லிங்காஷ்டகம் – இடம் பொருள் பாடல்

 

Related image

பகைவர்களை வெல்லவும், உறவினர்களின் உறவு மேம்படவும், உறவினர்களின் நெருக்கத்தைப் பெறவும், எதிரிகளின் எதிர்ப்புகளை முறியடிக்கவும் மந்திர வலிமை வாய்ந்த ஸ்லோகம் லிங்காஷ்டகம். இந்த ஸ்லோகத்தை சிவபூஜையின் போது பாராயணம் செய்தால் நற்பலன்கள் ஏற்படும்.

#ப்ரஹ்ம_முராரி ஸுரார்ச்சித லிங்கம்
நிர்மல பாஷித சோபித லிங்கம்
ஜன்மஜ துக்க விநாசக லிங்கம்
தத் ப்ரணமாமி ஸதாசிவ லிங்கம். ….. (01)

நான்முகப் பிரம்மனாலும், முரனை அழித்த முராரியாம் விஷ்ணுவாலும், எல்லாத் தேவர்களாலும் அர்ச்சிக்கப்பட்ட லிங்கம், குற்றமற்ற மிகுந்த ஒளியுடன் ஜொலிக்கும் லிங்கம், பிறப்பு – இறப்பினால் ஏற்படும் துன்பங்களை நீக்கும் லிங்கம், அப்படிப்பட்ட சதாசிவ லிங்கத்தை அடியேன் வணங்குகிறேன்.
— — — — — — — — — — —

#தேவ_முனி ப்ரவார்ச்சித லிங்கம்
காம தஹன கருணாகர லிங்கம்
ராவண தர்ப்ப விநாசக லிங்கம்
தத் ப்ரணமாமி ஸதாசிவ லிங்கம். ….. (02)

தேவர்களிலும் ரிஷிகளிலும் சிறந்தவர்களாக இருப்பவர்களால் அர்ச்சிக்கப்பட்ட லிங்கம், மறைந்திருந்து மலர்க்கணைகளை விட்ட காமனை எரித்து, பின்னர் அவனை மீண்டும் உயிர்ப்பித்த கருணையுடன் கூடிய லிங்கம், இராவணனின் கர்வத்தை கால் கட்டை விரலால் நசுக்கி அழித்த லிங்கம், அப்படிப்பட்ட சதாசிவ லிங்கத்தை நான் வணங்குகிறேன்.
— — — — — — — — — — —

#ஸர்வ_ஸுகந்த ஸுலேபித லிங்கம்
புத்தி விவர்த்தன காரண லிங்கம்
ஸித்த ஸுராஸுர வந்தித லிங்கம்
தத் ப்ரணமாமி ஸதாசிவ லிங்கம். ….. (03)

எல்லாவிதமான நறுமணப் பொருட்களாலும் அலங்கரிக்கப்பட்ட லிங்கம், உண்மையறிவு அடையக் காரணமாக இருக்கும் லிங்கம், சித்தர்களாலும் தேவர்களாலும் அசுரர்களாலும் வணங்கப்படும் லிங்கம், அப்படிப்பட்ட சதாசிவ லிங்கத்தை நான் வணங்குகிறேன்.”

— — — — — — — — — — —
www.fb.com/Deivatharisanam
— — — — — — — — — — —

#கனக_மஹாமணி பூஷித லிங்கம்
பணிபதி வேஷ்டித சோபித லிங்கம்
தக்ஷ ஸுயஜ்ஞ விநாசன லிங்கம்
தத் ப்ரணமாமி ஸதாசிவ லிங்கம். ….. (04)

மிகச்சிறந்த மாணிக்கங்களாலும் அழகு செய்யப்பெற்ற லிங்கம், நாகங்களின் அரசனை அணிந்து ஒளிவீசும் லிங்கம், தனக்குரிய மரியாதையைத் தரத் தவறிய தக்ஷப் பிரஜாபதியின் யாகத்தை அழித்த லிங்கம், அப்படிப்பட்ட சதாசிவ லிங்கத்தை நான் வணங்குகிறேன்.
— — — — — — — — — — —

#குங்கும_சந்தன லேபித லிங்கம்
பங்கஜ ஹார ஸுசோபித லிங்கம்
ஸஞ்சித பாப விநாசன லிங்கம்
தத் ப்ரணமாமி ஸதாசிவ லிங்கம். ….. (05)

குங்குமத்தாலும் சந்தனத்தாலும் அலங்கரிக்கப்பட்ட லிங்கம், தாமரை மலர் மாலை அணிந்து ஒளிவீசும் லிங்கம், பற்பல பிறப்புகளில் சேர்த்து வைத்த எல்லா வினைகளின் பயன்களையும் அழிக்கும் லிங்கம், அப்படிப்பட்ட சதாசிவ லிங்கத்தை நான் வணங்குகிறேன்.
— — — — — — — — — — —

#தேவ_கணார்ச்சித ஸேவித லிங்கம்
பாவையர் பக்தி பிரேவச லிங்கம்
தினகர கோடி ப்ரபாகர லிங்கம்
தத் ப்ரணமாமி ஸதாசிவ லிங்கம். ….. (06)

தேவ கணங்களால் அர்ச்சிக்கப்பட்டும் சேவைகள் செய்யப்பட்டும் விளங்கும் லிங்கம், உணர்வுடன் கூடிய பக்தியை தோற்றுவிக்கும் லிங்கம், கோடி சூரியன்களின் ஒளியினைக் கொண்டிருக்கும் லிங்கம், அப்படிப்பட்ட சதாசிவ லிங்கத்தை நான் வணங்குகிறேன்.

