சேய் வாசம் – ஜெயந்தி நாராயண்

 

Image result for சிறுகதை

மார்கழி மாதம்,, அருகிலுள்ள கோயிலிலிருந்து இனிமையான திருப்பாவை ஒலி கேட்டுக் கண் முழித்தாலும் எழ மனம் வராமல், குளிருக்கு இதமாகப் போர்வையைத் தலைவரை இழுத்துப் போர்த்தியபடி புரண்டு படுத்த மாலா, யாரோ தொடர்ந்தாற்போல காலிங் பெல்லை அடிப்பது கேட்டு , வேகமாக எழுந்து உடையைச்   சரிசெய்தபடி கதவைத்  திறந்தாள்.

“என்னக்கா, எம்புட்டு வாட்டி சொன்னாலும் கேக்க மாட்ற. மணி எட்டாச்சு பாரு. நா இன்னும் ரெண்டு வீடு வேல செஞ்சுட்டு வீட்டுக்கு போக வேணாவா. ஞாயித்துக்கிளம பிள்ளைங்க வீட்ல இருக்கும். அந்த மனுசனுக்கும் இன்னிக்கி ஒரு நாதான் லீவு.  வாய்க்கு ருசியா ஆக்கிப்போட்டுக் கவனிக்கத் தேவல்லயா. லீவு விட்டாலே நீ லேசுல எந்திருக்க மாட்ற”

“எந்திருச்சு என்ன செய்யப்  போறேன் செல்வி” என்று புன்னகைத்தபடியே வாஷ் பேஸின் குழாயைத் திறந்து சில்லென்ற தன்ணீரில் முகத்தைக் கழுவினாள். டீவியை ஆன் செய்தபடியே பேஸ்ட்டை ப்ரஷ்ஷில் பிதுக்கியவள்,

”சரி பொண்ணுக்கு ஒரு வாரமா உடம்பு சரியில்லன்னியே. இப்ப தேவலையா”

Image result for an young girl in chennai and exorcist

“அதுக்கு பேய் பிடிச்சுருச்சுக்கா…”

” உளறாத”

“ஆமாக்கா, அது தெரியாம ஆஸ்பத்திரிக்கு இட்டுகினு போய், ரத்தம் லாம் டெஸ்ட்டுக்கு கொடுத்துட்டு வந்தேன். அப்புறம் பக்கத்து வீட்டு அக்கா சொல்லிச்சுனு கார் எடுத்துகிட்டு காஞ்சிபுரம் போய் அங்க ஒருத்தரு கிட்ட மந்திரிக்கக் கூட்டிக்கிட்டுப் போனம். அவருதான் கண்டுபிடிச்சு மாங்காடுல ஒரு அம்மாவ பாக்க சொன்னாரு.. நேத்து மாங்காடு கூட்டிகினு போனம். அந்தம்மா இன்னும் முன்னாலயே கூட்டு வந்த்ருக்கலாம்லனு திட்டிச்சு.

ஒண்ணும் கவலப்படறதுக்கில்லக்கா.. உச்சி மண்டைல இருந்து முடி எடுத்து மந்திருச்சு மரத்துல வச்சு ஆணி அடிச்சுட்டா எல்லாம் சரியா போய்டும். என்னடா இதுக்கு இப்டி வந்துருச்சேன்னு ஒரே பேஜாரா இருந்துச்சு. இப்பத்தான் நிம்மதியாச்சு .

பேய் ஒடம்புல இருக்க சொல்லத்தான் பத்து நாளா ஒண்ணுமே சாப்பிடல”

“என்ன இப்பிடி பேசற.. ப்ளட் டெஸ்ட், என்ன ஆச்சு? டாக்டர் என்ன சொன்னார்”

“என்னக்கா வெவரம் இல்லாம பேசற.. அதுதான் பேய் பிடிச்சுருக்குனு கண்டு பிடிச்சிட்டம்ல… ரிப்போர்ட்டுலாம் வாங்கவே இல்ல.”

