காட்சி – 3
(பூமாவின் வீடு.. இரவு நேரம்.. கமலா, பாமா, லதா மூவரும்
பேசிக் கொண்டிருக்கிறார்கள். பூமா ஓடி வருகிறாள்)
பூமா : போச்சு.. எல்லாம் போச்சு.. நாசமாப் போச்சு.
கமலா: என்னடி உளரறே…
பூமா : யாரோ ஒருத்தர்.. பக்கத்தூரிலிருந்து வந்திருக்காராம்.
பார்த்தா நல்லா ஷோக்கா இருக்கார். பேச்சிலேதான்
அசடு வழியறது. என் பின்னாலே வந்து கன்னாபின்னான்னு
பேசிச்சு. நம்ம ஒரு கேள்விக்கு ப்ளூ க்ளௌடுன்னு
ஆன்ஸர் வச்சிருந்தோமில்லே.. அதைக் கண்டு பிடிச்சுடுத்து
போலிருக்கு. அதையும் உளறிடுத்து. கொஞ்சம் அந்தப்
பக்கமா ரவியும் நின்னுட்டிருந்தார். அவருக்கும் தெரிஞ்-
சிருக்கும்..
பாமா : (திடுக்கிட்டு) ஆ… அப்படியா..? என்னடி இப்ப செய்யறது?
லதா : (நிதானமாக) பூமா.. அதுக்கேன் கவலைப்படறே,,? அந்தக்
கேள்வியை நாம மாத்திட்டாப் போகிறது..
பூமா : ம்.. அப்படித்தான் செய்யணும்.. நம்ம கேள்வி ஒண்ணுக்-
காவது அவங்க ஆன்ஸர் சொல்ல முடியக் கூடாது. அப்படி
இருக்கணும் நம்ம கேள்விகளெல்லாம்…
கமலா: ஆமா.. யாரடி அது..? நம்ம கேள்விக்கு விடையை அவ்வளவு
ஈஸியா கேள்வியைக் கூட கேட்காம கண்டு பிடிச்சது..?
பூமா : யாருன்னு தெரியலே.. பார்க்கறதுக்கு அழகா இருந்தார். அவர்
பேர் என்னான்னு தெரியலே.. நான் கேட்கலே… ஆனா
பேசினாத் தெரியுது அவர் குணம். ஒரே அசடு.
லதா : ஆமா.. நீ அவரழகுலே மயங்கி ஏதாவது உளறியிருப்பே…
பூமா : போடி.. அவர் பேசின பேச்சே எனக்குப் பிடிக்கலே. எனக்கு
வந்த கோபம் உனக்குத் தெரியாது… அவர் எப்படி அதைக்
கண்டு பிடிச்சார்னே தெரியலே…
பாமா : ஒரு வேளை வேறு ஏதாவது நெனச்சிட்டு ப்ளூ க்ளௌடுன்னு
சொல்ல வந்திருப்பாரோ..?
கமலா: எப்படி இருந்தாலும் சரி.. நாம கேட்கப் போற கேள்வி
என்னவோ மூணுதான். இந்தக் கேள்வியை மாத்தி வேறொண்-
ணப் போட்டாப் போச்சு.
பூமா : ஓகே.. லதா.. அந்தப் புத்தகத்தைக் கொண்டு வா..
காட்சி — 4
(ராமானந்தா கல்லூரி ஆடிட்டோரியம்.. மாலை வேளை..
குவிஸ் போட்டி நடந்து கொண்டிருக்கிறது. மாணவர்கள்
கேட்ட கேள்விகளுக்கு பதில் கூறி விடுகின்றனர் மாணவிகள்.
ஒரே கை தட்டல்.. ஜட்ஜ் பேச எழுகிறார்..)
ஜட்ஜ் : மாணவ, மாணவிகளே.. மாணவர்கள் கேள்விகளுக்கெல்லாம்
தகுந்த முறையில் பதிலளித்து விட்டனர் மாணவிகள். இனி
மாணவியர் கேள்விகள் கேட்பார்கள். மாணவர்கள் பதில்
சொல்ல வேண்டும். எங்கே பூமா.. உங்கள் கேள்விகளைக்
கேட்கலாம்.
பூமா : (தொண்டையைக் கனைத்தவாறே) முதல் கேள்வி — உலகத்தை
விட மதிப்பு மிக்கது எது?.. இரண்டாவது – காற்றை விட
வேகமானது எது?.. மூன்றாவது – மனிதன் எந்த ஒரு குணத்தை
விட்டால் எல்லோராலும் விரும்பப்படுவான்?
(அமர்கிறாள்… மாணவர்கள் மெதுவாகப் பதிலைப்பற்றி
விவாதித்துக் கொண்டிருக்கின்றனர். நீலமேகம் தனியே
அமர்ந்து பூமாவையே பார்த்துக் கொண்டிருக்கிறான்..)
நீல : (தனக்குள்) ஐயோ… பியூட்டி க்வீன்….
குமா : டேய் ரவி.. குண்டையல்லவா தூக்கிப் போட்டுட்டா… கேள்வி-
களோடு தலையும் புரியலே… காலும் புரியலே..
