திக்பிரமையடைந்து, அலுப்போடு, சலிப்போடு, ஓய்ந்து போய்
உட்கார்ந்திருந்தார்கள் சரவணனும், மீனாட்சியும். எல்லாம் நல்ல
படியாகத்தானே போய்க்கொண்டிருந்தது. ஆனா கடைசியிலே
யமுனா இப்படி ஒரு பெரிய குண்டைத் தூக்கிப் போட்டு விட்டாளே!
யமுனாவின் ஜாதகக் கட்டை எடுத்து வரன் தேட ஆரம்பித்து
நேற்றோடு ஐந்து வருடங்கள் ஓடி விட்டன. பார்த்த உறவினர்களிடமும்,
நண்பர்களிடமும் வரன் பார்க்கச் சொல்லி, அவர்களும் பல வரன்களை
சிபாரிசு செய்தும் ஒன்றும் சரியாகவில்லை. இந்த கம்ப்யூட்டர் யுகத்திலே
இருக்கின்ற வலைகளிலெல்லாம் நுழைந்து சலித்துப் பார்த்தாகி விட்டது.
ஒன்றும் குதிர்ந்த பாடில்லை.
பல ஜாதகங்கள் இவளுடைய ஜாதகத்திற்கு பொருந்தவில்லை.
அப்படிப் பார்த்துப் பொருந்திய பல வரன்களை யமுனா ஏதாவது
காரணம் காட்டி தட்டிக் கழித்துக் கொண்டிருந்தாள். பெண் பார்க்க
வந்த சில வரன்கள் ஏதோ காரணங்கள் கூறி அவர்கள் தட்டிக்
கழித்தனர். கடைசியில் பார்த்தால் ஒன்றும் கல்யாணத்தில் முடியவில்லை.
ஆனால் இன்று பெண் பார்க்க வந்த ராஜாராமன் குடும்பத்தைப் பார்த்தவுடனே பிடித்து விட்டது சரவணனுக்கும், மீனாட்சிக்கும். பையன்
ராஜாராமனும், அவன் பெற்றோர் சபேசனும் காயத்ரியும் தான் பெண் பார்க்க வந்திருந்தார்கள். அம்மூவரின் அடக்கமான தன்மை, கலகலப்பான – அதே சமயம் கண்ணியமான பேச்சு, பார்த்தவுடனே பிடித்துவிட்டது. ‘ஆண்டவனே, இவ்விடம் நல்லபடியா முடியவேண்டும்’ என்று இருக்கின்ற கடவுள்களிடமெல்லாம் வேண்டிக்கொண்டே, அவர்களுடன் பேசிக் கொண்டிருந்தார்கள்.
வழக்கமான பெண்பார்க்கும் படலம் முடிந்தது. காபி, டிபன்
சாப்பிட்டாகி விட்டது.
சபேசன் மெதுவாக, ‘பெண்ணும், பையனும் தனியாக சிறிது
நேரம் மனம் விட்டுப் பேசட்டுமே… ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ள
உதவுமல்லவா..’ என்றார்.
‘வை நாட்…. யமுனா…. மாப்பிள்ளையை மாடி ரூமிற்குக் கூட்டிக்
கொண்டு போ..’ என்றார் சரவணன்.
யமுனாவும், ராஜாராமனும் மாடி ரூமிற்குச் சென்றனர். இங்கு
ஹாலில் பெரியவர்கள் அரசியலைப் பற்றியும் சமையல் பற்றியும்
காரசாரமாக விவாதித்துக் கொண்டிருந்தனர். அவர்கள் நடந்து
கொண்ட விதத்தையும், சிறு உரிமைகளை யதார்த்தமாக எடுத்துக்
கொண்ட பாங்கையும் பார்த்தபோது அவர்களுக்கும், யமுனாவையும்
தங்கள் குடும்பத்தையும் பிடித்துப் போயிருக்க வேண்டும் என்று
தோன்றியது சரவணனுக்கும், மீனாட்சிக்கும்.
அரைமணி நேரம் கழித்து கீழே வந்த யமுனாவின் முகத்தி –
லிருந்தோ, ராஜாராமன் முகத்திலிருந்தோ ‘எஸ்’ஸா, ‘நோ’வா
என்று தெளிவாகத் தீர்மானிக்க முடியவில்லை பெற்றோர்களால்.
