விட்டு விட வேண்டும்- மாலதி சுவாமிநாதன்

Related image

க்ளினிக் வந்து சேர்ந்தேன். கண்ணுக்குப்பட்ட முதல் காட்சி – ஒரு 35 (?) வயதுள்ள பெண்மணியின் பூப்படர்ந்த புடவையின் தலைப்பை அவளை ஒட்டி உட்கார்ந்த பையன் இழுத்து, இழுத்து, அவள் தலைப்பை சரி செய்ய, அவன் அதை இழுத்து விட்டு, “போடி போடி” என முணுமுணுத்து, அவளைக் கிள்ளி, மடியில் இருந்த பையைத் தட்டி விட்டான். பக்கத்து நாற்காலியில் ஒருத்தர் புத்தகம் படித்துக்கொண்டிருந்தார்.

இவர்களே, அன்று, என்னுடைய முதல் க்ளையன்ட். உள்ளே அழைத்தேன். அந்தப் பெண்மணியை அட்டைபோல் ஒட்டிக் கொண்டு அந்தப் பையன், அவளைக் கிள்ளியபடியே (பளிச்சென்று பல வடுக்கள் அவள் வெளிர் சருமத்தில்) உள்ளே வர, அந்தப் புத்தகம் படித்துக்கொண்டிருந்தவர் “குட் ஈவ்னிங் மேடம்” என்றபடி ஜம்முனு சென்ட் மணக்கக் கையில் புத்தகத்துடன் “ஐ யாம் ஹிஸ் ஃபாதர்” என்று சொல்லிக்கொண்டு உட்கார்ந்தார். அந்தப் பெண்மணி, அம்மா என யூகித்தேன்; கசங்கின புடவை, ஜூன் வெப்பத்தின் வியர்வை, பொட்டை கலைத்துச் சிவப்பாக வழிந்தபடி இருந்தது.

Image result for mother father and a problem son taken to psychiatric assistance in chennai

விவரிப்பில், பள்ளி கொடுத்த கடிதம் தந்தார்கள். அதில் சுனிலின் விவரம் புரியவந்தது. சுனில், ஆறாவது வகுப்பு வந்திருக்கிறான். அம்மா தன்னுடன் இருந்தால் மட்டுமே வகுப்பு செல்லத் தயாராம். இல்லா விட்டால் TV, ரிமோட், அம்மாவின் கருகுமணி தாலி, மேசையின் கண்ணாடி எனக் கையில் கிடைப்பதை உடைப்பானாம். அம்மா மீனா, குழந்தை என்று விட்டு விடுவாளாம். இந்த இரண்டு மாதங்களாக பள்ளி போனால், ஒரே இடத்திலேயே நிற்பது, துப்புவது, இல்லை சிணுங்குவது. ஆசிரியர், மன நல உதவி தேவை என்று கருதி, என்னிடம் (ஸைக்காட்ரிக் ஸோஷியல் வர்க்கர்) அனுப்பி வைத்திருந்தார்.

சுனில், இங்கு வர இஷ்டப் படவில்லை. அதனாலேயோ என்னவோ, முழுதாக விவரித்திருந்த ரிப்போர்டை waiting hallலில் கிழித்துக் கடாசி விட்டான் என அவன் அம்மா வந்த சிரிப்பை அடக்கி விவரித்தாள். அப்பா குமார் “சுனில்” என்று குரல் உயர்த்தினார். முப்பது வினாடி அவகாசம் கொடுத்த பின் “சரி, உனக்குப் பிடிக்கவில்லை. ஆனால் எனக்குத் தேவைதானே?” என்றேன். தலை அசைத்தவாறு “ஸோ” என்றான். கிழித்த பேப்பரை ஒட்டி தரச் சொன்னேன். “ஐயோ, நானே” என்று அவன் அம்மா குறுக்கிட்டாள். குமார் “நன்னா நாலு சாத்து சாத்தணும். Fool” என்றார். இருவருக்கும் சேர்த்தாற்போல்  சொன்னேன், “சுனில் இந்தக் கடிதத்தை மதிக்கவில்லை. ஸோ கிழித்தான். சுனிலே ஒட்டுவான், ரைட் சுனில்?” அவன் இதை எதிர்பார்க்கவில்லை, முறைத்தான். அமைதியில் இரண்டு வினாடி நகர்ந்தது. கோந்து பாட்டிலை சுனில் எதிரே வைத்தேன். ஒட்டி, ஸாரீ சொல்லித் தந்தான். பிறகு வருவாயா என்று கேட்டதற்கு, “சரி” சொன்னான்.

