அத்தியாயம் 07 நடுநிசிக் கூட்டம்.
வந்தியத்தேவனும் கந்தமாறனும், சகாதேவன் கொண்டுவந்திருந்த பழங்களை அவசரமாகச் சாப்பிட்டு, தேனைப்பருகிப் பின் தேங்காய்பாலை அருந்தினார்கள், கடைசியில் தண்ணீர் குடித்துப் பசியைத் தீர்த்துக் கொண்டார்கள். சகாதேவன் குதிரைகளைக் கொண்டுவந்து மாளிகையின் பின்பகுதியில் கட்டினான். பிறகு சுரங்கப்பாதையில் போவதற்கு ஆயத்தம் செய்துவிட்டு வந்தான். தயாராக இருந்த இருவரையும் சகாதேவன் சுரங்கத்திற்கு அழைத்துச் சென்றான்.
நீண்ட தாழ்வாரம் வழியாக எல்லோரும் அரசரின் பெரிய படுக்கை அறைக்குள் சென்றார்கள். படுக்கை தள்ளி வைக்கப்பட்டிருந்தது. அடியில் சதுரமான நுழைவாயில் தெரிந்தது. அதில் கீழே செல்ல படிக்கட்டுகள் தென்பட்டன. அதை மூடி மறைத்திருந்த பலகை சுவற்றில் சாய்த்து வைக்கப்பட்டிருந்தது. பக்கத்தில் ஒரு தீப்பந்தமும் ஒரு தூக்குக் குடுக்கையில் எண்ணையும் தயார் செய்யப்பட்டிருந்தது.
சகாதேவன் தீப்பந்தத்தில் எண்ணைவிட்டுப் பற்றவைத்தான். ஒரு கையில் பந்தத்தையும் மற்றொரு கையில் குடுக்கையையும் எடுத்துக்கொண்டான். தீப்பந்தத்தைத் தூக்கிப் பிடித்துக் கொண்டு “என்னைத் தொடர்ந்து வாருங்கள்” என்று கூறிக்கொண்டே நுழைவாயிலில் புகுந்து படிகளில் இறங்கினான். இருவரும் பின்சென்றனர். படிகள், முடிவில் நன்கு கட்டப்பட்டிருந்த ஒரு நீண்ட தாழ்வாரத்தில் கொண்டுசேர்த்தன. அதில் சிறிது நேரம் வளைந்து நடந்தபின் எதிரில் ஒரு சுவர் காணப்பட்டது. அதில் மற்றுமொரு வாயில்.. மீண்டும் படிக்கட்டுகள். இச்சமயம் மேல் நோக்கிச் சென்றன. மேல் சுவற்றில் மறுபடியும் ஒரு நுழைவாயில். அதை மூடியிருந்த ஒரு பலகை. அதோடு பாதை முடிவடைந்தது.
சகாதேவன் கடைசிப் படியில் உட்கார்ந்துகொண்டு கந்தமாறனைப் பார்த்தான். கந்தமாறன் படியில் ஏறி மேலிருந்த பலகையை த் தள்ளி வைத்தான். அதன் வழியாக மேலே புகுந்தான். வந்தியத்தேவனும் பின்னர் சகாதேவனும் தொடர்ந்தார்கள். அங்கு ஓர் சிறிய மரச் சக்கரம் சுவற்றில் இருந்தது. கந்தமாறன் அதை வலக்கைப் புறமாகச் சுழற்றினான். சுவற்றில் ஒரு வழி உண்டாயிற்று. கந்தமாறனும், வந்தியத்தேவனும் அதன் வழியாக வெளியேறினார்கள்.
கந்தமாறன் “சகாதேவா, நீ போய் குதிரைகளைக் கவனித்துவிட்டு இங்கே வந்து எங்களுக்காகக் காத்திரு. நான் மூன்று முறை உன் பெயரைச் சொல்லிக் கூப்பிட்டதும் நுழைவாயிலைத் திற. இப்போது இதை மூடிவிட்டு நீ போகலாம்” என்று கூறினான்.
சகாதேவன் அவ்வாறே செய்தான்.
நுழைவாயில் மூடியது!
பௌர்ணமிச் சந்திரன் பிரகாரங்களையும் விமானங்களையும் ஜோதி மயமாக்கிக் கொண்டிருந்தது. வந்தியத்தேவன் சுற்றுமுற்றும் பார்த்தான். சுரங்கம், கோவில் பிரகாரத்திலிருந்து உள்ளே செல்லும் படிக்கட்டுகளின் வட பகுதியில் சேர்ந்திருந்ததை அறிந்தான். கந்தமாறன் வந்தியத்தேவனை த் தென்பகுதிக்கு அழைத்துச்சென்று அங்குள்ள சூரிய பகவான் எழுந்தருளியிருக்கும் சிறு பகுதியைக் காட்டி “சமணர் குகையிலிருந்து தொடங்கி இணைத்திருக்கும் பெரிய சுரங்கம் வழியாக வரும் பாதை இங்குதான் முடிவடைகிறது. இதன் வழியாகத்தான் சதிகாரர்கள் வந்து போவார்கள்” என்று கூறி வந்தியத்தேவனை கோவில் உள் சந்நிதி மண்டபத்திற்கு அழைத்துச் சென்றான்.