— — — — — — — — — — —
www.fb.com/Deivatharisanam
— — — — — — — — — — —

#அஷ்ட_தளோபரி வேஷ்டித லிங்கம்
ஸர்வ ஸமுத்பவ காரண லிங்கம்
அஷ்ட தரித்ர விநாசித லிங்கம்
தத் ப்ரணமாமி ஸதாசிவ லிங்கம். ….. (07)

எட்டிதழ் தாமரையால் சூழப்பட்ட லிங்கம், எல்லாவிதமான செல்வங்களுக்கும் காரணமான லிங்கம், எட்டு விதமான ஏழ்மையை அழிக்கும் லிங்கம், அப்படிப்பட்ட சதாசிவ லிங்கத்தை நான் வணங்குகிறேன்.
— — — — — — — — — — —

#ஸுரகுரு_ஸுரவர பூஜித லிங்கம்
ஸுரவன புஷ்ப ஸதார்ச்சித லிங்கம்
பரமபர பரமாத்மக லிங்கம்
தத் ப்ரணமாமி ஸதாசிவ லிங்கம்.

லிங்காஷ்டக மிதம் புண்யம் யப் படேச் சிவ ஸந்நிதெள
சிவலோக மவாப்நோதி சிவேந ஸஹ மோததே. ….. (08)

தேவ குருவாலும் தேவர்களில் சிறந்தவர்களாலும் பூஜிக்கப்பட்ட லிங்கம், தேவலோக நந்தவன மலர்களால் எப்போதும் அர்ச்சிக்கப்பட்ட லிங்கம், பெரியதிலும் பெரியதான, பரமாத்ம உருவான லிங்கம், அப்படிப்பட்ட சதாசிவ லிங்கத்தை நான் வணங்குகிறேன்.

இந்த லிங்காஷ்டகம் மிகப் புனிதமானது, இதனை சிவ சன்னிதானத்தில் படித்தால், சிவலோகம் கிடைக்கும், சிவனுடன் தோழமை பாராட்டி என்றும் ஆனந்தமாக இருக்கலாம்.

நன்றி : ஸ்ரீ தில்லை #இளந்தென்றல்

 லிங்காஷ்டகம் – புது வடிவில் 
 
நான்முகன் திருமால் பூசைசெய் லிங்கம்
தூயசொல் புகழ்பெரும் பேரெழில் லிங்கம்
பிறவிப் பெருந்துயர் போக்கிடும் லிங்கம்
வணக்கம் ஏற்ற சதாசிவ லிங்கம்

 

காமனை எரித்த பேரருள் லிங்கம்
ராவணன் கர்வம் அடக்கிய லிங்கம்
வழிவழி முனிவர்கள் வழிபடும் லிங்கம்
வணக்கம் ஏற்ற சதாசிவ லிங்கம்

திவ்யமணம் பல கமழ்கின்ற லிங்கம்
சித்தம் தெளிவிக்கும் சித்தர்கள் லிங்கம்
தேவரும் அசுரரும் வணங்கிடும் லிங்கம்
வணக்கம் ஏற்ற சதாசிவ லிங்கம்

படம் எடுத்தாடும் பாம்பணி லிங்கம்
கனகமின் நவமணிகள் ஒளித்திடும் லிங்கம்
தட்சனின் யாகத்தை அழித்திட்ட லிங்கம்
வணக்கம் ஏற்ற சதாசிவ லிங்கம்

குங்குமம் சந்தனம் பொலிந்திடும் லிங்கம்
பங்கய மலர்களை சூடிடும் லிங்கம்
வந்ததோர் பாவத்தை போக்கிடும் லிங்கம்
வணக்கம் ஏற்ற சதாசிவ லிங்கம்

அமர கணங்கள் போற்றிடும் லிங்கம்
அன்பர்கள் பக்தியை ஏற்றிடும் லிங்கம்
கதிரவன் கோடி சுடர்மிகு லிங்கம்
வணக்கம் ஏற்ற சதாசிவ லிங்கம்

சிற்றிதழ் மலரினை சூட்டிடும் லிங்கம்
எல்லா பிறப்பிற்கும் காரண லிங்கம்
அஷ்ட தரித்திரம் அகற்றிடும் லிங்கம்
வணக்கம் ஏற்ற சதாசிவ லிங்கம்

சுரரவர் குருவிடம் தொழுதிடும் லிங்கம்
நிரந்தரம் வானத்து மலர்நிறை லிங்கம்
அனைத்திற்கும் மேன்படு பரம்பொருள் லிங்கம்
வணக்கம் ஏற்ற சதாசிவ லிங்கம்

சிவ சன்னிதானத்தில் இதனை உரைப்பார்
சிவ பதம் எய்தியே சிவனோடு இருப்பர்.

நன்றி: மாலைமலர்

Image result for lingashtakam song

எஸ் பி பாலசுப்ரமணியத்தின் இழைந்த குரலில் லிங்காஷ்டகம் கேட்கவேண்டுமா?  கீழே உள்ள லிங்கைக் கிளிக் செய்யுங்கள் !
 

சரித்திரம் பேசுகிறது -” யாரோ”

Image result for இந்திய வரலாறு

ருத்ரதாமன்

 

இருண்ட காலமென்று கூறப்படும் வட இந்திய சரித்திரத்தை…
சற்றே சிறு விளக்கு ஒன்று கொண்டு தேடுகிறோம்.
ஏதேனும் சித்திரங்கள் கிடைக்காதா என்று…
அந்த தேடலில்…

இன்று நமக்கு புதையல் ஒன்று கிடைக்கிறது!
அப்படிப்பட்ட ஒரு ‘நாயகனின்’ கதை இது!

சாதவாகன மன்னர்களைப் பார்த்தோம்.
அதில் சக சாம்ராஜ்யத்தையும் கோடி காட்டினோம்.
இன்று சக மன்னன் ஒருவனது கதை கேட்போம்.

ருத்திரதாமன்.

‘அட இது யாரு புது ஆளு… கேள்விப்படாத பேராயிருக்கே!’
-இந்த ஐயம் உங்களுக்கு மட்டுமல்ல.. எனக்கும் இருந்தது – சரித்திரக்கடலில் மூழ்கி முத்துக்குளிக்கும் வரை.