அவள் வேலையை முடித்து விட்டுப் போனபிறகும் அவளுடைய அறியாமை நிறைந்த வார்த்தைகள் சுத்தி சுத்தி வந்து கொண்டே இருந்தது. செல்போன் மணி சிந்தனையைக் கலைத்தது. உடன் வேலை பார்க்கும் சுமதி.

“ஈவினிங் சரியா 5 மணிக்கு உன்ன பிக் அப் பண்ண வரேன்.  ஆறு மணிக்கு அருணா சாயிராம் கச்சேரி டிக்கெட் கெடச்சது. நீ ரொம்ப நாளா ஆசைப்பட்டு கேட்டுண்ட்டே இருந்தியே”

இவளிடமிருந்து சரியாக பதில் வராமல் போகவே அவள் மறுபடியும்,

“என்னடி நீதானே ரொம்ப ஆசைப்பட்ட. அதுக்காகத்தான் கஷ்டப்பட்டு ரெண்டு டிக்கெட் வாங்கினேன்”

“இல்லடி தலை வலிக்கரது. ஜுரம் வர மாதிரி இருக்கு. நீ வேற யாரயாவது கூட்டிகிட்டு போயேன்”

“உனக்காகத்தான் இவ்வளவு மெனக்கெட்டு வாங்கினேன். சரி போ”

என்று சற்றே அதிருப்தியுடன் மறுமுனை துண்டிக்கப்பட்டது.

ஒண்டிக்கட்டையாக இருப்பதில், இந்த விடுமுறை நாட்களை தள்ளுவதுதான் இவளுக்குப் பெரும்பாடு. சுமதிதான் அப்பப்ப வெளியேபோகத் துணை. சினிமாவோ, ட்ராமாவோ, ஷாப்பிங்கோ. நாளைக்கு ஒரு நாள் முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டு இருப்பாள். சமாளிச்சுக்கலாம்.

பத்து நாட்களாக சரியாக சாப்பிடாமல், சோர்ந்து படுத்தே இருக்கும் பெண்ணுக்கு ஒரு சிகிச்சையும் அளிக்காமல், பேய் ஓட்டும் முட்டாள் ஜனங்கள் மீது ஒரு பக்கம் கோபம் வந்தாலும், மறுபக்கம் பரிதாபமாக இருந்தது. ஒரு தீர்மானத்துக்கு வந்தவள், செல்வியை அலைபேசியில் அழைத்தாள். “நான் சொல்றத கேளு. சாயங்காலம் உன் பொண்ண கூட்டிகிட்டு, நீ டெஸ்ட் கொடுத்த ஆஸ்பத்திரிக்கு வந்துடு. நானும் அங்க வரேன். டாக்டர பார்த்து பேசிடலாம்”

“அதெல்லாம் வேணாம்க்கா. அது உள்ள இறங்கி இருக்கற பேய ஓட்டிட்டா எல்லாம் சரியாகிடும்.”

“வாய மூடு. நா சொல்றத மட்டும் கேள்”

மாலாவின் குரலில் இருந்த கடுமைக்குப் பலன் இருந்தது.

“சரிக்கா. கூட்டிகிட்டு வரேன்.”

Image result for சிறுகதை

ஆஸ்பத்திரியில், ரிஸல்ட்டை வாங்கிக்கொண்டு டாக்டரைப் பார்க்கக்  காத்திருந்தபோது, அந்த பெண்ணால் உட்காரக் கூட முடியல. துவண்ட கீரைக்கட்டா அம்மாமேல் சாய்ந்து கொண்டிருந்தது. மாலாவுக்கு அந்தப் பெண்ணைப் பார்க்கப்பார்க்க மிகவும் கவலையாக இருந்தது. இவர்களுடைய முறை வந்ததும் மூவரும் உள்ளே சென்றார்கள்.

