சரித்திரம் பேசுகிறது! –யாரோ

சுங்கர்கள்

Related image

அசோகர் மறைந்து 50 வருடங்கள் உருண்டோடியன !
சில பல மௌரிய மன்னர்கள்…வந்தனர்…சென்றனர். நாட்டின் எல்லை குறுகிக் கொண்டே போனது..புத்த மதம் மட்டும் செழிப்பாக இருந்தது.

இந்திய மக்கள் பொதுவாக – எல்லா மதங்களையும் – சமமாகவே பாவிப்பர். மதங்களை வைத்து அரசியல் செய்வது என்பது….
அரசியல் வாதிகளுக்கு …இன்று மட்டும் அல்ல…தொன்று தொட்டு வந்த ஒன்று.

வீரமும் அறிவும் பொதுவாக ஒரு மன்னனை அவனது எதிரிகளிடமிருந்து காக்கும். அது குறைந்த மன்னர்கள் கதி, அதோ கதி தான்.
மௌரிய மன்னன் ‘பிருகத்ரதன்’ பாவம்!
நாட்டைச் சுற்றி எதிரி நாட்டரசர்கள் – எப்படியாவது மௌரிய ஆதிக்கத்திலிருந்து விடுபடுவது மற்றுமல்லாது மௌரிய அரசைக் கொள்ளையிடலாம் என்று துடித்தனர்.

உஜ்ஜயினியில் புஷ்யமித்ர சுங்கன் என்ற பிராமணன் – மௌரிய ராணுவத்தில் சேர்ந்து படைத்தளபதி ஆக இருந்தான். அவனது குடும்பத்தினர் பலர் மௌரிய அரசாங்கத்தில் வேலை பார்த்து வந்தனர். புஷ்யமித்ரன் வீரத்தில் சிறந்து விளங்கினான். வீரம் அவனை உஜ்ஜயினிக்கு ஆளுனராக்கியது.

ஒரு கதை விரிகிறது.

வருடம் கி மு 185:
இடம்: பாடலிபுத்திரம்

உஜ்ஜயினியிலிருந்து பயணப்பட்டு வந்த களைப்புத்  தீரும் முன் புஷ்யமித்திரன் அரசனின் அரண்மனை சென்று அடைந்தான். மன்னரின் வாயிற்காவலன் புஷ்யமித்திரனை வணங்கி,

“தளபதியாரே வருக” என்று வரவேற்றான்.
“அரசரை அவசரமாகச் சந்திக்க வேண்டும்”

பிருகத்ரதன் அந்தப்புரத்தில் இன்பத்தில் மிதந்து கொண்டு இருந்தான்.
வேண்டா வெறுப்பாக வரவேற்பறைக்கு வந்து தளபதியை சந்தித்தான்.

பிருகத்ரதன்: “தளபதி! என்னய்யா இது? இப்படி நேரங் கெட்ட நேரத்தில் நீர் இங்கு வந்து..என்னய்யா ஆயிற்று?”

புஷ்யமித்திரன்: “அரசே! ஆமாம். நேரம் கெட்டுத் தான் போயிருக்கிறது!”

பிருகத்ரதன்: “?????”

புஷ்யமித்திரன்: “விதர்ப நாடு மௌரிய நாட்டை விட்டு விலகித்  தனி அரசாகி விட்டது.”

பிருகத்ரதன் : “அட அப்படியா? சரி போகட்டும். ஒழிஞ்சது சனியன் … விடு விடு… ”

‘சே! என்ன இப்படியும் ஒரு வீரமற்ற மன்னனா’ -புஷ்யமித்திரன் முகத்தில் ஏமாற்றம் தெரிந்தது.