அங்கு ஒரு பெரிய பிள்ளையார் எழுந்தருளியுள்ள கர்ப்பக்கிரஹம் இருந்தது. கந்தமாறன் அதைச் சுட்டிக்காட்டி “நாம் இருவரும் அந்த சிவகுமாரனின் உருவத்திற்குப் பின்தான் ஒளிந்து கொள்ளப்போகிறோம். இந்த இடத்திலிருந்து நடப்பவை எல்லாம் பார்க்கலாம், கேட்கலாம். இந்த பெரிய மண்டபத்தை விட்டால் இதைவிடக் கூட்டம் நடத்த வேறு நல்ல இடம் இந்தக் கோவிலில் கிடையாது, அவர்கள் இங்கு வருவதற்கு இன்னும் ஒரு நாழிகை இருக்கிறது. வா” என்று வந்தியத்தேவனை அழைத்தான்.
இருவரும் பிள்ளையார் சிலையின் பின் பகுதிக்குச் சென்று நன்றாக மறைந்து உட்கார்ந்துகொண்டார்கள்.
நிகழும் காலம், சில சமயம் வேகமாக போவது போன்றும், வேறு சமயம் மெதுவாக செல்வது போலவும் தோன்றுவது இயல்பு. இப்போது மனம் அவர்களது காலத்தை ஆமைபோல் மெதுவாக நகர்த்திக் கொண்டிருந்தது. கொஞ்சம் கொஞ்சமாக பொறுமையை இழந்துவந்த வந்தியத்தேவன் கந்தமாறனைப் பார்த்து “அவர்கள் எதிர்பார்த்தபடி வருவார்களா? அல்லது நாம் இங்கு காத்திருப்பது வீண்தானா? நேரம் செல்வதைப் பார்த்தால் அவர்களுடைய நோக்கத்தை மாற்றிக் கொண்டுவிட்டார்களோ என்று தோன்றுகிறது” என்றான்.
அதற்கு கந்தமாறன் “பொறுமை” என்றான். எதற்கும் முடிவு என்று ஒன்று உண்டல்லவா! அது வருவதற்கான அறிகுறிகள் தென்பட ஆரம்பித்தன! இன்னும் சற்று நேரம் பொறு நண்பா! என்று வந்தியத்தேவனை சமாதனப்படுத்தினான். நண்பர்கள் இருவரும் காத்திருந்தனர்.
ஒரு நாழிகை நேரம் மெதுவாகக் கடந்தது..
நடுநிசி வந்தது. வந்தியத்தேவன் உதட்டில் கையை வைத்து ‘உஷ்..’ என்றான்.பிரகாரத்திலிருந்து ஆட்கள் வரும் சத்தம் கேட்டது. முதலில் கைகளில் தீப்பந்தங்களோடு இருவர் வந்தனர். சன்னதி மண்டபத்தில், நடுவே சில கற்கள் போட்டு அதில் சொருகிப் பின் உட்கார்ந்தனர். வெளிச்சம் விநாயகர் பக்கம் சிறிதும் போகவில்லை. அங்கே காரிருள் நிறைந்திருந்தது.
கந்தமாறனும் வந்தியத்தேவனும் மூச்சை அடக்கிக் கொண்டு அமர்ந்திருந்தனர். வந்தியத்தேவன் மெல்ல அவ்விருவர் முகத்தை நோக்கினான். ‘ஆகா!இவர்கள் ரவிதாசனும், சோமன்சாம்பவானும் அல்லவா? ஆதித்த கரிகாலனைக் கண்காணித்து வரும்போது நமக்கு மிகவும் தொல்லை கொடுத்தவர்கள். மேலும் யார் யார் வருகிறார்கள் என்று பொறுத்திருந்து பார்க்கலாம்’ என்று பொறுமையுடனிருந்தான்.
அடுத்து ஐவர் வந்தனர். ‘இந்த ஐவரையுமே நாம் இதற்குமுன் பார்த்ததில்லையே!’ என்று வந்தியத்தேவன் யோசித்துக் கொண்டிருந்தபோது, வந்தவர்கள் அமர்ந்து, மற்றவர் வருகைக்குக் காத்திருப்பதாக அவனுக்குத் தெரிந்தது.
அடுத்து இருவர் வருகை தந்தனர்.
ஒருவன் நமக்கு ஏற்கெனவே பரிச்சயம் உள்ள பழைய மதுராந்தகன் – தற்போதைய அமரபுஜங்கநெடுஞ்செழியப் பாண்டியன்- அடுத்த பாண்டிய வம்ச வாரிசு – மன்மதனை ஒத்த அந்த முகம் இப்போது மெருகு பெற்று வீரக்களையுடன் சர்வ லட்சணங்களுடன் கூடிய வீர அரசகுல திலகத்தின் முகமாகத் திகழ்கிறது!