மறு வினாடி, அம்மாவைக் கிள்ளி “பாப்பின்ஸ் தாடி” எனக் கேட்டான். அவள் புன்முறுவலுடன் பசையான அந்தப் பாப்பின்ஸ் பேப்பரை கிழித்து அவனுக்கு வாயில் போட்டாள். அப்பாவைப் பார்த்து சுனில் “ஏய், வரியா”? பதிலுக்கு அவர், “வாடா குழந்தை ” என்று சொல்லி அழைத்துக் கொண்டுபோனார்கள். சில சமயங்களில் நெருக்கங்கள் நம்மைப் பலவீனம் ஆக்கலாம், இங்கு இடையூறானதோ?

சுனில் ஏன் இப்படிச் செய்கிறான்? இந்தச் சூழலின் தன்மைகள், பராமரிப்பில் விதங்கள், கட்டுப்பாடுகள், குடும்பத்தினரின் உறவுமுறை, வலிமைகள், இடையூறுகளை அறிந்து, அவன் செய்யும் துன்புறுத்தல் ஏன்-எப்போது உருவாகியது, அது அமைந்து-நிலவுவதைப் புரிந்து கொள்வது அவசியமாகும்.

மீனா, மதிய உணவு இடைவேளைக்கு இரண்டு பீரியட் முன்பு சென்று, 2 பீரியட் பின்பு வீடு திரும்புவாள். இது நல்ல கவனிப்பு என்றே எண்ணினாள். குமாரும், வீட்டில் இருப்பதற்கு, சுனில் பள்ளியில் எப்படிப் படிக்கிறான் என்பதைத் தெரிந்து கொள்வது நன்றேயென ஆமோதித்தார். அவருக்குப் படிப்பு நன்றாக இருக்க வேண்டும். அது போதும். இவன் படிக்கும் பள்ளியின் சுவர் சற்று குட்டையாக இருந்ததால் தன் அம்மாவை க்ளாஸில் இருந்தபடி பார்க்க முடிந்தது. இந்த வருடம் க்ளாஸ் பின்புறம் அமைய, அவனால் அம்மாவைப் பார்க்க முடியவில்லை. அதனால்தான் பக்கத்தில் இருக்க வற்புறுத்தினான்.

வீட்டில், இவன் ஒரே பையன், கடைக்குட்டி, செல்லப் பிள்ளை. குமார் பூனேயில் தனி நிறுவனம் ஒன்றில் வேலையில் இருந்தபோது சுனிலின் அக்காக்கள் ரேகா, ராகி பிறந்தார்கள். குமார்,1972இல் துபாய் போக நேர்ந்தது. மீனா தன் கணவரைப் பிரிய விருப்பப் படவேயில்லை. அவரும், மீனாவை தன்னோடு வந்தாக வேண்டும் என்றார். 11 வயது ரேகா, 9 வயது ராகி, மதுரையில் பாட்டியின் பராமரிப்பில் விடப்பட்டார்கள்.

துபாய் சென்று,1978இல், மீனா சுனிலைப் பிரசவிக்க மதுரை திரும்பினாள். ஐந்து வருடங்களுக்குப் பிறகே அம்மா-மகள்கள் சந்தித்தார்கள், அந்நியர்கள்போல். ஆறு மாதங்கள் கழித்து, குமாரும் திரும்பினார். மதுரையில் 6 மாதம் வசித்தார்கள். பிறகு, பூனேயில் வீடு வாங்கி 5 பேரும் குடி ஏறினார்கள். 1982யில் டில்லி, மும்பை, குவைட் என்று குமாரின் வேலை அமைந்தது. இவர் இன்ஜினியர்; சீனியர் மேனேஜர், தாராள மனசு, படிப்பு விஷயத்தில் மிகக் கண்டிப்பு. வேலையில் இங்கும் அங்குமாக இருந்ததால் வீடு சம்பந்தப்பட்ட எல்லா முடிவுகளும் மீனாவுடையதே – முழு சுதந்திரம் இருந்தும் ரசிக்கவில்லை. இவற்றை, பாரம், சலிப்பு, எரிச்சல் என்று விவரித்தாள். மீனாவுக்கு முடிவுகள் செய்வது, குடும்பத் தேவைகளை பார்த்து – பூர்த்தி செய்வதே பிடிக்கவில்லை.

