சிறுகதைகள்
குவிகம் சார்பில் திருரகுநாதன் ஜெயராமன் ’சிறுகதைகள் – அன்றும்இன்றும்’ என்ற தலைப்பில் பேசினார் – ரஸமான, ரசிக்கத் தகுந்த பேச்சு!
சிறுகதைகள் எப்போதுமே வாசகரை வசீகரிப்பவை. அந்தக் காலம் முதலே மதன காமராஜன் கதைகள், விக்கிரமாதித்தியன் கதைகள், பஞ்ச தந்திரக் கதைகள் மிகவும் பிரபலம். 1942 ல் அல்லயன்ஸ் (அமரர்)குப்புசாமி ஐயர் அவர்கள் ‘கதைக் கோவை’ என்ற சிறுகதைத் தொகுப்பை வெளியிட்டார் என்பது பலருக்குத் தெரிந்திருக்காது!
பின்னர் புதுமைப்பித்தன், ந.பிச்சமூர்த்தி, சு.செல்லப்பா, க.நா.சு, கு.அழகிரிசாமி, லாசரா, தி.ஜானகிராமன், அசோகமித்திரன், இந்திரா பார்த்தசாரதி (இன்னும் பலர் பெயர் விட்டுப் போயிருக்கலாம்) போன்றோர் சிறுகதை இலக்கியத்தைத் தங்கள் அரிய படைப்புகள் மூலம் செம்மையாக்கினர். பின்னர் கல்கி, தேவன், சாவி, ரா.கி.ரங்கராஜன், ஜ.ரா.சு., சுப்ரமணிய ராஜு, மாலன், சுஜாதா, ஐராவதம் போன்றோர் பல மாற்றங்களைப் புகுத்தினர். எஸ்.ராமகிருஷ்ணன், ஜெயமோகன், பிரபஞ்சன், இவர்கள் இன்றைய சூழலுக்கேற்ற கதைகளைப் படைக்கின்றனர். ஆர்.சூடாமணி, சிவசங்கரி, அனுராதா ரமணன், இந்துமதி, வாஸந்தி, அம்பை போன்ற எழுத்தாளர்கள் தங்கள் சிறுகதைகள் மூலம் குடும்பம், சமூகம் இவற்றில் பெண்களின் நிலை குறித்து விசனப்பட்டு, பெண்கள் உரிமை, விடுதலை என குரல் எழுப்பியுள்ளனர். நான் குறிப்பிட்டுள்ள எழுத்தாளர்கள், சிறுகதை எழுதுபவர்களில் நூற்றில் ஒரு பங்கு இருக்குமா என்பதே சந்தேகம் – எல்லோரிடமும் சிறுகதைகள் இருக்கின்றன – எல்லோரும் எழுதிக் கொண்டிருக்கின்றார்கள்!
சிறுகதைக்கு இலக்கணம் என்ன? இந்தக் கேள்விக்கு விடையளிப்பது என்பது குருடர்கள் யானையைப் பார்த்த கதை போல்தான்!
கதையின் நீளம் என்ன? சின்னச் சின்ன கதைகள் (தேவன் போல்) அரைப்பக்கம் முதல் பதினைந்து இருபது பக்கங்களுக்கு சிறுகதைகள் நீள்கின்றன!
கதைக்கு ஓர் ஆரம்பம், உடல், முடிவு அவசியம். இன்றைய நவீன சிறுகதைகளில் ஒரு நிகழ்வு அல்லது ஒரு சிறிய எண்ணம் சுவைபட சொல்லப்பட்டு, மற்றவற்றை வாசகர்களின் கற்பனைக்கு விட்டுவிடும் அதிசயம் நடக்கிறது!
சுஜாதாஅவர்களின் ‘புதிய எழுத்தாளர்களுக்கு 11 யோசனைகள்’ கட்டுரை பல விதங்களில் சிறுகதைக்கான தேவைகளைச் சொல்லுகிறது!