மாலா கையில் இருந்த ரிப்போர்ட்டைப் பார்த்த டாக்டர்,

“என்னம்மா டெஸ்ட் எடுத்து நாலு நாள் ஆச்சு. இப்பத்தான் ரிஸல்ட்ட எடுத்துகிட்டு வரீங்க. மஞ்சக் காமாலை வந்துருக்குமா இந்த பொண்ணுக்கு.  நாலு நாள் முன்னாலயே மருந்து கொடுக்க ஆரம்பிச்சு இருக்கலாமில்ல.  ஏம்மா உங்கள பார்த்தா படிச்சவங்க மாதிரி இருக்கீங்க. எடுத்து சொல்ல மாட்டீங்களா”

“இப்ப என்ன செய்யறது டாக்டர்”

“என்ன பண்றது. ட்ரீட்மெண்ட் ஆரம்பிக்க வேண்டியதுதான்.”

டாக்டர் எழுதிக் கொடுத்த மருந்தை வாங்கிக் கொடுத்து  அவளை வீட்டுக்கு அனுப்பிவிட்டு வண்டியை எடுத்தவள் வீட்டுக்கு அருகே உள்ள கிருஷ்ணர் கோவிலில் கூட்டம் குறைவாக இருப்பதைப் பார்த்து வண்டியை ஓரமாக நிறுத்தினாள். ருக்மணி சத்யபாமா சமேத கிருஷ்ணர் புன்னகையுடன் காட்சி தந்தார்.  எப்பொழுதும் காணும் புன்னகைதான், இன்று வித்தியாசமாக தனக்கு எதோ செய்தி சொல்வதுபோல் தோன்றியது. அவளும் அவனைப் பார்த்தபடியே வெகு நேரம் நின்று கொண்டிருந்தாள்.  மாயக் கண்ணன் விடுத்த செய்தி அவளுக்குப் புரிபடவில்லை.

வீட்டுக்கு வந்த உடன் செல்விக்கு போன் செய்து மருந்தை ஒழுங்காகக் கொடுத்தாளா என்று விசாரித்து விட்டு, மதியம் செய்த சாதத்தில் சிறிது மோரைவிட்டு சாப்பிட்டுவிட்டுப் படுத்தாள். புரண்டு புரண்டு படுத்தாலும் வெகு நேரம் வரை தூக்கம் வரவே இல்லை.  தூங்கின மாதிரியே இல்லை. அலாரம் அடித்து திடுக்கிட்டு எழுந்தாள். ஐந்து மணி. இப்ப எழுந்தாதான் சரியா இருக்கும், ஏழு மணி பஸ்பிடிக்க.

பல் தேய்த்து காபி போட்டு எடுத்துக் கொண்டுவந்து சோபாவில் அமர்ந்தாள். எது எப்டி போனாலும், காலை காபியை நிதானமாக டபரா டம்ப்ளரில் ஆத்தி மெதுவாக ரசித்து ருசித்து குடிக்க வேண்டும் மாலாவுக்கு. காபியை குடித்து குக்கரை வைத்துவிட்டு காய் நறுக்க உட்கார்ந்தபோது, அழைப்பு மணி சத்தம். செல்விதான். உள்ளே நுழைந்தவள், “அக்கா அந்த அருவாமனைய கொடுக்கா, இந்த கத்திலாம் சரிப்பட்டு வராது என்றபடியே  பீன்ஸ் காம்பை கிள்ள ஆரம்பித்தாள்.

“எப்படி இருக்கா பொண்ணு. ராத்திரி நல்லா தூங்கினாளா”

“நைட்டு கஞ்சி போட்டு கொடுத்தேன்க்கா, அப்பால டாக்டர் கொடுத்த மாத்திரைய கொடுத்தேன். தூங்கிருச்சு. இப்ப கூட நல்லா அசந்து தூங்கிட்டு இருக்கு.”

