பணி ஓய்வு பெற்ற கவிஞர் ஒருவரிடம் அவரது நண்பர், “இப்போது எப்படி பொழுதைப் போக்குகிறீர்கள்?”என்று கேட்டார். அதற்குக் கவிஞர் “நான் இரண்டு முரண்பட்ட கவிதைகளை விடையாகச் சொல்கிறேன். நீங்கள் எதை வேண்டுமானாலும் விடையாகக் கொள்ளலாம் ” என்றார்.
இதோ அந்த முரண்பட்ட கவிதைகள்
( குறிப்பு – இரண்டு ஆண்டுகளுக்கு முன் நான் எழுதியவை.
மீள்பதிவு )
விரும்பிய வாழ்வு
நித்தநடைப் பயிற்சியிலே புலரும் காலை
நிகரில்லா இயற்கைஎழில் கொஞ்சக் கண்டும்
சித்தமெல்லாம் சிவனென்று கோயில் சென்றும்
சிற்றுதவி மற்றவர்க்குச் செய்து கொண்டும்
புத்தகங்கள் பலபடித்துக் கொண்டும், என்றும்
புதிதாகச் சிலவற்றைக் கற்றும், பெற்றும்,
இத்தனைநாள் நான்விருப்பப் பட்ட வாழ்வை
இப்போது வாழ்கின்றேன், இறைவா நன்றி !
அனுபவிக்க ஆயிரம்
தெம்புடனே ஊர்சுற்ற வண்டி உண்டு;
திருக்கோயில் பஜனையிலே சுண்டல் உண்டு;
வம்பளக்க வாயுண்டு, பொழுதைப் போக்க
வண்ணவண்ணத் தொலைக்காட்சி நிகழ்ச்சி, ஓய்வுச்
சம்பளமும் பங்குச்சந்தை வரவும் உண்டு
சாப்பிடவோ விடுதியுண்டு வீதி தோறும்.
அம்பலத்தே ஆடுகின்ற ஈசா, வாழ்வை
அனுபவிக்க ஆயிரந்தான் வழிகள் உண்டு !