(அமரர் ரா கி ரங்கராஜனி்ன் நான் கிருஷ்ண தேவராயன் ஒலிப்புத்தகம் 9 ம் தேதி வெளிவந்துவிட்டது)
17 மணி நேர ஒலித்தகட்டின் விலை 350 ரூபாய்
கிடைக்குமிடம்: http://nammabooks.com/bombay-kannan/nan-krishna-deva-rayan-audio-book
விழா விமர்சனம் :
தமிழ்ப் புத்தக நண்பர்களின் ”நான் கிருஷ்ணதேவராயன்” சிடி ஸ்பெஷல்!
தமிழ்ப் புத்தக நண்பர்கள் இம்முறை இரண்டு வாரங்கள் முன்னதாகவே கூடிவிட்டார்கள் – உண்மையிலேயே கூட்டம் ஸ்பெஷல்தான்!
ரா.கி. ரங்கராஜன் அவர்களின் ’நான் கிருஷ்ணதேவராயன்’ நாவலின் ஒலித்தகடு (Mp3 CD) – பாம்பே கண்ணன் தயாரிப்பு – மற்றும் ஆங்கில மொழிபெயர்ப்புப் புத்தகம் (ஆங்கிலத்தில் சுகந்தி கிருஷ்ணமாச்சாரி) இரண்டையும் எழுத்தாளர் இந்திரா செளந்தரராஜன் வெளியிட, முறையே மூத்த எழுத்தாளர் பாக்கியம் ராமசாமி, டேக் செண்டர் சாரி இருவரும் பெற்றுக்கொண்டனர்!
பதினோரு நிமிடங்கள், ஒலிப் புத்தகத்தின் முதல் அத்தியாயம் மட்டும் – ஒலிபரப்பப்பட்டது. பின்னிசை, இடை இசை (BGM) உடன் வர, காதல்வயப்பட்ட கி.தேவராயன், காதலின் பெயரால் எல்லாக் கடமைகளையும் மறந்துவிட, ஏற முடியாத மலை உச்சியிலிருந்து அவனது அம்மா, காதலியை மறக்க சத்தியம் வாங்குவதாகக் காட்சி ……
நான் கதை வாசிப்பவன், கேட்பவனல்ல! கேட்பதில் நிறைவு எனக்குக் கிடைக்காது. எழுதுபவரின் மனஓட்டத்துடன், என் மனக் கற்பனையும் சேர்ந்து உருவாக்கும் திரைப் பிம்பம் எனக்குக் காது வழி கிடைப்பதில்லை. பேப்பர் குறைத்து, மரங்களின் மறுவாழ்வு அவசியமாவதாலும், வாசிப்பவர்கள் குறைந்து வருவதாலும், புத்தகங்கள் மறைந்து, கேட்கும் சிடிக்களுடன் சமரசம் செய்துகொள்ளும் நிலை அருகிலேயே இருப்பதால் இந்தக் கூட்டம் ’ஸ்பெஷல்’ ஆகிறது!
ரவி தமிழ்வாணனின் அறிமுக உரையைத் தொடர்ந்து, சாரி, பழம் புத்தகங்களின் மறுவாசிப்புக்கு சிடியின் அவசியத்தையும், பாம்பே கண்ணனிடம் ’நான் கி.தேவராயன்’ புத்தகத்தை ஒலி வடிவில் தயாரிக்கக் கேட்டுக்கொண்டதையும் சுருக்கமாக, அழகாகச் சொன்னார்!
தன் நாடக, திரை உலக அனுபவத்தில், அருமையான ஒலிப் புத்தகங்களை உருவாக்கும் பாம்பே கண்ணன் பாராட்டுக்குரியவர். ஒரே குரலில் கதை சொல்லாமல், கேரக்டர்களின் குரல்களில், இசையுடன் கதை சொல்வது வித்தியாசமாயும், ஒரு நாடகம் கேட்கும் அனுபவமாயும் இருக்கிறது – வாழ்த்துக்கள்!
