சரித்திரம் பேசுகிறது! –யாரோ

புனித தாமஸ்

 

சரித்திரம்…
மன்னர்களால் மட்டுமே பதியப்படுவதில்லை.
மன்னர்கள் பிறக்கின்றனர்.
சாதிக்கின்றனர்.
இறக்கின்றனர்.
சிலர் உலகை மாற்றும் செயல் செய்தனர்.
சரித்திரம் அவர்களை சுமந்தது.

சமயங்களாலும், இறையருளாளர்களாலும், குருமார்களாலும் உலகில் பெரும் மாற்றங்கள் விளைந்தன.
சில… காலவெள்ளத்தில் காணாமல் போயின.
சில… காலத்தைக் கடந்து மனித மனங்களில் குடியேறி… என்றும் இடம் பிடிக்கின்றன.

புத்தருக்குப் பிறகு இயேசுநாதரது வாழ்வும் தியாகமும் சரித்திரத்தைப் புரட்டி எடுத்தது.
இயேசுவின் புகழ்பரவ அவர் சீடர்கள் பெரும் பங்கேற்றனர்.
அப்படி முனைந்த ஒரு சீடரின் கதை இது..

முன்கதை:

இயேசுநாதர் ஜூதாவிற்குச் செல்லத் திட்டமிட்டார்.

அவரது சீடர்கள் – அங்கு அவருக்குத் தீங்கு விளையும் என்று அவரை எச்சரித்தனர்.

ஒரு சீடரான தாமஸ் :

“நாமும் செல்வோம்.. அவருக்கு எது நேர்ந்தாலும் நாமும் அவருடன் இருப்போம். துன்பங்களை எதிர்கொள்வோம்… மரணத்தைக் கண்டும் மயங்கிடோம்’ – என்றார்.

அந்தக் கடைசி நாளிரவு விருந்து (Last Supper) நடைபெற்றது.

இயேசு பேசினார்:

“நான் மறுபடியும் வருவேன். வந்து உங்களனைவரையும் என்னுடன் சேர்த்துக்கொள்வேன். என்னிருப்பே உங்களிருப்பாகும். நான் செல்லும் பாதையும் உங்களுக்குத் தெரியும்”

தாமஸ் வினவினார்:

“அந்த வழியை எவ்வாறு நாங்கள் அறிவோம்?”
இயேசு தாமசை நோக்கி:

“நானே வழி.. நானே உண்மை.. நானே வாழ்க்கை”

நாட்கள் சில நகர்ந்தன.

சரித்திரத்தின் அவரது மாபெரும் உயிர்த்தியாகம் சிலுவையில் நிகழ்ந்தது.

பின்னர் அவர் உயிர்த்தெழுந்தபோது அதை அவரது சீடர்கள் கண்டனர்.

தாமஸ் அன்று அங்கு இல்லை.

தாமசை சந்தித்த சீடர்கள் இயேசு உயிர்த்தெழுந்ததைப் பற்றிக் கூறினர்.
தாமஸ் அதை உடனே அங்கீகரிக்காமல்
‘அதற்கு என்ன ஆதாரம்?’ – என்று வினவினார்.
“நான் இயேசுவின் கைகளில் அவரது நகங்களைப் பார்த்து, என் விரல்களால் அந்த நகங்களைத் தொட்டு, என் கரங்களால் அவரைத் தடவிப் பார்த்த பின்தான் நம்புவேன்”
இதுவே சீடர் தாமசுக்கு ‘சந்தேகிக்கும் தாமஸ்’ (Doubting Thomas) என்று பெயர் வரக் காரணம்!

ஒரு வாரம் சென்றது.

சீடர்கள் அனைவரும் ஒரு வீட்டில் கூடினர்.
தாமசும் அங்கிருந்தார்.
தாளிடப்பட்ட வீட்டில்…
திடீரென்று…
இயேசுநாதர் மறு தரிசனம் தந்தார்.
“அமைதி என்றும் உங்கள் அனைவரையும் தழுவட்டும்” – என்றவர்.
தாமஸ் பக்கம் திரும்பி:
“தாமஸ்…எனது உடல் காயங்களைத் தொட்டுப் பார்ப்பாயாக’ என்றார்.

மேலும்.. இயேசுநாதர் முறுவல் கொண்ட முகத்துடன்:
“என்னைப் பார்த்ததால் நீ என்னை நம்புகிறாயா? என்னைக் காணாமல் இருந்தாலும் என்னை நம்புகிறவர்களே ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்!!”

வெட்கம்கொண்ட தாமஸ் உண்மையை உணர்ந்தார்.