புஷ்யமித்திரன்: “மேலும் வடமேற்குப் பகுதியிலிருந்து ‘பாக்டிரியன் கிரேக்கர்’ (Bactrian greeks) என்னும் யவனர்கள் கங்கை ஆற்றைக் கடந்து  படையெடுத்து வருவதாகத் தகவல் கிடைத்துள்ளது. அயோத்தியின் வீதிகளில் யவனர் நடமாட்டம் தென்படுகிறதாம்’

பிருகத்ரதன் : “மறுபடியும் சண்டையா? என்ன கொடுமை இது சுங்கா? யாரையாவது அனுப்பி, யாருக்கு என்ன வேண்டுமோ அதைக் கொடுத்து முடித்து விடவேண்டியது தானே”

‘இப்படி ஒரு அரசனைப் பெற்ற மௌரிய ஆட்சி நீடிக்கப்போவதில்லை’ – இந்த எண்ணம் புஷ்யமித்திரன் மனதில் திடமானது.

புஷ்யமித்திரன் : “நம் படையில் போர் வீரர்களின் எண்ணிக்கை மிகவும் குறைந்து   விட்டது. நாட்டில் கள்ளப் பணம் மலிந்திருக்கிறது. கஜானாவில் இருக்கும் பாதிப் பணம் கள்ளப்பணம்”

கள்ளப்பணப் பிரச்சினை இன்று நேற்றல்ல அன்றிலிருந்தே இருந்திருக்கிறது!

“மறுபடியும் பிரச்சினையா? புத்த பிக்ஷுக்களுக்குப் பணம் கொடுக்க வேண்டுமே” – என்று மெல்லக் கூறி பிருகத்ரதன் கவலைப் பட்டான்.

புஷ்யமித்திரன் மனம் கொதித்துவிட்டது.

‘போர் வீரர்களுக்குக் கொடுக்கப் பணமில்லை.. புத்த பிக்ஷுக்களுக்குக்  கொடுக்க வேண்டுமாம். ஒரு நாள் ஹிந்து ராஜ்ஜியம் ஏற்பட்டு  இதை ஒரு முடிவுக்குக் கொண்டு வரவேண்டும்’ – என்று எண்ணமிட்டான்.

புஷ்யமித்திரன்: “மகாராஜா சந்திரகுப்தர் நந்தனை வென்று முடி சூடிய நாள் நாளை. அன்று மௌரிய ராணுவத்திற்கு மரியாதை அளிக்கவேண்டும். நீங்கள் அணிவகுப்பைப் பார்வையிட வேண்டும்”

பிருகத்ரதன்: “சே! இந்த படைகளை முற்றும் கலைத்து விட்டு ..” என்று சொல்லத் தொடங்கியவன் புஷ்யமித்திரன் முகத்தில் பொங்கிய கோபத்தைப் பார்த்து பேசுவதைப் பாதியில் நிறுத்தினான்.

பிறகு: “சரி வருகிறேன்” என்று ஒப்புக்கொண்டான்.

மறு நாள் காலை.

சூரிய உதயம் அன்று வழக்கத்திற்கு அதிகமாகவே சிவந்து வான வீதியில் இரத்தத்தை அள்ளித் தெளித்திருந்தது. அது ரம்யத்தைவிட பயங்கரத்தையே காட்டியது. அசோகர் காலத்தில் உலகத்தின் தலை நகர் போல் திகழ்ந்த பாடலிபுத்திரம் அன்று சற்றுப் பொலிவு இழந்து காணப்பட்டது. ஊதல் காற்று சற்று வலுவடைந்திருந்தது.

அரண்மனைக்கு வெளியே மாபெரும் மைதானத்தில்…
மௌரியப் படைகள் யானை – குதிரை மற்றும் காலாட்படையினர் அழகாக அணிவகுத்து இருந்தனர்.

அசோகரின் படைகளோடு  ஒப்பிட்டால் அது கால்வாசிகூட இருக்காது.
இருந்தாலும் அன்றைய  இந்தியாவின் மிகச் சிறந்த ராணுவம் அது தான்.

