டிசம்பர் 17 . ஒரு முக்கியமான நன்னாள்.
நாற்பது வருடங்களுக்கு மேலாக இலக்கியத்திற்காகத் தன்னை அர்ப்பணித்துக் கொண்ட இலக்கிய சிந்தனையின் நிறுவனாரான பெருமதிப்புற்குரிய லக்ஷ்மணன் ஐயா அவர்களின் கட்டளைப்படி இலக்கிய சிந்தனை நிகழ்வும் குவிகம் இலக்கிய வாசல் நிகழ்வும் ஒரே நாளில் ஒரே இடத்தில் ஒரே நிகழ்வாக நடைபெற்றன .
இனியும் இப்படியே தொடர்ந்து நடக்கட்டும் என்ற அவரது ஆணையை ஏற்றுக்கொண்டு செயல்படத் துவங்கியுள்ளோம்!
அதன்படி, குவிகம் இலக்கிய வாசலின் டிசம்பர் 2016 நிகழ்வு இலக்கிய சிந்தனையின் 561 வது மாதாந்திரக் கூட்டத்துடன் ஆழ்வார்பேட்டையில் அமைந்துள்ள ஸ்ரீனிவாச காந்தி நிலையத்தில் 17-12-2016 அன்று நிகழ்வுற்றது.
இலக்கியசிந்தனையின் சார்பில் திரு லக்ஷ்மணனின் உரையுடன் தொடங்கி திரு தேவக்கோட்டை வ. மூர்த்தி அவர்கள் “உயிர்த்தேனும் மரப்பசுவும்” என்ற தலைப்பில் தி ஜ வின் இரு நாவல்களைப் பற்றி பல கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டு சிறப்பாக உரையாற்றினார். அதன் காணொலித் தொகுப்பு கீழே தரப்பட்டுள்ளது. ( நன்றி: விஜயன்)
தொடர்ந்து குவிகம் இலக்கிய வாசலின் டிசம்பர் 2016 நிகழ்வாக இலக்கிய வாசல் சுந்தரராஜனின் அறிமுக உரையைத் தொடர்ந்து “நான் சந்தித்த அபூர்வ இலக்கிய மனிதர்கள்” என்னும் தலைப்பில் கவிஞரும், ஓவியரும், விமர்சகரும் ஆன திரு இந்திரன் தனது சுவையான அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார்.
அதன் நேரடித் தொகுப்பு இதோ !
ஒரே நிகழ்வில் இரு மனம்கவர் உரைகளுடன் கூடிய நிகழ்ச்சி கிருபாநந்தனின் நன்றியுரையுடன் நிறைவுற்றது.