நெருப்பு சுடாது – எஸ் எஸ்

தன் கையில் உள்ள சிகரெட் புகைந்து கொண்டிருப்பதைப் பார்த்துக்கொண்டே இருந்தான் குமார். கடந்த பத்து நாட்களில் அவனுடைய வேலை இதுமட்டும்தான் என்றாகி விட்டது.  எங்கே போயிற்று அவனுடைய அட்டகாசம்? எங்கே போயிற்று அவனுடைய கம்பீரம்? ஏன் இப்படி மோட்டுவளையைப் பார்த்துக்கொண்டு உட்கார்ந்து கொண்டிருக்கிறான்?

Related image

திடீரென்று குரல் கேட்டது. “ குமாரண்ணே! நாயக்கர் வீடு தீப்பிடிச்சுடுச்சு அண்ணே!”

“ நெஜமாவாடா சொல்றே! நம்ம நாயக்கர் வீடா? “ பத்து நாட்கள் ஆடாமல் அசையாமல் இருந்த குமாரை இந்தச் சேதி உலுக்கியது.  அப்படியே நாயக்கர் வீட்டை நோக்கி ஓடினான். “ நளினி! உனக்கு ஒண்ணும் ஆகக்கூடாதே! கடவுளே!” மனதுக்குள் வேண்டிக்கொண்டே ஓடினான்.

பந்தக்கார நாயக்கர் வீடு ஊர்க்கோடியில் உள்ள பெரிய வீடு.  நாட்டு ஓடு போட்டு முன்னாலேயும் பின்னாலேயும் கூரை போட்டு வேய்ந்த பங்களா.  சுற்றிலும் பந்தல் அலங்காரத்துக்குத் தேவையான மூங்கில், துணி வளையங்கள், கயிறு, கூரை வேறு. கோவிந்தசாமி நாயக்கர் வாயிலும், வயிற்றிலும் அடித்துக்கொண்டு துடித்துக் கொண்டிருக்கிறார்.  ‘நளினி! நளினி!’ என்று எரியும் வீட்டைக் காட்டிக் கதறி அழுது உள்ளே பாயத் துடிக்கிறார்.  குமாருக்கு எல்லாம் புரிந்து விட்டது.  நளினி எரியும் வீட்டுக்குள்! யாரும் எதிர்பார்க்கவில்லை, எரியும் வீட்டுக்குள் குமார் பாய்ந்து ஓடுவான் என்று!.

எரியும் வீட்டுக்குள் புகுந்த அவனை புகையும் நெருப்பும், கீழே விழும் கம்புகளும் ஒன்று சேர்ந்து தாக்கின.  தாழ்வாரத்தைக் கடந்து எப்படி உள்ளே வந்தோம் என்பது அவனுக்குப் புரியவில்லை.  கம்பங்கள் படீர் படீர் என்று வெடித்துக்கொண்டிருந்தன.  தென்னை உத்திரம் கீழே விழுந்து விடுமோ என்று பயமாக இருந்தது.  எரியும் மூங்கிலைத் தாண்டி வீட்டிற்குள் போனான்.  பல அறைகள் கொண்ட பழங்கால வீடாகையால் நளினி எந்த அறையில் இருப்பாள் என்று தெரியாமல் ஒவ்வொரு அறையாகப் பார்த்துத் தேடினான். ‘ நளினி! நளினி!’ என்று கத்திக்கொண்டே அங்கும் இங்கும் ஓடினான்.

நிலைமை நேரத்திற்கு நேரம் மோசமாகிக்கொண்டே வந்தது. நளினியைக் கண்டு பிடிக்க முடியாமல் போய்விடுமோ என்று பயந்தான்.  அவளைக் காணவில்லை என்று நினைக்கும்போது அவன் பதட்டம் அதிகரித்தது.  வீட்டின் பின்புறம் ஓடினான்.  அங்கோ முழுவதும் கீற்றுக்கொட்டகை. தீயின் கோர தாண்டவம் அங்கு அதிகமாகவே இருந்தது. முதலில் தீப்பிடித்த இடம் அதுதான் போலும்.  தீயின் நாக்குகள் கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்தது.  நடுவிலே ஒரு சிமெண்ட் திட்டு. அதன் நடுவே நளினி மயங்கி விழுந்து கிடக்கிறாள்.  தீயின் ஜுவாலைக்கு நடுவே நளினி! குமாருக்கு மூச்சு நின்று விடும்போல இருந்தது. அவன் நரம்புகள் புடைத்தன.

