“மீண்டு வந்தேன்” -மாலதி சுவாமிநாதன் (மன நல மற்றும் கல்வி ஆலோசகர்)

Image result for psychological doctor and a student in india

கடந்த மூன்று மாதங்களாக  நான் என்னவென்று புரியாமலேயே எதையோ தேடியபடியே என் நேரத்தைக்  கடத்தினேன். பார்ப்பவர்கள் நான் அலட்சியமாக இருக்கிறேன்  என்றும், சோம்பேறி, கொழுப்பு அதிகம் என்றெல்லாம் விவரித்தார்கள். அப்படியா, என்று இருந்து விட்டேன் என்றாலும், மனம் கலங்கியது என்னமோ உண்மை தான்!

இப்பொழுது திரும்பிப் பார்க்கையில் இது நான் விழுந்த மிகப்  பெரிய பாதாளம் என்று தோன்றுகிறது. ஏனென்றால் , இதற்கு முன்பு எனக்கு விஸ்தாரமான நண்பர்கள் குழு, வித்தியாசமானதும் கூட! அப்படிப்பட்ட நான், தனிமையில் ஆழ்ந்துவிட்டிருந்தேன். நாங்கள் முன்பு இருந்த வீட்டுப்பக்க நண்பர்களின் அழைப்பிற்கும் பதில் சொல்வது குறைந்தது. பதில் பேசி, என்ன மாறப்போகிறது என்பதாலேயே!

நாங்கள் முன்பு வசித்திருந்தது நகரத்தின் மறு கோடியிலே. திடீரென்று என் பெற்றோர் நான் பத்தாவது முடித்தவுடன் வீடு மாறலாம் என்று முடிவு செய்தார்கள். என் உலகமே மாறியது. நண்பர்கள், ஸ்கூல், மார்க் எல்லாம் தான். எரிச்சலும், சலிப்பும் அதிகமானது. எதிலும் பிடிப்பு இல்லை. உற்சாகமும் இல்லை. சாப்பாடு கூட ருசிக்கவில்லை. ஏனோ-தானோ என்று நாட்களைக் கடத்தினேன். யாருடனும் பழக மனம் வரவில்லை.

இதை எல்லாம் கவனித்த என் வகுப்பு டீச்சர், என் அம்மாவைக் கூப்பிட்டுக் கலந்து பேசி, “இது ‘மன சோர்வு’டைய அறிகுறிகள் போல் தோன்றுகிறது. மனோதத்துவர் ஒருவரைப் பார்ப்பது நல்லது” என்றார். நான் திகைத்தேன். அம்மாவுக்குத் தூக்கி வாரிப் போட்டது. “இந்த ஸ்கூல்ல மார்க் அதிகம் வரும்னுதானே வீட்டை விற்று இங்கே வந்தோம். இப்படி ஆயிடுத்தே! மனோதத்துவர்னா, ஸைக்கியாட்ரிஸ்டா, இந்த வயசுலயா?” என்றாள்.

டீச்சர் சமாதானம் சொல்லி விவரித்தார் “பிரச்சினை இல்லை! அறிகுறி தான். நான் பரிந்துரைக்கும் மனோதத்துவர் ‘ஸைக்கியாட்ரிக் ஸோஷியல் வர்கர். M.A. ஸோஷியல் வர்க்கில் மன நலப் பிரிவில் தேர்ச்சி பெற்று, பிறகு M.Philயில் இதையே மையமா கொண்டு பயின்றவர்” என்று விளக்கினார். “இவர், நம் பாதையை, நாமே வளமாக மாற்றிக் கொள்ள உதவுபவர். நம் வலிமைகள், குறைகள், அணுகுமுறை, வளம், தடைகள், குடும்பத்தினரின் பக்க பலம் எல்லாவற்றையும் நலமாகுவதற்குப் பயன் படுத்துவார்கள். நாம் மேம்படுவதே மருந்தாகும்”.

இதெல்லாம் கேட்டுப் புரிந்தாலும், என்னைத் தயக்கமும், சாக்குகளும் சூழ்ந்தது. என் டீச்சர் சொன்னதினாலேயே அந்த மன நல ஆலோசகரிடம் சென்றேன். அம்மா-அப்பா “நாங்க விவரிக்கிறோம்” என்றதை மதித்து முதலில் அவர்களுடன் பேசிவிட்டு, பிறகு என்னுடன் வெகு நேரம் தனியாகவே உரையாடினார்.