இவள், சுதந்திரமாகத் திரிந்தவள். மீனா தன் அம்மாவின் செல்லக் குழந்தை. பி.யூ.சி முடித்து, 19 வயதில் கல்யாணம். இதுவே அம்மாவிடமிருந்து முதல் பிரிவு. அவள் மாமியார் “புக்காமே உன் ஆம்” என்று சொல்லியதால், மீனா அம்மா வீட்டுப் பக்கம் போகவே இல்லை. வேலை செய்யத் தவிப்பாள். அம்மா கூடவே செய்து பழக்கம். மாமியார், பருப்பு கேட்டால், முழிப்பாள், எது எந்தப் பருப்புனு தெரிய வாரங்கள் ஆயின. வெண்ணெய், நெய் காய்ச்சும் படலம் மீனாவுக்கு ஒப்பாது. பல தடவை மீனா இட்லி வாத்து, குக்கருக்கு whistle போட்டதும் உண்டு. குழந்தை பிறந்தவுடன், எதை, எப்போது செய்வது என்று தடுமாறினாள். மாமியார் உதவிக்கு வரமாட்டாள். “நீயே செய், அப்போதுதான் வரும்” என்று இருப்பாள்.

சுனிலின் குழந்தைப் பருவத்தில், குமார் தன் குடும்பத்தை பூனேயில் விட்டுவிட்டு 8 வருடத்திற்கு குவைட் சென்றார். தன் அம்மா வீட்டுக்குப் போகவில்லை என்றாலும், இவர் பக்கத்தில் இருந்தது பக்கபலமே. இந்தப் பிரிவின் துக்கத்தை அவளுக்கு சமாளிக்கத் தெரியவில்லை.

ரேகா, மூத்தவள். சின்ன வயதில் பெற்றோரால் ஆன பிரிவில் யாரையும் நம்பிவிடக் கூடாது என்று தன் வேலைகளைத் தானே செய்து பயின்றாள். பருவம் அடைந்த வயதில் வீட்டில் தம்பிப் பயல் பிறந்தான். “இவன் என் தம்பி” என சொல்லக் கூச்சமாக இருந்தது. பிறந்த குழந்தையின் கூச்சல், தூக்கப் பழக்கம், அவனுக்குச் செய்யும் சிஷ்ருஷையாலேயே பத்தாவதில் மதிப்பெண் குறைந்தது. இவளுக்கும், சுனிலுக்கும் 14 வயது வித்தியாசம் ஒரு உறுத்தலாகவே இருந்தது. இவள், படிப்பில் மிகக் கெட்டி, கை வேலையில் சிறந்தவள், சமைப்பது ருசியாக இருக்கும்; இருந்தும் தன் குறைகளேயே அதிகமாகப் பார்ப்பாள்.

ராகி, வெட்கப்படும் சுபாவம். யாரிடமும், எதையும் சொல்லமாட்டாள். சுனில் அவள் பொருளை எடுப்பான், கிழிப்பான், உடைப்பான். “குழந்தைதானே” என்று விட்டு விடுவார்கள். இவளுக்கு யாரும் ஆறுதல் சொன்னதில்லை. 11 வயது இடைவேளை இருந்தும், அவனைத் தூக்கினதோ, தன்னுடன் கூட்டிக்கொண்டு போனதோ இல்லை. படிப்பில் மட்டும் கவனம் செலுத்தி, இன்ஜினியரிங்கும், விஸ்காமும் படித்தாள். பல பரிசுகள் பெற்றாள்.

அக்காக்களிடமிருந்து சுனில் விலகியே இருந்தவன், அம்மாவிடம் ஒட்டினான். கல்யாணம், மீனாவை அம்மாவிடமிருந்து பிரித்தது, வேலையினால் கணவரைப் பிரிய நேர்ந்தது. தன்னுடன் இருக்கத் தானோ, சுனிலுக்கு சோறு ஊட்டி, குளிப்பாட்டி, உடை அணிவித்து அக்கறை என்று 7-8 வயது வரை, மறைமுகமாக 9-10 வரை செய்தாள். அவன் விளையாட்டு தோழனும் ஆனாள். அவளுடன் தூங்கினான். அவள் எங்குச் சென்றாலும், அவனும் கூடவே போவான். இவளுக்கு இது இதமாகவே இருந்தது.

குமார் பூனே திரும்பினார். வீட்டைப் பார்த்து வியப்பும், கோபமும் சூழ்ந்தது. அவர், சுனில் தன் வேலையைத் தானேசெய்யவும், விலகித் தூங்கவும் சொன்னார். அவனால் முடியவில்லை. மீனாவும் மறுத்தாள். இதனால், வாக்குவாதம் நீண்டது, கூச்சல் குழப்பம் உண்டானது.

