மருதுப்பட்டியிலே என்னலே நடந்தது ?
கிழக்கே கடல் – மண்ணு, உப்பளம், மீனு, கட்டுமரம், போட், வலி, சர்ச், பெருமாகோயில் – இவைதான் மருதுப்பட்டி. கிழக்குச் சீமையிலே இருக்கிற நூத்துக் கணக்கான கிராமத்தில மருதுப்பட்டியும் ஒண்ணு. ஆனால் ‘ஹிண்டு’வின் முதல் பக்கத்திலும், சன் தலைப்புச் செய்திகளிலும், சட்டசபையில் ஸ்டாலினின் பேச்சிலும், வைகோவின் போராட்டத்திலும் முதல் அமைச்சரின் மறுப்பிலும், நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் கம்யூனிஸ்ட் மோதலிலும் மருதுப்பட்டி அடிபட்டது என்றால், அப்படி என்னலே நடந்தது மருதுப்பட்டியிலே?
சுப்பையா பிள்ளை, கூத்தியா ரோஸி வீட்டில டேரா போட்டிருக்கார். இருக்கிறது டவுனில் – இருந்தாலும் சொந்த ஊருக்கு மாசம் ஒருதரம் கட்டாயம் வந்திடுவார். ரெண்டு நாள் தங்குவார்.ரெண்டு நாள் என்ன? ரெண்டு ராத்திரி, ஒரு பகல். பகல்ல வியாபாரம், கொடுக்கல்,வாங்கல், நீளம், நீச்சு, மீனு, உப்பு – வலை, மோட்டார்போட் என்ற பல வியாபாரம். அது கள்ளக் கடத்தல், பிஸ்கட் என்றும் போவதுண்டு.
இந்தத் தடவை ராத்திரி வராம விடியற்காத்தால வந்தார். வந்ததும் படுத்துத் தூங்கிட்டார். பத்துமணி சுமாருக்கு எந்திரிச்சு காபி குடிச்சுட்டு, “ ரோஸி! உடம்பெல்லாம் ஒரே சூடா இருக்கு! எண்ணை தேச்சுக் குளிக்கணும்!” என்றார். ரோஸியும் எண்ணையெடுத்து, மொளகாய் போட்டுக் காய்ச்சி, ஆறவைச்சு எடுத்துட்டு வந்தா. பெரிய துண்டைக் கட்டிக்கிட்டு அவரும் ஸ்டூல்ல உட்காந்ததும், ரோஸி அவருக்கு எண்ணை தேச்சுவிட ஆரம்பித்தாள். குத்தாலத்தில மஸாஜ் பண்றமாதிரி இருக்கும் ரோஸியின் கைவண்ணம். உடம்பின் ஒவ்வொரு நரம்பிலும் அவள் எண்ணை தேய்க்கும்போது அலுப்பெல்லாம் அப்படியே பறந்து போவதுபோல இருந்தது சுப்பையா பிள்ளைக்கு.
அந்த சமயத்தில்தான் ராபர்ட் அங்கு வந்தான். “ ஐயா! குளிக்கப் போறாகல்லே!”
“ இரு ரோஸி! நான்தான் வரச்சொன்னேன்.”
ராபர்ட் அவரது வலது கை, அடியாள் எல்லாம். மருதுப்பட்டி விவகாரம் எல்லாத்தையும் அவன்தான் அவருக்குப் பதிலா கவனிச்சுக்குவான். தான் வராதபோது ரோஸியையும் அவன் கவனிச்சுக்கிறானோன்னு அவருக்கு சந்தேகம் வரும். ஆனா அதை அவர் பெரிசு பண்றதில்லே.
“ என்னலே ராபட்டு! எல்லாம் முடிஞ்சுதா?”
“ ஐயா! நீங்க சொன்னது எனக்கே சரியாப் புரியலை. இருந்தாலும் மக்கள்கிட்ட சொல்லிப் பாத்தேன். எவனும் ஒத்துக்க மாட்டேங்கிறான்.”
“ எலே ராபட்டு! இதுவரைக்கும் நாம கடல்லதான் மீன் பிடிச்சோம். இப்ப அதை வயல்ல பிடிக்கப்போறோம். ‘அக்வா கல்சர்’னு பேரு. அரசாங்கம் நம்ம ஊர் முழுசையும் எறால் வயலா மாத்தப்போகுது. அம்பது கோடி ரூபாய் செலவுல, கட்டுமானம் காண்ட்ராக்ட் எல்லாம் நமக்குத்தான். இப்ப நம்ம வலையனுக வெயில்ல, மழையில, புயல்ல கடல்ல போய்க் கஷ்டப்படத் தேவையில்லேடா! நிம்மதியா வயல்ல வேலை பாக்கலாம். கைமேல் காசு!”
