அத்தியாயம் 09. புத்த ஸ்தூபி
வந்தியத்தேவன், திருமலை, செவ்வேந்தி மூன்று நபர்களும் ஏறிய புரவிகள் அனுராதபுரத்தின் தென்மேற்குத் திசையில் விரைந்து கொண்டிருந்தன. வந்தியத்தேவன் பயணத்தின் நோக்கத்தை செவ்வேந்திக்கு விளக்கிக்கொண்டே வந்தான். முடிவில் அவர்கள் அடர்ந்த காட்டுப் பகுதியை வந்தடைந்தார்கள். அங்கிருந்து ஒற்றையடிப் பாதையில் சிறிது நேரம் சென்றார்கள். அது ஒரு மைதானத்தில் கொண்டு வந்து சேர்த்தது. அங்கு அந்த பிரம்மாண்டமான வட்ட வடிவமான உயர்ந்த சுவர்கள் எழுப்பிக் கட்டப்பட்ட கோவில் ஒன்றைக் கண்டார்கள். அதன் நடுவே மிகவும் உயரமான ஒரு புத்த ஸ்தூபியும் இருந்தது. கோவிலைச் சுற்றிலும் நிறைய ஜன்னல்கள் காணப்பட்டன. ஒரே ஒரு வாயில் மட்டும் இருந்தது. மைதானத்தைச் சுற்றிலும் காட்டுச் செடிகளும், புதர்களும் தாறுமாறாய் வளர்ந்து, கவனிப்பார் அற்று மண்டிக் கிடந்தன. அது இந்தப் பகுதிக்கு வந்து போவோர் மிகக் குறைவு என்பதைத் தெரிவித்தது.
கோவிலை அடைந்ததும் மூவரும் குதிரையிலிருந்து இறங்கி முகப்பு வாயிலுக்கு வந்துசேர்ந்தார்கள். அதிசயமாகக் கதவு திறந்திருந்தது! சுற்றுமுற்றும் பார்த்த அவர்கள் உள்ளே எட்டிப் பார்த்தார்கள். ஒரு புத்த பிட்சு உள்ளிருந்து வெளியே வந்து,
‘புத்தம் சரணம் கச்சாமி, தர்மம் சரணம் கச்சாமி, சங்கம் சரணம் கச்சாமி’
என்று கூறி அவர்களை வணங்கிவிட்டு சுவற்றில் மாட்டியிருந்த தீப்பந்தத்தைச் சுட்டிக் காட்டிவிட்டு வெளியில் சென்றார். இருவரும் வெளியில் வந்து சுற்றுமுற்றும் பார்த்தபோது அவர் கோவிலில் இருந்து வெளிநோக்கிச் சென்றுகொண்டிருப்பதைக் கண்டார்கள்.
வந்தியத்தேவன் “இந்த இடத்தைச் சுத்தம் செய்து கவனித்துவரும் புத்த பிட்சு போலும்! திறந்து வைத்துவிட்டு அவர் இருப்பிடத்திற்கு செல்லுகிறார்! நல்ல சமயம். அவர் திரும்பி வருவதற்குள் நமது காரியத்தை முடிக்க வேண்டும்” என்றான்.
செவ்வேந்தி தீப்பந்தத்தை சுவற்றிலிருந்து எடுத்து கையில் உயரத் தூக்கியபடி வர, அனைவரும் கோவிலினுள் அடியெடுத்து வைத்தார்கள்.
கோவிலின் வட்டவடிவமான சுவற்றில் வர்ணக் கற்களால் ஒட்டப்பட்டு வரைந்த சித்திரங்கள் மேலும் கீழுமாக பெரியதும் சிறியதுமாக நிறைய காணப்பட்டன. முதலில் ஸ்தூபியைச் சுற்றி ஒரு தடவை வலம் வந்து முன்னோட்டம் விட்டார்கள்.
சித்திரங்கள் மிகவும் அபூர்வமாகவும் அற்புதமாகவும் காணப்பட்டன. சில புத்தரின் வாழ்க்கை வரலாற்றைக் குறித்தன. சில ஜாதகா கதைகளிலிருந்து கூறப்படும் நிகழ்ச்சிகளைச் சித்தரித்தன. வேறு சிலவோ புத்தரின் முந்தைய அவதாரங்களான போதிசத்வாவைப் பற்றி இருந்தன. ஒரு சில எதைப் பற்றி வரையப்பட்டிருக்கிறது என்று புரியாமல் இருவரும் விழித்தார்கள்! கடைசிப் பகுதி வெறுமையாக சித்திரங்களற்று இருந்தது.
