எமபுரிப்பட்டணம் (தொடர் கதை)
விஷ்ணுபுரி – சிவபுரி – பிரும்மபுரி போல சாவுத் தேவன் எமனின் தனி உலகம் எமபுரி .
அதன் தலைநகர் எமபுரிப்பட்டணம் .
இறந்தபின் மனிதன் இங்குதான் செல்கிறான். இங்கு வந்தபிறகு அவன் அவள் அது என்று எதுவும் கிடையாது. ஆத்மாதான். ஆத்மாவின் தலைஎழுத்தும் உடல் எழுத்தும் படிக்கப்படுகின்றன. ஆத்மா பூமியில் செய்த நல்லது கெட்டது இரண்டையும் ஆராய்ந்து அவற்றிற்கேற்ப நீதி வழங்கப்படுகிறது. அதன்படி ஆத்மா சொர்க்கபுரிக்குச் செல்லலாம். அல்லது நரகபுரிக்குச் செல்லப் பணிக்கப்படலாம். சொர்க்கபுரி – நரகபுரிக்கும் இரண்டுக்கும் இடையே கண்ணுக்குத் தெரியாத வேலி உண்டு. இங்கிருந்து அங்கும் அங்கிருந்து இங்கும் ஆத்மாக்கள் சென்று வருவதுண்டு.
எமன் தான் இரண்டுபுரிக்கும் தலைவன் – சர்வாதிகாரி. அவனுக்கு உதவிபுரிய ஒரு பெரும் படையே உண்டு. அவனுக்கு என்று நிறைய சட்ட திட்டங்கள் உண்டு. ஆனால் அவன் அழிக்கும் கடவுளான சிவன் ஒருவரைத் தவிர வேறு யாருக்கும் கட்டுப்படமாட்டான்.
மார்க்கண்டேயனை உதைத்தவன் இவன். சாவித்திரிக்கு வாக்குக் கொடுத்து சத்தியவானைப் பிழைக்க வைத்தவனும் இவன். நசிகேதனுக்கு வேண்டும் வரம் கொடுத்தவனும் இவன். ஆனால் அதெல்லாம் பழங்கதை. எருமை மாட்டு வாகனம் , பாசக்கயிறு, சித்திரகுப்தன், கிங்கரர் போன்றவையும் பழங்கதைதான்.
இன்றைய விஞ்ஞான உலகத்தில் எமன் எப்படித் தன் வேலையைச் செய்கிறான் ?
பூலோகத்திலிருந்து அவனிடம் வரும் அரசியல்வாதிகள், இலக்கிய கர்த்தாக்கள்,திரைப்பட நாயகர்கள் , மேதைகள், அழகிகள், மன்னர்கள், சாமானியர்கள் எல்லாரும் எமபுரிப்பட்டணத்தில் எப்படி இருக்கிறார்கள் என்பதை எடுத்துக் கூறப்போவது இந்தத் தொடர் கதை.
ஒன்றே ஒன்று மட்டும் எப்போதும் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.
இது முழுக்க முழுக்க கற்பனை என்றாலும் உண்மையில் அவை அப்படி இருக்கவும் கூடும் . உண்மையில் எப்படி இருக்கிறது என்பதற்கு யாரிடமும் ஆதாரம் கிடையாது. இது இப்படி இல்லை என்று ஆதாரம் காட்டினால் அது ஏற்றுக் கொள்ளப்படும் .
இன்னொரு முக்கியமான சமாசாரம். இது கொஞ்சம் வித்தியாசமாக எழுதவேண்டும் என்பதற்காக எழுதப்படுகிறது. இது யாருடைய மனத்தையாவது புண்படுத்தினால் கோடிட்டுக் காட்டுங்கள். அப்பொழுதே இந்தத் தொடர் நிறுத்தப்படும். அதற்கான முன்கூட்டிய மன்னிப்பை இப்போதே வேண்டிக்கொள்கிறேன்!
எமபுரிப்பட்டணம் – ஒரு பயங்கரமான தொடர் ! மனபீதி கொள்ளுபவர்கள், பிஞ்சு மனம் படைத்தவர்கள் கொஞ்சம் மனதைக் கல்லாக்கிக் கொண்டு படிக்கவும்.
அதற்காக மிகவும் பயப்படத் தேவையில்லை. ஜாலியான பகுதிகளும் கிளுகிளுப்பான பகுதிகளும் அவ்வப்போது வரலாம்.
சொர்க்கபுரியில் கிடைக்கும் அமுதத்தை விட நரகத்தில் கிடைக்கும் மதுவின் சுவைக்காக அங்கு செல்லும் ஆத்மாக்களைக் கண்டு நீங்கள் சிரிக்கலாம்.
நரகபுரியிலிருந்து தப்பிவந்து சொர்க்கத்தில் மறைந்துகொள்ளும் சிலரின் கதை உங்களுக்குக் கிலியை வரவழைக்கலாம்.
எமபுரியில் நடக்கும் இலக்கியக்கூட்டங்களைப் பற்றிப் படிக்கும் போது உங்கள் இலக்கிய ரசனை தூண்டப்படலாம்.
உங்கள் அபிமான நடிகர்களை- குறிப்பாக நடிகைகளை மீண்டும் சந்திக்கும் போது உங்களுக்குக் குஷியாகவும் இருக்கலாம்.
அரசியல்வாதிகள் எங்கு இருக்கிறார்கள் என்பதைத் தெரிந்துகொள்ள ஆவலாகவும் இருக்கலாம்.
அங்கும் வகுப்பு வாதம், மற்றும் வகுப்புக் கலவரமும் நடைபெறும்போது பூமியே மேல் என்று தோணலாம்.
ஒரு புதிய உலகத்துக்குப் புதிய பரிமாணத்தில் நீங்கள் பயணிக்கப் போகிறீர்கள்! அதற்காக உங்களைத் தயார் செய்து கொள்ளுங்கள் ! எதற்கும் வீட்டிலே சொல்லிவிட்டு வந்து விடுங்கள்!
இந்த முன்னுரையோடு எமபுரிப்பட்டணம் கதைக்குச் செல்ல அடுத்த மாதம் வரை பொறுத்திருங்கள்!
(திகில் ஆரம்பமாகிறது)
Introduction is superb! Waiting for the serial!
LikeLike