எப்படி அவளை அணுகுவது என்று ஒரு சில செகண்டுகள் யோசிப்பதற்குள் எரியும் தட்டி ஒன்று அவள் மேல் விழுந்தது.  அவ்வளவுதான்.  நெருப்புக்கு ஊடே ஓடினான்.  உடம்பின் ஒவ்வொரு அங்குலத்திலும் நெருப்பு உக்கிரமாகத் தாக்கியது.  எதையும் பொருட்படுத்தாமல் அவள் அருகே சென்று எரிந்து கொண்டிருந்த தட்டியைத் தூர எறிந்தான். எரியத் தொடங்கிய நளினியின் புடவையைக் கசக்கி அணைத்தான்.  நல்ல வேளை! அந்தத் தட்டியைத்தவிர வேறு தீயின் நாக்குகள் அவளைத் தொடவில்லை.  ஆனால் புகை மண்டலம் அவளை மயக்கத்தில் ஆழ்த்தி இருந்தது.  அவள் தலைமுடியை அவிழாமல் இறுக்கி முடிந்து அவளை ஆட்டுக்குட்டியைத் தூக்குவதுபோலத் தூக்கினான்.  நிமிர்ந்து பார்த்தால் மேலே இருந்து இன்னும் பல கூரைகள் சரிந்து எரியத் தொடங்கின. அந்த இடம் இன்னும் சில நிமிடங்களில் தீயின் கோரப்பிடிக்குள் சிக்கிவிடும் என்பதை உணர்ந்தான்.

அவளைத் தூக்கிக்கொண்டு பின்புற வழியில் ஓடலாம் என்று பார்த்தால் அங்கே ஒரே நெருப்புக் கோளம். முற்றிலும் அடைபட்டிருந்தது.  வந்த வழியே திரும்ப வேண்டியதுதான் என்று அந்த நெருப்பு வளையத்தைத் தாண்டி ஓட்டு வீட்டுப் பகுதிக்கு வந்தான்.  ஓடுகள் ஒவ்வொன்றாக அப்போதுதான் வெடிக்கத் துவங்கின.

நடுவில்  சின்ன முற்றம் மாதிரி இடம் வந்ததும் அவன் கால்கள் தடுமாறின.  மூங்கில் கிழித்துத் தோள்பட்டையிலிருந்து  இரத்தம் வேறு கொட்டிக் கொண்டிருந்தது. அப்படியே நளினியைக் கீழே போட்டு அவனும் மயங்கி அவள் மேல் விழுந்தான்.  அந்த அதிர்ச்சியில் நளினியின் மயக்கம் தெளிந்தது. “ யார்.. நான்… எங்கே.. ஐயோ.. நெருப்பு… குமார்… நீங்க எங்கே..  அவளால் யோசிக்கவே முடியவில்லை.  அந்த முற்றத்தைத்தவிர  மற்ற எல்லா இடத்திலும் நெருப்பு சூழ்ந்திருந்தது.

தன்னைக் காப்பாற்ற வந்த குமாரும் மயங்கிக் கிடக்கிறான் என்பதை உணர்ந்ததும் அவளுக்குத் துக்கம் பீறிட்டது. “ குமார்! குமார்!” என்று அவன் கன்னத்தைத் தடவி அவனை மயக்கத்திலிருந்து எழுப்ப முயற்சித்தாள் . முடியவில்லை. அந்த நேரம் பார்த்து வெடித்த ஓடு அவன் தலையில் வெகு வேகத்துடன் தாக்க ‘ அம்மா’ என்று அலறி எழுந்தான் குமார்.  அவனுக்குச் சுரணையும் வந்தது.  மேலும் பல ஒடுகள்  வெடிக்கும் போல் இருப்பதைப் பார்த்து நளினி குமாரை மெல்ல இழுத்து மேடான மூலைக்குக் கொண்டுபோனாள்.  மடாலென்று முறிந்த உத்திரம் சலசலவென்று ஓடுகளைக் கொட்டி வெளியே செல்லும் வழியைச் சுத்தமாக அடைத்து விட்டது.

“ இனி தப்ப முடியாது குமார்! நாம ரெண்டு பேரும் இங்கேயே சாம்பலாக வேண்டியதுதான்!” நளினி அழுதுகொண்டே கூறினாள். ஒருவரை ஒருவர் அணைத்துக்கொண்டு மற்றவர் மீது விழும் தீப்பந்தங்களைத் தட்டிவிட்டுக் கொண்டிருந்தனர்.  நளினி!  குமார்! என்று இரு குரல்கள் மட்டும் மெல்ல ஒலித்துக்கொண்டிருந்தன.

@@@@@@@@@@@@@@@@@@

இதே இடத்தில்தான் பத்து நாட்கள் முன்னே… இருவரும் கிட்டத்தட்ட இதேமாதிரிதான்.. வேறு ஒரு தீ அன்றைக்குக் குமாரைச் சூடேற்றியிருந்தது.

“ நளினி!”

“ குமார்! நீங்களா? நீங்க எப்படி இங்கே!”