ஆகா! அடுத்து வருவது ஒரு பெண்மணி! நந்தினி! அவளுடைய தோற்றத்தில் ஏதோ ஒரு வித்தியாசம் காண்கிறதே. ஆம். அவளுக்கே உரித்தான ஆண்டாள் கொண்டை இப்போது அவள் தலைமுடியை அலங்கரிக்கவில்லை. முடியை வாரி எடுத்துப் பின்னால் சொருகியிருந்தாள். அதனால் அவளுடைய வசீகரம் முன்னைவிட பலமடங்கு கவர்ச்சியாய் இருக்கிறது!’ இதைப் பற்றியெல்லாம் வந்தியத்தேவனின் வெளி மனது எண்ணிக் கொண்டிருந்தது.
ஆனால் உள் மனதில் நந்தினியின் மேல் ஏற்கெனவே அவனுக்கிருந்த கோபம் அனலாக மாறி கொழுந்துவிட்டு எரிய ஆரம்பித்து எல்லையில்லா நிலையை அடைந்தது. ‘இந்த அரக்கியினால்தானே நாம் கரிகாலனைக் கொன்றதற்கான பெரிய பழியைச் சுமக்க நேர்ந்தது! அந்தப் பழியை என் மேல் சுமத்த சூழ்நிலையை உருவாக்கியவளும் அவளே! நந்தினி நேரில் வந்து கரிகாலன் மரண ரகசியத்தை எல்லோருக்கும் தெரியப்படுத்தும்வரை நம் பெயரில் உள்ள இழுக்கு என்றும் தீராது’ என்று எண்ணிய வந்தியத்தேவனின் கைகள் துடிதுடித்தன. இவர்கள் எல்லோரையும் வெட்டித் தீர்த்துவிட்டு நந்தினியைக் கைது செய்து கொண்டு செல்லலாமா என்று ஒரு கணம் நினைத்தான்.’
‘உடனே அந்த எண்ணத்தை மாற்றிக் கொண்டான்.அவ்வாறு செய்தால் இங்கு நாம் வந்திருக்கும் காரியம் தடைபடலாம். ஒருவேளை அது முற்றுப் பெறாமலே போகலாம்! ஆகையால் இப்போது பொறுமையைக் கடைப் பிடித்தாக வேண்டும். அவளின்பால் தனக்கிருக்கும் சொந்தப் பகையைப் பின்னால் தீர்த்துக் கொள்ளலாம்’ என்றெல்லாம் வந்தியத்தேவனின் எண்ண அலைகள் ஓடின.
அருகிலிருந்த நண்பன் கூட்டத்தில் ஒரு கண்ணும், வந்தியத்தேவன் மீது ஒரு கண்ணுமாக இருந்தான். வந்தியத்தேவனின் முகமாற்றத்தைக் கண்ட அவன், நண்பனின் கையை சிறிது அழுத்திப் பிடித்து பொறுமையைக் காக்க அறிவுறுத்தினான் சைகையில் மௌனமாக..
பேச்சும், கசமுச சத்தங்களும் ஒரே சமயத்தில் கேட்க ஆரம்பித்தன. வந்தவர்கள் வட்டமாக அமர்ந்தனர். முதலில் ரவிதாசன் எல்லோரையும் அமைதியாக இருக்கும்படி உரக்கச் சொல்லிவிட்டு, நந்தினியைப் பார்த்து,
“மகாராணி, உங்கள் உத்தரவிற்குப் பணிந்து நாமெல்லோரும் இங்கு கூடியுள்ளோம். எதற்காக என்று தெரிந்து கொள்ளலாமா?” என்றான்.
“முதன் மந்திரி ரவிதாசரே! கருத்திருமன் அவர்கள் இலங்கையிலிருந்து கொண்டு வந்த செய்தியை நம்மிடம் தெரிவிக்க அவரே இந்தக் கூட்டத்தை ஏற்பாடு செய்திருக்கிறார். அவர் இன்னும் வரவில்லையே? அவர் இல்லாமல் எப்படி இந்தக் கூட்டத்தில் முடிவெடுக்க இயலும்? அவருக்காக நாம் காத்திருக்க வேண்டியது அவசியமாகிறது. வேறு யாராவது வரவேண்டியிருக்கிறதா?” என்றாள் நந்தினி.
மறுபடியும் கூட்டத்தில் ஒரு கலகலப்பு, கசமுச சத்தம்!
ரவிதாசன் “மகாராணி, இடும்பன்காரி இன்னும் வரவில்லை. சுரங்க வாயிலை பாதுகாக்க அவனை அனுப்பியிருந்தோம். அங்கு அவனைக் காணவில்லை! அவனைப் பற்றி நாம் கவலைப்பட வேண்டாம். ஏதாவது சொந்தக் காரியத்திற்காகச் சென்றிருக்கலாம். அவன் இங்கு வராத காரணத்தை அவனே உங்களிடம் சொல்லுவான்” என்றான்.
அவனின் இந்த பதிலால் சமாதானமடைந்த நந்தினி அமைதி காத்தாள்.
