அரியணை என்பது நிச்சயமானதே!

கூனாலாவுக்கு நான்கு வருடங்களுக்குமுன் திருமணமாகி மூன்று வயது ஆண் குழந்தை இருந்தது.

‘அதனால் என்ன?’

‘நானும் அவன் காதலியாகிறேனே’- என்றாள் திஷ்யரக்ஷா..

மயங்குகிறாள் ஒரு மாது.

‘ஒரு கிழவனுக்கு ராணியாக இருப்பதை விட ஒரு அழகிய வாலிபனுக்கு வைப்பாட்டியாக இருந்து சுகம் அனுபவிப்பதே மேல்’ – என்று எண்ணினாள்.

பாடலிபுத்திரத்தின் அரண்மனைப் பூங்கா.

தென்றல் மலர் செடிகளில் ஊர்ந்து வந்தது.

கூனாலா ஒரு ஆலமரத்தின் அடியில் பஞ்சணை ஒன்றில் அமர்ந்து இன்பம் ததும்பும் பாடல் பாடிக்கொண்டிருந்தான்.

முறைப்படி சங்கீதம் பயின்றவன்.

அவனது குரல் இனிமை விவரிக்கத்தக்கதல்ல.

அனுபவித்தால் தான் விளங்கும்.

அந்த தேவ ராகம் கேட்டு திஷ்யரக்ஷாவின் உடல் மோக ராகத்தில் துடித்தது..

அவனை நெருங்கி மயக்கம் தரும் பார்வையை வீசினாள்.

வெட்கத்தை விடுத்தாள்.

இச்சையை உரைத்தாள்.

கூனாலா அவள் அழகை ரசித்திருந்தாலும் அவள் தந்தையின் காமக்கிழத்தி என்பதை உணர்ந்திருந்தான். மேலும் அவள் ஒரு பணிப்பெண் என்பதையும் கூறி,

“இந்த கேடு கெட்ட எண்ணத்தைக் கை விடு. இனி நான் உன்னை என் கண்களால் காண்பதில்லை’ – என்று கடிந்து கொண்டான்.

மோகத்தில் இருந்த திஷ்யரக்ஷா மனதில் காயப்பட்டாள்.

நீலாம்பரியானாள்.

அவன் படையப்பா அல்லன்.

அவனது தாமரைக் கண்களைப் பார்த்தாள்.

மோகம் மறைந்து கோபம் அவளை ஆட்கொண்டது.

‘இந்தக் கண்கள் என்னைக் காணாவிடில் அது இருந்துதான் என்ன பயன்?’.

ஆத்திரம் பொங்கியது.

விஷப் பொடியை எடுத்து வெகு விரைவாக கூனாலா எதிர்பாராத வேளையில்  அவன்  கண்களில் அப்பினாள்.

இளவரசன் துடிதுடித்தான்.

அந்த தாமரைக் கண்கள் கருகின.

பார்வை அந்தக் கண்களை விட்டுப் பறந்தது.

பாவையும் அந்த அரண்மனையை விட்டுப் பறந்தாள்.

கூனாலா பாடலிபுத்திரத்தை விட்டு விலகி இருந்தான்.

ஆண்டுகள் 3 உருண்டோடியது.

கூனாலா ஒரு இசைக்கலைஞனாக மாறுவேடம் தரித்து அசோகரது அரண்மனைக்கு வந்தான்.

அரச மண்டபத்தில் ஒரு இசைக் கச்சேரி நடத்தினான்.

அசோகர் அந்த தேவகானத்தில் மெய் மறந்தார்.

‘கலைஞரே- தாங்கள் வேண்டும் பரிசு யாது?’

கலைஞருக்கு வேறு என்ன..ஆட்சி தானே வேண்டும்!!

கூனாலா தன் வேடத்தைக் கலைத்து:

‘தந்தையே! மௌரிய அரசாட்சி வேண்டும்’ என்றான்.

அசோகர் அவனது நிலை பார்த்து மனமிரங்கினார்.

ஆனால் – கனமான மனத்துடன்:

‘மகனே கூனாலா! உன் நிலை கண்டு என் மனம் பச்சாதாபம் கொள்கிறது.

ஆனால் கண்கள் அற்ற உனக்கு அரசுரிமை தர இயலாது’

கூனாலா: ‘அரசே! நான் எனக்காக இதைக் கேட்கவில்லை. என் மகனுக்காகக் கேட்கிறேன்’

அசோகர்: ‘எப்பொழுது?’

கூனாலா:’ சம்ப்ரதி’- என்றான்!!

சம்ப்ரதி என்றால் ‘இப்பொழுது’ என்று பொருள்.

அசோகர் ஒத்துக்கொண்டார்.

அதிலிருந்து கூனாலாவின் மகன் பெயர் சம்ப்ரதி என்று வழங்கப்பட்டது.

மன்னர் நினைத்தார்- தான் இன்னும் பத்து-இருபது ஆண்டுகள் ஆள்வோம்- அதற்குள் – 5 வயது பாலகன் சம்ப்ரதி அரசனாக வயது அடைவான்.

ஆனால் விதி தன் முடிவுகளை யாரையும் கேட்டு எடுப்பதில்லை.

அசோகர் தக்ஷசீலத்திற்குச் சென்ற சமயம்… காலமானார்.