சரி… நீங்களும்…
‘முத்துக்குளிக்க வாரியளா’?
வருடம் கி பி 2015 டிசம்பர் மாதம்:
இடம்: சென்னை

இது அச்சுப்பிழை அல்ல.
ஒரு சிறு காட்சியை சொல்லி விட்டு நமது முதல் நூற்றாண்டு செல்வோம்.

புயல் ஒன்று புறப்பட்டது.
வானம் பொழிந்தது.
பொழிந்து தள்ளியது.
பூமி வழிந்தது.
தூர்வாரப் படாத ஏரிகள் நிரம்பியது.
தளும்பும் பொழுதில் அவைகள் திறந்து விடப்பட்டு…
நீர்….
சீறிப்பாய்ந்து நகரத்தை சூறையாடியது.
அரசாங்கம் திகைத்து நின்றது.

இயற்கையின் இதைப்போல அனைத்துப் பிரச்சினைகளையும் சரித்திரம் முன்பே சந்தித்திருக்கிறது.
ஒரு முறை மட்டுமல்ல.
ஒரே இடத்தில மூன்று முறை நடந்தது.

சரித்திரத்தை நன்கு படித்திருந்தால்… அதை நடைமுறைப்படுத்தியிருந்தால்… அரசாங்கம் இந்தப்பிரச்சினை வராமல் தடுத்திருக்கலாம்….

சந்திரகுப்த மௌரியர் காலத்திற்கு சற்று செல்வோம்.
இன்றைய குஜராத் மாநிலம்.
பாடலிபுத்திரத்திலிருந்து வெகு தொலைவு.
அங்கு சந்திரகுப்தனின் ஆளுநர் – வைஸ்ய புஷ்யகுப்தா.
அவன் ஆளும் மாநிலத்தில்..
உர்ஜயாத் என்னும் ஒரு மலை.
அங்கு…
ஸ்வர்ணசிகாதா பலாசினி என்ற இரு நதிகளும், அதன் மூன்று கிளை நதிகளும் மலையிலிருந்து கும்மாளமிட்டு புறப்படும்…
மணம் நிறைந்த மலர்கள் நதி நீரை ஆடையிட்டு அலங்கரிக்கும்…
ஐந்து சிறு நதிகளும் மலையிலிருந்து இறங்கி…
மோதிரங்கள் அணிந்த விரல் கொண்ட மலர்க்கரம் ஒன்று மலையை விட்டு நாட்டைத் தொடும் காட்சி…
வர்ணனைக்குக் காளிதாசன் இன்னும் பிறக்கவில்லை…
ஒரே வார்த்தை சொல்வோம்… ரம்யம்…

அந்த நதிகள் நாட்டில் தவழ்ந்து இன்பமாகக் கடலில் கலக்கும்.

ஆயினும் இயற்கை சீறிய பொழுது ….

மணமலர்களுக்கு மாறாக சேற்றைப் பூசிக் கோபம் கொண்டிருந்த நதிகள்..
வெறி கொண்டு … கண் மண் தெரியாமல்… கரை தெறித்து… ஓடி… வழியில் உள்ள நகரங்களை அழித்தது.

சந்திரகுப்தன் ஆளுனரை அழைத்தான்.
‘வெகு விரைவில் அந்த மலையில் ஒரு அணை கட்டி இது போல் அனர்த்தம் நிகழாது செய்’ – என்று பணித்தான்.
புஷ்யகுப்தன் அணை கட்டி அந்த நதிகளின் கோபத்தைத் தணித்தான்.
அந்த அணை ‘சுதர்சனா ஏரி’!
அது மக்கள் உயிர் காத்தது.
பின்னாளில் அசோகர் அந்த அணைக்கு பல கால்வாய்கள் – குழாய்கள் (conduits) அமைத்து அந்த அணையை வலுப்படுத்தினான்.
அவனது ஆளுநர் ஒரு யவன ராஜா ‘துசாபா’ அதை நிறைவேற்றினான்.

எந்த படைப்புக்கும் பராமரிப்பு வேண்டும்.
செம்பரம்பாக்கத்திலிருந்து … சுதர்சனா வரை எல்லா ஏரிகளுக்கும் இது பொருந்தும்.
மக்கள் நலம் கொண்ட அனைத்து அரசுகளுக்கும் இதை செய்யும் கடமை உண்டு.

சில நூற்றாண்டுகள் கழிந்தன.
இப்பொழுது முதல் நூற்றாண்டுக்குச் செல்வோம்.
நாள்: கி பி 72
அது ஒரு முன்பனிக்காலம்.
நமது கதாநாயகன் ருத்திரதாமன் சக மன்னன்.

(ருத்திரதாமன்)

ஒரு நாள்…
கருமேகங்கள் பெருத்து வந்து குவிந்தது..
மழையை பொழிந்தது..
நதி போல நீர் வானத்திலிருந்து பூமியை நோக்கிப் பாய்ந்தது.
நாட்கள் சென்றன…
வானம் நிறுத்தவில்லை.
வெள்ளம் எங்கும் பெருக்கெடுத்தது.
ஸ்வர்ணசிகாதா பலாசினி என்ற இரு நதிகளிலிருந்தும், மேலும் அதன் மூன்று கிளை நதிகளிலிருந்தும் பொங்கிய வெள்ளத்தை பூமி தாங்க இயலவில்லை.
மரங்கள் உடைந்தன.
கரைகள் கரைந்தன.
மலைகள் மண்ணரிப்பால் சேற்றை எங்கும் பரப்பியது.
மண்ணுலகமே மகா சமுத்திரம் போலக் காட்சி அளித்தது.
யுகம் முடிந்துவிட்டது போன்ற தோற்றம்.
ருத்திரதாமன் பல முன்னேற்பாடுகள் செய்திருந்தாலும் –இந்த ஆழி பேரழிவை நிகழ்த்தியது.