அவளைத் தொடர்ந்து சிறிது நேரம் அனைவரும் அமைதி காத்தனர். பிறகு கசமுச சத்தம். காலம் சென்று கொண்டிருந்தது. எல்லோரும் கருத்திருமனின் வருகைக்காகக் காத்திருந்தனர்.
திடீரென்று ஒரு பரபரப்பு!
பிரகாரத்திலிருந்து யாரோ நடந்துவரும் காலோசை!
சில நொடிகளில் அவர்களுக்கு முன் கருத்திருமன் காட்சி அளித்து அவர்கள் ஐயத்தைப் போக்கினான்.
நந்தினியையும் அமர புஜங்கனையும் முதலிலும் பின் அனைவரையும் வணங்கிய பிறகு அமர்ந்தான்.
இந்தக் காட்சிகளையெல்லாம் நண்பர்களிருவரும் கண்கொட்டாது பார்த்துக் கொண்டிருந்தனர்.
நொடிக்கு நொடி நண்பர்களின் இதயம் வேகமாக அடித்துக் கொண்டது.
இதற்கிடையில் அமர புஜங்கனின் குரல் அந்த நிசப்தத்தை முழுவதும் கலைத்தது.
“என்ன கருத்திருமா..ஏன் இவ்வளவு தாமதம்? உனக்காக நாங்கள் வெகுநேரம் காத்துக்கொண்டிருக்கிறோம், தெரியுமா?” என்றான்.
“அரசே!என்னை மன்னித்தருள்க. வழக்கமாக நம் ஆட்களோடு கூடிப்பேசும் மஹாதானபுரத்தில், நான் இலங்கையிலிருந்து கொண்டு வந்திருக்கும் விவரத்தை நாமெல்லோரும் விவாதித்து முடிவெடுக்க நாளும் இடமும் தேர்ந்தெடுத்து உங்களுக்கு முதலில் செய்தி அனுப்பினேன். அடுத்த நாள் நம் ஆட்களுக்கு என்னென்ன வேலை கொடுக்க வேண்டும் என்பதைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தபோது எங்கள் நடவடிக்கைகளைச் சோழ ஒற்றன் யாரோ மறைந்திருந்து கவனித்துக்கொண்டிருப்பது தெரிய வந்தது. குதிரையில் தப்பி ஓடிய அவனை விரட்டிச் சென்றோம். கடைசியாகக் குடந்தைக்குச் செல்லும் சாலையில் அவனை வழிமறித்துப் பிடித்தோம். அவனைக் கொல்லுவதற்கு முயன்ற நம் குலசேகரனை திடீரென்று எங்கிருந்தோ வந்து குதித்த வந்தியத்தேவன் வேலை எறிந்து வீழ்த்தினான். எங்களை வந்தியத்தேவன் அடையாளம் கண்டுகொள்ளும் முன் கத்தியை ஒற்றன் நெஞ்சினில் பாய்ச்சிப் பறந்து வந்துவிட்டோம். குலசேகரன் பிழைப்பதற்கு வாய்ப்பில்லை. ஒருசமயம் அவன் உயிரோடு இருந்திருந்தால் நம் வழக்கப்படி உயிரை மாய்த்துக் கொண்டிருப்பான். என் கத்தி ஒற்றனின் உயிரைப் பருகியிருக்கும் என்பதில் எனக்கு எள்ளளவும் சந்தேகமில்லை. அவனிடமிருந்து வந்தியத்தேவனுக்கு எந்த விவரமும் தெரிந்திருக்காது. இந்த எதிர்பாராத சம்பவங்களினால் சோழ வீரர்கள் வழிமுழுவதும் வருவோர் போவோர்களையெல்லாம் சோதனைக்கு ஆளாக்கித் தொந்தரவு கொடுத்துக் கொண்டிருந்தார்கள். இந்த எதிர்பாராத பாதிப்பினால் ஒளிந்து, திரிந்து, பதுங்கி வர என் பயணம் தடைப்பட்டது. ஆகையினால்தான் இந்தத் தாமதம்” என்று கருத்திருமன் தனது தாமதத்திற்கான நெடிய விளக்கத்தைக் கூறி முடித்தான்.
இதைக் கேட்ட எல்லோரும் திகைப்படைந்தனர்.