“ வயல்ல மீனு பிடிக்கப் போறீகளா?” ரோஸி அவருக்கு முழங்காலுக்கு மேலே எண்ணை தேய்த்துக்கொண்டே கேட்டாள். ரோஸிக்கும், சுப்பையா பிள்ளைக்கும் வெக்கமே கிடையாது. ராபட்டுதான் கொஞ்சம் நெளிஞ்சான்.
“ ரோஸி! ‘எறால் வயல் திட்டம்’ எப்படி தெரியுமா? ஊரு முழுசும் வயலைப் பாத்தி பாத்தியா வெட்டிக் கடல்லேந்து தண்ணி கொண்டுவந்து மீனை வளர்த்தி – சாதாரண கெண்டை – கெளுத்தி இல்லே. எறால் – செம்மீனு வாங்கி – முட்டை போடவெச்சுப் பெரிசாக்கி – இரை போட்டு வளர்த்து – அப்படியே ஐஸ் பொட்டியிலே வைத்து ஃபாரினுக்கு அனுப்பப் போறாங்க! என்னா துட்டு தெரியுமா? இதை அரசாங்கமே செய்யப் போறதினாலே நமக்கு காண்ட்ராக்டு கிடைக்கும். பைசா செலவில்லாம செம லாபம். மருதுப்பட்டி முழுக்க எறால் வயல்.”
“ அதுலதானுங்க பிரச்சனை வருது!”
“ என்னலே?”
“ ஆமாய்யா! உங்க திட்டப்படி கிராமம் முழுசும் எறால் வயலா மாறணும் அதுக்குக் கடலோரம் இருக்கிற குப்பம் முழுசும் வேணும். அதில இருநூறு, முன்னூறு குடிசைங்க இருக்கு – வலையங்க இருக்காங்க – சர்ச் இருக்குது. யாரும் ஒத்துக்க மாட்டேங்கிறாங்க! தகராறு பண்றானுக!
“எந்த நாய்ப் பயடா தகராறு பண்றவன்? பரம்பரை பரம்பரையா மீனு பிடிச்சு இந்தப் பசங்க என்னத்தைக் கண்டானுக? அதே குடிசை. சாராயம் குடிக்கக்கூடக் காசில்லை. எலே ராபட்டு! என்ன பண்ணுவியோ, எப்படிப் பண்ணுவியோ தெரியாது. இன்னும் ரெண்டு நாளில அந்தக் குடிசையெல்லாம் காலி பண்ண வைக்கணும்.”
“ அவ்வளவு சுளுவு இல்லீங்க! குடிசைங்களுக்கு நடுவே நம்மூர் சர்ச் இருக்குது. ஃபாதர் அருமைநாயகமும் இந்த எறால் வயல் திட்டம் ஊரையே கெடுத்திடும்னு சொல்றாரு!”
“எலே ராபட்டு! சாமியாருக்கு என்னடா தெரியும்? ஊருக்கு நல்லது செய்ய நாம வந்திருக்கோம். இந்த வலையனுகளைப்பத்தி நமக்கு நல்லாவே தெரியும். அத்தனை பசங்களும் நம்ம கட்சிக்கு எதிரா போன எலெக்ஷனிலே ஓட்டுப் போட்டவனுக!அதனால் உலகன், சிவக் கொழுந்தைக் கூட்டிக்க! காரியத்தைச் சரியா முடிச்சுடு.”
“ சரிய்யா! இருந்தாலும்…”
“ என்னலே ராபட்டு! இழுக்கறே?”
“ சர்ச்சை மட்டும் விட்டுடலாமா?”
“ எலே ராபட்டு! சர்ச்சுன்னதும் பாசம் பொங்குதோ? நமக்கெல்லாம் எதுக்குடா சாமி பூதமெல்லாம்?. சரி! சரி! நீயே கேட்டுப்புட்டே! சர்ச்சை விட்டுடு! நான் நாளை காலையில ஊருக்குப் போயிட்டு அடுத்த நாள் டெல்லிக்குப் போறேன். திரும்பிவர ஒரு வாரமாகும். அதுக்குள்ளே காரியத்தைக் கச்சிதமா முடிச்சிடணும்.”
“ சரிய்யா!” என்று சந்தோஷமாப் போனான் ராபட்டு.
“ பலான ஆளு நீங்க! கொஞ்சம் முன்னாடிதான் உலகன், சிவக்கொழுந்துகிட்டக் குடிசைங்க எல்லாம் அப்படியே இருக்கட்டும். சர்ச் எடம் மட்டும்தான் நமக்கு வேணும்னு சொன்னீக! ”
நெஞ்சில் எண்ணை தேய்த்துக்கொண்டே ரோஸி பிள்ளையிடம் கேட்டாள்.