சுதர்சனா ஏரி 100 அடி ஆழம் கொண்டிருந்தது.
அது முழுதும் உடைந்தது.
ஏரியின் அனைத்து நீரும் வற்றி அது ஒரு மணல் பாலைவனம் போல் காட்சி அளித்தது.
அழகான ஏரி அன்று பார்க்க காணத்தகாமல் அலங்கோலமாக இருந்தது.
சுதர்சனா என்ற ஏரி.. துர்தர்சனா என்று அழைக்கப்படும் நிலை.
மக்கள் அடைந்த துயரத்திற்கோ அளவில்லை.

ருத்திரதாமனின் மந்திரிகளும் ஆலோசர்களும் அந்த அவலத்தைக் கண்டனர். மன்னரிடம் சென்று ஒரே குரலில் கூறினர்:

‘என்ன பேரழிவு..இந்த அணையை செப்பனிடுவது என்பது முடியாத காரியம்’
மன்னன் அதை ஒப்பவில்லை.

‘அணை முழுமையாக் கட்டப்படவேண்டும்..
நாட்டின் பசுக்களுக்கும், மக்களுக்கும் இன்னும் ஓராயிரம் ஆண்டிற்கும் இந்த கஷ்டம் வரலாகாது. இதுவே என் ஆணை’ – என்றான்.

தனது ஆட்சிக்குக் கீழ் இருந்த ‘அனர்த்த’ நாட்டு மன்னனை அழைத்தான்.
அவன் பெயர் ‘அமத்யா சுவிசாகா’.
அமத்யா நேர்மையான, மக்கள் நலம் விரும்பும், சிறந்த ஆட்சியாளன்.

ருத்திரதாமன்:
‘அமத்யா, இதைச் செய்வதற்கு நீயன்றி யாரும் இல்லை’

அமத்யா:
‘இதைச் செய்வது எனக்கும் கடமைதான் மன்னா! வெகு விரைவில் செய்து முடிப்பேன்’

அந்த அணையை முன்பிருந்ததை விட மூன்று மடங்கு பெரியதாகவும் ஆழமாகவும் விரைவில் செப்பனிட்டான்.

இதில் என்ன சிறப்பு என்றால்:
ருத்திரதாமன் இதை  அருகிலிருந்த நகர, கிராம வாசிகளுக்கு எந்த வித தொந்தரவு இல்லாமலும், மக்களைக் கட்டாய வேலை செய்விக்காமலும், வேறு வரி விதிக்காமலும் செய்தான். எந்த வித நன்கொடையும் பெறப்படவில்லை. மொத்த செலவும் அரண்மனைக் கருவூலத்திலிருந்து சென்றது.

(பின் குறிப்பு: பின்னாளில் ஐந்தாம் நூற்றாண்டில் ஸ்கந்தகுப்தன் என்ற குப்த மன்னன் காலம்.. இந்த அணை பெரும் மழையின் தாக்குதலால் மீண்டும் உடையவே, மன்னன் அதைச் சீர்திருத்தி செப்பனிட்டான்)
அசோகரது கல்வெட்டுகள்
ஜீனாகத் கல்வெட்டு

அணையைத் தவிர ருத்ரதாமன் வேறு என்ன செய்தான் – என்று கேள்விக்கு சரித்திரம் பதில் சொல்கிறது:

குஷானர் மேலோங்கியிருந்த காலத்தில் அவர்களுக்கு அடி பணிந்த சிற்றரசர்களாக சக வம்சத்தினர் ஆட்சி செலுத்தி வந்தனர். கனிஷ்கருக்குப் பின் வந்த குஷானர்கள் திறமையற்றவர்களாக இருந்தமையால், இந்த சக மன்னர்கள் உஜ்ஜயினியை தலை நகராகக் கொண்டு மன்னன் என்று பட்டம் சூட்டிக்கொண்டு வாழ்ந்தனர்.
சதவாஹன அரசின் கவுதமிபுத்திரன் என்ற மன்னனைப் பற்றி நாம் படித்திருந்தோம்.
அவன் சக நாட்டை வென்ற பின் – சக நாட்டில் சாஸ்தானா என்ற மன்னன் சக நாட்டை மீண்டும் அமைத்தான்.
அந்தப் பரம்பரையில், சாஸ்தானாவின் பேரன் முதலாம் ருத்திரதாமன்.

ருத்ரதாமன் அரசுரிமை ஏற்ற பொழுது நாடு நிலைமை – புயலுக்குக்குப் பின் சுதர்சனா ஏரி அப்படியிருந்ததோ- அவ்வளவு மோசமான நிலையில் இருந்தது.

ருத்ரதாமன் –
மாவீரன்…
அறிவாளி…
நேர்மையான நிர்வாகி…
தர்மத்தைக் கொள்கையாகக் கொண்டவன்…
வாள்வீச்சில் சிறந்தவன்…
குத்துச்சண்டையில் மாமல்லன்.
குதிரை, ரதம் மற்றும் யானை அனைத்தையும் செலுத்துவதில் வல்லவன்…
ஏழைக்குப் பொருள் வழங்குவதில் வள்ளல்…
இசை வல்லுனன்…
விஞ்ஞான அறிவுடையவன்…
அழகிய கவிதைகள் , உரைநடை எழுதிய கவிஞன்.
சம்ஸ்கிருதத்தில் பாண்டித்தியம் பெற்று சிறந்தான்.
முதன் முறையாக சரித்திரத்தில் சம்ஸ்கிருத கல்வெட்டுகள் அமைத்தவன்…
(அதற்கு முன் பிராகிருத பாணியில் பாலி, மற்றும் மகதி மொழிகளில் மட்டும் தான் அமைந்திருந்தது)

சகலகலாவல்லவன்.


ருத்ரதாமனது வெள்ளி நாணயம்.

