விஷ்வகர்மா வருவதற்குமுன் காரியம் எல்லை மீறி விட்டது.
சூரியனும் ஸந்த்யாவும் அந்தப் பொற்குளக் கரையில் ஒருவரை ஒருவர் இறுக்க அணைத்துக் காதல் மயக்கத்தில் இருந்தார்கள். சூரியனின் சூடு , குளிர்ந்த தண்ணீரில் சொட்டச் சொட்ட நனைந்த ஸந்த்யாவிற்கு கதகதப்பை ஊட்டியது. ஸந்த்யாவின் தேகக் குளிர்ச்சியும் கவர்ச்சியும் சூரியனுக்கு போதையை ஏற்படுத்தியது. அவனது வெப்பமான உதடுகள் அவளின் முகத்தில் பரவி முடிவில் அவள் இதழில் நின்றது. அவள் ஏதோ சொல்ல மெல்ல வாய் திறந்தாள் . அந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்ட சூரியன் அவளது இதழ்த்தேனை அருந்தினான். சூரியனின் இதழ் தந்த மயக்கத்தில் ஸந்த்யா கண்ணை மூடிக்கொண்டு அவனது தோளை ஆரத் தழுவினாள்.
தாமரைப்பூ போன்ற அவளது தேக வாசம் அவனுக்கு மயக்கத்தை அளித்தது. ஒரு சிறு குழந்தையைப் போல அவளைத் தன் இரு கரங்களாலும் தூக்கிக் கொண்டு அருகில் இருக்கும் சோலைக்குச் சென்றான். அங்கிருந்த மலர்ப் படுக்கையில் அவளை மெல்லக் கிடத்தினான். அவளோ தேனில் ஊறிய பலாச் சுளை போல , பனியில் நனைந்த தாமரை போல , மழையில் மிதக்கும் சந்தனக் கட்டை போலத் துவண்டு கனிந்து இருந்தாள்.
அந்த மலர்ப் படுக்கை அவர்கள் இணைவதற்குக் காரணமாயிற்று. அவளது ஒவ்வொரு அசைவும், சூரியனுக்குச் சுகம் என்றால் என்ன என்பதை உணர்த்தியது. இருவருக்கும் காந்தர்வ மணம் அங்கேயே நிகழ்ந்தது.
அந்தச் சுக அனுபவத்தில் சூரியன் தன் கண்ணை மூடினான். சில நொடிகள்தான். ஆனால் அது விளைவித்த விளைவுகள் பயங்கரமாக இருந்தன.
உலகமே இருளில் மூழ்கியது. இடி உறுமியது. மின்னல் வெடித்தது. மேகம் பிளந்தது. மழை பொழிந்தது. பறந்து கொண்டிருந்த பறவைகள் உயிரற்றுக் கீழே விழுந்தன. எரிமலைகள் வெடித்துச் சிதறின. நதிகள் பாதை மாறின. கடல் அலைகள் ஆர்ப்பரித்து பூமிக்குள் புகுந்தன. மலை அருவிகள் பெருக்கெடுத்தன. நிலவும் நட்சத்திரங்களும் எட்டிப் பார்க்க ஆரம்பித்தன.
ஏதோ விபரீதம் நடந்து விட்டது என்று யோசித்துக் கொண்டே விஷ்வ கர்மா அங்கே வந்தார். உலகத்தையே ஸ்ருஷ்டிக்கும் அவரால் தன் மகள் ஸந்த்யாவிடம் ஏற்பட்டிருக்கும் மாற்றத்தையா உணர முடியாது?
தன் தந்தையின் காலடிச்சத்தத்தை உணர்ந்த ஸந்த்யா முதலில் கண்விழித்தாள். முதல் முறையாக அவளுக்கு நாணம் என்றால் என்ன என்பது புரிந்தது. சூரியனின் அணைப்பிலிருந்து சரேலென்று விடுபட்டு அருகில் இருந்த மாதவிப் பந்தலுக்குப் பின் தன்னை மறைத்துக் கொண்டாள்.