நந்தினி பதட்டத்துடன் “நாம் முடிவு செய்யும் ஒவ்வொரு காரியத்தையும் வந்தியத்தேவன் எங்கிருந்தோ முளைத்து வந்து தொல்லை கொடுப்பது வழக்கம் ஆகிவிட்டது. நாம் இதுவரை தீர்மானித்த எந்தக் காரியமும், வந்தியத்தேவனை சமாளிப்பதிலேயே பாதி நேரம் செலவிடப்பட்டிருக்கிறது. நாம் இப்போது பேசப் போவதோ நமது புராதானமான பாண்டிய வம்சாவழிப் பொக்கிஷங்களான மணிமகுடம், தேவேந்திரனே நமக்கு அளித்ததாகக் கூறப்படும் இரத்தின ஹாரம் பற்றிய விஷயத்தைப் பற்றியதாகும். நாம் எடுக்கப்போகும் முடிவோ கருத்திருமன் நமக்கு சொல்லப்போகும் விவரத்தைப் பொறுத்திருக்கிறது. இந்த ரகசியம் வந்தியத்தேவனுக்கோ அல்லது சோழ எதிரிகளுக்கோ தெரிந்துவிடாமல் பாதுகாக்க வேண்டியது நமது தலையான பொறுப்பு. இதில் தோல்விக்கு இடமே இல்லை! கோவிலுக்குள் வரும் சுரங்கத் துவாரத்தை, இந்தக் கூட்டம் நடக்கும் வரையில், யாரையாவது கண்காணிக்க ஏற்பாடு செய்திருப்பீர்கள் என்று நம்புகிறேன், அப்படித்தானே ரவிதாசரே” என்று கூறி ரவிதாசனை நோக்கினாள்.
“உங்கள் கூற்று முற்றிலும் உண்மை. அதற்கான தற்காப்பு நடவடிக்கையை ஏற்கெனவே எடுத்துள்ளேன், மகாராணி. பிறைமுடி அங்கு அமர்த்தப்பட்டுள்ளான்” என்று தான் செய்திருந்த ஏற்பாட்டை விளக்கினான் ரவிதாசன்.
“நல்லது ரவிதாசரே.இன்றைய இக்கட்டான சூழ்நிலையில் நாம் அனைவரும் கவனமாக எல்லா காரியங்களியும் செயலாற்ற வேண்டும். இலங்கையிலிருந்து கொண்டு வந்த விவரத்தை உடன் கூறுங்கள்” என்று நந்தினி, கருத்திருமனைப் பார்த்தாள்.
வந்தியத்தேவனும், கந்தமாறனும் காதுகளைக் கூர்மையாக்கிக் கொண்டு கேட்கத் தொடங்கினார்கள்.
அதைத் தொடர்ந்து கருத்திருமன் பேசத் தொடங்கினான்.
“உங்கள் கட்டளைப்படி நான் ஈழத்திற்குச் சென்றிருந்தபோது மகிந்தனைக் காண எவ்வளவோ முயன்றேன். சோழப் படையெடுப்பு காரணங்களினால் அது சாத்தியமாகவில்லை. கடைசியாக மகிந்தனிடமிருந்து ஓலை மூலம் செய்தி கிடைத்தது. மிகவும் வருத்தத்துடனும் அதற்காக மன்னிப்பையும் கோரியிருந்தார். இந்தப் போரினால் அவருக்கு ஏதேனும் பேரழிவு நேர்ந்தால், நமது பொக்கிஷங்கள் பற்றிய ரகசியம் ஒருவருக்கும் தெரியாமலேயே போக வாய்ப்பு இருப்பதாலும், நமக்கு இதனால் கடுகளவும் பாதிப்பு வராமல் இருக்கவும், இதை ரோஹண மலைக் குகையிலிருக்கும் அவர்கள் பொக்கிஷங்களிலிருந்து பிரித்து யாராலும் கண்டுபிடிக்க முடியாத வேறு இடத்திற்கு மாற்றி இருப்பதாகவும், மறைத்து வைக்கப்பட்டிருக்கும் இடத்தைப் பற்றிய விவரங்களை சித்திரங்கள், சிற்பங்கள் மூலமாக ரகசிய இடங்களில் விளக்கியிருப்பதாகவும் தெரிவித்திருந்தார்.”
“மறைத்திருக்கும் இடம் பாதுகாப்பான இடமா?எளிதில் அதை நெருங்க முடியுமா?” என்று அமரபுஜங்கன் வினவினான்.
“பொக்கிஷம் மறைத்து வைக்கப்பட்டிருக்கும் இடம்.. ..” என்று இடத்தின் பெயரைச் சொல்லும் போது அவர்களுக்கு மட்டும் கேட்கும்படியாக மிகவும் ரகசியமான குரலில் கூறி, “மிகவும் பாதுகாப்பான இடம்” என்று கூறி முடித்தான்.
வந்தியத்தேவனும் கந்தமாரனும் காதுகளை நன்றாக எவ்வளவோ தீட்டிவிட்டுக் கொண்டும் கருத்திருமன் மிகவும் மெல்லியதாகச் சொன்ன இடத்தின் பெயர் கடுகளவும் கேட்கவில்லை. ‘மிகவும் பாதுகாப்பான இடம்’ என்று கடைசியில் சொன்ன வார்த்தைகள் மட்டுமே கேட்டன.
“சித்திரங்கள் வரைந்திருக்கும் இடங்கள் பற்றி ஏதோ கூறினாயே.அதன் விபரம் என்ன?” நிந்தினி வினவினாள்.
