ரசிகன் – அழகியசிங்கர்

Related image
அந்தத் தெருவில் அந்தப் பங்களாதான் பிரதானமாக வீற்றிருந்தது. வாசலில் ஒரு பிள்ளையார் கோயில். யார் வந்தாலும் வீட்டிற்குள் நுழைவது சிரமம். வீட்டை அந்த அளவிற்கு இழைத்துக் கட்டியிருந்தா ர்கள். வீட்டிற்குள் நுழைவதற்கு முன் வீட்டின்முன் புல்தரையும், உயர்ந்த மரங்களும், பேசுவதற்குத் தோதாக சிமெண்ட் பெஞ்சுகளும், வரிசையாக இரண்டு மூன்று கார்கள். ஒரு குறுகிய காலத்தில் இத்தனையும் சம்பாதித்து, புகழின் உச்சக்கட்டத்தில் இருப்பவள் நீலாஸ்ரீ இயற்பெயர்…….. இயற்பெயர்…… வேண்டாம். அவள் திறமையால் அவளுடைய நடுத்தர வாழ்க்கைச் சூழலிலிருந்து விடுபட்டு இந்த அளவிற்கு உயர்ந்துவிட்டாள். இன்று தமிழகத்தின் ஒரு மூலையில் கோயில்கட்டி அவளைப் பூஜிக்கிறார்கள்.

நீலாஸ்ரீயை தமிழகத்தில் உள்ள காட்டுமிராண்டித்தனமான ரசிகர்கள் பெரிதும் பாதித்துவிட்டார்கள். எந்தக் கூட்டத்திலும், ஏன் ரசிகர்கள் பங்கேற்கும் கூட்டத்திலும் அவளால் கலந்துகொள்ள முடியவில்லை. ஒருமுறை பாதுகாப்பு இல்லாமல் ரசிகர்கள் கூட்டத்தில் மாட்டிக்கொண்டு விட்டாள். எல்லோரும் அவள் மீது. அவள் கட்டியிருந்த துணியெல்லாம் விலகிவிட்டது. எல்லோரும் அவளைப் புணரத் தயாரானதுபோல் தோன்றியது. அன்று எப்படியோ தப்பித்துவிட்டாள். அதன்பிறகு அவளுக்குக் கூட்டத்தைப் பார்க்கும்போதெல்லாம் பயம். தனியாகவே போகப் பயப்படுவாள். அந்த அனுபவம் ஒரு கசப்பான அனுபவம். தமிழ்த் திரைவானில் அவள் நடிக்காத படமே இல்லை. கலை உலகத் தாரகை. அவள் இல்லாமல் தமிழ் படமே எடுக்க முடியாது என்ற நிலை.

இன்று நீலாஸ்ரீ படப்பிடிப்புக்குச் செல்ல ஆயுத்தமாக இருந்தாள். பின் தன் உதவியாளனைக் கூப்பிட்டு, வாசலில் காவல் காத்துக்கொண்டிருக்கும் காவலாளியை அழைத்து வரச் சொன்னாள். காவலாளி வந்து நின்றான். அவளுக்கு அவன் கண்களைப் பார்க்கும்போது தன்னை விழுங்கி விடுவதுபோல் பார்ப்பதாகத் தோன்றும். இத்தனைக்கும் வயதானவன். ஆனால் உதவியாளன் அப்படி இருக்கமாட்டான். நேரிடையாக அவளைப் பார்க்கத் தயங்குவான். மிகவும் பவ்யமாகப்  பழகுவான், அதிகம் படித்தவன், திறமைசாலி.

“அந்த ஆள் இருக்கிறானா?” என்று திரும்பவும் காவலாளியைப் பார்த்து எரிச்சலுடன் கேட்டாள்.

“இருக்கான்மா..” என்றான் காவலாளி.

“ஏன் அவனைத் துரத்த முடியலை?” என்று ஆத்திரத்துடன் கேட்டாள் நீலாஸ்ரீ.

“முடியலைம்மா… அவன் தெருவிலதான் இருக்கான்… அவனைத் துரத்த நமக்கு அதிகாரம் இல்லை.”

“அவன் அந்த இடத்தில் அப்படியே இருக்கானா?”

“ஆமா. கிட்டத்தட்ட 20 நாளா இருக்கான்.  ராத்திரி மட்டும் எங்கோபோய்ப் படுத்துக்கிறான். காலையில அந்த இடத்துக்கு வந்துடுவான்.”

“அவன் என்ன சொல்றான்?”

“உங்களைப் பாத்து சில நிமிஷமாவது பேசணுமாம்.”

“இது மாதிரியான ஆட்களை நம்ப முடியாது. சரி நீ போ…”

காவலாளி அந்த இடத்தைவிட்டு அகன்றான். பக்கத்தில் நின்றிருந்த உதவியாளனை அழைத்து, – “நீ என்ன நினைக்கிறே? அவன் ஏன் என்கூடப் பேசணும்னு நினைக்கிறான்.”
“அதான் தெரியலை. அவன் உங்கள் ரசிகனாம். உங்கள் படம் ஒவ்வொன்றையும் குறைந்தது இருபது தடவையாவது பார்ப்பானாம். ஒவ்வொரு தடவையும் படம் பார்க்கும்போது உங்களுடன் பேசறதாக நினைக்கிறான். ஏன் உங்களோடதான் அவன் வாழறதா சொல்றான்.”