உலக வழக்கப்படி, ‘ஓகே… அப்ப நாங்க டிஸ்கஸ் பண்ணிட்டு
பையன்கிட்டேயும் பேசிட்டு பதில் சொல்கிறோம்’ என்றபடியே
எழுந்தார் சபேசன்.
ராஜாராமனும், காயத்ரியும் அவரைப் பின்தொடர்ந்தனர்.
வீட்டிற்கு வெளியே வந்து, அவர்கள் காரில் ஏறி அமரும்
வரை பார்த்து வழியனுப்பிவிட்டு உள்ளே வந்தார்கள்
சரவணனும், மீனாட்சியும்.. யமுனா ஹாலில் உட்கார்ந்து டி.வி.பார்த்துக் கொண்டிருந்தாள்.
‘ஓகே… மீனாட்சி… எனக்கு பரம திருப்தி. பையன் ராஜா
மாதிரி இருக்கான். கை நிறைய சம்பளம். அவன் பெற்றோர்களும்
ரொம்ப தன்மையா, அன்பா இருக்காங்க. இது பிக்ஸ் ஆச்சுன்னா
யமுனா ரொம்ப லக்கி. நீ என்ன சொல்றே…?’ என்றார்
வாயெல்லாம் பல்லாக.
‘ஆமாங்க.. எனக்கும் அவங்களைப் பார்த்ததும் பிடிச்சுப்
போச்சு.. ஜாதகமும் நல்லா பொருந்தி இருக்கு.. இந்த இடத்தை
முடிச்சிடலாம்..’
‘அட.., நம்ம பாட்டுக்கு பேசிட்டிருக்கோம். யமுனா
ஒண்ணுமே சொல்லலியே.. ‘ என்றார் சரவணன் யமுனாவைப்
பார்த்து.
‘அவ சந்தோஷத்துலே வாயடச்சுப் போய் உட்கார்ந் –
திருக்கான்னு நினைக்கறேன். ஏண்டி, வாயத் திறந்து சொல்லேன்
சம்மதம்னு’ என்றாள் மீனாட்சி.
ஒரு நிமிடம் அவர்களையே பார்த்துக் கொண்டிருந்த
யமுனா, ‘ஐ ஆம் ஸாரி அம்மா… நமக்கு இந்த இடம் சரிப்பட்டு
வரும்னு தோணலே.’ என்றாள் மெதுவாக.
‘என்னடி சொல்றே…?’ என்று அதிர்ச்சியோடு கேட்டார்கள்
சரவணனும், மீனாட்சியும் கோரஸாக.
‘ஆமாம்மா… அவருடைய விருப்பு வெறுப்புகளையும்,
பழக்கவழக்கங்களையும், பற்றி பேசிட்டிருந்தப்ப, ‘வெளி நாடுகள் பலவற்றுக்குப் போயிருக்கேன்.. வெளிநாட்டு கலாசாரம்…. ஐ லவ் இட்… நோ ரெஸ்ட்ரிக்ஷன்… கம்ப்ளீட் ·ப்ரீடம்… நோ கமிட்மென்ட்..வெளிநாட்டுக்குப் போகும் போது பல தடவை நானும், என் கேர்ள்ப்ரண்டும் ஒரே வீட்டிலே குடும்பம் நடத்தி இருக்கோம்னா – அதாவது லிவிங்க் டுகெதர் அண்டர் ஒன் ரூ·ப் னா – பார்த்துக்கோயேன். அந்த அஸைன்மென்ட் முடிஞ்சு நான் விடைபெறும்போது நோ ஹார்டு ·பீலிங்க்ஸ்.. ஆல் தி பெஸ்ட் சொல்லிக்கொண்டோம். இப்பவும் ·பேஸ்புக்கில் தொடர்பில் இருக்கோம். நான் வெளிநாடு போகும்போது ஐ வான்ட் ஸச் ·ப்ரீடம். தேர்
ஷ¤ட் நாட் பி எனி கம்ப்ளெய்ன்ட்ஸ்..’னு சொல்றார்மா… நமக்கு
இது சரிப்பட்டு வருமா..’ என்றாள் யமுனா.
‘கடவுளே… ஒரு மாதிரி தோதுப்பட்டு வர நிலையிலே
இது இப்படி ஆச்சே… நமக்கு இதெப்படிம்மா சரிப்பட்டு வரும்’
என்றார் சரவணன் ஈனக் குரலில்.