புஷ்யமித்திரன் அரசன் பிருகத்ரதனுக்கு தானைத் தலைவர்களை அறிமுகம் செய்து வைத்தான்.

“அரசரே.. ராணுவத்திற்கு ஊக்கமளித்து நீங்கள் பேச வேண்டும்.”

பிருகத்ரதன் வேண்டா வெறுப்பாகப் பேசினான்:

“அசோக சக்கரவர்த்தியின் தர்மம் மற்றும் அமைதி நமது ஆட்சியில் தொடரும். நாட்டின் சில பகுதிகள் நம்மை விட்டுப் பிரிவதாகச் செய்திகள் வந்திருக்கின்றன. அது குறித்து நாம் வருத்தப்படப் போவதில்லை. அமைதியே நமது குறிக்கோள். ராணுவத்தில் படை க் குறைப்பு செய்யப்படும். புத்தம் தர்மம் கச்சாமி ”

படை வீரர்கள் அனைவரும் விக்கித்து நின்றனர். புஷ்யமித்திரனின் கோபம் தலைக்கு மேல் ஏறியது. ‘இப்படி ஒரு அரசன் இனி வாழ்வது என்பது ஏன்?”

Image result for pushyamitra shunga

கண்ணிமைப்பதற்குள் உடைவாளை உருவி பிருகத்ரதனின் வயிற்றில் பாய்ச்சினான்.

அது அவன் வயிற்றைத் துளைத்து மறுபுறம் வெளி வந்தது.

பிருகத்ரதன் ரத்த வெள்ளத்தில்… விழுந்தான்… இறந்தான்.

படைகள் அதிர்ச்சியில் உறைந்தனர்.

சரித்திரம் ஒரு கணம் நின்று போனது.

ஒரு மன்னர்  அல்லது முதல்வர் இறந்த பின் அவருக்கு அடுத்த நிலையிலிருக்கும்  தலைவன் மக்களிடம் என்ன சொல்கிறானோ அது சரித்திரத்தில் அவனது நிலையை நிறுத்தும்.

பின்னாளில் – ஜூலியஸ் சீசர் மரணத்திற்குப் பின் தலைவர்கள் உரையாற்றியது ரோமாபுரியின் சரித்திரத்தையே புரட்டிப் போட்டது.

அது போல் புஷ்யமித்திரனின் சரித்திரத் தருணம் இது.
வாளை உயர்த்தினான்.

“படைத்தலைவர்களே! திறமையற்ற- நாட்டைக் காக்கும் திராணியற்ற – ஒரு கோழையின் வாழ்வு இன்றுடன் முடிந்தது. இதை நாம் கொண்டாட வேண்டும். நமது நாட்டிற்கு வீரம் நிறைந்த அரசன்தான் வேண்டும். அப்படிப்பட்ட ஆட்சியை நான் உங்களுக்குத் தர உள்ளேன். இன்று முதல் நானே உங்கள் அரசன் “.  என்று பிரகடனம் செய்தான்.

pushyamitra_sunga_king_of_sunga_dynasty_1

படைத் தளபதிகளும் வீரர்களும் ‘மகாராஜா சுங்கன் வாழ்க’ என்று வாழ்த்திக் கூவினர்.

சந்திரகுப்தன் தோற்றுவித்த ‘மௌரியப் பேரரசு’ சரித்திரத்தில் அந்தக்கணத்தில் முடிந்தது.
முடிவில் ஒரு விடியல்.
அம்மாவிற்குப் பிறகு சின்னம்மா என்று சொல்வர்.
அது போல் மௌரியப் பேரரசுக்குப் பிறகு சுங்க ஆட்சி துவங்கியது.
இந்தக் கதை முடிந்தது.

