மனமென்னும் குரங்கு!
அந்தப் பெண்ணிற்கு சுமார் முப்பத்தைந்து வயதிருக்கும். படிய சீவப்படாமல், விரல்களால் கோதிவிட்டாற்போல் ஒதுக்கப்பட்ட சுருட்டைத் தலைமுடி. கண்களைச் சுற்றிக் கருவளையம். கணவன் கைத்தாங்கலாய்ப் பிடித்துக்கொண்டபடி உடன் வர, சின்னச் சின்ன அடிகளாய் வைத்து, பாலன்ஸ் செய்தபடி நடந்து வந்தாள். – தயக்கத்துடன் ஒவ்வொரு அடி எடுத்து வைக்கும்போதும் உடல் குலுங்கியது. எங்கே விழுந்து விடுவாளோ என்ற பயம் கணவனின் இறுகிய கைப்பிடியில் தெரிந்தது. அருகிலிருந்த ஸ்டூலில் அமர்ந்து சிறிய பெருமூச்சுடன் ஆசுவாசப் படுத்திக்கொண்டாள் – எதிரே கணவன் அமர்ந்தான்.
“என்ன ப்ராப்ளம்?” என்றேன்.
”ஒரு மாதமாக இப்படி நடப்பதற்கு சிரமப்படுகிறாள். காரணம் தெரியவில்லை – பொது மருத்துவர், ஆர்த்தோ, நியூரோ மற்றும் ஆயுர்வேதம், யுனானி எல்லோரையும் பார்த்து விட்டோம். அநேகமாக எல்லா டெஸ்டுகளும் எடுத்து விட்டோம் – எல்லாம் நார்மல்!”
“கீழே விழுந்தார்களா? ஜுரம், ஜலதோஷம் ஏதாவது?”
“அதெல்லாம் ஒன்றுமில்லை – திடீரென்று இப்படி ஆகிவிட்டது – தெய்வக் குற்றமோ எனப் பரிகாரமெல்லாம் கூடச் செய்துவிட்டோம்”
எனக்குத் தெரிந்த அளவில் இந்த நடை எந்த வியாதியுடனும் பொருந்திப் போகவில்லை. இரத்தப் பரிசோதனைகள், ஸ்கான்கள் என எல்லா டெஸ்டுகளும் முகத்தில் அறைந்தாற்போல ’நார்மல்’ என்றன!
மீண்டும் நடக்கச் சொன்னேன் – இம்முறை கணவனின் உதவியில்லாமல் நடந்தாள் – அதே நடை, எப்போதுவேண்டுமானாலும் விழுந்துவிடக்கூடிய அபத்திரமான குலுங்கும் நடை – கிட்டத்தட்ட முகமது பின் துக்ளக் படத்தில் சோ நடப்பதைப் போல – ஆனாலும் விழுந்துவிடவில்லை.
என் மனதின் மூலையில் சன்னமாகப் ‘பட்சி’ கூவியது.
”கவலைப்படாதீர்கள் – சீரியஸாகத் தெரியவில்லை – என் சைக்காலஜிஸ்ட்டைப் பாருங்கள்” என்றேன்.
”சைக்கியாட்ரி டாக்டரா?” சிறிது அதிர்ச்சியுடன் கேட்டார் கணவர்.
“சைக்கியாட்டிரிஸ்ட் இல்லை, சைக்காலஜிஸ்ட் – மருந்து கொடுக்கும் மருத்துவர் இல்லை – உளவியல் நிபுணர்”
மனமும், அதன் தன்மைகளும் வியக்க வைப்பவை. உடலை இயக்க வல்லவை! மகிழ்ச்சியில் சுதந்திரமாகப் பறக்கும் மனது, காயப்படும்போது இறுக்கத்தில் உடலைக் கட்டிப்போடும் – மனவலியின் வெளிப்பாடு உடல் உபாதைகளாக முன்னிருத்திக் கொள்ளும் வலிமை உடையது!
நோய்களைவிட, அவற்றால் ஏற்படும் மன இறுக்கமும், உளைச்சலும் தீவிரமானவை. நோய்க்கான சிகிச்சை இந்த மனவலியைத் தீர்க்காமல் முழுமையடைவதில்லை.
