இலங்கையில் போர் புரிந்து கொண்டிருக்கும் சோழப் படைக்குத் தேவையான கத்திகள், ஈட்டிகள், கேடயங்கள், இரும்பு உரிகள், மற்றும் படைகளுக்குத் தேவையான உணவுப்பொருட்கள், மருந்துகள் போன்றவை அடிக்கடி சோழ நாட்டிலிருந்து போர் மரக்கலங்கள் மூலமாக ஆயுதம் தரித்த வீரர்களோடு காவேரிப்பூம்பட்டிணம் துறைமுகத்திலிருந்து அனுப்பப்பட்டுக் கொண்டிருந்தன. அதேபோல் கோடிக்கரையில் அரசாங்க விஷயத்திற்காக உபயோகப்படுத்தும் முதன் மந்திரி அநிருத்தரின் மரக்கலம் ஒன்று புறப்படத் தயாராய் அங்கு நங்கூரம் பாய்ச்சி எப்போதும் இருக்கும்!! இன்றும் அவ்வாறே நின்றுகொண்டிருந்தது.
வந்தியத்தேவன் கொல்லிமலையிலிருந்து, வழியில் எங்கும் தங்காமல், ஊண் உறக்கமில்லாமல், வாயுவேகம் மனோவேகமாக அந்தத் துறைமுகத்திற்கு வந்து சேர்ந்தான். கூடவே வழியனுப்பக் கந்தமாறனும் வந்திருந்தான். அவர்கள் இருவரும் இன்னும் மாறுவேடத்திலேயே இருந்தனர்.
கந்தமாறன் “வந்தியத்தேவா! நீ புக முற்படும் பாதை எவ்வளவோ கடினமானது! எத்தனையோ எதிர்ப்புகளைச் சந்திக்க வேண்டியிருக்கும்! இதில் வீரம் மட்டும் இருந்தால் போதாது. விவேகமும் வேண்டும். எல்லாவற்றையும் எதிர்கொண்டு வெற்றி பெறுவாய் என்பதில் எனக்கு எள்ளளவும் சந்தேகமில்லை! வெற்றிச் செய்தியுடன் திரும்பி வா!” என்று வாழ்த்தினான்.
அப்போது கட்டையும் குட்டையாக தாடி மீசையுடன் தோன்றிய போர் மரக்கல அதிகாரி ஒருவன் அவர்களிடம் வந்து “கலம் கிளம்புவதற்கு ஆயத்தமாக உள்ளது. அதில் செல்ல விரும்புவோர் உடன் சென்று பதிவு செய்து கொள்ள வேண்டியது அவசியம். ஆனால் போர் சம்பந்தப்பட்டவர்களாக இருக்க வேண்டும்” என்று கூறி சுற்றுமுற்றும் பார்த்தபின் தாடி மீசையை சட்டென்று அகற்றி திரும்பவும் அணிந்து கொண்டான்.
அவனின் அச்செயலைக் கண்ட வந்தியத்தேவனுக்குஆச்சர்யம் தாங்க முடியவில்லை. “திருமலை!நீயா? எங்கே இந்தப் பக்கம்? எங்களை எப்படி அடையாளம் கண்டு கொண்டாய்? என்ன இந்த அதிகாரி வேடம்?” என்று குதூகலத்துடன் சரமாரியாய் கேள்விகளைப் பொழிந்தான்.
“வந்தியத்தேவா, மாறுவேடங்களிலிருந்த உங்களை அறிந்து கொண்டது ஒன்றும் எனக்குப் பெரிய காரியமல்ல!ஏனெனில் உங்கள் வரவை நான் இங்கு எதிர்பார்த்திருந்தேன்! இது என் எஜமானர் அநிருத்தர் மேற்பார்வையில் நமது ஈழப் படைக்கு அடிக்கடி அனுப்பப்படும் கலங்களில் ஒன்று. நான் பொருட்களைச் சரிபார்த்து அனுப்புவதற்காக இங்கு அடிக்கடி அனுப்பப்படுவேன். இங்கு நீங்கள் நிச்சயம் வரக்கூடும் என்று எதிர்பார்த்துக் கலத்தை கிளப்ப அனுமதிக்காமல் உனக்காக நிறுத்தி வைத்திருக்கிறேன். அதிக நாட்கள் இருத்தி வைத்திருக்க இயன்றிருக்காது.. ஒருவேளை இன்று நீ வராதிருந்தால் அது கிளம்ப வேண்டியிருந்திருக்கும். சரி! இலங்கைக்கு செல்லும் வரை நாம் மாறுவேடத்தில் இருப்பது நல்லது. பகைவர்களுக்காக இந்தப் பாதுகாப்பு. நானும் உன்னுடன் இலங்கைக்கு வரப்போவதாக இருக்கிறேன். இளவரசர் கந்தமாறன் நம்முடன் வரப்போகிறாரா?” என்றான் திருமலை.