சாணக்கியருக்குப் பிறகு அவர் அளவுக்குத் திறமை கொண்ட மந்திரிகள்/அரசியல் ஆலோசகர்கள் இல்லை. எனினும் சாணக்கியரின் புகழ் மந்திரிகளுக்குப் பெரும் ஊக்கத்தையும் சக்தியையும் கொடுத்திருந்தது.

அசோகருக்குப் பின் நிலைமைக்குத் தீர்வு காண மகா மந்திரி துடித்தார்.

நிலைமை என்ன?

சம்ப்ரதி 5 வயது பாலகன். தசரதா 20 வயதினன்.

தசரதா தான் அரசனாக எண்ணம் கொண்டிருந்தான்.

அசோகர் சம்ப்ரதியைப் பிற்கால அரசன் என்று அறிவித்திருந்தான்.

தசரதா: தாத்தாவின் ஆட்சிக்குப்பிறகு யார் அரசாள்வது என்பதை முடிவு செய்ய வேண்டும்.

மகா மந்திரி: ‘நாட்டை இரண்டாகப் பிரிக்க வேண்டும்’

‘என்ன’ – இரு இளவரசர்களும் ஒரே நேரம் கூவினர்.

அவர்கள் முகம் சிவந்தது.

குரல்கள் கர்ஜித்தது.

‘நிறுத்துங்கள்!’ மந்திரியின் குரல் இடியென முழங்கியது.

‘நான் சொல்வதை முழுதாகக் கேளுங்கள் முதலில்’.

‘நீங்கள் இருவரும் இந்த ராஜ்யத்தை அரசாளத் தகுதி உள்ளவர்கள்தான்!’

மந்திரிக்குத் தன் வார்த்தைகளிலே நம்பிக்கை இல்லை – இருப்பினும் நம்பிக்கை இருப்பது போல் பேசினார்.

‘ஒரு சாம்ராஜ்யத்தைக் கட்டி ஆள்வதென்றால் எவ்வளவு கடினம் என்பதை நீங்கள் அறிவீர்கள் என்று நான் நம்புகிறேன்.

சக்கரவர்த்தியின் மூத்த மகன் மகேந்திரன் புத்த பிக்ஷு ஆகி விட்டார். – ஆகவே அவர் அரசராக வாய்ப்பில்லை.

தசரதா.. உனது மாமன் ஜாலுக்கா காஷ்மீர் பகுதிக்குத் தானே மன்னன் என்று பிரகடனம் செய்து விட்டான்.

வீரசேனன் காந்தாரத்தை நம்மிடமிருந்து பிரித்து அதை அரசாளத் துவங்கிவிட்டான்.

விதர்பா நாடும் மௌரிய அரசிலிருந்து பிரிந்து தனி நாடாயிற்று.

மகாமேகவாகனா அரச குடும்பம் கலிங்கத்தை நம்மிடம் இருந்து பறித்து விட்டது.

தென்னிந்தியாவில் இப்பொழுது நமக்கு ஒரு பகுதியும் இல்லை.

தனநந்தன் காலத்திலிருந்து மகத நாட்டில் எவ்வளவு செல்வம் கொழித்திருந்தது!!

அந்த செல்வத்தைப் பற்றி தமிழ் நாட்டில் புறநானூறில் எப்படி எழுதியிருந்தனர்.

ஆனால் – அசோக சக்கரவர்த்தி காருண்ய குணத்தால் – அரசின் அனைத்து செல்வங்களையும் மடங்களுக்கும் துறவிகளுக்கும் தானம் செய்துவிட்டார். கஜானா காலி!”

பெருமூச்சு விட்டார்.

இளவரசர்கள் முகத்தில் ஈயாடவில்லை.

மந்திரி தொடர்ந்தார்:

இவர் என்னதான் சொல்கிறார்? என்று இளவரசர்கள் இருவரது முகமும் குழப்பத்தில் ஆழ்ந்தது.

‘பாடலிபுத்திரம் மற்றும் அருகிலிருக்கும் பகுதிக்கு தசரதா அரசனாகட்டும். உஜ்ஜயினி ,தக்ஷசீலம் பகுதிகளுக்கு சம்ப்ரதி அரசனாக இருக்கட்டும். பத்து வருடம் கழிந்து – சம்ப்ரதி – அசோகா சக்கரவர்த்தி ஆணையின்படி அரசனாகட்டும்.”

அதன் படியே நடந்தது.

அசோகருக்கு பின்னர் வந்த இவர்கள் அவர் அளவுக்குத் திறமை பெற்றவர்கள் அல்ல என்பதாலும், அசோகர் படைவீரர்களை கலைத்துப் புத்தமதப் பிரச்சாரத்திற்கு அனுப்பிவிட்டதாலும் வலிமையின்றி இருந்தார்கள். மேலும் புத்த மதத்திற்கே முக்கியத்துவம் அளிக்கப்பட்டதால் பிராமண அறிஞர்கள் அரசைக் கவிழ்க்க நேரம் பார்த்து வந்தனர்.

ஆக்கல் ஒன்று இருக்குமானால் அழிவு ஒன்று இருக்கத்தானே வேண்டும்?

சரிவு துவங்கியது!

இனியும் சரித்திரம் பேசட்டும்.  

Image result for king ashoka family tree
Reference:

https://www.facebook.com/thehistoryofindia/posts/456085961070198:0

http://nationalviews.com/chakravartin-ashoka-samrat-dasrath-maurya-kunala-samprati

 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.