“மாத்திரைய விடாம கொடுக்கணும் சரியா”

“எங்க அக்கா கூட திட்டிச்சுக்கா, பேய் பிடிச்சுருக்க சொல்ல என்னாத்துக்கு டாக்டர்கிட்ட இட்டுகினு போய் மருந்தெல்லாம் வாங்கி கொடுக்கறேன்னு. அப்பால இந்த மனுசன்  வந்து எல்லாம் சத்து வரத்துக்குதான் மருந்து கொடுத்திருப்பாங்க, பரவால்ல சாப்டட்டும்னு   சொன்ன பெறவுதான் அடங்கிச்சு. நாளைக்கி மறுபடியும் மாங்காடு கூட்டிக்கினு போகனும்க்கா அத்த”

“உன்னயெல்லாம் திருத்த முடியாது.   ஆனால் டாக்டர் கொடுத்த மாத்திரையை விடாமகொடுக்கணும் சரியா? எனக்கு இப்ப நேரமாச்சு ஆபிஸுக்கு”

“சரிக்கா. கோபப்படாத. அதுக்கு குணமாகனும் அம்புட்டுதான். “

செல்வி உதவியுடன் மற்ற வேலைகளை முடித்து, வீட்டை பூட்டிக்கொண்டு கிளம்பி பஸ் ஸ்டாப் வந்த போது, அங்கு அவளுக்கு முன் வந்திருந்த சுமதி அவளைப் பார்த்து முறைத்து விட்டு முகத்தைத் திருப்பிக் கொண்டாள்..

“ஸாரிடி ” என்று ஆரம்பித்து செல்வி கதையைச் சொன்னாள்.

“இத அப்பவே சொல்லவேண்டியதுதானே, செம்ம கடுப்பா இருந்தேன் நேத்து நைட்டெல்லாம், டிக்கட் வேஸ்ட்டா போயிருச்சேன்னு “

பஸ்ஸில் ஏறிய பிறகும் அவர்களுடைய பேச்சு செல்வியின் அறியாமையைப் பற்றியே இருந்தது.

“கண்டிப்பா இதுக்கு ஏதாவது  செஞ்சே ஆகணும் சுமதி”

வார இறுதிக்குள் அவள் ஒரு முடிவுக்கு வந்திருந்தாள்.

சனிக்கிழமை காலை வேலைக்கு வந்த செல்வியிடம், “செல்வி உன் பொண்ண கொண்டு வந்து இங்க விடு. ஒரு மாசம் லீவு போட்டுருக்கேன். நான் பாத்துக்கறேன்.

“உனக்கெதுக்குக்கா தேவல்லாத வேலைல்லாம். அத்த எங்கக்கா கிட்டத்தான் விட்ருக்கேன், இன்னும் ரெண்டு தபா மாங்காடு கூட்டிகிட்டு போய்ட்டு வந்தா எல்லாம் சரியாயிடும்க்கா”

“நான் சொல்றத கேளு. என் கிட்ட விடு நா நல்லா பாத்துக்கறேன் “

‘வேணாங்க்கா .”

“என் மேல நம்பிக்கை இல்லியா?”

“அதுக்கில்லக்கா, நீ பேயோட்டல்லாம் அனுப்ப மாட்ட”

“பேயெல்லாம் அப்புறம் பாத்துக்கலாம் , முதல்ல நான் ஒரு வாரம் டாக்டர் கொடுத்த மருந்த கொடுத்து பத்தியமா சாப்பாடு போட்டு கவனிச்சுக்கறேன் .”

“சொன்னா கேக்க மாட்ட. நாதான் நெதம் இங்கிட்டு வரனே. நானும் பாத்திக்கறேன்”

“நீ எப்பவும் போல வீட்டு வேலைய கவனிச்சுகிட்டா போதும். அவள நான் பாத்துக்கறேன்.”

வீட்டு வேலையை முடித்து விட்டு , மதியம் பெண்ணை அழைத்துக் கொண்டு வந்தாள் செல்வி. கிள்ளி எடுக்கச் சதையில்லாமல் கதவைப் பிடித்தபடி இருந்த அந்தப்  பெண்ணுக்கு பன்னிரெண்டு  வயசு இருக்கும். ஆஸ்பத்திரியில் அன்று இருந்த டென்ஷனில் சரியாக கவனிக்கவில்லை.  அழகான, ஆனால்,சோர்வான கண்கள், தீர்க்கமான மூக்கு, பயந்த முகம். பார்த்த உடன் மாலாவுக்கு பிடித்து விட்டது.