“காட்டுமிராண்டி, காட்டுமிராண்டி”

“உங்களோட பேச ரொம்ப நேரம் கூட எடுத்துக்கமாட்டானாம். ஒரு ஐந்து நிமிஷம் ஒதுக்கினாப்போதுமாம். அப்புறம் அந்த இடத்தைவிட்டுப் போயிடுவானாம்.”

“நான் பேசாட்டி என்ன பண்ணுவானாம்”

“இந்த வாழ்க்கையில ஒரு அர்த்தமும் இல்லையாம். நீங்க பேச விரும்பாட்டித்  தற்கொலை செய்துப்பானாம்”

“அவனுக்குப் பெண்டாட்டி பிள்ளைங்க கிடையாதா?”

“உண்டாம். அவர்களெல்லாம் அவனுக்கு ஒரு பொருட்டுக்  கிடையாதாம்.”

“அவன் கையில ஆயுதம் ஏதாவது வெச்சிருக்கானா?”

“இல்லை”

“போலீஸ்ல சொன்னா என்ன?”

“அதைப்பத்தியெல்லாம் அவன் கவலைப்படமாட்டான்.”

“அப்ப இதுக்கு என்னதான் வழி”

“ஒரு வழிதான் உண்டு. நீங்க ஒரு தடவை அவனைப் பாத்து பேசினாப்போதும்.”

கொஞ்சநேரம் ஒன்றும் பேசாமல், நீலாஸ்ரீ மௌனமாக இருந்தாள். படப்பிடிப்புக்கு எத்தனை மணிக்குக்  கிளம்பவேண்டுமென்று  கேட்டாள். பதினோருமணிக்கு என்றான் உதவியாளன். நீலாஸ்ரீ சாப்பாடுக் கூடத்திற்குச் சென்றாள். அவளுக்காக அப்பா, அம்மா, தம்பி, தங்கை என்று எல்லோரும் காத்திருந்தார்கள். எல்லோரும் கேட்டார்கள் ஒரே கேள்வியை, அவனைத் துரத்தி விடவேண்டியதுதானே என்று.

“நான் ஒருதடவை அவனைப் பாத்துப் பேசினாப் போயிடுவானாம்”

“நீ ஒரு தடவை அவனைப் பார்த்துப் பேசிடேன்” என்றார் அவள் அப்பா.

“உனக்கு அவன்கிட்டே பேசப் பயமா இருந்தா நாங்க பக்கத்தில இருக்கோம். நீ பேசு” என்றான் அவள் தம்பி.

“எனக்குப் பயமில்லை,” என்றாள் நீலாஸ்ரீ. “இன்னிக்கு நானே பேசி அவனை அனுப்பிடறேன்” என்றாள் தயக்கத்துடன்.

சிறிது நேரத்தில் அவள் வீட்டிலிருந்து கிளம்பிவிட்டாள். வாசலில் அவள் கார் கேட் அருகில் வந்தது. வெளியிலிருந்து பார்க்கிறவர்களுக்குக் காரின் உள்ளே இருப்பவர் யாரென்று தெரியாது.

கேட்டைக் காவலாளி திறந்தவுடன், அவள் காரின் உள்ளே இருந்தபடி வெளியில் பார்த்தாள். தாடி மீசையுடன் அவன் அந்தக் காரை ஆவல் பொங்கப் பார்த்தபடி இருந்தான். கார் கேட்டைத் தாண்டிக் கிளம்புவதற்குமுன், காரின்முன் அவன் நமஸ்காரம் செய்வதுபோல் விழுந்தான். டிரைவர் திகைத்துப்போய் காரை நிறுத்தினான். காவலாளி உடனே ஓடிவந்து விழுந்தவனை அப்புறப்படுத்த முயன்றான். அவனைப் பார்த்துச் சத்தமும் போட்டான்.

பதட்டத்துடன் கார் கதவைத் திறந்து வெளியே வந்தாள் நீலாஸ்ரீ. அவள் வீட்டிலுள்ளவர்களும் வெளியே வந்து பார்த்தார்கள். எல்லோரும் விழுந்தவனிடம் பாயத் தயாராக இருந்தார்கள். அவளைப் பார்த்து எழுந்து நின்று அவன் பரக்கப் பரக்கக் கைகூப்பி வணங்கினான். அவன் கண்கள் சிவந்திருந்தன. ஆனாலும் அவளைப் பார்த்ததால் காரணம் புரியாத ஒளி அவன் கண்களில் பாய்ந்தது போலிருந்தது. ஏதோ சொல்ல வாயெடுத்தான். வார்த்தைகளே வெளியே வரவில்லை.

அவள் அவனைப் பார்த்து படபடப்போடு சொன்னாள்.

“நீ எப்ப இந்த இடத்தைவிட்டு ஒழியப் போறே?”  பின் கார் உள்ளே அமர்ந்தாள். வேகமாகக் கார் கதவைச் சாத்தினாள். கார் அந்த இடத்தைவிட்டு உறுமலுடன் நகரத் தொடங்கியது.

 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.