‘அதத்தான்பா நானும் கட் அன்ட் ரைட்டா சொல்லிட்டேன்..’
என்று சொல்லியபடியே தன் ரூமிற்குப் போனாள் யமுனா.
விக்கித்து நின்றனர் சரவணனும், மீனாட்சியும்.
அலுவலகத்தில் ஏதோ ஒரு ·பைலை புரட்டிக் கொண்டிருந்த யமுனாவின் ஸெல்·போன் சிணுங்கியது. ஸெல்·போனில் யார் கூப்பிடுவது என்று பார்த்தாள்.
‘ராஜாராமன்….’
ஒரு புன்முறுவலோடு ·போனை எடுத்து, ‘ஹலோ’ என்றாள்.
‘என்ன யமுனா.. சமாளிச்சுட்டீங்களா..? அப்பா அம்மா
என்ன சொன்னாங்க..? ‘
அவங்க ரொம்ப அப்ஸெட் ஆயிட்டாங்க… அவங்களுக்கு
உங்களையும், உங்க குடும்பத்தையும் ரொம்பப் பிடிச்சுப் போச்சு. நான் சொன்னதுக்கப்புறம் இது வரை ஒரு வார்த்தை கூட பேசலே.. ஸ்தம்பித்து உட்கார்ந்து இருக்காங்க… உங்க வீட்டிலேஎப்படி..?’
‘எங்க வீட்டிலேயும் அதே கதைதான்.. ஆனா உண்மை-
யிலே எனக்கும் உங்களையும், உங்க குடும்பத்தையும் ரொம்பப்
பிடிச்சிருக்கு. ஆனா என் காதல் குறுக்கே வந்துடுத்து. என்னை
நம்பி இருக்கும் அவளுக்காக நான் இப்படி நடந்துக்க வேண்டி
வந்துடுத்து. எங்கப்பா ரொம்ப ஸ்டாடஸ் பார்க்கறவரானதாலே
எனக்கும் என் காதலைப்பற்றிச் சொல்ல முடியாத நிலை. அவருக்கு
மெதுவாகச் சொல்லிப் புரிய வைக்கணும். அவ மட்டும் என்
வாழ்க்கையிலே வந்திருக்கலேன்னா உங்களை டெ·பனிட்டா
சூஸ் பண்ணி இருப்பேன்’
‘ஓகே… நானும் அதேமாதிரிதான் மாட்டிட்டிருக்கேன். என்
லவ்வைப் பற்றியும் அப்பா அம்மா கிட்டே சொல்ல முடியாம
தவிச்சிட்டிருக்கேன். அதே மாதிரி ஸ்டாடஸ் பிரச்னை… அவர்
மட்டும் என் வாழ்க்கையிலே வராம இருந்தா உங்கள் பெயரை
எப்பவோ ‘டிக்’ பண்ணியிருப்பேன். ஆனா இந்த ‘லிவிங்
டுகதர்’ பொய்யை அனாவசியமாக சொன்னோமோன்னு
நினைக்கிறேன்.. நம்ம காரக்டரையே கெடுத்துக்கற மாதிரி
சொல்லிட்டோமே.. வேறே ஏதாவது சாக்குச் சொல்லி இருக்கலாம்’
‘நீங்க வேறே… இப்படி ஸ்ட்ராங்கா, தடாலடியா ஏதாவது
சொல்லி யிருக்கலேன்னா ரெண்டு பேரையும் உட்கார வெச்சு
‘கட்டுடா தாலியை’ ன்னு சொல்லி யிருப்பாங்க..’ என்று சிரித்த
படியே ‘உங்க காதலைப் பற்றி சீக்கிரம் வீட்டில் சொல்லுங்க..
நானும் சொல்ல டிரை பண்ணறேன்.. ஆல் தி பெஸ்ட்..’ என்றான்.
பசி வயிற்றைக் கிள்ளியது. ஏதாவது டிபன் சாப்பிடலாம்னு
பக்கத்திலிருந்த அந்த ஹோட்டலுக்குள் நுழைந்தான் ராஜாராமன்.
ஹோட்டலில் சுமாரான கூட்டம். இருக்கை ஏதாவது காலி
யிருக்கிறதா என்று கண்களை சுழல விட்டவன் கண்கள் அந்த
டேபிளைப் பார்த்ததும் ஆச்சரியத்துடன் மலர்ந்தது.
