‘இது நியாயமா குருஜி.? இந்த உலகத்துலே மனிதர்கள் படும்
துன்பங்கள்… அப்பப்பா.. சில பேர் அநியாயத்துக்கு நல்லவர்களாய்
இருக்காங்க.. பலபேர் மனசெல்லாம் நஞ்சு…’ என்று புலம்பியபடியே ஆசிரமத்துக்குள் நுழைந்தான் சீடன் பலராமன்.
கண்களை மூடி நிஷ்டையில் ஆழ்ந்திருந்த குருஜி
ஆத்மானந்தா மெதுவாகக் கண்களைத் திறந்து சீடனைப்
பார்த்தார். அவர் இதழ்க் கடையில் ஒரு சின்ன புன்னகை.
“என்ன பலராமா! ரொம்பக் கோபமா இருக்கே போலிருக்கு.
ஆன்மீகத்தைத் தேடிப் போகிறவர்களுக்குக் கோபம் கூடாது.
என்ன அநியாயம் நடந்து விட்டது சொல்.’
” பின் என்ன குருஜி. இந்த மனிதர்களைப் படைப்பவன்
கடவுள். ஆடுபவனும், ஆட்டுவிப்பவனும் அவனே…அப்படி
இருக்க எல்லா மனிதர்களையும், அவர்கள் எண்ணங்களையும்
செயல்களையும் நல்லவையாய்ப் படைத்து விட்டால் மனிதர்கள்
இவ்வளவு துன்பப்பட வேண்டுமா..? இங்கே பாருங்க..
மனிதர்கள் ஒருத்தரை ஒருத்தர் அடித்துக் கொண்டு அல்லல்
படுவதை… எல்லாம் வல்ல கடவுள் இதைத் தடுத்து நிறுத்தலாமல்லவா..?”
ஒரு நிமிடம் அவனையே உற்றுப் பார்த்து விட்டு, மெதுவாகச் சிரித்தார் குருஜி.
“என்ன செய்யறது பலராமா ! நம் முன்னோர்கள் கடவுளிடம்
மன்றாடிக் கேட்டு வாங்கிவந்த வரம் இது… ஏன் சாபம் என்று
கூடச் சொல்லலாம்..”
“என்ன ஸ்வாமி இது…? புதுக் கதையா இருக்கு…”
“ஆமாம்… உனக்கு புதுக் கதைதான்… ஆனால் ரொம்ப
பழசு… உட்கார் சொல்கிறேன்.” என்று சொல்ல ஆரம்பித்தார்.
“படைக்கும் கடவுளான பிரம்மன் நிறைய மனிதர்களைப்
படைத்து புதிதாகத் தோற்றுவிக்கப்பட்ட பூமிக்கு அனுப்பி
வைத்தார். அப்பழுக்கில்லா மனிதர்கள் அவர்கள். அன்பையே
ஆதாரமாகக் கொண்ட தங்கமான மனிதர்கள்.
காலம் கடந்தோடியது. திடீரென்று பிரம்மனின் மாளிகை
முன்பு ஒரே கூச்சல்.
‘ஏன். என்ன கூச்சல் அங்கே..?’ என்றார் பிரம்மன்
பணியாட்களை நோக்கி.
“பிரபோ. பூமியிலிருந்து ஒரு மனிதர் கூட்டம் உங்களைப்
பார்க்க வந்திருக்கிறார்கள்”. என்றான் ஒரு பணியாள்.
“சரி. வரச் சொல்” என்று உத்தரவிட்டார் பிரம்மன்.
அடுத்த இரண்டாவது நிமிடம் ஆண்களும், பெண்களுமாய்
ஒரு கூட்டம் அங்கே ஆஜரானது.
“பிரபோ… நீங்கள்தான் ஏதாவது வழி சொல்ல வேண்டும்.
அங்கே பூமியில் எல்லோரும் அநியாயத்துக்கு நல்லவர்களாய்
இருக்கிறார்கள். அன்பு, நட்பு, இதுதான் வேதமாக இருக்கிறது.
மனிதர்களிடையே ஒரு ஊடல், சண்டை, கோபம், பொறாமை
எல்லாம் இருக்க வேண்டாமா..? வாழ்க்கையே சப்பென்று
இருக்கிறது. ஒரு மன நிறைவே இல்லை.. வாழ்க்கையென்றால்
ஒரு சிறு ‘த்ரில்’ இருக்க வேண்டாமா…? அது டோடலி
ஆப்ஸென்ட்… ஏதாவது பண்ணுங்கள் ப்ரபோ..”
ஒரு நிமிடம் யோசித்தார் பிரம்மன்.. “ததாஸ்து! நீங்க
நினைத்தபடியே நடக்கும்… சென்று வாருங்கள்” என்றார்.
மனிதர் கூட்டம் பூமிக்குத் திரும்பியது.
‘ஆசை’ என்ற வைரஸை மனிதன் மனதில் செலுத்தி
படைப்புத் தொழிலைத் தொடர்ந்தார் பிரமன். அந்த வைரஸ்
மனிதர்கள் மனங்களில் வேலை செய்ய ஆரம்பித்தது.
பொன்னாசை, மண்ணாசை, பெண்ணாசை அவர்கள்
மனதிலே எட்டிப் பார்க்க ஆரம்பித்தது. கோபம்,
பொறாமை தங்களை வியாபிக்க ஆரம்பிக்க, மனிதர்கள்
நடவடிக்கைகள் மாறத் தொடங்கின. ‘ஆசை’ என்ற
வைரஸால் மிகவும் குறைவாகப் பாதிக்கப்பட்டவர்கள்
மிக நல்ல மனிதர்களாய் இருந்தார்கள். அதிகமாகத்
தாக்கப்பட்டவர்கள் – ராட்சச குணம் கொண்டவர்களாய்
மற்றவர்களுக்குக் கெடுதல் நினைக்க ஆரம்பித்தார்கள்.