நாங்கள் பேசும்போது அவர் காட்டிய அந்த பூர்ண வாத்ஸல்யமும், உன்னிப்பாக எல்லாவற்றையும் உள்வாங்கியதும் என்னைக் கவர்ந்தது. அவர் கேட்ட கேள்விகளிலிருந்து என்னையும் என் நிலைமையையும் புரிந்தவர்போலே தோன்றியது. எல்லாவற்றிற்கும் மேல், என் பெற்றோருடன் கலந்து பேசுகையில், நான் சொன்ன பல விஷயத்தையும் அவர்களிடம் அந்தரங்கமாக வைத்தது, என்னை மிகவும் ஈர்த்தது. மனம் மாறத்தொடங்கியது.

இதற்கு இன்னொரு காரணமும் இருந்தது. நான் பாதி மனதோடு வந்திருந்ததை மன நல ஆலோசகர் தெரிந்து கொண்டார். அவர் சொன்னது என்னவென்றால், உதவி நாடுகிறோம் என்று கருதினால் “இவர்கள் யார் சொல்ல” என்று தோன்றலாம். இதனாலயே தயக்கம் சூழுந்து, நம் சிந்தனையையும், செயலையும் தடுத்துவிடும். இதையே, நம்பிக்கையுடன் வாய்ப்பாகக் கருதினால் நாம் ஆக்கபூர்வமாக செயல் படுவோம். 45 நிமிடமோ, 1 மணி நேரமோ நாம் மனம் விட்டு பகிர்ந்து கொள்ளும்பொழுது, தன்னைப்பற்றிப் புரிந்து கொண்டு, இப்போதைய நிலை பயனுள்ளதா, பயனற்றதா என்ற தெளிவு பிறக்கும். நமக்கே “மாற வேண்டும்” என்று தோன்றவேண்டும். நாம் தயாராகவில்லை என்றால் யார் சொன்னாலும் ஏற்றுக்கொள்ள மறுப்போம்.

சொல்லப் போனால், மன நல ஆலோசகருடன் முதல் சந்திப்பு உற்சாகத்தைக் கொடுத்தது. வாரத்திற்கு இரண்டு முறை போக ஆரம்பித்தேன். மெல்ல, மெல்ல நான் மாறுவதை உணர்ந்தேன். என் டீச்சரின் ஒரு சில வார்த்தைகளிலும் இது தெரிந்தது. 45 நிமிட உரையாடலைத்தவிர, நானாக செய்ய வேண்டிய பயிற்சிகளும் இருந்தன. என்ன, “ஏன்”, என்பதை நான்தான் சிந்தித்து, தீர்மானம் செய்து, விவரிக்க வேண்டும். இதை செயல்படுத்தும் கால அவகாசத்தையும் நானே நிர்ணயித்துக் கொண்டேன்.

மறுமுறை, மன நல ஆலோகரை சந்தித்தபோது, அன்றைய 45 நிமிடமும் நண்பர்களுடன் நான் பழகுவதை மையமாகக் கொண்டிருந்தது. என் நண்பர்களுடன் முன்பு பழகிய நிகழ்ச்சிகளைச் சொல்லும் பொழுது கண்முன் ஒவ்வொரு நினைவும் தெளிவாக வந்துநின்றது. நினைவுகளைக் கோர்க்க மிக இனிமையாகவும், இதமாகவும் இருந்தது. முடிவில், செய்முறை தீர்மானம் ஆனது. பழைய ஒரு நண்பனை மறுபடியும் தொடர்பு கொள்ளவேண்டும் என்று முடிவு செய்தேன். உடனே கூச்சமும், குழப்பமும் வர ஆரம்பித்தது, ஆனால் அந்த ஃப்ளாஷ்பேக் உறுதியை நிலை நாட்டியது.

