கதைகள் ஒரு கலாச்சாரத்தின் வெளிப்பாடு! நாம் எல்லோரும் சிறு வயதில் நிறையக் கதைகள் கேட்டிருக்கிறோம் – சொல்லியிருக்கிறோம். வானில் நிலாவையோ, மரத்தில் அணிலையோ, கைப்பிடிச் சுவற்றில் காக்காவையோ காண்பித்துக் கதை சொல்லி சாதம் ஊட்டும் அம்மாவோ, பாட்டியோ எல்லோர் வீட்டிலும் உண்டு! இன்று பிடிவாதம் பிடிக்கும் குழந்தைக்கு ஐ பேடில் கார்டூன், ரைம்ஸ், விடியோ கேம்ஸ் காட்டி, பர்கரும், பீட்சாவும் வாயில் ஈஷப்படுகின்றன! கதை சொல்வதே கனவாகிப் போய்விட்டது!
செவ்வாய்தோறும் தமிழ் ஹிந்துவில் எஸ் ராமகிருஷ்ணன் இப்படிப்பட்ட கதைகளை – பல்வேறு நாடுகள், மொழிகள் சார்ந்த, நாடோடிக் கதைகள், நீதிக் கதைகள் என பல வகைக் கதைகளைப் பற்றி எழுதுகிறார்.
நம்மிடையே புழங்கி வரும் இராமாயண, மகாபாரதக் கதைகளும், வாய்வழி, செவி வழிக் கதைகளும் (கி ரா வின் கிராமீயக் கதைகள்) இன்றைய தலைமுறையினருக்கு அந்நியமாக இருக்கின்றன. சங்கீத உபன்யாசங்களும், இலக்கியச் சொற்பொழிவுகளும் ஒரு வகையில் கதை சொல்லும் வழிமுறைகளே!
சின்ன வயதில் என் பாட்டி சொன்ன கதை ஒன்று நினைவுக்கு வருகிறது. மிகவும் பயமும், மரியாதையும் உள்ள மருமகள் – மாமியாரைக் கேட்காமல் எந்த வேலையும் செய்யமாட்டாளாம் – சமையலில் உப்பு போடுவது முதல் இரவு படுக்கும் வரை எல்லாமே மாமியாரைக் கேட்டுத்தான்! திடீரென்று ஒரு நாள், மாமியார் இறந்து விட, மருமகளுக்குக் கை ஒடிந்தாற்போல் ஆயிற்று. யாரைக் கேட்பது என்று தவித்தாள். அவள் கணவன் உடனே மாமியார் போல ஒரு பொம்மை செய்து கொடுத்து, பாவனையாகக் கேட்டுக்கொள்ளச் சொன்னான்! அவளும் எதையும் ஒருமுறை அந்த பொம்மையிடம் கேட்டுவிட்டு, தனக்குத் தோன்றியபடி வேலைகளைச் செய்யத் தொடங்கினாள்.
ஒரு நாள் கணவனுடன் ஏதோ தகராறில் கோபித்துக் கொண்டு, மாமியார் பொம்மையுடன் வீட்டைவிட்டு வெளியே போகிறாள். வழி தவறி, காட்டுக்குள் சென்று விடுகிறாள். இரவாகிவிடுகிறது – வழி தெரியாமல், பயந்தபடியே அங்கிருந்த மரத்தின் மீது ஏறி அமர்ந்துகொள்கிறாள். கையில் மாமியார் பொம்மையைப் பார்த்தபடியே, தூங்கி விடுகிறாள்!
அதே இரவில், ஊரில் கொள்ளையடித்த பணம், நகைகள் எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டு, வழக்கமாக வரும் மூன்று திருடர்கள் அந்த மரத்தின் கீழ் அமர்ந்து, பங்கு பிரிக்கிறார்கள். பேச்சுக் குரலில் கண்விழித்த மருமகள், திருடர்களைப் பார்த்து பயந்து போய், கையிலிருந்த பொம்மையைக் கீழே தவற விட, இரவில் மரத்தின் மேல் பேயோ, பிசாசோ என்றலறியபடி, பணம், நகைகளைப் போட்டுவிட்டு திருடர்கள் ஓடிவிடுகிறார்கள். காலையில் மாமியார் பொம்மையை எடுக்கக் கீழே வரும் மருமகள், பணம், நகைகளையும் எடுத்துக்கொண்டு வீடு வந்து சேர்கிறாள் – பின்னர் வசதிகளுடன் வாழ்வதாகக் கதை முடியும்.
கதை சொல்லும் பாவமும், ஏற்ற இறக்கங்களும், இடைச்செருகலாக வரும் இருட்டு, மிருகங்கள் எல்லாம் குழந்தைகளைக் கட்டிப் போட்டுவிடும். பாட்டியின் மூடுக்குத் தகுந்தாற்போல் கதை நீளவோ அல்லது குறையவோ செய்யும்!
பள்ளிக்கூடங்களில் கூட, ஒரு பீரியட் ‘கதை சொல்லும்’ நேரமாக ஒதுக்கி, கதை சொல்லக் குழந்தைகளை ஊக்குவிக்கலாம்! குவிகம் இலக்கிய வாசல் மாதாந்திர நிகழ்வொன்றில், ‘கதை கேளு, கதை கேளு’ என்ற தலைப்பில் அழகாகக் கதை சொன்னார் ஒரு பெண்மணி! வரவேற்கப்பட வேண்டிய விஷயம் – வாருங்கள் கதை சொல்வோம், கதை கேட்போம் !