‘என் தலைவன்… என் இறைவன்…’ என்று புளகித்தார்.
இயேசுவின் தெய்வத்தன்மையை தாமஸ் முதன் முதலில் உலகில் வெளிப்படுத்தினார்.

பின்னாளில்,

இயேசுவின் தாய் ‘மேரி மாதா’ – மரணம் அடைந்ததை சீடர்கள் ஜெருசலேத்தில் கண்டனர். அச்சமயம் தாமஸ் இந்தியாவில் இருந்தார். மேரியை அடக்கம் செய்த பேழையில் தாமஸ் அதிசயமாக அனுப்பப்பட்டு அங்கு மேரி மாதா சுவர்க்கம் செல்லும் காட்சியைக் கண்டார். மேரி மாதாவின் இடையிலிருந்து அவரது
அரைகச்சை கீழே விழுந்தது. தாமஸ் அதை எடுத்துக் கொண்டார்.
இப்பொழுது இவரது கூற்றை மற்ற சீடர்கள் நம்பாது ‘சந்தேகித்தனர்!’!

சந்தேகம் ஒரு தொத்து வியாதி போலும்!!

பிறகு காலிப் பேழையையும் , அந்த அரைக்கச்சையையும் கண்ட பின் சந்தேகம் தீர்ந்தனர்!

(மேரி மாதா சுவர்க்கம் செல்லும் காட்சி)

தாமஸ் இந்தியா சென்று பணி செய்வதில் விருப்பமில்லாமல் இருந்தார்.
இயேசுநாதர் அவர் கனவில் வந்து:
‘அஞ்சாதே தாமஸ்! இந்தியா சென்று நமது வாக்கைப் பரப்புவாயாக. எனது அருள் என்றும் உனக்கு உண்டு’.

வருடம்: 52 AD

தாமஸ் நான்கு வருடம் சிந்து நாட்டில் காலம் கழித்தார்.

பின் இந்தியாவின் கேரளப் பகுதியில் மலபார் கடற்கரைச்         சாலையை வந்தடைந்தார். அங்கு ஆறு வருடங்கள் வசித்தார். அங்கு மதப் பிரசாரத்தில் ஈடுபட்ட தாமஸ், பின்னர் கடல் வழியாக மயிலாப்பூருக்கு வந்தார்.

ஒரு நாள்… தாமஸ் மயிலையில் (இந்நாளின் சாந்தோம்) கடற்கரையில் அமர்ந்து தவத்தில் இருந்தபோது….
மாபெரும் மரக்கட்டைகள் அலைகளால் தள்ளப்பட்டு…
கரையில் ஒதுங்கின.
மன்னன் மகாதேவனுக்கு இச்செய்தி உடன் அறிவிக்கப்பட்டது.
அவர் யானைகளுடன் அங்கு வந்தார்.
தாமஸ் புன்முறுவலுடன் இக்காட்சியைக் கண்டு கொண்டிருந்தார்.
பல யானைகள் பலவாறு முயன்றும் அந்த மரக் கட்டைகளை அசைக்கவும் இயலவில்லை.
தாமஸ் தனது அரைக்கச்சையை உபயோகித்து அந்த கட்டைகளை நீரிலிருந்து கரைக்கு இழுத்தார்.
மன்னன் வியப்புக்கு ஆளானான்.
‘இந்த மரக்கட்டைகளை உங்களுக்குத் தானமாகத் தந்தேன்” – மன்னன்.
தாமஸ் அந்த கட்டைகளை வைத்து ஒரு சிறிய தேவாலயத்தைக் கட்டினார்.

மன்னருக்கு தாமசை பிடித்திருந்தது.
ஆனால் அவரது மந்திரிமார்கள் அவரை விரும்பவில்லை.
அவர்களது தொந்தரவு தாங்கமுடியாமல் நான்கு கல் தொலைவிலிருந்த குன்று ஒன்றில் (இன்றைய செயின்ட் தாமஸ் மவுண்ட்) ஒரு குகையில் குடியேறினார்.

இங்கும் தீவிர மதப்பிரச்சாரத்தில் ஈடுபட்டதால் அவருக்குக் கடும் எதிர்ப்பு கிளம்பியது. எனவே சைதாப்பேட்டை அருகில் இருக்கும் சின்னமலையில் சில காலம் மறைந்து வாழ்ந்தார். அப்போது அருகில் இருக்கும் பெரியமலை என்று அழைக்கப்பட்ட இன்றைய செயின்ட்தாமஸ் மவுண்ட்டிற்குச் சென்று ஜபம் செய்வார்.

