கடிகாரத்தின் முன் நின்று அந்த வயதான பெண்மணி சொல்ல ஆரம்பித்தாள் : “எனக்கு வயதாகிவிட்டது. என்னால் ஸ்டூல் மீது ஏறி கடிகாரத்தைச் சுவரிலிருந்து எடுக்க முடியாது. அப்படியே எடுத்தாலும் நான் தவறி விழுந்துவிடுவேன். அல்லது கடிகாரம் தவறி விழும்,” வயதான பெண்மணி அப்படிச் சொல்லிவிட்டு நகர்ந்துவிட்டாள்.
வயதான பெண்மணியின் மகள் கடிகாரம் முன் வந்து நின்றாள்.
“என்னாலும் முடியாது. காலையிலிருந்து இரவு படுக்கும் வரை ஓயாத ஒழியாத வேலை. பையனையும், பெண்ணையும் பள்ளிக்கூடங்களுக்கு அனுப்புவதிலிருந்து, சமையல் செய்வதிலிருந்து, அலுவலகத்திற்கு அள்ளிப்போட்டுக் கொண்டு ஓடுவதிலிருந்து எனக்கு நேரமில்லாமல் போய்விடுகிறது. என்னை மன்னித்துவிடு, கடிகாரமே” என்று கூறி அவளும் அந்த இடத்தை விட்டு நகர்ந்துவிட்டாள்.
அவளுடைய கணவன் கடிகாரம் முன் நின்றான்.
“கடிகாரமே, நீ பல ஆண்டுகளாக இந்தக் குடும்பத்திற்காகச் செய்த சேவையை யாராலும் மறக்க முடியாது. உன்னைப் பார்த்துதான் காலத்தை நாங்கள் அறிந்து கொண்டோம். அலுவலகம் போகும் நேரத்தை நீ அறிவித்து, எங்களை ஓடவும் செய்தாய். நான் உன்னை எடுத்துக்கொண்டு போய், ரிப்பேர் செய்யலாம். ஆனால் நீ பல மாதங்களாய் செயலிழந்து காணப்படுவதால், உன்னை தொடுவதற்கு அருவருப்பாய் உள்ளது. உன்னைத் தொட்டால், உன் மீது இருக்கும் அழுக்கு என் மீதுபட்டு, தும்பல் வரலாம். இதன் விளைவாய் நோய் தொற்றிக்கொள்ளும். என்னை மன்னித்துவிடு, கடிகாரமே!”
அவர்கள் பிள்ளைகள் கடிகாரம் முன் நின்று, “எல்லார் சொல்வதையும் நாங்கள் கேட்டோம். நாங்கள் செய்வதற்கு ஒன்றுமில்லை. வயதில் பெரியவர்களான அவர்களே உன்னை விட்டுவிட்டார்கள். நாங்கள் என்ன செய்வது?” என்று விலகினார்கள்.
கடிகாரம் வெறுமனே கேட்டுக்கொண்டிருந்தது.
பழைய கடிகாரம்.
ஆகையால், அதன் கடிகாரத்தின் பின்னால் உள்ள பொந்து வழியாக வெளிவந்த பல்லி, அவர்களைப் பார்த்து சொல்வதுபோல் சொன்னது:
“நல்லகாலம் ! கடிகாரத்தை நீங்கள் எடுத்துச் செல்லாமலிருப்பதற்கு நன்றி. என் குடும்பம் சார்பில் உங்களை வாழ்த்துகிறேன்.”
அழகான உருவகக்கதை. – இராய செல்லப்பா நியூஜெர்சியில் இருந்து
LikeLike