வாழ்த்துரைத்த இந்திரா செளந்தர்ராஜன், நல்ல எழுத்தாளர் மட்டுமல்ல, சிறந்த பேச்சாளரும் கூட. சுவடியிலிருந்து, காகிதத்தில் பதிப்பித்த உவேசா அவர்களைப் போல், காகிதத்திலிருந்து சிடியில் பதிக்கும் கண்ணனை வாழ்த்தினார்! ரா.கி.ர., ஜராசு ஆகியோரின் எழுத்துத் திறமையையும், ஆரம்பகால எழுத்தாளர்களை அவர்கள் ஊக்குவித்து நெறிப்படுத்தியதையும் சிலாகித்தார். Mp3 அளவு பேசினாலும், சுவாரஸ்யமான பல செய்திகளை, நகைச்சுவையுடன் வெளிப்படையாகச் சொன்னார்!
சமீப காலத்தில் இப்படிக் கண்ணில் நீர் வர நான் சிரித்ததில்லை – ஜ ராசு என்னும் மனிதர் கண்ணில் நீர் வரவழைத்து விட்டார்!! ராகிர வின் பன்முகத்தன்மை, எதையும் துணிவுடன் செய்வது, சேர,சோழ,பாண்டியரை விடுத்து, நாவலுக்குக் கிருஷ்ணதேவராயரைத் தேர்ந்தெடுத்தது, கமலின் உந்துதல் எனப் பல குறிப்புகள் – ராகிர வுடன் வெற்றிலை போட்டது, எல்.வி.பிரசாத்துடன் அப்புசாமி, சீதாப்பாட்டி படமெடுக்கப் பேசியது என ஹாஸ்யப் பிரவாகம்! முத்தாய்ப்பாய், வீட்டிற்குப் போனால் மிஸஸிடம் கிடைக்கப் போகும் அர்ச்சனைபற்றிச் சொல்ல, அரங்கே அதிர்ந்தது!! பேச்சுக்கிடையே சிலருக்கு ஹாஸ்யம் வரும் – இவருக்கோ ஹாஸ்யத்துக்கிடையே கொஞ்சம் பேச்சு வருகிறது!!
சரித்திர, மர்ம நாவல்களை மொழிபெயர்ப்பதை ஒரு சவாலாக செய்துவருகிறார் சுகந்தி. நான் கி.தேவராயனை அடுத்து அடிமையின் காதல் (ராகிர), நைலான் கயிறு (சுஜாதா) நாவல்களை மொழிபெயர்ப்பதாகக் கூறினார். தமிழிலும் நன்றாகவே பேசினார் – இண்டுவில் எழுதுவதாலோ என்னவோ, ஆங்கிலம் கொஞ்சம் அக்சென்டுடன், ‘பாஷ்’ ஆக இருந்தது!
ராகிர வின் புதல்வர் நன்றி கூறி எல்லோருக்கும் பொன்னாடை போர்த்தினார். குமுதம் குழுமத்துக்கும் (அன்றைய) ’ஸ்பெஷல்’ நன்றி சொன்னார். (உவேசா வுக்குப் போர்த்தப்பட்ட பொன்னாடை பற்றிப் பேசிய இந்திரா செளந்தர்ராஜனுக்கும், அவர் விவரித்த, ஒன்றுக்கும் உதவாத பொன்னாடையைப் போர்த்தியது, அவர் கூறியபடி, ‘நடப்பது நடந்தே தீரும்’ என்பதை உறுதி செய்தது!)
சாருகேசியின் வழக்கமான ஷார்ட் அண்ட் ஸ்வீட் நன்றி நவிலல் – கூட்டம் நிறைவு!
ஏனிந்தக் கூட்டம் “ஸ்பெஷல்”?
1.இரண்டாம் வாரமே, அதுவும் ஒரு ஞாயிறன்று கூட்டம்.
2.நேரம் தாண்டியும், (சுமார் ஒரு மணி பதினெட்டு நிமிடம்) கூட்டம் நடந்தது.
3.சிடி/ புத்தக வெளியீட்டுடன், ‘நான் கிருஷ்ணதேவராயன்’ விமர்சனக் கூட்டமாகவும் அமைந்தது !
- பாஸ்கர்