கருத்திருமன் மேலும் கூறினான்:
“பொக்கிஷங்களைப் பற்றிய விவரங்களைக் கொண்ட சித்திரங்களும் சிற்பங்களும் வெவ்வேறு இடங்களில் இருக்கின்றன..முதல் இடம், அநுராதபுரத்திற்கு தென்மேற்கு திசையில் ஒரு காத தொலைவில் இருக்கிறது. அங்கு காட்டுமரங்கள் அடர்ந்த இருட்டான இடத்தில் ஒரு பிரும்மாண்டமான கோவிலின் மேல் ஒரு உயர்ந்த புத்த ஸ்தூபி இருக்கிறது. அதன் கீழே கோவிலுக்குள் செல்ல ஒரு கதவு இருக்கிறது. அந்த இடத்தை தினமும் சுத்தம் செய்து பாதுகாத்துவரும் புத்த பிட்சுக்கள் காலையிலும் மாலையிலும் சிறிது நேரம் திறந்து வைத்திருப்பார்கள். கோவிலின் உள்ளே ஸ்தூபியின் சுவர்களில் புத்தரைப் பற்றிய வர்ணக் கற்களால் ஒட்டப்பட்ட சித்திரங்கள் அவர் வாழ்க்கை வரலாற்றைப்பற்றித் தெரிவிக்கின்றன. அதில் சில சித்திரங்களை மகிந்தன் சேர்த்திருக்கிறார். அதில் பொக்கிஷத்தை மறைத்து வைக்கப்பட்டிருக்கும் இடத்தைப் பற்றிய முதல் பகுதி விளக்கப்பட்டுள்ளது.”
“இரண்டாம் இடத்தைப் பற்றிய குறிப்பு பொதிந்த புதிர் அதில் சொல்லப்பட்டிருக்கிறது.அந்தப் புதிர் சொன்ன விஷயத்தை அறிந்து, இரண்டாம் இடத்திற்குச் சென்று, மூன்றாம் இடத்தைப் பற்றிய விவரத்தை அறிந்து கடைசியில் மறைத்து வைக்கப்பட்டிருக்கும் இடத்திற்குச் சென்று, அதைப் பற்றி நன்றாகத் தெரிந்துகொண்டேன்.”
சிறிது நேரம் அங்கு அமைதி நிலவியது. அந்த அமைதியை நந்தினியே களைத்து “மேலே தொடருங்கள்” என்றாள்.
“அந்த இடம்!அப்பப்பா! ஒருவேளை எதிரிகள், புதிர்களைப் பற்றி அறிந்து, அவைகள் சொன்ன விவரங்களைக் கண்டுபிடித்து, பொக்கிஷங்கள் இருக்குமிடம் அடைந்தார்களானால் அங்கு அவர்களுக்கு மிகப் பெரிய அதிர்ச்சி ஒன்று காத்திருக்கும்! அந்த இடம் அப்படிப்பட்டது! எளிதில் அப்புறப்படுத்த இயலாத இடம்! அவ்வளவு நல்ல இடத்தைத் தேர்ந்தெடுத்ததற்காக நாம் என்றென்றும் மகிந்தனுக்குக் கடமைப்பட்டுள்ளோம்” என்று குரலிலே வியப்பைக் காட்டி முடித்தான் கருத்திருமன்.
மீண்டும் சிறிது நேரம் அமைதி நிலவியது. பின் நந்தினி அனல் பறக்கச் சொன்னாள். “நல்லது கருத்திருமா. மகிந்தன் நல்ல ஏற்பாட்டைத்தான் செய்திருக்கிறார். ஆனால் வந்தியத்தேவன்மேல் எனக்கு இப்போது சந்தேகம் அதிகரிக்கிறது. உன்னால் குத்தப்பட்ட சோழ ஒற்றன் இறந்தவனாகவே இருக்கட்டும்! குலசேகரன் இறப்பதற்கு முன், வந்தியத்தேவன் அவனைச் சித்திரவதைக்கு உட்படுத்தி ஏதாவது அறிந்திருக்கலாம் அல்லவா? இடும்பன்காரி மறைந்த காரணம் அதனால் இருக்குமா? ஒருவேளை வந்தியத்தேவன் அவனைக் கொன்றிருப்பானோ? இப்போது என் சந்தேகம் வலுக்கிறது. அவன் மறைந்த காரணத்தை நாம் உடனே அறிய வேண்டும்! ரவிதாசரே! நீங்களும் கருத்திருமனும் இன்னும் வேண்டிய மற்றவர்களையும் ஈழத்திற்குக் கூட்டிச்சென்று பொக்கிஷங்களை உடனே இங்கே எடுத்து வந்துவிடுங்கள். அதை மறைத்து வைக்கக் கொல்லிமலையே உகந்த இடம்! நாளையே கிளம்புங்கள். வந்தியத்தேவனோ அல்லது வேறு யாராவதோ தொல்லை கொடுத்தார்களானால் அவர்களைக் கண்டம் துண்டமாக வெட்டி நாய்களுக்குப் போடுங்கள். நமது கூட்டாளிகளான கடல் கொள்ளைக்காரர்களின் உதவி நமக்கு இப்போது தேவை. அவர்களின் ஆட்கள் இப்போது சோழ நாட்டில் தஞ்சை, மாமல்லபுரம், காவிரிப்பூம்பட்டிணம் மற்றும் இலங்கை மாதோட்டத்திலும் நமக்காக வேவு பார்த்துக் கொண்டு மக்களோடு மக்களாய் இணைந்திருக்கிறார்கள். அந்த இடங்களுக்கு உடன் செய்தி அனுப்பி அவர்களுடைய மரக்கலங்களை ‘தயார்’ நிலையில் வைத்திருக்கச் சொல்லுங்கள். ரவிதாசரும் கருத்திருமனும் மாதோட்டத்து கொள்ளைக்காரர்களின் மரக்கலத்துடன் தயாராக இருக்கட்டும். ரவிதாசரே! அவர்களது துணையையும், நம் வீரர்களின் துணையையும் கொண்டு எப்படியாவது இடும்பன்காரியைப்பற்றி விவரமறிந்து, பின் பொக்கிஷங்களை உடனடியாக இங்கு கொண்டு வந்து சேர்ப்பது உங்கள் பொறுப்பு. உங்கள் பதிலுக்காகக் காத்திருக்கிறேன்.”