குஷானர்களைப்போலவே சக அரசர்களும் கிரேக்க மற்றும் மத்திய ஆசியாவின் வம்சத்தில் வந்தவர்கள்.
அப்படிப்பட்ட ருத்திரதாமன் சம்ஸ்கிருத பண்டிதனாகியது அவன் தனது மக்கள் (பிராமண மக்கள் சேர்த்து) மீது கொண்ட அன்பைக் காட்டியது…..
இந்துப் பெண்ணைத் திருமணம் செய்து கொண்டு, தானும் இந்து சமயத்தவராக மாறினான்.
ருத்திரதாமன் சாதவாகனர்களுடன் திருமண உறவுகள் கொண்டிருந்தான். தன் மருமகனான வசிஷ்டிபுத்திர சதகர்ணிக்கு திருமணப் பரிசாக, அபராந்தா எனும் நிலப்பரப்பை வழங்கினான்.
ருத்திரதாமன் தற்கால அரியானாவின் யௌதேயர்களை வென்றதாக கிர்நார் மலைக் கல்வெட்டுகள் கூறுகிறது.
ருத்திரதாமன் சாதவாகனர்களுடன் இருமுறை போர் புரிந்து வெற்றி கொண்டான். தோற்கடிக்கப்பட்ட தனது மருமகன் வசிஷ்டிபுத்திர சதகர்ணிக்கு தீங்கு வராமல் மன்னித்து அனுப்பினான்.
தோற்கடிக்கப்பட்ட எல்லா மன்னர்களுக்கும் ஆட்சியைத் திரும்பக் கொடுத்துப் புகழ் பெற்றான்.

கல்வியா.. செல்வமா.. வீரமா..?
இவை மூன்றும் சேர்ந்த மன்னன் ருத்திரதாமன்…

ருத்ரதாமன் அவையை  மிகப்பெரிய கிரேக்க எழுத்தாளர் ‘யவனேஸ்வரா’ அலங்கரித்தார். அவர் தான் கிரேக்க மொழியிலிலிருந்து சமஸ்கிருதத்தில் யாவனஜாதகா என்ற நூலை எழுதியவர்! 

அவன் சரித்திரக் கடலில் ஆழத்தில் ஒளிவிட்ட மாபெரும் முத்து!
அவனது கதை கூறி சரித்திரம் தன்னை அழகுபடுத்திக் கொண்டது…
இன்னும் இரண்டு நூற்றாண்டுகளில் அந்த அழகு ஜெகஜ்ஜோதியாக நவரத்தினங்களாக ஜொலிக்கவிருக்கிறது.

அந்த நாட்கள் விரைவில்…

செஞ்சுரி ! குறும்படம்

 

Image result for tendulkar and virat kohli

கிரிக்கெட்டில் செஞ்சுரி போடும் டெண்டுல்கர், விராட் கோலி பற்றி நாம் எவ்வளவு பெருமைப்படுகிறோம்.

ஆனால் இவரது செஞ்சுரியைப்    பாருங்கள். இதைப் பார்த்தபின்  நாமும் ஏதாவது செய்யவேண்டும் என்று தோன்றினால் இந்தப் படத்தை எடுத்தவருக்கு மட்டுமல்ல நமது சமூகத்துக்கும் வெற்றி!

படம் சுலபமான ஹிந்தியில் உள்ளது!

 

தொலைத்துவிட்டோம்

இந்த முதல்  கார்ட்டூன் கருத்தை நாம் தொலைத்துவிட்டோம் ! 

நம்ம குழந்தைகளுக்கு இந்த சுகம் கிடைக்குமா?

இது கிடைக்காமல் போனதற்கு யார் காரணம்? 

நாம் தான்.  நம் ஆசைகள்  குழந்தைகள் மீது திணிக்கப்படுகின்றன என்பதை  இரண்டாவது படத்தை விடச் சிறப்பாக யாரும் சொல்லிவிட முடியாது.

சம்மர் கேம்பும் கோச்சிங்க் வகுப்பும் போட்டுக் குழந்தைகளின் குழந்தைப் பருவத்தைக்  கொலை செய்யும் நமக்கு என்ன தண்டனை கொடுப்பது? 

இது மாறவேண்டும். அதற்கு நாம் மாறவேண்டும். 

மாற்றுவோமா?  மாறுவோமா? 

 

 

 

வண்ணத்துப்பூச்சி – ஜெயந்தி நாராயண்

 

இன்னிக்கி காலைல சாத்விய ஸ்கூல்ல விடப் போன போது, “அம்மா இவங்கதாம்மா என்னோட மிஸ்” என்று அவள் காட்டியவளை எங்கியோ பார்த்த மாதிரி இருந்தது…

வீட்டுக்கு வந்து மற்ற வேலைகளை பார்க்க ஆரம்பித்த பின்னும், மனசு அந்த டீச்சரையே சுத்தி வந்து கொண்டிருந்தது… ஃபெமிலியரான முகமா இருக்கே… மூளையில் உள்ள அனைத்து ந்யூரான்களும் ஓவர் டைம் வேலை செய்ததில், அவளா இருக்குமோ என்ற முடிவுக்கு வந்தேன்… அடுத்த நாள் பள்ளி முடிந்து அவள் வெளியே வரும் வரை , அம்மா பசிக்கறது என்று கையை பிடித்து  தொங்கிக் கொண்டிருந்த சாத்வியை சமாதானப் படுத்திய படியே காத்திருந்தேன்…

வெளியே வந்தவுடன், ” நீ,..நீங்க ஹரிணி தானே”
ஆமாம் நீங்க”
ஹோலி க்ராஸ்ல தானே படிச்சீங்க”
யெஸ்”
“2000
10த் பாஸ் அவுட்தானே”
ஆமா நீங்க யாரு தெரியலயே”
நீங்க ஏ செக்‌ஷன், நான் சி செக்‌ஷன்… நான் ஆவ்ரேஜ் ஸ்டூடெண்ட் அதுனால உங்களுக்கு தெரிஞ்சுருக்க வாய்ப்பு இல்ல… ஆனா எப்பவும் முதல்ல வர உங்கள ஸ்கூல்ல எல்லாருக்குமே தெரியுமே”..
ஓ சாரி… ஒரே செட்ல தான் படிச்சுருக்கோம்… வா போன்னே பேசலாமே… சாத்வி உன் பொண்ணா… செம்ம ஸ்வீட் சைல்ட்..”