தன் உடம்பில் கலந்து திளைத்த சுகப்பதுமை தன் பிடியிலிருந்து விலகிச் சென்றதை உணர்ந்த சூரியன் மூடியிருந்த தன் கண்களைத் திறந்தான். உலகுக்கு அப்போதுதான் சமநிலை உண்டாயிற்று. தூரத்தில் விஷ்வகர்மா நின்றுகொண்டிருப்பதைப் பார்த்த சூரியனுக்கும் சற்று வெட்கம் உண்டாயிற்று. மெல்லத் தன்னைச் சரி செய்துகொண்டு விஷ்வகர்மாவின் காலடியில் வணங்கி நின்றான்.
” தேவ சிற்பியே! நீங்கள் எத்தனையோ அதிசய உலகங்களைப் படைத்திருக்கிறீர்கள்! இன்னும் படைக்கப் போகிறீர்கள். ஆனால் தங்களின் இந்தப் படைப்புக்கு ஈடாக எந்த உலகத்திலும் இருக்க முடியாது. இந்த அழகுப் படைப்பை எனக்கே தந்து அருளவேண்டும்” என்று வேண்டி நின்றான்.
“சூரிய தேவா! உனக்குப்பொருத்தமானவள்தான் என் மகள் . உன்னைத் தன் கணவனாக அடைய அவள் கொடுத்து வைத்திருக்க வேண்டும். ஆனால் உன் நிறையே உனக்குக் குறையாக இருக்கிறது. அதைப் போக்காமல் நீ அவளை மணக்க முடியாது. “
திடுக்கிட்டுப் போனான் சூரியன். ” என்ன சொல்கிறீர்கள்? என்னிடமும் குறை உள்ளதா? ” என்று வினவினான் சூரியதேவன்.
(தொடரும் )
இரண்டாம் பகுதி :
“எமி ! வா இன்று உன்னைச் சொர்க்கபுரிக்கு அழைத்துச் செல்கிறேன்!” என்று அவள் கையைப் பிடித்துக் கொண்டு சென்றான் எமன்.”
” அண்ணா! நீ என் கையைப் பிடித்து அழைத்துக் கொண்டு சென்றால் நான் நரகபுரிக்குக் கூட வரத் தயார்! . சிறு வயதில் நாம் சாயா சித்தியிடம் பட்ட கஷ்டத்துக்கு ஒரே ஆறுதல் நீ பக்கத்தில் இருந்ததுதான்”
“உண்மை தான் எமி ! அந்த நாட்களை நம்மால் மறக்கவே முடியாது. நாம் பட்ட வேதனைகள் ! அப்பப்பா! அவற்றையெல்லாம் நாம் திரும்ப எமபுரிப்பட்டணத்துக்கு வந்த பிறகு நினைவு கூர்வோம்!! இப்போது சொர்க்கபுரியின் அழகைப் பருகுவோம். “
“அண்ணா ! இந்த சொர்க்கபுரியும் நம் தாத்தா கட்டியதுதானே!”
“அதிலென்ன சந்தேகம்! அவர் தேவ சிற்பியல்லவா? ஆனால் சொர்க்கத்தில் அவர் சிறப்பாக எதுவும் செய்யவில்லை. அவர் சொன்னது இன்னும் என் காதில் ஒலிக்கிறது! – “சொர்க்கபுரியை நிர்மாணிப்பது என் வேலையாக இருக்கலாம்! ஆனால் அதை உண்மையில் சொர்க்கபுரியாக மாற்றுவது அங்கு வரப் போகும் ஆத்மாக்கள்தான் “
“அண்ணா! சொர்க்கபுரிக்கும் நாம் உன் வாகனத்தில்தான் போகப் போகிறோமா? “
” உன் கிண்டல் புரிகிறது, எமி! அதில் நாம் செல்லப் போவதில்லை. அதில் நான் சென்றால் நடக்கப் போகும் காரியமே வேறு! அதைப் பெரியகாரியம் என்றுதான் சொல்வார்கள்! ! நாம் நடந்தே பேசிக் கொண்டு செல்வோம். அப்போது தான் அதன் அழகை உணர முடியும்.
இருவரும் சொர்க்கபுரிக்குள் நுழைந்தார்கள்! அவர்களுக்கு என்றே காத்துக்கொண்டிருந்தன இன்பமான ஆனால் திடுக்கிடும் சம்பவங்கள்!
(தொடரும் )