பிறகு நடந்ததைப் பார்ப்போம்:

புஷ்யமித்திரன் அரியணையைக் கைப்பற்றினான்.
முதலில் சட்ட ஒழுங்கு நிலைமையைச் சரி செய்தான்.
புராணங்களில் அஸ்வமேத யாகம் செய்தவர்கள் பலர் உண்டு.
ஆனால் சரித்திரத்தில் அஸ்வமேத யாகம் செய்த முதல் மன்னன் புஷ்யமித்திரன்.

புத்த மத மடங்களுக்கும் பிக்ஷுக்களுக்கும் கொடுக்கப்பட்ட சலுகைகள் மற்றும் பண உதவிகள் நிறுத்தப்பட்டன.
இதனால் கோபப்பட்ட புத்த எழுத்தாளர்கள் புஷ்யமித்திரனைப்பற்றி இவ்வாறு எழுதினர்:

“புஷ்யமித்திரன் தக்ஷஷீலாவில் புத்த மடங்களை அழித்தான்.
சாஞ்சி ஸ்தூபியை அழித்தான். (அது பின்னொரு காலத்தில் மீண்டும்
கட்டப்பட்டது) கெளசாம்பியில் புத்த மடங்கள் அழிக்கப்பட்டது.
பாடலிபுத்திரத்திற்கு அருகே அசோகர் கட்டிய குக்கூதரமா என்ற புத்த மடத்தை புஷ்யமித்திரன் அழிக்க முயன்ற போது தெய்வ சக்திகள் அதை அழிக்க விடாது தடுத்துக்  காத்தது.”

ஆனால் மற்றும் சில சரித்திர ஆய்வாளர்கள் – புத்த எழுத்தாளர்கள் கூறியது சரி அல்ல என்றும் புத்தர்களின்  அரசியல் ஈடுபாடு ஒன்றையே புஷ்யமித்திரன் எதிர்த்தான் என்றும் புத்த மதத்திற்கு எந்த இடையூறும் அளிக்கவில்லை என்றும் கூறுகின்றனர்.

புஷ்யமித்திரன் சொன்னதைச் செய்தான்!

தன் மகன் அக்னிமித்திரனைப்  படையுடன் அனுப்பி – பிரிந்து சென்ற விதர்ப நாட்டை வென்றான். இந்த வெற்றியைப்  பின்னாளில் வந்த மகாகவி காளிதாசன் ‘மாளவிகா அக்னிமித்ரம்‘ என்ற புகழ் மிக்க சரித்திர நாடகமாக எழுதினான்.

கிரேக்க யவனர்களுடன் போர் தொடுத்து அவர்களை வென்றான்.

36 வருடங்கள் ஆட்சி செய்து புஷ்யமித்திரன் காலமானான்.
அவனுக்குப் பிறகு அவன் மகன்  அக்னிமித்திரன் அரசனானான்.
அவனுக்குப் பின் ஆண்டவர்கள் :வாசுமித்திரன், பிரஹசஸ்பதி மித்திரா, தேவபுத்தி.

தேவபுத்தியின் மந்திரி வாசுதேவன் தேவபுத்தியைக்  கொன்று தானே மன்னனானான்.

‘சரித்திரம் செய்ததை மீண்டும் செய்யும்’ என்று சொல்வார்கள்.

எப்படி அரசனைக் கொன்று சுங்கர்கள் அரசாட்சியைக் கைப்பற்றினரோ, அதே போல் அவர்கள் வம்சமும்  சரித்திரத்திலிருந்து மறைந்தது.

கன்வா (kanva) ஆட்சி துவங்கியது.

சரித்திரத்தின் ஏடுகள் தொடர்ந்து வேறு என்ன கதைகள் சொல்லப்போகின்றன ?

சற்று ஓய்வெடுத்து விட்டுப் பிறகு பார்ப்போம்!

(சரித்திரம் பேசும்)

One response to “சரித்திரம் பேசுகிறது! –யாரோ

  1. தமிழக மற்றும் இந்திய அரசியல் களம் இன்று பிருகத்ரதன் கதை மாதிரிதான் இருக்கிறது..

    Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.