படு வாலாச்சே … க்ளாஸ்ல மேனேஜ் பண்ண முடியறதா.. ஆமா நீ எங்க குடியிருக்க..”

முதல்ல அண்ணா நகர்ல இருந்தேன்.. இப்ப இங்க பக்கத்துலயே அக்‌ஷயா அபார்ட்மெண்ட்ஸ்ல ஒரு ஃப்ளாட்டுக்கு வந்துட்டேன்… நாலு நாள் ஆச்சு”

அட அக்‌ஷயாவா… நானும்   அங்கதான் இருக்கேன்..”

அம்ம்மா, வீட்டுக்கு போலாம் என்று கிட்டத்தட்ட அழ ஆரம்பித்த சாத்வியை தூக்கிக் கொண்டு, “இதுக்கு மேல இவள என்னால சமாளிக்க முடியாது.. நீ எந்த ப்ளாக்ல இருக்க.”

டி ப்ளாக்…டி-5 ஞாயித்துக் கிழமை ஃப்ரீயாதான் இருப்பேன்  வாயேன்.. சாரி உன் பேர் கூட எனக்கு தெரியல”

மதுமிதா… கண்டிப்பா வரேன்”

இரவு வேலையிலிருந்து வந்த அருணிடம் எல்லாத்தையும் சொல்லிட்டு, “ஏங்க எப்பவுமே அவ டாப்பர் 10த் ல யும் அவதான் ஸ்கூல் ஃபர்ஸ்ட்… அதுக்கப்புறம்தான் அப்பாக்கு ட்ரான்ஸ்வர் ஆகி நாங்க பங்களூருக்கு மூவ் ஆகிட்டோம்… இவ பெரிய டாக்டராவோ இஞ்சினியராவோ ஆயிருப்பான்னு பார்த்தா நர்ஸரி ஸ்கூல் டீச்சரா இருக்கா… எனக்கு ஒண்ணுமே புரியலயே…”

இப்பல்லாம் லேடிஸ்க்கு ரொம்ப ஆபிஸ் ப்ரெஷர் தாங்க முடியறதில்லை… ஸ்கூல், பேங்க்குன்னு செட்டில் ஆகிடறாங்க,.”

இல்லீங்க அவ…” என்றவளை இடை மறித்து,
காலைல சீக்கிரம் எழுந்திருக்கனும் பேசாம தூங்கும்மா”

எனக்கென்னவோ அருணின் பதில் சமாதானமாக இல்லை…

ஞாயித்துக் கிழமை வேகமாக வேலயெல்லாம் முடிச்சுட்டு, “ஏங்க சாத்விய பார்த்துக்கங்க.. நான் ஹரிணி வீட்டுக்கு போய்ட்டு வந்துடறேன்”

ஏண்டி சும்மா ஒரு பேச்சுக்கு கூப்டா..  உடனே இப்டி ஓடணுமா… சரி குழந்தையும் கூட்டிண்டு போயேன்.. நான் கிரிக்கெட் மேட்ச் பாக்கணும் “


அவள கூட்டிகிட்டு போனா என்னால ஃப்ரீயா பேச முடியாது… சண்டே ஒரு நாளாவது குழந்தை கூட கொஞ்சம் டைம் ஸ்பெண்ட் பண்ணுங்க”

இன்னிக்கி இந்தியா பாகிஸ்தான் மேச்டி.. நிம்மதியா பாக்கனும்” என்ற அருணின் கதறலை காதில் வாங்காமல் செருப்பை மாட்டியபடி கிளம்பினேன்..

டி- 5 பெல்லை அடித்து விட்டு காத்திருந்தேன்… வெளிர் நீல சுடிதாரில் கதவை திறந்த ஹரிணி, நேற்று பார்த்ததை விட இன்னும் இளமையாக இருந்தாள்.. எனக்கு நீளமான ரெட்டை பின்னலுடன் ஸ்கூல் கேட்டில் காத்திருக்கும் அம்மாவை நோக்கி சிரிப்புடன் துரித நடையுடன் செல்லும் ஹரிணி நினைவுக்கு வந்தாள்.

அரை மணி நேரம் பொதுவான விஷயங்கள் பேசிய பிறகு, பொறுக்க முடியாமல் என் சந்தேகத்தை கேட்டே விட்டேன்..

சிறிது நேரம் பேசாமல் இருந்தாள்..
எதாவது தப்பா கேட்டனா..”

சே சே…அப்டில்லாம் இல்ல… எப்டி தொடங்கறதுன்னு யோசிக்கறேன்..  நீ குழந்தையா இருக்கறச்ச ஃப்ரெண்ட்ஸ் கூட விளயாடியிருக்கியா”

ம்..நிறைய..”

ஸ்கூலுக்கு எதுல போவ”

வேன்..செம்ம கலாட்டாவா இருக்கும்… ஆமா இதெல்லாம் எதுக்கு கேக்கற..”