இன்றும் அந்தக் குகையின் கற்சுவற்றில் தாமசின் கை விரல்கள் பதிந்த தடயம் உள்ளாதாம்.
அன்று அங்கு ஒரு அதிசய நீரூற்று..
அவர் மீது நம்பிக்கை கொண்டு வருபவர் அந்த ஊற்றின் நீரைப் பருகினால் அவர்கள் தங்கள் குறை நீங்கப்படுவார்களாம் – உடல் நலம் பெறுவார்களாம்.

டிசம்பர் 21 , 72 AD :

மயிலாப்பூர் காளி பூசாரிகள் தாமசிடம் கோபம் கொண்டனர்.
தங்கள் தெய்வத்தை அவர் அவமதிப்பதாகக் கருதினராம்.
மேலும் தங்களைப் பின்பற்றுபவர்களை மத மாற்றம் செய்தாரென்றும் குற்றம் சாட்டினர் .
மதப்பூசல் தொன்று தொட்டு வந்துள்ளது.
ஈட்டிகளாலும், கற்களாலும் அந்தப் பூசாரிகள் அவரைக் கொன்றனர்.
தாமஸ் மயிலாப்பூர் மன்னனால் சகல மரியாதையுடன் அடக்கம் செய்யப்படுகின்றார். அவ்வாறு அவர் அடக்கம் செய்யப்பட்ட இடமே இன்றைய சாந்தோம் ஆகும்.
சில நாள் கழித்து – மன்னன் மகாதேவனின் மகன், இளவரசன் பெரும் நோயுற்றிருந்தான். தாமசின் சவப் பேழையைத் திறந்து அந்த எலும்பை வைத்து மன்னர் தன் மகனைக் குணப்படுத்தினாராம்.

Martyrdom of St. Thomas, by Peter Paul Rubens, dating to about 1636. Credit: Ophelia2, Wikimedia Commons

(13ம் நூற்றாண்டில் வந்த மார்கோபோலோ – மயிலைத் துரத்திய வேடன் ஒருவன் தவறுதலாக எய்த அம்பு தாமசைக் கொன்றது என்று எழுதியுள்ளார்)
தாமசின் எலும்புகள் மயிலாப்பூர் கொண்டு வரப்பட்டு அவர் எழுப்பிய தேவாலயத்திற்குள்ளே புதைக்கப்பட்டது.

தாமஸ் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில், அதாவது மயிலாப்பூரில், அவரை மதித்து தமிழக அரசனால் கட்டப்பட்ட ஆலயம் – கபாலீஸ்வரர் கோவில். அந்தக் கோவிலை கி.பி 16ஆம்  நூற்றாண்டில் வந்த போர்சுகிசியர்கள் இடித்துவிட்டு சாந்தோம் தேவாலயத்தினை கட்டுகின்றனர். அவ்வாறு இடித்த கபாலீஸ்வரர் கோவிலை வேறு இடத்தில் கட்டுகின்றனர்.
(எப்புடி? எதையும் நம்பிப் பொங்கி எழவேண்டாம்!
எது எவ்வளவு உண்மையோ?
‘யாரோ’ அறிவர்?
கதை கேட்டோமோ ..காப்பி குடித்தோமா என்று இருக்க வேண்டும்.. சரியா!!)

போர்த்துகீசியர்கள் புனித தாமஸின் நினைவாகத்தான் மயிலாப்பூருக்கு அருகில் அமைத்துக் கொண்ட தங்களின் இருப்பிடத்திற்கு சாந்தோம் என்று பெயரிட்டனர். அதாவது புனித தோமா (SAN+THOME) என்று அர்த்தம். ஆங்கிலேயர்கள் ஜார்ஜ் கோட்டையில் குடியேறியபிறகு, செயிண்ட் தாமஸ் மவுண்ட்டிற்கு வந்து வழிபட வசதியாக ஒரு சாலை வேண்டும் என்று நினைத்ததின் விளைவுதான் இன்றைய மவுண்ட்ரோடு… அண்ணா சாலை!
இந்த மலையைச் சுற்றிலும் நிறைய ஐரோப்பியர்கள் வசித்ததால் இதனை உள்ளூர் மக்கள் பரங்கி மலை (பரங்கியர் வசிக்கும் மலை) என்று அழைத்தனர்.

சரித்திரம் இப்படி பல மணமுள்ள மலர்களைத் தன்னுள் அடக்கி வைத்துள்ளது.
இந்த சிறு மலர்களைச் சேர்த்து மாலையாக்குவதே நமது நோக்கம்.
தவறும், குறையும் இல்லாது சரித்திரம் எழுதுவது என்பது நடவாதது.
ஆகவே … நண்பர்களே… பொறுத்தருளுங்கள்…

வேறு மலர் தேடி இந்த வண்டு பறக்கிறது…

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.