“ நளினி! உன்  வீட்டில் யாரும் இல்லே என்று தெரிஞ்சுக்கிட்டுதான் வந்தேன்.  நளினி! ஐ நீட் யு.. ரைட் நௌ ..”

“ குமார்! இது சரியில்லை! யாராவது பார்த்தால்…”

“ என்ன நளினி! இதிலென்ன தப்பு? நம்ம கல்யாணம் நிச்சயமான மாதிரிதானே ! உங்கப்பாதான் ஓகே சொல்லிட்டாரே!”

“ அதுக்காக இந்த நேரத்தில் நீங்க இப்படி வருவது சரியில்லை. கொஞ்ச நாள் பொறுங்க பிளீஸ்..”

“ நோ நளினி!  என்னைத் தடுக்காதே! கிணற்று நீர், ஆக்கப் பொறுத்தவன் இந்தப் பழமொழி எல்லாம் வேண்டாம். எனக்கு நீதான் வேணும். இந்த முற்றத்திலே, முத்தத்திலே ஆரம்பிப்போம்.”

இழுத்து அணைத்து அவள் உதட்டுடன் கலந்து முத்தமிட்டான். முதல் முத்தம் தித்தித்தது.  ஆனால் அதிலே போதை மருந்து வாசனை இருந்தது.  நளினிக்கு மயக்கமே வரும்போல் இருந்தது.

“ குமார்! நீங்க குடிச்சிட்டு வந்திருக்கீங்க ! மரியாதையா வெளியே போயிடுங்க! ஐ ஹேட் யு!”

“ நோ குமார்! ப்ளீஸ் வேண்டாம்! கல்யாணத்துக்கு அப்புறம் குமார்… ப்ளீஸ்.. தயவு செஞ்சு… இது சரியில்லை…. குமார்.. விட்டுடுங்க… குமார்… நோ… நோ… சே! நீங்க எல்லாம் ஒரு மனுஷனா!”

“ ப்ளீஸ் நளினி! முதல் இரவுக்கு ஒரு சிறு ஒத்திகை. அவ்வளவுதான்.. கமான்..”

எங்கிருந்துதான் அவளுக்கு அவ்வளவு பலம் வந்ததோ தெரியவில்லை. அவனைக் கீழே தள்ளிவிட்டு நின்றாள்.

“ கெட் அவுட் குமார்! குடிச்சிட்டுக் கன்னாபின்னாவென்று நடந்து கொள்ளும் உங்களை லவ் பண்ணினேன்னு நினைச்சா வெட்கமா இருக்கு! மரியாதையா வெளியே போயிடுங்க! இல்லே சத்தம் போட்டு ஊரைக் கூட்டிடுவேன்!”

“ இவ்வளவு நடந்தப்புறம் உன்னை சுவைக்காமப் போக நான் என்ன மடையனா!” என்று  கத்திக்கொண்டே அவள்மீது பாயப்போனான்.

“ இதுக்கு மேலே ஒரு அடி எடுத்து வைச்சீங்கன்னா என்னை உயிரோடவே பார்க்க முடியாது.”

அவள் குரலில் இருந்த விபரீத ஒலி அவனை பயமுறுத்தியது.  அவளை ஒரு நிமிஷம் உற்றுப் பார்த்துவிட்டு விடுவிடுவென்று வெளியே ஓடிவிட்டான்.  அன்று வெளியே போன குமாரைத் திரும்ப சந்திக்க மறுத்து விட்டாள் நளினி. அவர்கள் திருமணப் பேச்சு ஆரம்பிப்பதற்கு முன்பே முற்றுப்புள்ளி போட்டுவிட்டாள்.  ‘குமாரைத்தான் கல்யாணம் செய்து கொள்வேன்’ என்ற தன் பெண் ‘அவனை இந்த ஜென்மத்தில் மட்டுமல்ல, ஏழேழு ஜென்மத்திலும் கல்யாணம் செஞ்சுக்க மாட்டேன்’ என்று சொல்வதைக் கேட்டு ஆச்சரியப்பட்டார் கோவிந்தசாமி நாயக்கர். அவனுக்காகப் பெண் கேட்டு வந்த அவனது பெற்றோரிடம்  அவனை மணக்க முடியாது என்று அவளே நேரில் சொல்லி விட்டாள்!”

@@@@@@@@@@@@@@@@@@@

“ நளினி எழுந்திரு! நெருப்பு இந்த முற்றத்துக்கு வர்றதுக்கு முன்னாடி எப்படியாவது நாம தப்பிக்கணும்.”

“ குமார்! நீங்க ஏன் எனக்காக இந்த நெருப்பில் வந்து மாட்டிக் கொண்டீர்கள்?”

“ நளினி! நீ நெருப்பில் இருக்கிறாய் என்று தெரிந்து என்னால் சும்மா இருக்க முடியுமா? என் உயிரைக் கொடுத்தாவது உன்னைக் காப்பாத்தறதுதான் என் கடமை!”