Image result for school going child in tamilnadu

சின்ன வயசுல இருந்தே எனக்கு ஃப்ரெண்ட்ஸ் கிடையாது.. வெளியே போக அனுமதி கிடையாது… தேவையானது எல்லாம் கிடைக்கும்.. ஆனா எது தேவைன்னு முடிவு பண்றது அப்பா அம்மா… ரெண்டு பேரும் என் கிட்ட உயிராத்தான் இருப்பாங்க.. ஆனா அவங்க ரெண்டு பேர தவிர யார் கிட்டயும் பழக விட மாட்டாங்க.. சின்ன வயசுல இந்த கட்டுப்பாடு பெருசா தெரில.. எப்பவும் செல்லமா கொஞ்சற அப்பா, அம்மா… சாப்ட வித விதமா கிடைக்கும்., அது தாண்டிய சந்தோஷங்கள் அதிகம் எனக்கு தெரியாமலே வளர்த்தார்கள்…  ஸ்கூல்ல யார் கிட்டவும் எதுவும் பேச மாட்டேன்… டீச்சர் சொல்றத கவனமா கேட்டு நல்லா படிக்கனும்… நிறைய மார்க் வாங்கனும்… பக்கத்துல யார் கூடயும் பேசக் கூடாது என்ற நிபந்தனைகள் ஒரு கட்டம் வரை பெருசா தெரியல… எப்பவும் க்ளாஸ் ஃபர்ஸ்ட்..
ஸ்கூல் வாசலிலேயே அப்பா அம்மா ரெண்டு பேரும் வெயிட் பண்ணுவாங்க…  நிறைய மார்க் வாங்கினா நல்ல பெரிய ஹோட்டல் கூட்டிண்டு போய் விதவிதமா சாப்ட வாங்கி தருவாங்க…  எனக்கும் அது ரொம்ப ஜாலியாத்தான் இருந்தது.. பத்தாவதிலும் நல்ல மார்க்.. நாந்தான் ஸ்கூல் ஃபர்ஸ்ட்,.  நிறைய பரிசுகள்… பாராட்டுகள்..
நான் அதிகமாக யாரிடமும் பேசும் பழக்கம் இல்லாததால் எனக்கு ஃப்ரெண்ட்டுன்னு யாரும் கிடையாது,. நான் அதை ஒரு பொருட்டாவும் நினைத்ததில்லை,.

ரொம்ப போரடிக்கரேனோ.. இரு கொஞ்சம் ஜூஸ் கொண்டு வரேன்” என்றபடி கிச்சனுள் நுழைந்தவளை பின் தொடர்ந்தேன்..

இங்க தண்ணி வசதி எல்லாம் நல்லா இருக்கே… மார்க்கெட் கூட பக்கத்துல… நீ ரொம்ப வருஷமா இருக்கியா..”

ம்..நாலு வருஷம் ஆச்சு… நாங்க வந்தப்ப இருந்ததவிட இப்ப நல்லா டெவலப் ஆய்டுச்சு”

ஆளுக்கொரு க்ளாஸில் ஜூஸை ஊற்றி எடுத்தபடி ஹாலுக்கு வந்தோம்..

புன்னகையுடன்… “எங்க விட்டேன்… ஆங்..

ப்ளஸ் ஒன்ல வேற ஸ்கூல்லேர்ந்து வந்த ஆர்த்தி என் பக்கத்துல உட்கார்ந்ததோடல்லாமல் என் கிட்ட ரொம்ப பேச்சு கொடுக்க ஆரம்பிச்சா.  அவ பேசறத கேக்க எனக்கு ரொம்ப பிடிச்சது… சிரிக்க சிரிக்க பேசுவா.. நிறய ஜோக் சொல்லுவா..நான் இது வரை சினிமாவே பார்த்ததில்லை, என் வீட்டில் டி.வி கிடையாது, இது வரை எனக்கு ஃப்ரெண்டுன்னே யாரும் கிடையாது என்று நான் சொன்னதை முதலில் நம்பவே இல்லை.. அவளோட கம்பெனி எனக்கு ஒரு புது அனுபவத்த தந்தது,.  அவளுடைய வாக்கு எனக்கு தேவ வாக்கானது.. கொஞ்சம் கொஞ்சமாக படிப்பில் கவனம் குறைய தொடங்கியது… வீட்டில் எப்பவும் போல கெடுபிடிதான் படிக்க.. ஆனால் வகுப்பில் எதையும் சரியாக கவனிக்காததால், வீட்டில் என்ன படித்தாலும் மண்டையில் ஏறவில்லை… கால் பரிட்சையில் ரெண்டு சப்ஜெக்ட்டில் ஃபெயில் என்றவுடன் அதிர்ந்து போனேன்… வாழ்வில் முதல் முறையாக தோல்வி… அப்பா அம்மா கேக்கவே வேணாம்.. கட்டுப்பாடு இன்னும் இறுகியது.. ஆர்த்தியின் நட்பையும் நல்ல மதிப்பெண்ணையும் பேலன்ஸ் செய்ய தெரியாமல், வீட்டிலும் நல்ல பெயர் எடுக்க முடியாமல்… புத்தகத்தை பார்த்தாலே ஒரு பயம் வர ஆரம்பித்தது.. படிக்க சொன்னால் ஓவென்று அழ ஆரம்பித்தேன்… வீடு நரகமானது… ப்ளஸ் ஒன் ஃபைனல் எக்ஸாம் எழுத போய்ட்டு பயந்து வெளில ஓடி வந்துட்டேன். அப்புறம் ஒரு வருஷம் ஒரே டென்ஷன் தான் வீட்ல… “

காலிங் பெல் அடிக்கவே பாதியில் எழுந்து போனாள்..