“ களுதே! அதுதாண்டி ராஜதந்திரம்!”- அவளுக்கு வலிக்கும் அளவுக்குப் பின்னாடி ஒரு அடி கொடுத்தார்.
“ சரி வாங்க! “ என்று அவரைக் கிணத்தடிக்கு அழைச்சுக்கிட்டுப்போய் ஸ்டூலில் உக்காரவெச்சு விளாவி வைச்சிருந்த வெந்நீரைக் கொஞ்சம் கொஞ்சமா ஊத்தி அவரைக் குளுப்பாட்ட, பிள்ளை குளியலை அனுபவிக்க ஆரம்பிச்சார்.
பிறகு அவசர அவசரமாக ஜீப்பை எடுத்துக்கொண்டு கிளம்பினார். “ ரோஸி! பக்கத்து ஊரில் ராமலிங்கத் தேவரைப் பாத்துட்டு சாயங்காலம் வந்திடறேன். அங்கே ஒரு ஏக்கர் பூமி விலைக்கு வருதாம். உம் பேரில் வாங்கிடறேன்னு” சொல்லிவிட்டுப் புறப்பட்டார்.
ராத்திரி வர பதினொரு மணி ஆயிடுச்சு பிள்ளைக்கு. கொஞ்சம் தள்ளாடித்தான் வந்தார். “ தேவர் வீட்டிலேயே சாப்பிட்டுட்டேன் ரோஸி. உம் பேரில் ஒரு ஏக்கரா வாங்கிட்டேன்.”
“ எனக்குத் தெரியும் எப்படியும் வாங்கிடுவீகன்னு” என்று சொல்லி கிளாஸை அவரிடம் நீட்டினாள் ரோஸி.
“ ஆகா! நம்ம சரக்குன்னா நம்ம சரக்குதான்! இதுதான் சுகம்” னு கிளாசைக் காலி செய்து ரோஸியை இழுத்தார்.
அப்போதுதான் புயல் வெடித்தது. தெருவெல்லாம் ‘ஐயோ!ஐயோ!’ என்ற கத்தல். கதவைத் திறந்து பார்த்தால் கடலோரக் குப்பம் எரிந்துகொண்டிருந்தது. திமுதிமுவென்று கூட்டம். பெண்கள், குழந்தைகள் எல்லாம் நசுங்கி மிதிபடும் அவலம்.
திடுதிடுவென்று மூன்றுபேர் ரோஸி வீட்டுக்கு ஓடிவரும் சத்தம் கேட்டது. பிள்ளை ஆடிப்போய் விட்டார். பார்த்தால் உலகன், ராபட்டு, சிவக்கொழுந்து!
“ என்னலே! நான் ஊருக்குப் போனப்புறம்தான் இதெல்லாம் ஆரம்பிக்கணும்னு கிளியரா சொன்னேனில்ல!”
“ ஐயா! சத்தியமா சொல்றோம்! இது நாங்க செஞ்ச வேலை இல்ல. எங்களுக்குத் தெரியாதா? நீங்க மெட்ராஸ் போனப்புறம் ஆரம்பிக்கணும்னு இருந்தோம். இது ஏதோ ஆக்சிடண்டுன்னு நினைக்கிறோம்.”
“ எலே! எவண்டா இதை நம்புவான்?”
“ ஐயா! அதெல்லாம் அப்புறம் பாத்துக்கலாம். இப்ப வலையனுக எல்லாம் இது உங்க வேலைன்னு ஆத்திரமா இருக்கானுக! எங்களைத் தொரத்திக்கிட்டு வருவானுக! வாங்க! நாம ஊரைவிட்டு ஜீப்பில போயிடலாம்.! நிக்கிற ஒவ்வொரு நிமிஷமும் நமக்கு ஆபத்து!”
சுப்பையா பிள்ளை அவசர அவசரமாக ஜீப்பை ஸ்டார்ட் செய்தார். “ ரோஸி, உலகா, சிவா, ராபட்டு ஏறிக்கங்க! சீக்கிரம்..ம்..”
வலையர்கள் கையில் தடி, கம்பு, கட்டைகளோடு வருவது இருட்டிலும் தெரிந்தது. பிள்ளையின் துரதிர்ஷ்டம். ஸ்டார்ட் ஆன ஜீப் மக்கர் செய்து நின்றுவிட்டது.
