சரித்திரம் பேசுகிறது! –யாரோ

சரித்திரம் பேசுகிறது! –யாரோ

சதவாஹன

சரித்திரம்…

சில நேரங்களில் மௌனமாக இருக்கும்…
ஆனால் பெரிதாக சாதித்து விடும்.

ஆனாலும் அந்த சாதனையும் சில நேரங்களில் அடக்கி வாசிக்கப்பட்டு அடங்கி விடும்.

கி பி முதல் நூற்றாண்டில் இருந்து குப்தர்கள் வரும் வரை … வட இந்தியாவின் இருண்ட காலம் என்று சொல்வர்.
அந்தக்காலக் கட்டத்தில் ஒரு ராஜ்ஜியம் ஆந்திராவில் விரிந்தது.

கலைகள் செழித்தது.

வர்த்தகம் உலகளவில் விரிந்தது.

முக்கியமாக ‘அமைதி’யும் சுபிக்ஷமும் இருந்தது.

சதவாஹனா!

இன்றைய மத்தியபிரதேசம், மகாராஷ்டிரா, ஆந்திரா, தெலுங்கானா பகுதியில் இந்த ராஜ்ஜியம் உருவானது,

கல்லினால் செய்யப்பட்ட ஸ்தூபிகள் அழகைச் சொரிந்தன.

அமராவதி நகரில் (இன்றைய குண்டூர் மாவட்டத்தில்) அன்று சிற்பக்கலை பயில்விக்கும் பெரும்பள்ளி ஒன்று அமைந்திருந்தது.

மஹா ஸ்தூபி (மஹா சைத்தியா) என்றழைக்கப்படும் உன்னதமான ஸ்தூபி அமராவதியில் நிறுவப்பபட்டது. அது மென்மையான பச்சை நிற சுண்ணாம்புக்கற்களால் செய்யப்பட்டது. வெகு நுணுக்கத்துடனும், விஸ்தாரமாகவும், நயத்துடனும் செதுக்கப்பட்டிருந்தது.

(இந்த ஸ்தூபி பின்னாளில் – பத்தொன்பதாம் நூற்றாண்டில் – பிரிக்கப்பட்டு- பல அருங்காட்சியகங்களில் காட்சியாக வைக்கப்பட்டு உள்ளது. அதில் ஒன்று இங்கிலாந்து நாட்டில் உள்ளது)

மேலும் சில சிற்பங்கள் இரண்டு கதைகள் சொல்கின்றன:

ஒன்றில்,

அசித முனிவர் மன்னர் சுத்தோதனரின் (புத்தரின் தந்தை) அரண்மனைக்கு வருகை தருகிறார். மன்னர் மகன் சித்தார்த்தர் ஒரு உலகநாயகராகவும், மாமுனிவராகவும் வருவாரென்று அவர் ஆருடம் கூறும் காட்சி!

உலகநாயகரும் சூப்பர் ஸ்டாரும் சேர்ந்த கலவை!

பிறகு கேட்கவேண்டுமா?

மற்றொன்றில்,

மாபெரும் புறப்பாடு (great departure)!

இதில் புத்தர் உண்மையைத் தேடி, அரண்மனையையும் குடும்பத்தையும் விட்டு விலகிச் செல்லும் காட்சி!

மன்னர்கள் சரித்திரத்திற்கு வருவோம்.

வம்சத்தைத் துவங்கியவர் ‘சிமுகா’ (Simukaa).

மௌரியர்களுக்குப் பிறகு சுங்கர்கள்..

சுங்கர்களுக்குப் பிறகு ‘கன்வர்’கள்…

கன்வர்களின் கடைசி மன்னனை ‘சிமுகா’ கொன்று, தான் அரசனானான்.

கிருஷ்ணா நதியின் முகப்பிலிருந்து தக்ஷிண பீடபூமி வரை ஆட்சியை விரிவாக்கினான்.

   

பின்னர் வந்த மன்னன் சதகர்ணி சதவாஹனா!

(சதகர்ணி சதவாஹனா)

சதகர்ணி சதவாஹனா அஸ்வமேத, ராஜசூய யாகங்கள் செய்தான்.

கலிங்கத்தின் காரவேல் படையெடுத்த போது அவனுக்குப் பரிசுகள் கொடுத்து சமாதானம் செய்து கொண்டான்.

சரி…சரித்திரத்துக்கு சற்று அரிதாரம் சேர்த்து கதைப்போம்!

நாள்: கி பி 120

இடம்: அமராவதி

ஒரு தாய் தன் மகனுக்காக என்ன என்ன செய்வாள் என்பது யாரே எண்ண இயலும்?

சதவாஹன வம்சத்தில் ஒரு ராணி கௌதமி பாலஸ்ரீ.

இளவரசனான தன் மகன் மாபெரும் மன்னனாக வரவேண்டுமென்று அவள் கனவு மட்டும் கொள்ளவில்லை.

அவனது நலனுக்காகவே வாழ்ந்தாள்!

முதல் ஆசான் அவளே!

முதல் ஆலோசகர் அவளே!

அவளது முயற்சிகள் வீண் போகவில்லை.

மகனும் சதவாஹன வம்சத்தின் தலை சிறந்த மன்னனாகப் பெயரெடுத்தான்.

மகனது பெயர் “கௌதமிபுத்திர சடகர்னி”!

மன்னன் பெண்களை மதித்தான்.

அவர்களுக்கு உயர்கல்வி கற்றுவித்தான்.

அவர்களை சமயக்கூட்டங்களில் கலந்துகொள்ளச் செய்தான்.