சொல்லி வைத்தாற்போல், நான் வீடு திரும்பியதும், அவன், அங்கு, என் அறையில் உட்கார்ந்திருந்ததைப் பார்த்து ஸ்தம்பித்தேன்! தற்செயலா? சொன்னதை செயல்படுத்துவதற்கான வாய்ப்பு தானாக அமைந்தது! இவன், எங்கள் பழைய வீட்டு அருகில் இருந்த நெருங்கிய நண்பன். தற்செயலாக மூத்த கூடைப்பந்து வீரர் ஒருவரைப் பக்கத்துத் தெருவில் காரில் கொண்டு விடும்போது, என் அம்மாவைப் பார்த்தான். அம்மா, அவனை வீட்டுக்கு அழைத்து வந்தார்.

ஒரு பக்கம் இவனைப் பார்த்த மகிழ்ச்சி. இன்னொரு பக்கம் மனதிற்குப் புதுத் தெம்பு வந்தது. அவன் என்னிடம் கை நீட்டியபடி “வாழ்த்துக்கள், நீ பல மாதங்களாக மெளனமாக இருந்ததுக்கு” என்று சொன்னது சில வினாடிக்கு பழைய மாதிரி தோன்றிற்று! நாக்கு சிக்கியது (வெட்கத்தில்). சற்று மொளனமானேன்.இப்படிப்பட்ட சுழ்நிலையில் இருக்கவே இருக்கு TV. கவனம் அதில் சென்றது. சுதாரிக்க முடிந்தது. சற்று நேரம் பேசினோம். விடை பெறும்போது திரும்ப சந்திக்க அழைத்தேன். ஆமோதித்தான். இந்த திடீர் நிகழ்வால் என்னுள் வந்த சிறு மாற்றத்தை அறிந்தேன். இது தான் மன நல ஆலோசகர் சொன்ன “Preparedness”இன் விளைவு என்று புரிந்தது.

இன்னொரு பயிர்ச்சியாக நான் செடி வளர்ப்பது என்று தேர்வு செய்தேன். அவர்கள் (வினோதமாக) வாடிய செடியை கண்டுபிடித்துப் வளர்க்க வேண்டும் என்றார். ஏன் வாடிய செடி? என் நிலையை பிம்பமாக காட்டும். நான் எரிச்சல், சலிப்பு என்று காண்பிப்பேன். இந்த செடி எப்படி தெரிவிக்கும்? துளிர் விடுமா? நான் காட்டும் அன்பு புரியுமா? எவ்வளோ நாளிலே துளிர் விடும்? மனத்துக்குள் “பார்ப்போம்” என்று நகைத்தேன்.

ஆவலின் தூண்டுதலில், செயல் பட்டேன். வித்தியாசம் தெரிந்தது. குறையும், குறைபாடுகளும் அல்ல, வண்ணமும், பல வழிகளும்! சற்று விவரிக்கிறேன்: வாடிய செடி துளிறுமா என்ற ஆவல் தூண்டியது. என்னைஅறியாமல் வேகமாக போய் பார்ப்பேன்; உள்வேகம் கூடியது. அது பூத்து குலுங்குவதுபோல் என் உடைகளின் வண்ணமும் விதவிதமாகியது. நானும் ஜொலிக்காரம்பித்தேன்!

அந்த சனிக்கிழமை பற்றி சொல்லியே ஆகவேண்டும். என் தோழர்களுடன் கூடுவது தொடர்ந்திருக்க, என் நெருங்கிய நண்பர்கள் வீட்டுக்கு வந்தார்கள். எனக்கு உருவாக்குவதில் ஆர்வம் உண்டு என்பது இவர்களுக்கு தெரிந்ததே. என் அறையில் உதிரி பாகங்கள் குப்பை கூளமாக இருந்தது (தனி ரூம் இதற்காகவே). சில பாகங்களை என்னிடம் கொடுத்து, பண்ணி காட்டேன் என்றார்கள். டைமாகும் என்றேன், பரவாயில்லை என்றார்கள். மின் விசிறி தொடங்கினேன். 2 மணி நேரம் கழித்து கிளம்பினார்கள். தூக்கம் ஏமாற்றி கொண்டிருந்ததால், தொடர்ந்தேன். முடித்தேன், காலை 7 மணி. நண்பன் உள்ளே வந்தான். “டேய், முடிச்சிட்ட!” எடுத்து அழகு பார்த்தான். “ஸாரீ, பர்ஸை விட்டேன், அதான். சரி நீ தூங்கு, ஸண்டே தானே. நான் அம்மாக்கிட்ட சொல்றேன்”. கதவை மூடிவிட்டு சென்றான். தூங்கினேன். பல மாதங்களுக்கு பிறகு அப்படி ஒரு தூக்கம். எழுந்தபின், அவ்வளவு ஃப்ரெஷாக இருந்தது.