“மகாராணி, இவ்வளவு பெரிய காரியத்தைச் சாதித்து வெற்றிகரமாய் முடிக்க, எங்களைத் தயார் செய்துகொள்ள ஒரே ஒரு நாள் தேவைப்படுகிறது. நானும் கருத்திருமனும் நாளை மறுநாள் மாதோட்டத்திற்குக் கிளம்புகிறோம். மற்ற இடங்களுக்குச் செய்தி அனுப்பும் பொறுப்பை சோமன்சாம்பவானிடம் ஒப்புவிக்கிறேன்” என்று கூறினான் ரவிதாசன்.
மீண்டும் கூட்டத்திலுள்ளவர்களை ஒரு முறை பார்த்த நந்தினி “நல்லது ரவிதாசரே. அப்படியே செய்யுங்கள். மேலும் வேறு யாருக்கேனும் ஏதாவது சந்தேகங்கள், கேட்க வேண்டியவைகள் எவையேனும் இருக்கின்றனவா?” என்று கேட்டாள்.
எல்லோரும் மௌனம் சாதித்தார்கள்.
அமைதியே பதிலாக வந்ததாதல் அவர்களைப் பார்த்து நந்தினி, “கூட்டம் இத்துடன் கலையட்டும். வெற்றி நமக்கு நிச்சயம்! நம் எல்லோரையும் நாம் வணங்கும் கொல்லிப் பாவை காப்பாற்றுவாள்!” என்று கூறினாள்.
எல்லோரும் தீப்பந்தங்களை கையிலேந்தி மண்டபத்திலிருந்து வெளிவந்து சூரிய பகவான் பகுதிக்கு விரைந்து சென்றார்கள். மண்டபத்தில் காரிருள் சூழ்ந்தது. வந்தியதேவனும் கந்தமாறனும் வினாயகர் பின்னாலிருந்து வெளிவந்து சோம்பல் முறித்து சுதாரித்துக் கொண்டனர்.
மண்டபத்தின் சுவர்களில் அங்கும் இங்குமாக சில சிறிய துவாரங்கள் காற்று வருவதற்காக அமைக்கப்பட்டிருப்பதைக் கந்தமாறன் ஏற்கனவே அறிந்திருந்தான். இருட்டில் தடவிப்பார்த்து ஒரு துவாரத்தைக் கண்டு பிடித்தான். அதில் கண்ணை வைத்து வெளியில் என்ன நடக்கிறது என்று பார்த்தான்.
சூரிய பகவான் இருக்கும் பகுதி நன்கு தெரிந்தது.
கையில் தீப்பந்தத்துடன் ஒருவன் அருகில் நின்று கொண்டிருந்தான். வந்தவர்கள் ஒவ்வொருவராக உள்ளே சென்று மறைந்து கொண்டிருந்தனர். கடைசியில் நின்று கொண்டிருந்தவனும் உள்ளே சென்று மாயமானான். பிறகு அங்கு அமைதி நிலவியது. நிலாவின் வெளிச்சம் மட்டும் அங்கு பரவியிருந்தது.
அதனைக் கண்ட கந்தமாறன் நிமிர்ந்து வந்தியத்தேவனிடம் “எல்லோரும் சென்றுவிட்டார்கள்” என்றான்.
‘பொக்கிஷம் மறைந்திருக்கும் இடம், கருத்திருமன் கிசுகிசுத்ததால் தெரியாமல் போய்விட்டதே’ என்று வந்தியத்தேவனின் உள்ளத்தில் கவலை மண்டியது. அதனை கந்தமாறனிடமும் வெளிப்படுத்தினான்.