வீட்டை மிகவும் அழகாக வைத்திருந்தாள்… சுவரில் ஒரு பெரிய பெயிண்டிங்… கூட்டுப்புழு தன் கூட்டிலிருந்து வெளியே வண்ணத்துப் பூச்சியாய் பறப்பது போல்…

வந்த வேலைக்காரிக்கு தேவையான இன்ஸ்ட்ரக்‌ஷன் கொடுத்துவிட்டு, மதியம் சமையலுக்கு தேவையான காய், மற்றும் கத்தியுடன் வந்தாள்..  கேரட்டின் தோலை சீவியபடியே,

விஷயம் கேள்விப்பட்டு கோயம்புத்தூரிலிருந்து வந்த என் சித்தி அம்மாகிட்ட சண்டை போட்டு தன் கூட கூட்டிகிட்டு போனாங்க… அவங்களோட அன்பும், அவங்க கொடுத்த சுதந்திரமும் கொஞ்சம் கொஞ்சமா என்னை மாத்தித்து., ப்ரைவேட்டா ப்ளஸ் டூ எழுதி பாஸ் பண்ணினேன்… எனக்கு பிடித்த இங்லீஷ் லிட்ரெச்சர் படிச்சேன்… அப்புறம் விருப்பப்பட்டு மாண்டிசரி ட்ரயினிங்… ஆசைப்பட்ட இந்த வேலை… எப்பவும் குழந்தைகளோட குழந்தைகளா இருக்கும் போது, நான் இழந்த குழந்தை பருவத்தை மீட்டெடுக்க முயற்ச்சிக்கறேன்..” என்று புன் சிரிப்பு மாறாமல் முடித்தாள்..

உங்க வீட்டுக்காரர்” என்று நான் கண்ணை வீட்டின்  உள்ளே விட்ட போது 

Image result for an aged un married girn in tamilnadu chennai

இல்ல… கல்யாணம் பண்ணிக்கல… நாளைக்கு எனக்குன்னு ஒரு குழந்தை வந்தவுடன, என்னயறியாம என்னுடைய  நிறைவேறாத கனவுகளை குழந்தை நிறைவேத்தனும்னு அத படுத்துவேனோன்ற  பயத்துல பண்ணிக்கல..


இப்ப எல்லா குழந்தைகளயும் என் குழந்தையா நெனச்சு அதே சமயத்துல எந்த குழந்தை மேலயும் என் விருப்பத்த திணிக்காம… சந்தோஷமா போறது வாழ்க்கை”..

என்னுடைய கண் என்னயும் அறியாமல் சுவரில் இருந்த வண்ணத்துப் பூச்சியை நோக்கி சென்றது… கூட்டிலிருந்து தானாக வெளியே வர விடாமல்  கூட்டை குத்தி கிழித்து அவசரமாக பட்டாம்பூச்சியை அடைய விரும்பினால் என்ன ஆகும்…..

அப்புறம், என் மண வாழ்க்கை, கணவரின் வேலை, சாத்வி குட்டி, என பல டாபிக் பேசிட்டு வீட்டுக்கு வந்துட்டேன்..

மறுநாள், சாத்வியை ஸ்கூல்ல விடப் போன போது, குழந்தைகளோடு குழந்தையாக விளையாடிக் கொண்டிருந்தாள் ஹரிணி. .. இந்த அளவு இல்லாவிட்டாலும், போட்டிகள் நிறைந்த இன்றய  சமூகத்துல, குழந்தைகளுக்கு, அவர்கள் வயதுக்கான மகிழ்ச்சியும் கும்மாளமும் சரியான அளவு கிடைக்காமல் போய் விட்டதென்னவோ நிதர்சனம்…

விழியோரத்தில் துளிர்த்த நீரை சுண்டி விட்டபடி வண்டியை கிளப்பினேன்.

 

 

 

 

 

 

 

கஸ்தூரிபாவின் ரகசிய நாட்குறிப்பு

நீலிமா டால்மியா ஆதார் எழுதிய ” கஸ்தூரிபாவின் ரகசிய நாட்குறிப்பு “

The Secret Diary of Kasturba

 

சுதந்திர இந்தியாவின் தந்தை மகாத்மா காந்தி என்று உலகமே தலை வணங்கும் பெயர் பெற்றவர்.

ஆனால் தன்னை விட 6 மாதம்  சிறியவரான மோகன்தாஸ் கரம்சந்த் காந்தியை 13 வயதிலேயே   மணந்து  62 வருடம் அவருடன் காலம் கழித்த கஸ்தூரிபாவிற்கு அவர் எப்படிப்பட்ட கணவராக இருந்தார் என்பது மிகப் பெரிய கேள்விக்குறி! 

அதனால்தான் கஸ்தூரிபாவின்  பார்வையில் அன்று நடந்த சம்பவங்களை தன்னிலையாக ஒரு டயரியின் வடிவில் கற்பனையாக நீலிமா டால்மியா ஆதார் எழுதியிருக்கிறார். 

ஒவ்வொரு மனிதருக்கும் ஒரு மறுபக்கம்  இருக்கும். இது காந்தியின் மறுபக்கத்தை வெளிச்சம் போட்டுக் காட்டும் புத்தகம்.

மகாத்மா என்ற அவரது முகமூடியைக் கழற்றி உண்மையான முகத்தைக் காட்டும் நூல். 

ஒரு பெண்ணாக  கஸ்தூரிபா எப்படிப் போராடித் தோற்றார் என்பதை விளக்கும் அருமையான நூல். 

அன்பு, பாசம், துயரம், விரக்தி,பயம், கோபம், உணர்வு, பொறுமை, காமம்,  காதல் , உறவு  போன்ற எல்லா உணர்ச்சிகளையும் கஸ்தூரிபாவின் முகத்தில் காட்டும் நூல் இது என்று விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர். 

காந்தியை நாம் தேசப்பிதாவாகத்தான் பார்த்தோம். ஆனால் இந்த நாவலில் அவரை ஹரிலாலின் தந்தையாக கஸ்தூரிபாவின் கணவனாக ஒரு சாதாரண மனிதனாகப் பார்க்கிறோம். 

நமது நண்பர் ஒருவர் இந்த ஆங்கிலப் புத்தகத்தைத் தமிழில் மொழிபெயர்த்து வருகிறார். 

அது வெளிவந்ததும், கஸ்தூரிபாவின்  நாட்குறிப்பைத் தமிழிலிலேயே படிக்கலாம். 

அதுவரை ஆங்கிலத்தில் படியுங்கள் : ” The Secret Diary of  Kasthurba” 

Product details