தாயின் பெயர் என்றும் நிலைக்கவேண்டும்  என்று மகன் விரும்பினான்.

தன் பெயரிலே தாய்க்கு இடம் கொடுத்தான் அந்த ‘கௌதமிபுத்திர’ சடகர்னி!

அத்துடன் அவ்வழி தனக்குப் பின் வரும் மன்னர்களும் பயன்படுத்த வேண்டும் என்று பிரகடனம் செய்தான்.

அவனுக்குப் பிறகு வந்த சில சதவாஹன மன்னர்கள்:

‘வஷிஷ்டி புத்ரா’, ‘கெளஷாகிபுத்ரா’.

இந்தப் புரட்சி இன்னும் 21ம் நூற்றாண்டில் கூட நடைமுறையில் இல்லை!

கௌதமிபுத்திரன் சக (sakha) அரசை போரில் வெற்றி கொண்டான்!

வாசகர்களே! பஞ்சாங்கத்தைப் போய்ப் பாருங்கள். சக வருஷம் என்று ஒரு வருடம் அதில் குறிப்பிடப்பட்டிருக்கும். அது இந்த வெற்றியின் நாளிலிருந்து துவங்கியது.

சாலிவாகன வருடம் – சக வருடம் இரண்டும் ஒன்று தான் என்று கூறப்படுகிறது.

(சக வருடம் பொறிக்கப்பட்ட நாணயம்)

(According to historian Dineshchandra Sircar, the historically inaccurate notion of “Shalivahana era” appears to be based on the victory of the Satavahana ruler Gautamiputra Satakarni over some Shaka (Western Kshatrapa) kings.)

புத்தம் – சமணம் ஓங்கியிருந்த சமயம் – மன்னன் பிராமணர்களை ஆதரித்தான்.

‘ஏக பிரம்மணா’ என்ற நூலில் இது எழுதப்பட்டுள்ளது.

ஆயினும் புத்தர்களுக்கு மானியம் அளிக்கத் தவறவில்லை.

நான்கு ‘குலங்கள்’ கலப்பதை தடுத்தான்.

இந்த குலங்கள் சமூகரீதியில் அமைந்திருந்தன.

மேலும் சக, யவன, குஷான – யாராக இருந்தாலும் ஹிந்து சமயத்தில் சேர அனுமதிக்கப்பட்டனர்.

ஆட்சி… கிருஷ்ணா நதியிலிருந்து சௌராஷ்டிரா வரையிலும் பரவிக் கிடந்தது.

அலெக்சாண்டர் முதல் பெரும் மன்னர்கள் பலர் புகழ் மோகம் தலைக்கேறியதும்  ‘இறைவன்’ அவதாரம் என்று தங்களையே கூறிக்கொண்டனர்.

ஆனால் இந்த மன்னன் அவ்வாறு கூறாமல் தான் தர்மத்தின் வழி ஆள்பவன் என்றான்..

மக்கள் நலம் ஒன்றே தமது குறிக்கோள் என்றான்.

(இந்நாள் அரசியல்வாதிகள் சரித்திரம் படித்து இவ்வாறு நடந்தால் எப்படி இருக்கும்? இந்த சரித்திரத்தை கல்லூரிகளில் அரசியல் பாடங்களில் முதல் பாடமாக வைத்தால்? வரும் அரசியல்வாதிகள் கொள்கையுடன் இருப்பார்கள்!

‘அம்புட்டு ஆசை’!)

இவை அனைத்தும் அந்தத் தாயின்…

அறிவுரை!

அறவுரை!

அடடா.. நாம் தாயை சற்று மறந்து போனோமே!

தாயின் கதைக்கு வருவோம்.

மாபெரும் மன்னன் சாதிக்கவேண்டியதெல்லாம் சாதித்து, நோய்வாய்ப்பட்டிருந்த காலம்.

அரசு ஆட்சிப் பொறுப்புகள் அனைத்தையும் மகாராணியே ஏற்று நடத்தினார்.

அரசன் மறைந்ததும் பேரன் வஷித்திபுத்திரன் மன்னனானான்.

தன் மகனின் சாதனைகளைக் கண்படுத்திய மகாராணி அவரது சரித்திரத்தை நாசிக் பிரசாதி (Nasik prasasti) என்று எழுதினார்.

அவனது சாதனைகளை பெருமையுடன் எழுதினார்.

அவளது மகன் மறைந்து இருபது ஆண்டு மறைந்தது.

அந்த மூதாட்டியின் படைப்பு அன்று அரங்கேறியது.

ஒரு தாய் மகனுக்கு எழுதிய முதல் சுயசரிதை இது தான் போலும்!

ஒவ்வொரு மனிதனின் வெற்றிக்கும் அவன் தாய் பின் நிற்கிறாள்.

நமது கதை முடிந்தது
(கதை என்றாலும் இதில் காண்பது சரித்திரமே!

நடைக்கு மட்டுமே நாம் பொறுப்பு)

சதவாஹன மன்னர்கள் மொத்தம் 19 .

அந்த ஆட்சியில் சிற்பம், ஓவியம் சிறந்தது.

சதவாஹனா ஓவியம்

மக்கள் நல்வாழ்வும் சிறந்தது.

இது தான் ராம ராஜ்யமோ?

சரித்திரம் அன்று சுகமாக இருந்தது.

இதுவும் ஒரு அடித்தளம்தானோ?

இதற்கு மேலும் இந்தியாவின் சரித்திரம் ‘மின்னும் நவரத்தினங்கள்’ போல் ஒளி விட்டு சிறக்க உள்ளதோ?.

விரைவில் காண்போம்!

 

 

 

 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.