“இல்லை திருமலை.எனக்கு வேறு அலுவல்கள் இருக்கின்றன. மேலும் வந்தியத்தேவன் தனியாகச் செல்லுகிறானே என்று கவலை கொண்டேன். அக்கவலை இப்போது அடியோடு தீர்ந்தது. உன் துணை அவனுக்கு யானை பலம் தந்துவிடும். நீங்கள் இருவரும் எடுத்த இக்காரியத்தில் வெற்றி பெற எங்கள் குலதெய்வமான கொல்லிப்பாவையின் அருள் உங்களுக்குக் கிட்டட்டும்” என்று கூறி வந்தியத்தேவனை அணைத்தவாறே கந்தமாறன் விடை பெற்றான்.
கந்தமாறனுக்கு விடை கூறி அனுப்பிய பிறகு இருவரும் நங்கூரம் பாய்ச்சி நின்ற கலத்திற்கு அழைத்துச் செல்ல ஓர் படகு அங்கு ஆயத்தமாக நின்று கொண்டிருந்தது பார்த்து அதை நோக்கிச் சென்றார்கள். இருவரும் படகில் ஏறினார்கள்.
கந்தமாறன், தன் பயணத்தைத் தஞ்சை நோக்கித் தொடர்ந்தான்.
&&&
வந்தியத்தேவனும் திருமலையும் அவர்களுக்கென்று ஒதுக்கப்பட்டிருந்த அறைக்கு வந்தார்கள். கொண்டுவரப்பட்ட உணவைச் சாப்பிட்டபின் படுக்கையில் சாய்ந்தார்கள். வந்தியத்தேவன் திருமலைக்குக் கொல்லிமலையில் நடந்த சம்பவங்களை விளக்கினான்.
பிறகு வந்தியத்தேவனின் கடினமான பயணத்தினால் களைப்படைந்ததால் அவன் உடல் உறக்கத்தை நாடியது. அவனை அறியாமலேயே உறக்க நிலைக்குச் சென்றான். திருமலை அவனைப் பின் பற்றினான்.
கப்பல் இலங்கையில் நுழைந்து பாலாவி நதிக்கரையில் சோழர்களின் ஆதிக்கத்தின் கீழ் இருந்த மாதோட்ட மாநகரின் துறைமுகத்தைக் காலை வந்தடைந்தது.
நமது நண்பர்கள் இருவரும் மாறுவேடத்தைக் களைந்தார்கள். இலங்கைப் படை சேனாதிபதி கொடும்பாளூர்பூதிவிக்ரமகேசரி – பெரிய வேளார் பாசறைக்குச் சென்றார்கள்.
பெரிய வேளார் “வல்லவரையர் வந்தியத்தேவரே! வருக வருக! ஈழத்திற்கு. என்னை விடுவித்து, சேனாதிபதி பதவியை ஏற்கப் போகிறீர்கள்! சோழர் படைக்கு புதிய சகாப்தம் ஏற்படுத்தப் போகிறீர்கள்! மாதண்ட நாயகன் அருள்மொழிக்கு உறுதுணையாய், வலது கையாக இருக்கப் போகிறீர்கள். அதற்கு உங்களுக்கு வல்லமை அளிக்க எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்” என்று கம்பீரம் சிறிதும் குறையாத குரலில் மிடுக்காய் வரவேற்பு நல்கினார்.
“உங்கள் அன்பான வரவேற்பிற்கு மிக்க நன்றி ஐயா!ஆனால்..”
“என்ன ஆனால் என்று இழுக்கிறீர்கள் வந்தியத்தேவேரே?”
“நான் பதவியை ஏற்பதற்கு முன் இங்கு என்னால் சாதிக்க வேண்டிய மிக முக்கியமான வேலை ஒன்று இருக்கிறது.அதற்கு உங்கள் உதவி தேவைப்படுகிறது” என்று தயங்கித் தயங்கிக் கூறினான் வந்தியத்தேவன்.
கூடவே வந்திருந்த திருமலை, “இதோ. என் எஜமானர் உங்களுக்கு எழுதிய ஓலை” என்று ஓலையை மடியிலிருந்து எடுத்து நீட்டினான்.
