அந்தக் காலத்தில் நாவலோ நாவல் என்று கூறினால் ‘நான் விவாதத்திற்குத் தயார், என்னுடன் போட்டியிட்டு ஜெயிக்க யார் உள்ளார்’ என்று அறை கூவுவதற்குச் சமம்.
இன்றைக்கு நாவல் என்ற ஆங்கிலச் சொல் சரளமாக அனைவராலும் தமிழ்ச் சொல்லைப்போல் சொல்லப்படுகிறது. சரித்திர நாவல், துப்பறியும் நாவல், சமூக நாவல் என்று தமிழறிஞர்களாலும் சொல்லப்படுகிறது. அதற்குச் சமமான புதினம் என்று இருந்தாலும் நாவல் என்ற சொல்லைச் சொல்லுவதில்தான் நமக்கு மகிழ்ச்சி.
தமிழில் சில ஆண்டுகள் வரை சிலரால் மட்டுமே நாவல் எழுத முடியும் என்றிருந்த நிலமை மாறி யார் வேண்டுமானாலும் எழுதலாம் என்று வந்திருப்பது தமிழ் எழுத்துலகுக்கு நல்ல காலம் என்று தான் சொல்லவேண்டும்.
நாவலை எப்படி எழுதுவது, எப்படியெல்லாம் எழுதக்கூடாது என்றெல்லாம் ஜெயமோகன் அவர்கள் தமது “எழுதும் கலை” என்ற புத்தகத்தில் வெகு அழகாகச் சொல்லுகிறார். நாவல் என்பது ‘ தொகுத்துக் காட்டி ஒட்டு மொத்தப் பார்வையை அளித்தல் ‘ என்று பொருள் விளக்கம் கொடுக்கிறார்.
இது தான் நாவலின் வடிவம் என்று சொல்லும்போதே அவ்வடிவத்தை உடைத்தபடி அடுத்த நாவல் வந்துவிடுகிறது என்று சொல்லுகிறார்.
அதற்கு அவர் கூறிய உதாரணங்களை மட்டும் இப்போது பார்ப்போம். மற்றவற்றைப் பின்னால் பார்ப்போம் .
வாழ்க்கை வரலாற்று வடிவம் – பிரதாப முதலியார் சரித்திரம் – மாயூரம் வேதநாயகம் பிள்ளை
கடித வடிவ நாவல் – கோகிலாம்பாள் கடிதங்கள் – மறைமலை அடிகள்
மனைவி கணவனிடம் கதையளக்கும் நாவல் – தலையணை மந்திரோபதேசம் – பண்டித நடேச சாஸ்திரி
டைரிக்குறிப்புகள் – நவீனன் டைரி – நகுலன்
பலவகைக் குறிப்புகள் – ஜேஜே சில குறிப்புகள் – சுந்தர ராமசாமி
கேள்விபதில் வடிவம் – வாக்கு மூலம் – நகுலன்
ஒரு மனிதனின் மொத்த வாழ்வைக் கூறுதல் – பொய்த்தேவு – க நா சுப்பிரமணியம்
ஒரே ஒரு நாளைப்பற்றிக் கூறும் நாவல் – ஒரு நாள் – க நா சுப்பிரமணியம்
ஒரு மனிதனின் நனவோடையாக நீளும் நாவல் – அபிதா – லா ச ராமாமிர்தம்
யதார்த்தவாத நாவல் – அன்னை – கார்க்கி
கதைபின்னல் நாவல் – மோகமுள் -தி ஜானகிராமன்
நேர்ப்பேச்சு வடிவம் – கோபால கிராமம் – கி ராஜநாராயணன்
உருவக நாவல் – தண்ணீர் – அசோகமித்திரன்