விவேகானந்தர் இதையே ‘நீ என்னவாக நினைக்கின்றாயோ, அதுவாகவே ஆகின்றாய்’ என்றார். ஆழ்மனதை கட்டுப்படுத்தி, மயக்க மருந்துகள் ஏதுமின்றி அறுவைச் சிகிச்சை செய்து கொண்ட மகான்களைப் பற்றி நாம் அறிவோம்.
மனதால் ஒரு நோயை உருவாக்க முடியும் – அதே போல மனக்கட்டுப்பாடு ஒரு நோயின் வீரியத்தைக் குறைக்கவும் முடியும் என்பது உளவியல் ரீதியாக நிரூபிக்கப் பட்டுள்ளது.
ஒரு நிலையில் நில்லாமல் தாவும் குரங்கு மட்டுமல்ல; சமயத்தில் உடல் நலத்தையே தன் கட்டுக்குள் கொண்டுவரும் ரிங்க் மாஸ்டரும் ஆகும் மனது!
மனது இறுக்கமாய் உள்ளபோது, பசியில்லை, உறக்கமில்லை, உடலில் பல வலிகள், எளிதில் எரிச்சலடைவது போன்ற பல உபாதைகள் – மனதால் உடலுக்கு வரும் நோய்கள் – PSYCHO SOMATIC DISORDERS – தீவிரமானவை, சிகிச்சைக்கு அடங்காதவை!
ஹிப்னாடிஸம் – (மெஸ்மெரிஸம்) – என்பது ஒரு வகை மனோவசியக் கலை! ஃப்ரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஜீன் மார்டின் ஷார்கோ இந்த மனோவசிய முறையில் பல நரம்பு சம்பந்தமான நோய்களை குணப்படுத்தமுடியும் என்றார்.
சைக்காலஜிஸ்ட் ரிப்போர்ட் என் சந்தேகத்தை உறுதிப் படுத்தியது. தீவிர மன இறுக்கத்தாலும், உளைச்சலாலும் அந்தப் பெண் பாதிக்கப் பட்டிருப்பது தெரியவந்தது. அதன் வெளிப்பாடுதான் இந்த விநோதமான நடை! ஒரு வகையான மனோவியாதி.
நடந்தது இதுதான் – அவசரத் தேவைக்காகக் கடனாக வாங்கி எடுத்து வந்த பணம் – ரூபாய் ஐம்பதாயிரம் – வரும் வழியில் பஸ் பிரயாணத்தில் தொலைந்து விடுகிறது. கண்டிப்பான கணவன், மாமியார் மற்றும் பணத்தின் அவசரத் தேவை எல்லாமும் ஒன்றாகச் சேர்ந்து அந்தப் பெண் மனதை உளைச்சலுக்கு ஆளாக்குகின்றன – தன் இயலாமை, பொறுப்பற்ற தன்மையாகத் தன்னையே குத்திக் காட்டும் குற்ற உணர்ச்சியாக விஸ்வரூபம் எடுக்கிறது – மனக் குரங்கு, இப்போது ரிங்க் மாஸ்டராகி விடுகிறது – உடலை நோய்வாய்ப்பட வைக்கிறது – வினோதமாக நடக்க வைக்கிறது!
இதைத்தான் கண்ணதாசன் ‘ மனித ஜாதியின் துயரம் யாவுமே மனதினால் வந்த நோயடா ‘ என்றான்!
இரத்தப் பரீட்சைகள், எக்ஸ்ரே, ஸ்கான் இவற்றால் இந்த மனம் என்னும் ரிங் மாஸ்டரை வெளிப்படுத்த முடியாது.
நடந்தவற்றைக் கூறி, கவுன்சலிங் மூலம் வாழ்வின் அநித்தியங்களையும், தவிர்க்கமுடியாத துயரங்களையும் விளங்க வைத்த பிறகு, சிறிது சிறிதாக அவள் நார்மலாக நடக்க ஆரம்பித்தாள் – மனது அமைதியானது!
ஒரு வகுப்பில் இந்த கேஸ் ஹிஸ்டரியைக் கூறி, மாணவர்களைக் கேட்டேன்:
‘இதற்கு என்ன தீர்வு – எப்படி சிகிச்சை அளிக்க முடியும்?”
ஒரு நீண்ட அமைதி.
பின் பெஞ்சிலிருந்து ஒரு குரல் கேட்டது.
“யாராவது ஒரு ஐம்பதாயிரம் ரூபாயை அவளிடம் கொடுத்து விடலாம்!”
மனம் ஒரு குரங்கு – ஒத்துக்கொள்கிறீர்களா?!!