“இந்த பெரும் சாதனையைச் செய்தவர்கள், இறுதிப் பகுதியை வரையாமல் விட்டதற்கு ஏதாவது ஒரு நல்ல காரணம் இருக்க வேண்டும்” என்றான் வந்தியத்தேவன் மற்ற இருவரையும் நோக்கி.
மறுபடியும் இருவரும், செவ்வேந்தி முன் செல்ல இரண்டாவது சுற்றைத் தொடங்கினார்கள்.
“புத்தர், ஜாதகா, போதிசத்வா போன்ற சித்திரங்களை ஒதுக்கி வேறு ஏதாவது மாறுதலாகத் தென்படுகிறதா, என்று பார்’ என்று வந்தியத்தேவன் திருமலையிடம் சொன்னான்.
கடைசியாக வெறுமையாய் இருந்த இடத்திற்கு முந்தைய பகுதியை அவர்கள் வந்தடைந்தார்கள். அங்கு வரையப்பட்டிருந்த கிரீடம் ஒன்றை வந்தியத்தேவனின் நுணுக்கக் கண்கள் கண்டு பிடித்தன. அதை திருமலையிடம் கூறினான். இருவரும் அடுத்திருந்த சித்திரங்களை ஆழமாக ஆராய ஆரம்பித்தார்கள்.
அந்த விசித்திரச் சித்திரங்கள் அவர்கள் எதிர்பார்த்து வந்த மர்ம செய்தியை தெரியப்படுத்துவதற்காகவே வரையப்பட்டிருப்பதாக இருவரும் முடிவு கட்டினார்கள்! இதனை மறுபடியும் கருத்திருமனின் கூற்றிலிருந்து நினைவுபடுத்திப் பார்த்தான் வந்தியத்தேவன்
கிரீடத்திற்கு அருகில் கழுத்தில் அணியும் வேலைப்பாடுடன் கூடிய ஆபரணம் ஒன்று வரைந்திருந்தது. யானைமேல் தேவர் ஒருவர் அமர்ந்திருந்தார். யானை வெள்ளை நிறமாக இருந்தது. அந்த யானை மேகத்தில் பறப்பதாக சித்தரிக்கப்பட்டிருந்தது. பின்னர் மன்னர் ஒருவர் சிம்மாசனத்தில் அமர்ந்திருந்தார். யானையிலிருந்து இறங்கியிருந்த தேவர் மன்னருக்கு முதலில் கிரீடத்தைச் சூட்டினார். பிறகு அந்தஆபரணத்தை மன்னர் கழுத்தில் அந்த தேவரே அணிவிப்பது போல் வரையப்பட்டிருந்தது.
அதன் பிறகு புத்தர்பிரான் மேகத்தில் பறந்து வந்துகொண்டிருப்பதைப்போல் சித்தரிக்கப்பட்டிருந்தது. பின்பு புத்தர் அலைகள் சூழ்ந்த ஒரு நிலப்பரப்பில் இறங்கியிருப்பதைத் தெரிவித்தது. தொடர்ந்து வரையப்பட்டிருந்த சித்திரத்தில் அதே நிலப்பரப்பும், அதில் இரண்டு கொம்புகளுடன் கூடிய பூதம் ஒன்றும் வரையப்பட்டிருந்தது. ஆனால் புத்தர் இதில் இல்லை. இறுதியில் கடற்கரை ஓரத்தில் கருங்கல்லினால் கட்டப்பட்ட ஒரு சிறிய வீடு. சித்திரங்கள் இதோடு முடிவடைந்தன.
இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டு சித்திரங்கள் சொல்லும் செய்தியை அறிந்துகொள்ள முயன்றார்கள். சிறிது நேரம் சென்றது.
வந்தியத்தேவன் “உனக்கு ஏதாவது புரிகிறதா?” என்று திருமலையிடம் கேட்டான்.
“நன்றாகவே புரிகிறது.ஆனால்.. சில புதிர்களும் உள்ளன” என்றான் திருமலை.
“சரி; வா!மீண்டும் அதை உறுதிப்படுத்திக் கொள்வோம்” என்று கூறிய வந்தியத்தேவன் ஒவ்வொன்றாகப் பார்த்து ஆரம்பித்தான்.
“கிரீடம்தான் மணிமகுடம் என்றும், ஆபரணம்தான் இரத்தின ஹாரம் என்பதும் தெள்ளத் தெளிவாகிறது!”