“இங்க வாம்மா”

சற்று மிரட்சியுடன் செல்வியை பார்த்த அவளை இழுத்து அணைத்துக் கொண்டாள். பயத்துடன் கூடிய வெட்கத்தில் புன்னகைத்த அந்தப்  பெண்ணைப் பார்த்து , ” உன் பேர் என்ன?”

“மீனா”

ராகவ் உயிரோடு இருந்து, அவனுடன் மணமாகி காலாகாலத்தில் குழந்தை பிறந்திருந்தால் , இந்த மீனா வயசிருக்கும். அதுவும் அவன் ஆசைப்படி பெண்ணாக பிறந்திருந்தால்….   கண்களை விட்டு நீர் வெளியே வராமல் இருக்கப் பிரயத்தனப்பட்டாள்.

உயிருக்கு உயிராகக்  காதலித்த ராகவ் கல்யாணத்திற்கு ஒரு மாதம் முன்பு, ஒரு சாலை விபத்தில் இறந்ததும், அதற்குப் பிறகு அவளுடைய அப்பாவும் அம்மாவும் எவ்வளவு வற்புறுத்தியும் இவள் வேறு யாரையும் மணக்க மறுத்ததும், அந்தக் கவலையிலேயே அவள் பெற்றோர் ஒருவர்பின் ஒருவராகக் காலமானதும் முடிந்த கதை.

“செல்வி நீ போய்ட்டு நாளைக்கி வேலைக்கு வா. கவலைப்படாம போ, நான் நல்லா கவனிச்சுக்கறேன் “

மீனாவிற்கென பிரத்தியேகமாக வாங்கித்  தன்னுடைய கட்டிலுடன் இணைத்துப்  போட்டிருந்த கட்டிலில் அவளைப் படுக்க வைத்தாள் . அந்தப் பெண் மிகவும் தயக்கத்துடனேயே அதில் அமர்ந்தது.  சிறிது நேரத்தில் தன்னை அறியாமல் அசதியில் தூங்கி விட்டது.

ஃபேனை மிதமான வேகத்தில் வைத்து விட்டு , சத்தம் ஏற்படுத்தாமல் கதவைச் சாத்திக்கொண்டு வெளியேவந்தாள்,

ஒரு வாரம் போனதே தெரியவில்லை.  மீனா மாலாவிடம் ரொம்ப நெருக்கமாகிவிட்டாள். டாக்டரிடம்  கொண்டு காண்பித்து, அவளுக்கு நேரத்துக்குச் சாப்பிடக் கொடுத்து, அவளுடன் கதை பேசிச் சிரிக்க வைத்து, மொத்தத்தில் மாலாவுக்கு இது முற்றிலும் புது அனுபவமாக இருந்தது.

மேலும் பத்து நாட்கள் நன்கு கவனித்ததில் மீனா உடல் முற்றிலும் தேறிவிட்டாள். அடுத்த நாள் வேலைக்கு வந்த செல்வியிடம்,

”இங்க பாரு செல்வி, மீனாக்கு நல்லா குணமாயிடுச்சு. இன்னிக்கி வீட்டுக்குக் கூட்டிகிட்டுப் போ”

“ரொம்ப நன்றிக்கா. நாகூட இம்புட்டு நல்லா கவனிச்சுருக்க மாட்டேன், பெத்த பிள்ளைக்குமேல கவனிச்சக்கா, எனக்கும் நல்லா புத்தில ஏர்றமாதிரி புரிய வச்ச. இனிமேட்டு பேய் அது இதுன்னு போகமாட்டேன். என் பிள்ள உசிர காத்த தெய்வம்க்கா” என கண்ணீருடன் காலில் விழப்போனவளை எழுப்பி,