ரவி : டேய் ஒரு கேள்விக்குப் பதில் தெரிஞ்சு போச்சு. உலகத்தை
விட மதிப்பு மிக்கது ப்ளூ க்ளௌடுதாண்டா.. அதுதானே
நமக்கு தண்ணீர் தருது..
மணி : வெரிகுட்… என்ஸைக்ளோபீடியாவில் இதுவும் போட்டிருந்-
தானா மடையன்… மத்த கேள்விகளுக்கு என்னடா பதில்? ம்…
சேக : மடத்தனமா கேள்வி கேட்டிருக்காடா.. காத்துதாண்டா
உலகத்திலேயே வேகமானது.. ஆமா. எதை மனிதன்
விட்டுட்டா எல்லோராலும் விரும்பப் படுவான்..?
மணி : உயிரை விட்டுட்டா…
ரவி : (ஏளனமாக) வெரி குட்.. எப்படீடா கண்டு பிடிச்சே…
(எரிச்சலோடு) இடியட் மூஞ்சியைப் பாருடா மூஞ்சியை…
குமார்: இப்ப என்னடா செய்யறது..?
ரவி : டேய் இந்தக் கேள்விகளுக்கு இங்கே யாருக்குமே பதில்
தெரியாது… நமக்கு ஒரு கேள்விக்கு தெரியுமில்லே.. அது
போதும்.. அதை வெச்சே பூமாவைக் கவர்ந்துடலாம்.. கவலைப்
படாதே.. நான் எழுந்து சொல்லட்டுமா…?
சேகர் : ஓ கே…
ரவி : (மெதுவாக எழுந்து) உலகத்தை விட மதிப்பு மிக்கது ப்ளூ
க்ளௌடு… அதாவது மேகம்.
பூமா : (நமுட்டு சிரிப்போடு) ஸோ ஸாரி… கிடையாது…
(ரவி தலையைத் தொங்கப் போட்டுக் கொண்டு உட்கார்ந்து
விடுகிறான். பெண்கள் கூட்டத்தில் நகைப்பொலி எழுகிறது.
இதுவரை பேசாமல் பூமாவின் அழகையே ரசித்துக்
கொண்டிருந்த நீலமேகம் எழுந்து கத்துகிறான்)
நீல : மதர் … மைன்ட் … ப்ரௌடு…
(பெண்களின் நகைப்பொலி சட்டென்று நிற்கிறது. பூமா
நீலமேகத்தையே சில விநாடிகள் பார்த்துக் கொண்டு
நின்று விடுகிறாள்)
ஜட்ஜ் : ஏன் என்ன ஆச்சு..?
பூமா : (சமாளித்துக் கொண்டு) ஒன்றுமில்லை.. இப்பொழுது விடை
சொன்னவர் எங்கள் எல்லாக் கேள்விகளுக்கும் சரியாகப்
பதில் சொல்லி விட்டார். உலகத்தை விட மதிப்பு மிக்கவள்
மதர் – தாய்… காற்றைவிட வேகமானது மைன்ட் – மனம்…
மனிதன் ப்ரௌடை – கர்வத்தை விட்டு விட்டால் எல்லோ-
ராலும் விரும்பப் படுவான்.
ஜட்ஜ் : இக்கேள்விகளுக்கு பதில் சொன்னவர் யார்..?
நீல : நான்தான்.. என் பெயர் நீலமேகம்..
ஜட்ஜ் : ஐ ஸீ… இன்னும் ஏதாவது கேள்வி இருக்கா பூமா..?
பூமா : இல்லை… அவ்வளவுதான்..
ஜட்ஜ் : ஆல் ரைட்… இப்போட்டியின் முடிவு நாளைக்கு அறிவிக்கப்-
படும். எல்லோரும் கலையலாம்.
(ஒரு மூலையில் ரவியும் நண்பர்களும் தவித்துக் கொண்டு
நிற்கிறார்கள்)
குமார்: டேய் அந்த அசட்டுக்கு எப்படீடா தெரிஞ்சது?
மணி : நம்ம திட்டமெல்லாம் போச்சேடா….
ரவி : என்னடா செய்யறது.? அந்த ஒரு கேள்வியாவது ரைட்டா
இருக்கும்னு நெனச்சேன்.. பாவி அதையும் தப்புன்னுட்டாளே…
சேகர்: ரவி.. யூ ஹாவ் மிஸ்ட் தி சான்ஸ். மிஸ்ட் தி மிஸ் ஆல்ஸோ.
மணி : டேய், பூமா எதுக்கோ அந்த அசடுகிட்டே போறாளே..
என்ன சொல்றா கேட்போம்…
(பூமா நீலமேகத்தின் அருகில் செல்கிறாள்)
பூமா : கன்கிராஜுலேஷன்ஸ் மிஸ்டர் நீலமேகம்…
நீல : (அசட்டுச் சிரிப்போடு) தாங்க் யூ… என்னமோ…
பூமா : யூ ஆர் வெல் செட். மகாபாரதத்திலிருந்து எடுத்துக் கொடுத்து
இருக்கோம். கண்டு பிடிச்சிட்டீங்களே…
நீல : ஹி..ஹி.. அப்படி ஒண்ணுமில்லே.. வந்து…
பூமா : நீங்க அடக்கத்துக்காக அப்படிச் சொல்லலாம். நாளைக்கு
மார்னிங் எங்க வீட்டிற்கு வாங்களேன். அடுத்த தெருவிலேதான்
இருக்கு. கட்டாயம் வரணும்.. நான் காத்துட்டிருப்பேன்.