‘யார் அது..? யமுனா மாதிரி இருக்கே… ஆமா அவளேதான்.’
என்று அந்த டேபிளை நோக்கி விரைந்தான்.
‘ஹலோ.. யமுனா.. வாட் எ ஸர்ப்ரைஸ்.. எப்படி இருக்கீங்க?’
அவளும் அவனைப் பார்த்ததும் குதூகலத்தோடு, ‘ஹாய்..
எப்படி இருக்கீங்க..?’ என்று கூறியபடியே சைகையால் உட்காரும்படி
எதிர் இருக்கையைக் காட்டினாள்.
‘என்ன தனியா வந்திருக்கீங்க..? ஹஸ்பன்ட் கூட வர்லையா..
நான் உங்களைப் பெண் பார்க்க வந்து ஒரு வருடம் ஓடிட்டது
இல்லே..’ என்றான் ராஜாராமன்.
‘இல்லே ராஜாராமன்.. என்னுடைய காதல் நிறைவேறலே..
அப்பாவை எப்படியோ சம்மதிக்க வெச்சு அவர் வீட்டுக்கு
சம்மந்தம் பேச அனுப்பினேன். முதல்லே இன்டரஸ்ட் காட்டினவங்க போகப் போக அவ்வளவா இன்டரஸ்ட் காட்டலே.
அவருக்கும் பல டைம் ·போன் பண்ணினேன். முதலில் பிடி
கொடுக்காமல் பேசினார். அப்புறம் ·போன் அட்டென்ட்
பண்ணறதையே நிறுத்திட்டார். ஸோ அந்த இடம் கைகூடலே..
அப்பா இன்னும் ஜாதகக் கட்டைத் தூக்கிட்டு அலஞ்சுண்டிருக்கார்.. ஆமா.. வாட் அபௌட் யூ… ‘ என்றாள் யமுனா.
‘அதையேன் கேட்கறீங்க… உங்களுக்கு நடந்த மாதிரிதான் எனக்கும் நடந்தது. அவள் என்கிட்டே பேசறதையே
கம்ப்ளீட்டா அவாய்டு பண்ணிட்டா… ப்ச்… யாருக்கு எங்கெங்கு விதிச்சிருக்கோ அங்கேதான் நடக்கும்’ என்றவன் கண்களை நாலாபக்கமும் சுழல விட்டான்.
‘ஓ மை காட்.. இன்னிக்கு என்னாச்சு.. யார் யாரையோ
பார்க்கறேன்… யமுனா நான் காதலிச்ச பெண்ணை பார்க்கணும்னா
அப்படியே மெதுவாகத் திரும்பி, என்ட்ரன்ஸில் உள்ள அந்த
முதல் டேபிளைப் பாருங்க.. அவள் அவளுடைய ஹஸ்பன்டோட வந்திருக்கான்னு நினைக்கிறேன்..’
யமுனா மெதுவாக அந்த முதல் டேபிளைப் பார்த்தாள்.
பார்த்தவள், ‘என்னங்க அபிராமியா..?’ என்றாள்.
‘ஆமாம்.. அவளேதான். உங்களுக்கு அவளைத்
தெரியுமா..?
‘தெரியும்.. அவளுடைய அப்பா என்னுடைய அப்பாவுடைய கொலீக்.. அவ கல்யாணத்தின் போது நான் ஊரிலில்லை. அதனால் அவ கல்யாணத்தை அட்டென்ட் பண்ண முடியலே…’ என்று சொல்லியபடியே அபிராமியின் பக்கத்தில் இருந்த நபரைப் பார்த்ததும் திகைத்து, ‘என்ன அவரா..’ என்றாள்.
திகைத்து இருந்த அவள் முகத்தைப் பார்த்த ராஜாராமன்,
‘என்னாச்சுங்க யமுனா..’ என்றான்.
‘அவளைக் கைப்பிடித்தவன்தான் என் மாஜி காதலன் அரவிந்த்…’ என்றாள் மெதுவான குரலில்.
சில நிமிடங்கள் யோசித்தவன், ‘இப்போது க்ளியராகப்.