பிறகு கந்தமாறனைத் தட்டிக் கொடுத்து “எனினும் கவலை இல்லை. அநுராதபுரத்துச் சித்திரங்கள் அதைத் தெரியப்படுத்தும் என்று கேட்டோமல்லவா. அது போதும். நீ இல்லாமல் இவ்வளவு பெரிய ரகசியத்தை என்னால் தெரிந்துகொள்ள இயன்றிருக்காது. இதற்காக நான் என்ன கைமாறு செய்யப் போகிறேன்? ரவிதாசன் தெய்வாதீனமாக எனக்கென்று ஒரு நாள் அவகாசத்தை ஏற்படுத்தியிருக்கிறான் போலும்! இந்த பொன்னான சந்தர்ப்பத்தை நன்கு பயன்படுத்தி, அவர்களை முந்தி, அப்பொருட்களைக் கண்டுபிடித்து சோழ நாட்டிடம் ஒப்படைக்க உறுதி கொண்டுள்ளேன். அதை செயலாக்க உன் ஒத்துழைப்புடன் இப்போதே கிளம்புகிறேன்!” என்று கூறினான்.
அதற்குக் கந்தமாறன் “நாம் இப்போது கிளம்பினால் சதிகாரர்கள் கண்டுவிடக் கூடும். நாளை காலையிலிருந்து குதிரைகளிலும், கழுதைகளிலும், வண்டிகளிலும் கோவிலுக்கு இன்று வந்திருந்தோர் கூட்டம் திரும்பி போய்வந்த வண்ணம் இருக்கும். காலையில் நாம் அவர்களுடன் மறைந்துவிடலாம்” என்று கூறினான்.
இருவரும் சுரங்க வாயிலின் பகுதிக்குச் சென்றார்கள். கந்தமாரன் “சகாதேவா!” என்று மூன்று முறை கூவினான். சுரங்க வழி திறந்தது. இருவரும் உள்ளே சென்றதும் வாயில் மூடியது!.
&&&
ரவிதாசன் முதலியோர் சுரங்க வாயிலைவிட்டு வெளிவந்ததும் எல்லோரும் பிரிந்து அவரவர் வழி சென்றனர். ரவிதாசனும்சோமன்சாம்பவானும் மட்டும் தீப்பந்த வெளிச்சத்தில் குகைக்குள் சென்று தரையை ஆராய்ந்தார்கள். சரகுகளைத் தள்ளி நோக்கினார்கள். காய்ந்த இரத்தம் அங்குமிங்குமாகத் தென்பட்டது. அவர்கள் முகங்கள் சுருங்கின.
ரவிதாசன் “இடும்பன்காரி கொல்லப்பட்டது உண்மைபோல் தோன்றுகிறது. நாளைக்கு நாம் பகலில் வந்து மறுபடி ஆராய்வோம். இதனால் நம் காரியத்திற்குத் தடை இல்லை. நம்மைத்தவிர வேறு எவரும் சுரங்க வாயினில் உள்ளே வந்திருக்க முடியாது. நமது ரகசியத்தைத் தெரிந்து கொண்டிருக்கவும் முடியாது. ஏனெனில் நமது வீரன் பிறைமுடி, கோவிலினுள் சூரிய பகவான் நுழை வாயிலை, நம் கூட்டம் நடந்து கொண்டிருக்கும்போது கண்காணித்துக் கொண்டிருந்தான். ஆகையால் அதைப் பற்றிப்பிரச்சினை இல்லை” என்று கூறினான்.
அடுத்த நாள் இருவரும் குகைக்கு வந்து சுற்றுப்புறத்தை ஆராய்ந்தபோது இடும்பன்காரியின் சடலம் கிடைத்தது. சிறிது நேரம் அதிர்ச்சியால் தாக்குண்டு, தாடைகளில் கைகளை வைத்து உடலின் அருகில் அமர்ந்திருந்தார்கள்.
முதலில் ரவிதாசனே அதிர்ச்சியிலிருந்து மீண்டான்.
“சோமா, நிலைமை இவ்வளவு மோசமாகும் என்று நான் நினைக்கவில்லை. வா! முதலில் இவனை நல்லடக்கம் பண்ணுவோம்” என்றான்.
இருவரும் சேர்ந்து மெதுவாகக் குழி தோண்டி இடும்பன்காரியைப் புதைத்தார்கள். அவனுடைய ஆத்மா சாந்தி அடைய சிறிது நேரம் மௌன அஞ்சலி செலுத்தினார்கள்.
துக்கம் தொண்டையை அடைக்க, வந்தியத்தேவன்மேல் தீராத கோபம் எழுந்தது ரவிதாசனுக்கு.
“அப்படியா, சமாசாரம்!வந்தியத்தேவா, உனக்கு முடிவு கட்டுகிறேன். நான்தான் உனக்கு எமன். உன் மேல் பாசக் கயிற்றை வீச நாளை அல்ல, இன்றே, இப்போதே கிளம்புகிறேன்” என்று ரவிதாசன் மீசையை முறுக்கினான். பிறகு ‘சோமா, இன்னும் பலரை நம்முடன் சேர்த்துக்கொள்ளுவது இப்போது அவசியம். மற்றோருக்கு செய்தி சொல்லும் பொறுப்பை நாமே இவர்களுடன் ஏற்கலாம்’ என்று பற்களை நர நரவென்று கடித்தவண்ணம் சோமன்சாம்பவானுடன் கிளம்பினான்.