ரேகா, ராகி, சுனில் படிக்கும் நேரம் குமார் கேள்வி கேட்பார். பதில் தவறாக இருந்தால், மீனா, சுனில் பக்கத்தில் இருப்பவளைப் பார்த்து “வேறு என்ன வேலை?” என்றும், தொடர்ந்து “முட்டாள், அதான் மேல படிக்கல, முட்டாள்” என்பார். பசங்களும் “அப்படியென்றால் அம்மா மக்கு”, என்று நினைத்தார்கள். சுனில் அவளை “ஏய் மக்கம்மா” எனக் கூப்பிடுவான். மரியாதை வலுவிழந்தது.

இருந்தும், மீனா, சுனில் எதைச் செய்தாலும் சபாஷ் சொல்வாள், முழு பாப்பின்ஸ் பேக்கட் தருவாள். ரேகா, ராகி இவளிடமிருந்து என்றும் பாராட்டு பெற்றதில்லை. ஈடு கட்டுவதுபோல் பள்ளியில் பாராட்டு குவியும். எல்லா ஸப்ஜெக்டிலும் நன்றாகச் செய்ய, ஆசிரியர்கள் அன்பாக அழைத்துப் பேசுவார்கள். வீட்டில் சலிப்பு தட்டி இந்த மூன்று பெண்களும் விலகியே இருந்தார்கள்.

சுனில் எது கேட்டாலும் கிடைத்துவிடும். கேட்டதை அக்காக்கள் கொடுக்காவிட்டால், திட்டுவான், எச்சில் துப்புவான், கடிப்பான். மீனா கொடுக்க வற்புறுத்துவாள். அப்படியும் மறுத்தால், சுனிலிடம் “எப்படியானும், நாம வாங்கிடலாம். அடிச்சி வாங்கி தரேன்”, என்பாள். இதன் பல வடுக்களை அக்காக்கள் அணிந்திருந்தார்கள். சுனில், எது செய்வதற்கு முன்பும் “டேய், பாப்பின்ஸ், ஃபிங்கர் சிப்ஸ் தரேன், பண்ணு.” எனக் கெஞ்சுவாள். பெற்றோர் பிள்ளைக்குத் தரும் லஞ்சம்: ஒரு ஆயுதமே!

ரேகா, 22ல் மேல் படிப்பு முடித்து, கேம்பஸ் ப்ளேஸ்மென்டில் கெளரவமான உத்தியோகம் அமைந்ததும்,கல்யாணம் செய்து விட்டார்கள். தன்னை மறுபடியும் தள்ளி விட்டார்கள் என்றே தோன்றியது. கணவர் மூர்த்தி மீதும், அவர் குடும்பத்தினரிடமும் அன்பயைம், கவனிப்பையும் பொழிந்தாள். இவள் இல்வாழ்வு கனடாவில் அமைந்தது. கல்யாணமான முதல் 6 மாதம் அம்மாவிடம் பேசமறுத்தாள். கடிதங்களுக்குப் பதில் எழுதவில்லை. தள்ளிவிட்டார்கள் என்ற தர்க்கத்தை மூர்த்தி ஏற்றுக் கொள்ள மறுத்தார். அவர் தூண்டுதலில் கடிதப் போக்கு தொடங்கியது. முதலில், குற்றச்சாட்டுகள் குவிந்தது, தொடர்ந்து “ஐயோ, தப்பு, மன்னித்துக்கொள்”, பிறகு கருணை எட்டிப் பார்க்க ஆரம்பித்தது.

Related image

இருந்தும், சுனில் மேல் வெறுப்பு வாட்டியது. அம்மா விவரித்தபின், க்ளினிக் போகவேண்டிய சூழ்நிலையை அறிந்து கொண்டாள். முதல் நாளின் நிகழ்வுகளை மீனா விவரித்தாள். அவன் துப்பினான், கத்தினான் ,ஆனால் சுத்தமும்படுத்தி, கேள்விகளுக்கும் பணிவாக பதிலும் சொன்னான் என்று.

மீனாவுக்கு “இப்படியும் செய்ய முடியும்” என்று தோன்ற ஆரம்பித்தது. என்றாலும் கூட சின்ன அச்சம்,எங்கே சுனில் தன்னை விட்டு விலகி, மேடம்மேல்  பாசம் கொள்வானோ என? அக்கறையாக, க்ளினிக் செல்வதற்கு முன், இப்படி இருக்கலாம், அப்படி ஆகலாம் என சுனிலைத் தயாரித்துக் கூட்டிச் சென்றதில் அடம் அதிகமானது. அம்மா-மகனை வெவ்வேறு நாட்கள் பார்க்க முடிவானது.