ஒரு பெரிய பாரம் இறங்கியது போல் தோன்றியது. மன நல ஆலோசகர் சொன்னது ஞாபகம் வந்தது. நாம் முடியாது என்று ஆரம்பித்தாலோ, எல்லாவற்றையும் சோக கண்ணோட்டத்தில் பார்த்தாலோ வாழ்வு சுருங்கி விடும். பேசாதிருந்தால், தனிமை பெரிதாகும். இடமாற்றத்தை தடையாகவும், இடையூராகவும் கருதியிருந்ததால், நண்பர்களையும் பிரிந்ததில், பெற்றோரிடம் கோபம். அதனாலயே இப்படி உட்கார்ந்து விட்டேன். வாய்ப்புகள் என்னவோ கைக்கு எட்டின தூரத்தில் தான் இருந்தது.

நாங்கள் “ஆறு பேர் படை”. வீட்டுக்கு வந்தார்கள். என் நிலமையை பற்றி என்றும் ஒன்றுமே கேட்கவில்லை. இவர்களுக்கு என் வாடிய செடி பற்றி சொல்லி, காண்பித்தேன். அது என்னையும் மீறி ப்ரகாசமாய் பூத்து குலுங்குவதை பார்த்து எனக்கும் மேல் குஷியானர். என் நிலைமையை முழுவதும் இவர்களுக்கு எடுத்து சொன்னேன். நோ விமர்சனம். அதுதான் நண்பர்கள்!

நான் நன்றாவது வெளிப்படையாக தெரிந்தது. என் மன நல பயிற்சிகளில் உடற்பயிற்சியும் இருந்தது. முன் போல் கூடை பந்து விளையாடத் தொடங்கினேன்.

வாழ்வில் இன்னும் அர்த்தம் சேர்க்க என்னுடைய நெடு நாள் ஆசை, Physics பாடத்தை பலருக்கு, இலவசமாகவும் எளிமையான பொருட்களுடன் கற்று தர வேண்டும் என்று. பிரபல திரு அரவிந்த் குப்தாவின் ஏகலவ்ய சிஷ்யன், நான். பள்ளியிலும், விடுமுறை நாட்களிலும் 1 மணி நேரம் கற்று தர என் பெற்றோர் ஏற்பாடு செய்து கொடுத்தார்கள்.

இப்படி ஒவ்வொன்றாக செய்கையில் வாழ்வின் அர்த்தம் விஸ்தரித்தது. நம் நோக்கங்கள் நம்போல் தனித்துவம் கொண்டதே, நாமே உருவாக்கலாம் என்று புரிந்தது. இதில் எனக்கு பிடித்தது – நமக்கு தெரிந்த தகவல்களையும், திறமையும் மற்றவருடன் பகிர்வதே பேரின்பம்!

என் மன நல ஆலோசகர் தெளிவு படித்தியது போல்,ஒவ்வொரு படி எடுத்த பின்னும், நானே எனக்கு சபாஷ் கொடுத்தேன். இப்படி செய்வதில் மண்டை கனமோ, கர்வமோ இல்லை என்று அறிந்தேன்.

என் பெற்றோர், ஸைக்காட்ரிக் ஸோஷியல் வர்க்கர், டீச்சர்,நண்பர்கள், வாடிய செடி, பங்குடனே இங்கு, உங்களிடம் இவ்வளவு பூரிப்புடன் பகிர்ந்து கொள்ள முடிந்தது.

திரும்பி பார்க்கையில்

நோக்கம்

எரிசக்தியானது!

இதனால்

மாற்றம் செய்யவும்

மாற்றம் கொண்டு வரவும் உதவியது!

என்னுடைய

“ஏன்” என்ற தேடலுக்கு ஊக்கமானது

என்னை படைப்பாளியாக்கியது!

அறிந்தேன்

நோக்கத்தினால் விளைவும்

விளைவினால் நோக்கமும்!

 

நோக்கம் நம்

தனித்தவத்திலும்

வலிமையிலும்

நெறிகளிலும் அடங்கும்!

 

 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.