வந்தியத்தேவன் வெண்மையான யானையைச் சுட்டிக்காட்டி “இது தேவேந்திரனின் வாகனமான ஐராவதமாக இருக்கலாம்!” என்றான்.
“அப்படியானால் அதில் அமர்ந்து பறந்து வருபவர் தேவேந்திரனாக இருக்க வேண்டும்” என்று முடித்தான் திருமலை.
“நன்கு!கண்டுபிடித்துவிட்டாய்! மன்னனின் பின்பக்கத்தில் கொடி ஒன்று பறப்பதை நோக்கினாயா? அதில் மீன் சித்தரிக்கப்பட்டிருக்கிறது பார்! மன்னர் பழம் பெருமை வாய்ந்த பாண்டியனாய் இருக்க வேண்டும்.”
“மணிமகுடத்தைச் சூட்டி தேவேந்திரன் இரத்தின ஹாரத்தை பரிசாக அணிவிப்பது இப்போது தெளிவாகிறது!”
‘ஆம்!இப்போது புத்தர் முதன் முதலில் பறந்து வந்து ஈழத்தில் இறங்கியதாகக் கூறப்படும் இடம் இது என்று நினைக்கிறேன்.! இடம் அலைகள் சூழ்ந்த நிலப்பரப்பைக் குறிக்கிறது! இடத்தின் பெயர் கூட..”
“தீவு!ஆம். இப்போது ஞாபகம் வருகிறது. போத தீவு!”
“அடுத்ததை நோக்கினாயா?அதில் சித்தரிக்கப்பட்டிருக்கும் இரட்டைக் கொம்பு உள்ள பூதம்.. இது என்னவாக இருக்கும்?”
“அதே போத தீவில் இருப்பதாக வரையப்பட்டிருக்கிறது. பூதத்திற்கும் போத தீவுக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கலாம்!”
‘சந்தேகமில்லை!போத தீவின் பெயர் நாளடைவில் மருவி பூத தீவாக மாறியதைத்தான் இது தெரிவிக்கிறது” என்றான் வந்தியத்தேவன்.
மறுபடியும் வந்தியத்தேவன் “பொக்கிஷங்கள் பூதத் தீவில்தான் மறைத்து வைக்கப்பட்டிருக்கின்றன. எனினும் எனக்கு ஒரு சந்தேகம். அனுராதபுரத்திற்கு பக்கத்தில் இருக்கும் இந்த புத்த ஸ்தூபியும், பூத தீவும் நம் கட்டுப்பாட்டில்தானே இருக்கின்றன. அப்படியிருக்க மகிந்தன் ஏன் அதை இந்த இடங்களில் கொண்டு வந்து எப்படி வைத்தான்? அதுதான் புரியவில்லை!” என்றான்.
“அதுதான் மகிந்தனின் மிகப்பெரிய சாதுர்யம்!! இதை வேண்டுமென்றே செய்திருக்க வேண்டும். பொக்கிஷங்கள் சோழர் கட்டுப்பாட்டு இடங்களில் இருக்க வாய்ப்பில்லை என்றும் மகிந்தன் பிரதேசங்களிலேயே தேட முயல்வார்கள் என்பதுதான் அவனுடைய சித்தாந்தம்!” என்று பதிலளித்த திருமலை “ஆனால் பூத தீவில் எங்கு மறைக்கப்பட்டிருக்கிறது என்பதை சித்திரங்கள் விளக்கவில்லையே” என்றான்.
வந்தியத்தேவன் “கடற்கரையில் தனித்திருக்கும் வீட்டை கவனித்தாயா? உன் கேள்விக்கான விடை அதற்குள்ளிருந்து கிடைத்தாலும் கிடைக்கலாம்” என்றான்.
“சரி; மேற்கொண்டு என்ன செய்வது?அனைத்துச் சித்திரங்களையும் பார்த்தாகிவிட்டது. அடுத்து..?” என்று வினா எழுப்பினான் திருமலை.
“மீண்டும் பயணம்தான்.வா, செல்வோம்” என்று திரும்பினார்கள் மூவரும்.
செவ்வேந்தி சுவற்றில் தீப்பந்தத்தைப் பொருத்தினான். இருவரும் இதுவரை சேகரித்த விவரங்களில் திருப்தி அடைந்தவர்களாய் வெளியில் வருவதற்கும் பிட்சு இருப்பிடத்திலிருந்து திரும்பி வருவதற்கும் சரியாய் இருந்தது. நன்றி கூறிவிட்டு மூவரும் புரவிகளில் ஏறி மாதோட்டத்தை வந்தடைந்தார்கள்.
(தொடரும் )