“ எலே இறங்கித் தள்ளுங்கடா! பிள்ளை அலறினார். நாலு பேரும் இறங்கி, ஜீப்பைத் தள்ள ஆரம்பிப்பதற்குள் வலையர்கள் கூட்டம் அவர்கள் நால்வரையும் பிடித்துக்கொண்டது. ஜீப்பின் கண்ணாடியைக் கட்டையால் அடிக்க வந்தான் ஒருத்தன். ‘சட்’டென்று ஜீப் ‘ஸ்டார்ட்’ ஆக அவன் எகிறி விழுந்தான். பிள்ளை ஜீப்பை வேகமாக ஒட்டி அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டார்.
“ பிடிடா! அவனைக் கொல்லுங்கடா! என்று கத்திக்கொண்டே ஜீப் பின்னால் ஓடினர் சிலர். “ அவனோட ஆளுங்கடா! இவனுகதான் நம்ம தலையில் நெருப்பு வைச்சது! கையில் என்னென்ன ஆயுதம் இருந்ததோ அவற்றால் அந்த மூவரையும் தாக்கினார்கள்.
“ அவனோட கூத்தியாடா! வெட்றா அவளை!”என்று ஒருத்தன் கத்த, இன்னொருத்தன் அதை செயலாற்ற ரோஸி ரெண்டு துண்டாகக் கிடந்தாள். அவள்பேரில் வாங்கிய பத்திரம் கையில் பத்திரமா இருக்க, அந்தக் கைமட்டும் நிலத்தில் தனியாகக் கிடந்தது.
ரோஸியின் வீடும் கொளுத்தப்பட்டது.
“ நம்ம சர்ச்சை இடிச்சுட்டானுகடா! வாங்க நாம கோயிலைக் கொளுத்துவோம்! பழிக்குப் பழி!” கத்திக்கொண்டே பெருமாள் கோயிலுக்குக் கும்பல் ஓடியது. பூட்டியிருந்த கதவை உடைத்தார்கள்.
அதற்குள் பிள்ளை மூலம் தகவல் அறிந்த போலீஸ் டவுனிலிருந்து பறந்து வந்தது. தடியடி – துப்பாக்கிச் சூடு – அதில் 44 மீனவர்கள் இறந்தனர்.
அடிதடியிலிருந்து தப்பித்த ராபர்ட் தன் கண் முன்னாலேயே தனக்கு ஞானஸ்நானம் கொடுத்த சர்ச் இடிபட்டுக் கிடப்பதைக்கண்டு அவன் வருத்தப்படும் நேரத்தில், போலீசாரின் துப்பாக்கிக் குண்டு அவன் நெற்றியைப் பதம் பார்த்தது.
ரேடியோ நியூஸ், டி.வி., சட்டசபை, நாடாளுமன்றம் எல்லாவற்றிலும் மருதுப்பட்டியின் பெயர் அடிபட்டது. இறந்தவர்களின் குடும்பத்துக்குத் தலா ஒரு லட்சம் என்று அறிவிக்கப்பட்டது. ஹைகோர்ட் ஜட்ஜ் தலைமையில் நீதி விசாரணை செய்ய உத்தரவு பிறந்தது.
அரசின் புதிய பொருளாதாரக் கொள்கையின்படி அரசுத் துறையில் ‘அக்வா கல்சர்’ தேவையில்லை என்று பட்ஜெட் கூட்டத் தொடரில் அறிவிக்கப்பட்டது. அதன்படி ‘மருதுப்பட்டி எறால் வயல் திட்டம்’ மூடப்பட்டது. தேவையானால் தனியார் துறை நடத்தலாம். அதற்கான வசதி செய்து தரப்படும் என்று அரசின் சார்பில் வாக்குறுதி அளிக்கப்பட்டது. இவ்வளவு தகராறு உள்ள இடத்தில் எதற்கு ‘அக்வா கல்சர்’ என்று எல்லோரும் ஒதுங்கிக் கொண்டனர்.
நீதி விசாரணை முடிவு, வழக்கம்போல ஒரு வருஷம் கழித்து வந்தது. அதன் தீர்ப்பு என்ன என்பதே யாருக்கும் புரியாமல் இருந்தது.
நடுவில் சுப்பையா பிள்ளை எப்படியோ மந்திரி ஆகிவிட்டார். அதிர்ஷ்டம், துரதிர்ஷ்டம் மனிதருக்குச் சேர்ந்தே வரும் போலிருக்கு. மந்திரி பதவி ஏற்று மூன்றாவது மாதத்தில் ‘எய்ட்ஸ்’ வந்து செத்துப்போனார். எய்ட்ஸால் இறந்த முதல் – மந்திரி அவர். ரோஸி கொடுத்த பரிசு அது.
கிழக்கே கடல் – மண்ணு – உப்பளம் – மீனு – கட்டுமரம் – வலை – புது சர்ச் – குடிசை – இடிபட்ட பெருமாள் கோயில் – இதுதான் இன்னிக்கு மருதுப்பட்டி!