பிரபல ஆங்கிலச் சிறுகதை எழுத்தாளர் ஓஹென்றி மற்றும் ஜெஃப்ரிஆர்ச்சர் போன்றோரின் கதைகள் பிரபலமானதற்குக் காரணங்கள், அவற்றின் சுவாரஸ்யமும், எதிர்பாராத முடிவுகளும்தான்!
திரு ரா கி ரங்கராஜன் எழுதியுள்ள ‘எப்படிக் கதை எழுதுவது?’ என்ற புத்தகத்தில், சிறுகதையின் முடிவை முன்னமேயே தீர்மானம் செய்து, பிறகு அதற்கேற்றார்போல் கதை புனையச் சொல்கிறார் – எதிர்பாராத திடீர் முடிவுக்கு இது உதவும்!
வெறும் சுவாரஸ்யம் மட்டுமே சிறுகதைக்குப் போதுமா? தொடக்கம் முதல், இறுதி வரை வாசகரைக் கட்டிப் போடுவது சுவாரஸ்யமான நடையும், அடுத்தடுத்து வரும் காட்சியமைப்புகளும்தான். ஆனாலும், அந்தக் கதையை மனதில் நிறுத்துவது, அதன் கருப்பொருளும், அது சொல்லும் சங்கதியும்தான் என்பது என் எண்ணம்.
பிறமொழி சிறுகதைகள் பலவும் இப்போது மொழி பெயர்க்கப்பட்டுத் தொகுப்புகளாகக் கிடைக்கின்றன. மலையாளம், கன்னடம், தெலுங்கு, மராட்டி, வங்காளம் எனப் பல தொகுப்புகள் – இந்திய கலாச்சாரம் பேசுகின்றன!
இந்திய மொழிகளில் வெளி வந்துள்ள நல்ல சிறுகதைகளைத் தேர்ந்தெடுத்து, ஆங்கில மொழிமாற்றம் செய்து, இரண்டு தொகுப்புகளாகக் கொண்டுவந்துள்ளனர் – தொகுத்தவர் குஷ்வந்த் சிங். தமிழிலிருந்து அண்ணாதுரை, கருணாநிதி, அம்பை ஆகியோரது சிறுகதைகள் அவற்றில் இடம்பெற்றுள்ளன!
சிறுவயதில் படித்த ஓஹென்றியின் ‘THE GIFT OF THE MAGI’ ஒரு நல்ல சிறுகதைக்கு உதாரணம் – குறைந்த வருமானம், கைக்கும் வாய்க்கும் சரியாக இருக்கும் கணவன் மனைவி – மனைவிக்கு நீண்ட அழகிய கூந்தல்; ஆனால் அதனைப் பராமரிக்கத் தேவையான சீப்பு (DRIER OR STRAIGHTENER) வாங்க வசதியில்லை! கணவனின் அழகான கைக்கடிகாரம் – ஸ்ட்ராப் மாற்ற வசதியில்லாமல் பெட்டியில்! கிருஸ்துமஸ் பண்டிகைக்கு பரிசுகள் வாங்கப் பணம் இல்லை. அன்புக்கும், காதலுக்கும் குறைவே இல்லை. பண்டிகைக்கு முதல் நாள் மனைவி அழகிய ஸ்ட்ராப் வாங்கி வந்து, கடிகாரத்தைக் கேட்கிறாள் – கட்டி அழகு பார்க்க!
‘உனக்கு ஏது பணம்?’
’பராமரிக்க முடியாத என் முடி எதற்கு? முடியை வெட்டி, விற்று உன் வாட்ச்சுக்கு ஸ்ட்ராப் வாங்கினேன்’
அங்கே ஒரு மெளனம் விழுகிறது.
கையைத் தலைக்குத் தாங்கலாக வைத்துக்கொண்டு, கணவன் சொல்கிறான் ‘உன் அழகிய கூந்தலுக்காகத்தான் இந்த சீப்பை வாங்கி வந்தேன் – கையில் கட்டிக்கொள்ள முடியாத வாட்ச்சை விற்று!’
இருவருக்கும் இப்போது அந்தப் பரிசுகள் தேவைப்படாது!
எனக்குப் பிடித்த, மறக்க முடியாத சிறுகதை இது – இதுதான் சிறுகதை இலக்கணமோ?