“லூசு மாதிரி உளறாம குழந்தைய கூட்டிக்கிட்டு போ. கவனமா பாத்துக்கோ, மறுபடியும் உடம்புக்கு ஏதும் வராம பாத்துக்க. சனி ஞாயிறுல கொண்டு விடு. நாங்க ஜாலியா விளையாடுவோம், பீச்சுக்கு போவம், இல்ல கண்ணம்மா” என்றபடி மீனாவின் கன்னத்தைத் தட்டினாள். வெட்கத்துடன் அவளைப் பார்த்துச் சிரித்த மீனாவை அணைத்து முத்தமிட்டு,

”உனக்கு இங்க எப்ப வரனும்னு தோணுதோ அம்மா கூட வந்துடு சரியா”

மீனாவும் செல்வியும் போனபிறகு வீடு வெறிச்சோடிக் கிடந்தது. ஏதோ யோசனையில் வெகு நேரம் அமர்ந்திருந்தவளின் சிந்தனையை காலிங் பெல் சத்தம் கலைத்தது. கதவைத் திறந்தவுடன், அங்கு நின்ற சுமதி,

“என்னடி இவ்வளவு நேரமா பெல் அடிக்கறேன். உன்னய பார்த்து நாளாச்சேனு கிளம்பினேன். நேத்துதான் பையன் யு.எஸ் கிளம்பி போறான். ரெண்டு வாரமா ரொம்ப பிஸியா போச்சு. சரி இன்னிக்கி வந்து உன்ன பார்த்துட்டு போகலாம்னு. எப்ப ட்யூட்டில ஜாயின் பண்ணப் போற”

Related image

“நல்லா போச்சுடி. அருமையான அனுபவம். ராகவ் போனதுக்கு அப்புறம் எதுலயுமே ஒட்டுதல் இல்லாம இருந்த என்னை இந்த பெண் கூட இருந்த நாட்கள் சுத்தமா மாத்திருச்சு. இந்த ஒரு வாரமா ஒரு யோசனை. பணம் காசு நிறைய இருக்கு. முதல்ல ஒரு குழந்தைய தத்து எடுக்கலாமான்னுதான் யோசிச்சேன்.  அப்புறமா என்ன தோணித்துன்னா , தி நகர்ல அப்பாவோட ரெண்டு க்ரவுண்ட் வீட்ட ஒரு சின்னப் பள்ளிக்கூடமா கட்டி, அஞ்சு க்ளாஸ் வரைக்கும் மட்டும் இருக்கறமாதிரி செய்யாலாமான்னு தோண்றது. இந்த வேலைய ராஜினாமா பண்ணிட்டு நிறைய நேரம் குழந்தைகளோட இருக்கற மாதிரி இருந்தா நல்லா இருக்குமே. நீ என்ன சொல்ற”

கண்களில் நீரோடு, அவள் பேச்சை  ஆமோதித்த சுமதி, “இந்த மாதிரி ஏதாவது ஒரு மாற்றம்தாண்டி உங்க அப்பா அம்மாவும் உன் கிட்ட எதிர்பார்த்தாங்க.  அவங்க இருந்தா சந்தோஷப் பட்டிருப்பாங்க. பரவால்ல இப்பவாவது தோணித்தே.  வா நல்ல விஷயமா சொல்லியிருக்க,கோயிலுக்குப் போகலாம். நான் அப்டியே வீட்டுக்கு போறேன். எப்ப ஆபிஸ் வருவ?”

“திங்கக்கிழமை ஜாயின் பண்ணலாம்னு இருக்கேன்”

முகம் கழுவி, புடவை மாற்றி, வீட்டைப் பூட்டிக்கொண்டு இருவரும் கிளம்பினர்.

Image result for yashoda and devakiகரு நீலப் பட்டுடுத்திய கண்ணனுடைய மோகனப் புன்னகையின் அர்த்தம் புரிந்ததுபோல் இருந்தது அவளுக்கு. அவனைப் பெற்ற
தேவகியை விட வளர்த்த யசோதைதானே பாக்கியம் செய்தவளாக இருந்தாள்.

 

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.