சுனிலுடன் என்னுடைய பரிமாற்றம், கதைகள், க்ளே மாடலிங், எனக் கலந்ததாக இருந்தது. அம்மா பக்கத்தில் இருந்தாக வேண்டும் என்றான். முதலில் கதவருகில் உட்கார்ந்தாள், பின்னர், கதவு திறந்து பார்த்தவாறு; ஐந்து செஷனில் ஸைக்காட்ரிக் ஸோஷியல் வர்க்கருடன்மட்டும் என ஆனது. மீனா அடம் பிடிப்பதை  சுதாரிப்பதை அணுகும் முறைகளைப் பார்க்கலானது.

குமாருக்கோ, அவர் பங்குக்கு, படிப்பைத் தவிர, சுனி்லுடன் ஆலோசித்து, இருவருமாகச் சேர்ந்து ஏதேனும் செய்ய வேண்டும். இது, டென்னிஸ் விளையாடத் தொடங்கி, சைக்கிளில் டபுள்ஸ், தோட்ட வேலை, கேரம் எனக் கூடிக்கொண்டேபோனது. தன் வயதுள்ளவர்களுடனும் சுனில் விளையாடத் தொடங்கினான்.

இதே சமயத்தில், சகோதரிகள் அவனுடன் க்ளினிக் வர ஆரம்பித்தார்கள், அம்மாவை விட்டுப் பழகவும், இவர்களின் இடையே இடைவெளி குறைப்பதற்காகவும். அம்மா தன் பக்கம் இல்லாமல் பள்ளியில் இருக்க முடியும் என்ற ஆலோசனை தொடங்க, மீனாவும் நானும் பள்ளிக்குச் சென்று விவரித்தோம்.

பள்ளியில், மிகக் கனிவுடன் சுனிலை வரவழைத்து, தகவலைப் புரிந்து, ஒத்துழைத்தார்கள். முதல் நாள் அவன் தட்டுத்தடுமாறி, முழித்து, கை பின்னி நின்றான். இப்படி ஆகக் கூடும் என்றே முன்னாலேயே அவன் க்ளாஸில் பொதுவாக, கனிவு-பதட்டம், பயம்- ஆதரவு ஜோடிகளைப் பற்றிய வர்க்க்ஷாப் நடத்தினேன். அதன் பிரதிபலிப்பு – சுனில் முழித்தபோது நான்-நீ என அவனுக்கு ஆதரவு குவிந்தது. தினம், முன்றைய தினத்தை விட, அம்மாவின்றி பள்ளியில் இருக்கும் நேரம் கூடியது. பள்ளி பழக ஆரம்பித்தான்; தயக்கமும், தைரியமும் கலந்து இருந்தது. மீனா சுனிலைப் பிரிந்து தத்தளித்தாள். அவளுக்குப் பிடித்த பூத்தையல் கை வேலையானது, கவலை கவ்வாமல் காத்தது.

வெவ்வேறு பரிமாணங்கள் அமைந்ததால், தயங்கி-தயங்கி பாசம் காட்டி, ஒருத்தருக்கு ஒருத்தர் உதவியானார்கள். பெற்றோருக்குள் கருத்து வேறுபாடு எழுந்தால், கதவை மூடிக் கொண்டோ, பிள்ளைகள் இல்லாத இடத்திலோ தங்கள் தர்க்கத்தை வைத்துக் கொண்டார்கள். சுனில்-ரேகா-ராகி பரிச்சயம், அம்மா-பெண்களின் நெருக்கம், மாப்பிள்ளை மூர்த்தி வரப்பிரசாதமானது இன்னொரு கதையே!

பாதுகாப்பின்மையின் தோற்றங்கள்

முடியவே முடியாது என்போம், சஞ்சலத்தில்!

கூடவே கூடாது என்போம், சந்தேகத்தில்!

என்னுடையது, எனக்கு மட்டும் என எண்ணுவோம்!

பாரபட்சம் காட்டுவோம், பகிர்ந்து கொள்ளவே மாட்டோம்!

பிடிவாதம், கோபம், நம் பாதுகாப்பின்மையின்

நிலையற்ற நிலையின் “வார்த்தைகள்”!

 

 

 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.