புரிகிறது யமுனா… அந்த அரவிந்தின் அப்பா என்னுடைய
அப்பாவுடைய கொலீக்… நம்முடைய மீட்டிங்கிற்கு அப்புறம்
ஒரு மாதம் கழித்து ஒரு நாள் அப்பா, ‘என் கோலீக், அவன்
பையனுக்கு நாம ராஜாராமனுக்குப் பார்த்தமே அந்தப் பெண்
யமுனா வீட்டிலே பேச்சு வார்த்தை நடந்து வரதா சொன்னான்
நான் அந்தப் பெண் காரெக்டர் கொஞ்சம் அப்படி இப்படின்னு
சொல்லிக்கிறாங்க என்று ஸ்ட்ராங்கா சொல்லி வெச்சேன். அவங்க போய் அந்த ·பேமிலியில் ஏன் மாட்டிக்கணும்னு, அவனும் நமக்கு எதற்கு ரிஸ்க்குன்னு அலயன்ஸையே டிராப் பண்ணிட்டான்’னு சொன்னார். அதனால்தான் அரவிந் உங்ககிட்டே பேசறதையும் கட் பண்ணிட்டார். மோஸ்ட் பிராபப்ளி என்னுடைய கேஸ்லேயும் அது மாதிரி நடந்திருக்கலாம். ‘ என்றான் ராஜாராமன்.
‘டாமிட்.. பின் காதல்ங்கறதுக்கு என்னங்க அர்த்தம்?
யாரோ சொன்னாங்கன்னு காதலியையோ அல்லது காதலனையோ
சந்தேகப்பட்டா அது உண்மையான காதலா..?’ என்று
பொரிந்தாள் யமுனா.
‘அதுதான் வாழ்க்கையின் யதார்த்தம் யமுனா… நாலு பேர்
நாலு வகையா ஒருத்தருடைய ஒழுக்கத்தையோ நடத்தையையோ தப்பா பேசினா, ‘நமக்கு எதற்கு வம்பு… ஒதுங்கிக்குவோம்னுதான் மனுஷனுக்குத் தோணும். அதனாலேதான் சமுதாயத்திற்கு எல்லோரும் பயப்படணும்னு சொல்றது.. நாம காதல் நிறைவேறணும்னு ஒரு பொய்யைச் சொன்னோம். ஆனா பார்த்தீங்களா..அதுவே நமக்கு வில்லனா மாறிடிச்சு… உலகம் எவ்வளவு சின்னதா ஆயிட்டுது பார்த்தீங்களா…? உங்கள் காதலன் என் காதலியை…. வண்டர்·புல்… ஆசைப்படலாம்… ஆனா அந்த ஆசை நிறைவேறலைன்னா அதப்பத்தியே நினைச்சு துவண்டுடாம, கிடைச்சதை சந்தோஷமா ஏத்துட்டு வாழணுங்க… அதுதான் வாழ்க்கையின் தாத்பர்யம்.. யதார்த்தம்… நீங்க அன்னிக்கு சொன்னீங்க… என் காதல் மட்டும் குறுக்கே வரலேன்னா உங்க பெயரை டிக் பண்ணியிருப்பேன்னு.. இன்றும் அந்த மன நிலையில்தான் இருக்கீங்களா..? ‘ என்றான் ராஜாராமன் திடுதிப்பென்று.
‘யூ ஆர் கரெக்ட்… இப்போ நாம் ரெண்டு பேருமே எலிஜிபிள்
·பார் மாரேஜ்… ஏன் நம்ம ப்ரொபோஸலை ரீ ஓபன் பண்ணக்
கூடாது..?’ என்றாள் யமுனா.
‘பட்… அதில் ஒரு சிக்கல் இருக்கே… ஆயிரம் பொய்கள்
சொல்லி ஒரு கல்யாணத்தை நடத்தலாம். அது தப்பில்லேன்னு
சொல்வாங்க. நாம் ஒரு பெரிய பொய்யைச் சொல்லிக் கல்யாணத்தை
நிறுத்தி இருக்கோமே..? இப்போ எப்படிச் சமாளிக்கறது..?’
‘இப்போ உண்மையைச் சொல்லி கல்யாணத்தை நடத்துவோம்.
இப்போ அதைக் கொண்டாட ஸ்வீட்டோடு சாப்பிடுவோம்’
என்றாள் யமுனா குதூகலத்தோடு.
‘வெயிட்டர்..’ என்று கூப்பிட்டான் ராஜாராமன்.