“ ஐயோ குமார்! உங்கள் உண்மையான அன்பைப் புரிஞ்சுக்காம நான் உங்களைப் பலமா காயப்படுத்திட்டேன். அதுக்குத்தான் இந்த தண்டனை.  நீங்க எப்படியாவது தப்பிச்சுப் போயிடுங்க!”

“ தப்பு உன்மேலே இல்ல நளினி! என்னோடதுதான்! இல்லேன்னா அன்னிக்குப் போதை மருந்து சாப்பிட்டிருப்பேனா? உங்கிட்ட தகாத முறையில் நடந்திருப்பேனா?”

“ என்னது? போதை மருந்தா?”

“ ஆமா நளினி! நம்ம காதலை நண்பர்கள்கிட்டேசொல்லி ஒரு ட்ரீட் கொடுத்தேன். அதில ஒரு துரோகி எனக்கு வைத்திருந்த  ஜூஸிலே போதை மருந்தைக் கலந்து கொடுத்திட்டான்.  அதனால்தான் அப்படி நடந்துக்கிட்டேன். என்னை மன்னிச்சுடுன்னு நான் எழுதிய லெட்டர், நேரில் வந்து  சொன்னது எதையுமே நீ காதில் போட்டுக் கொள்ளவே இல்லை!”

“ ஐயோ குமார்! உங்க சின்னத் தப்புக்குப் பெரிய தண்டனை கொடுத்திட்டேனே! என்னை மன்னிக்க மாட்டீங்களா?”

அதற்குள் தீயின் நாக்குகள் அந்த முற்றத்தைச் சுற்றிப் பரவத் தொடங்கியது. எரியும் தீ நாக்குகளுக்கு நடுவே அவர்கள் இருவரும்.

“ குமார்! எனக்கு ஒரு வரம் தருவீர்களா?”

“ வரமா! நானா! இப்போதா?”

“ ஆமாம் குமார்! இப்போதேதான்! நாம ரெண்டுபேரும் எழுந்திரிச்சுத் தப்பிச்சுப் போக முடியாத சூழ்நிலை! எந்த நிமிஷத்திலும் தீயின் நாக்குகள் நம்மை சாப்பிடப்போகின்றன!  என் ஆசை .. வரம்… என்னன்னா,  நான் சாகும்போது உங்கள் மனைவியாக சாக விரும்புகிறேன்! மஞ்சள் கயிறு இல்லை! மாலைகள் இல்லை! நம்மை சுத்தி இருக்கும் அக்னி சாட்சியா என்னை மனைவியா ஏத்துக்கங்க குமார்!”

“ நளினி!”

Related image

இருவரும் ஒருவரை ஒருவர் இறுக்கிக் கட்டிக்கொண்டார்கள். அவன் தீப்புண்களுக்கு உதட்டால் ஒத்தடம் கொடுத்தாள். நெருப்பின் சூடு அவளை அணுகாமல் அவள் உடலைத் தன் உடலால் போர்த்தினான்.! அவளது கண்ணீர் அவன் காயங்களுக்கு மருந்தாயிற்று. ‘இதுதான் மாலை’  என்று இருவரும் தங்கள் கரங்களை மற்றவர் கழுத்தில் மாற்றி மாற்றிச் சுற்றினர்.  ‘இதுதான் தாலி’ என்று அவள் கழுத்தில் மூன்று முறை முத்தமிட்டான்.  காற்றில் நெருப்பு எரியும் ஓசை நாதஸ்வரமாக ஒலிக்கிறது.  வெடிக்கும் ஓடுகள் மேளசத்தம்!  ‘கெட்டிமேளம்! கெட்டிமேளம்!’  அக்னியை வலம் வருவதற்குப் பதிலாக அக்னியே அவர்களை வலம் வந்தது.  ‘இப்போது நமக்கு முதல் இரவு! ஏன் உன் உடம்பு இப்படி சுடுகிறது? பயமா? வெட்கமா?’

“ இவ்வளவு வெளிச்சத்துக்கு நடுவில்… குமார்! எனக்கு வெட்கமாக இருக்கிறது! நம்மைச் சுற்றியுள்ள நெருப்பு விளக்கை அணையுங்களேன்! குமார்! ப்ளீஸ்.. குமார்!”

“ நளினி!”

அவர்கள் தலைக்கு மேலே பெரிதாக எரியும் திரைச்சீலைகள் அந்த புது மணத் தம்பதிகளை நெருப்புப் போர்வை போர்த்தி அழகு பார்க்கத் துடிக்கின்றன.

அதற்குப் போட்டியாக, தூரத்தில் தீயணைக்கும் வண்டியின்                             ‘ கணகண’வென்ற ஓசை ஒலிக்கின்றது.

யார் முந்துவார்கள்?

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.