“அடடே!திருமலை.. நீயும் வந்திருக்கிறாயா.. வந்தியத்தேவரை சந்தித்த மகிழ்ச்சியில் உன்னை நான் காண மறந்துவிட்டேன்” என்று திருமலை நீட்டிய ஓலையை வாங்கிப் படிக்க ஆரம்பித்தார் பூதிவிக்ரமகேசரி.
ஓலைச் செய்தி நீண்ட செய்திகளைத் தாங்கி வரவில்லை. சுருக்கமாகவே இருந்தது. அதைப் படித்து முடித்த வேளார்,
“இதில் உங்களுக்கு வேண்டிய உதவிகளை செய்யுமாறு எனக்குப் பணித்திருக்கிறார் அநிருத்தர்.மற்ற விபரங்களை திருமலையும் வந்தியத்தேவ னும் வாய்மொழியாக அளிப்பார்கள் என்று குறிப்பிட்டுள்ளார்” என்று கூறி இருவரையும் பார்த்தார்.
வந்தியத்தேவன் அனைத்து விபரங்களையும் கூறி அவருக்குக் காரியத்தின் முக்கியத்தைப்பற்றி விளக்கினான்.
“நன்று வந்தியத்தேவா! நிச்சயம் உனக்கு எல்லாவித உதவியும் செய்கிறேன்” என்று உறுதியளித்தார். அத்துடன் நிற்காமல் உடனே காரியத்திலும் இறங்கினார்.
வேளார் கையைத் தட்டினார்.
சேவகன் ஒருவன் உள்வந்து கை கட்டி நின்றான்.
“செவ்வேந்தியை உடனே அழைத்து வா” என்று கட்டளை பிறப்பித்தார்.
அதைக் கேட்ட வந்தியத் தவன், “நாம் மேற்கொண்டிருக்கும் காரியத்திற்குப் பெண் எப்படி உதவுவாள்?” என்று வேளாரிடம் கேட்க..
அதைக் கேட்டுச் சிரித்த வேளார், “பொறு வந்தியத்தேவா. வருபவரைப் பார்த்துவிட்டுப்பின் கேள். இன்னும் உன் பழக்கத்தை நீ மாற்றிக்கொள்ளவில்லை போலிருக்கிறது!” என்று குறையாத சிரிப்புடனே கூறினார்.
சிறிது நேரம் கழித்து செவ்வேந்தி வந்து வணக்கம் கூறிவிட்டுக் கை கட்டி நின்றான். வேளார் செவ்வேந்திக்கு வந்தியத்தேவனையும், திருமலையையும் அறிமுகப்படுத்தினார்.
பிறகு செவ்வேந்தியைப் பார்த்து “செவ்வேந்தி, இவர்கள் ஈழத்தில் சில முக்கிய இடங்களுக்குச் செல்ல வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டிருக்கிறது. அவர்களை அங்கெல்லாம் அழைத்துக் கொண்டு போவது உன் பொறுப்பு. நம் ஆதிக்கத்தின் கீழ் உள்ள இடங்களின் வழியாகவே அவர்களை அழைத்துச் செல். ஆதிக்கம் இல்லாத இடங்களுக்கு மாறுவேடத்தில் போவது உசிதம். கூட நம் வீரர்களை வேண்டுமானால் அழைத்துச் செல். படகு, போர் மரக்கலங்கள் தேவையானால் அதற்கும் ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும்” என்றார்.
செவ்வேந்தி “உங்கள் ஆணைப்படி நடந்து கொள்வேன்” என்றான்.
வேளார் வந்தியத்தேவனைப் பார்த்து “இவன் எங்களின் நம்பிக்கைக்குப் பாத்திரமான சிறந்த ஒற்றன். இவனுக்கு சிங்களமும் நன்றாகத் தெரியும். ஆகையால் இவனுடைய உதவி உங்களுக்கு நிச்சயம் தேவை. இவனிடம் பயணத்தின் முக்கியத்தைப்பற்றிக் கூறிவிடுவது நல்லது. இப்போது உன்னுடைய சந்தேகம் தீர்ந்ததா?” என்றார் நமுட்டுச் சிரிப்புடன்.
வந்தியத்தேவன் தனது அவசரத்தனத்தை உணர்ந்து வெட்கி, மன்னிப்புக் கோரினான்.
செவ்வேந்தி, வந்தியத்தேவனிடம் “எப்போது பயணத்தைத் தொடங்குவதாக இருக்கிறீர்கள்?” என்றான்.
உடன் பதிலளித்த வந்தியத்தேவன் “இப்போதே” என்றான்.
(அடுத்த பகுதி அடுத்த மாதம் )