மிதமாகத் தாக்கப்பட்டவர்கள் இந்த இரு துருவங்களுக்கும்
மத்தியில் இருந்தார்கள். ராட்சஸக் குணம் கொண்டவர்களின் அட்டகாசம் தாங்க முடியாமல் மனிதர் கூட்டம் மீண்டும் பிரம்மனை புகல் தேடி ஓடியது.
“இப்போ என்னப்பா பிரச்னை?” என்றார் பிரம்மன்
ஒன்றுமே தெரியாதவர் போல்.
“பிரபோ. தாங்க முடியவில்லை! எங்கே பார்த்தாலும்
சண்டை.. சச்சரவு.. அந்த ராட்சதக் கூட்டத்திலிருந்து
எங்களைக் காப்பாற்றுங்கள்.. பூமியில் பிறந்தவர்களுக்கு
இறப்பு என்பதே இல்லாமல் இருக்கிறது. ராட்சஸ குணம்
கொண்டவர்கள் அதிகமாக வளர்ந்து கொண்டே போகிறார்கள். எங்களுக்கு ஒரு நிமிடம் கூட நிம்மதியே இல்லை.. ஏதாவது வழி சொல்லுங்கள்…” என்றனர் கோரஸாக.
பிரம்மன் புன்முறுவலோடு, “வரம் கொடுத்ததை இனி
மாற்ற முடியாது. ஒன்று செய்யலாம். இப்போது காக்கும்
கடவுள் திருமாலவனும், அழிக்கும்/தண்டிக்கும் கடவுள்
மகாதேவனும் வேலையொன்றும் இல்லாமல் சும்மாத்தான்
இருக்கிறார்கள். நீங்கள் தினமும், முக்கியமாகத் துன்பம்
வரும்போது மாலவனையும், பரமசிவனையும் நினைத்து
ஆராதித்து வேண்டிக் கொள்ளுங்கள். உங்கள் பக்தியின்
ஆழத்தையும், வேண்டுதலையும் பொறுத்து இடர்களை
எதிர்கொள்ள அவர்கள் சக்தியைக் கொடுப்பார்கள். கர்ம
வினைக்கு ஏற்ப கெட்டவர்கள் எல்லாம் தண்டிக்கப்படுவர்.
கர்ம வினையின் அளவைப் பொறுத்து சிலர் இந்த ஜன்மத்-
திலேயே தண்டிக்கப்படுவர். சிலரது கர்மவினையும்,
தண்டனையும் அடுத்த ஜன்மத்துலேயும் தொடரும். இரவும்
பகலும் போல் பிறப்பும், இறப்பும் இனி பூமியில் இருக்கும்.
எல்லாம் நல்லபடியே நடக்கும். சென்று வாருங்கள்..”
என்றார்.
கதையைக் கூறி முடித்த குருஜி, ‘என்ன பலராமா…
இப்பொழுது புரிந்ததா.?’ என்றார்.
“புரிந்தது குருஜி… ஆனா. ஆடுபவனும், ஆட்டுவிப்பவனும், எண்ணங்களையும், செயல்களையும், நினைவிப்பவனும், செய்விப்பவனும் அந்த ஆண்டவனாய் இருக்கும் பொழுது அவர் மனிதர்கள் மேல் சிறிது கரிசனம் காட்டலாம் இல்லையா..?”
“இல்லை பலராமா! அந்த சக்தி முழுவதும் இப்போது
கடவுளிடம் இல்லை. அவரவர் கர்ம வினையிலேயும்
இருக்கிறது. அதில் கடவுள் பங்கு ரொம்ப கம்மி. தன்னை
மனமுருகி, ஒரு மனதோடு வேண்டிக் கொள்வோர்க்கு,
அந்த கர்ம வினையின் தாக்கத்தின் உக்கிரத்தை சிறிது
குறைக்க முடியும்.. அவ்வளவுதான்.. அப்படி மக்களின்
துன்பத்தை சிறிதளவாவது குறைக்கவும், அவர்கள் அறிந்தோ
அறியாமலோ மீண்டும் பாவங்கள் செய்யாமல் தடுப்பதற்கும்தான், நம்மைப் போன்றவர்கள் சொற்பொழிவாலும், ஆன்மீக
டிரெய்னிங் கொடுத்தும் நம்மாலான முயற்சிகள் செய்து
கொண்டிருக்கிறோம். நம்ம துன்பங்களுக்கெல்லாம் அடிப்படைக் காரணம் ‘ஆசை’ என்ற அந்த வைரஸ்தான். அதைத்
தூக்கி எறியுங்கள் என்று போதித்து வருகிறோம். மனிதர்கள்
மனப்பாங்கு மாற மாற ராட்சஸ குணம் கொண்ட மனிதர்கள்
அரிதாகி விடுவார்கள். நாட்டிலும் அமைதி நிலவும்” என்று
முடித்தார் குருஜி.
பலராமனுக்கு குருஜியின் எக்ஸ்ப்ளநேஷனை
முழுவதுமாக ஒத்துக் கொள்ளவும் முடியவில்லை. ஆனால்
அது சரியல்ல என்று ஒதுக்கவும் முடியவில்லை.
யோசனையோடு அமர்ந்திருந்தான்.
————————————-
—