நீல : ஹி.. ஹி.. சரி…
(பூமா செல்கிறாள். ரவியும் நண்பர்களும் நீலமேகத்தின்
அருகில் வருகிறார்கள்)
ரவி : ஹலோ.. நீலமேகம்.. நீ எப்படியப்பா கண்டுபிடிச்சே..?
நீல : போப்பா.. நானெங்கே கண்டு பிடிச்சேன்.. பிரதர்.. பூமா
அழகுலே மயங்கி ‘அம்மா என்னை அட்லீஸ்ட் மதிக்கவாவது
செய்.. நான் ரொம்பக் கர்வப்படுவேன்னு’ சொல்ல வாயெடுத்தேன்
இங்கிலீஷிலே.. அதுலே பாதி வார்த்தைகளை முழுங்கிட்டேன்.
மதர்.. மைன்ட்.. ப்ரௌடுங்கறதுதான் வெளியே வந்தது. என்ன
செய்யறது ? அவங்க அவங்க தலை விதி. ஆ.. நல்ல வேளை
‘மிஸ்ஸுன்னு சொல்றதுக்கு பதிலா ‘மதர்’னு ஒளறி வெச்சுட்டேன்.
அதுவும் நம்ம நல்ல காலம் தான். நம்ம உளறல் சரியான
ஆன்ஸராப் போச்சு. ஓகே… நேரமாச்சு. நான் வறேன்.
(நீலமேகம் போகிறான்)
ரவி : டேய், அசட்டுக்கு இப்படியாடா அதிர்ஷ்டம் வரணும்? பூமா
என்னமோ இவன் பெரிய இன்டெலிஜென்ட்னு நெனச்சிட்டிருக்கா
நமக்கல்ல தெரியும் இவன் கதை… அவளை மீட் பண்ணி
எச்சரிக்கணும்.
மணி: டேய் ரவி.. இவனை வீட்டுக்கே கூப்பிட்டுட்டாளே.. உன்னை
ஒரு நாளைக்காவது கூப்பிட்டிருக்காளா..?
குமார்: விடிய விடிய படிச்சதுதாண்டா மிச்சம்.
சேகர்: ரவி யூ லாஸ்ட் ஹெர்… காதலிலே தோல்வியுற்றான் காளை
யொருவன்..
ரவி : டேய். பேசாம இருங்கடா..
(போகிறார்கள்)
காட்சி – 5
(பூங்கா.. மாலை நேரம்… நீலமேகம் சென்று கொண்டிருக்கிறான்.. பூமா பின்னால் செல்கிறாள்..)
நீல : இதோ பாருங்க மிஸ்.. உங்களுக்கு வார்னிங் கொடுக்கறேன்.
ஏன் என் பின்னாலேயே வர்ரீங்க… சூடு, சுரணை, மானம்னு
ஒண்ணுமே யில்லையா..?
பூமா : முன்னேயெல்லாம் சூடு ரொம்ப ஜாஸ்தியா இருந்தது. ஆம்பிளே பக்கத்துலே நெருங்க முடியாது. ஆனா இப்போ என்னவோ
ரொம்ப ஜில்லுன்னு இருக்கு…
நீல : ஓ…..
பூமா : மானம்… நம்ம கல்யாணத்தை நிச்சயித்து நிச்சயதார்த்தமும்
ஆனபிறகு நமக்குள்ளே எதுக்கு இந்த மானத்தைப்பற்றிய
பேச்செல்லாம்…
நீல : ஓ.. அப்படியா..?
பூமா : ஆமா நீங்க எப்படி ப்ளூ க்ளௌடைப்பத்தி கண்டு பிடிச்சீங்க?
நீல : நான் என் பெயரை சும்மா இங்கிலீஷிலே சொல்ல வந்தேன்.
அதுக்குள்ளே நீ அரண்டுட்டே…
பூமா : (நாணத்தோடு) வெகு சமர்த்தர்தான்.. நான் கூட முதல்லே
நீங்க உண்மையா அசடுதானோன்னு நெனச்சுட்டேன்..
நீல : (சிரித்தபடியே) என்ன செய்யறது..? அன்னிக்கு காலேலே நான்
இந்த ஊருக்கு வந்ததும் உங்க காலேஜ் பக்கம் வந்தேன்.
அங்கே ரவியும் அவன் பிரெண்ட்ஸும் உன்னை எப்படியாவது
மடக்கிக் கேள்விகளைத் தெரிஞ்சுக்கணும்னு திட்டம் போட்டுட்டிருந்தாங்க. அவங்க முயற்சியை எப்படியாவது தடுக்கணும்னு முடிவு பண்ணினேன். பின்னே பூமாவை எப்படிக் கண்டு பிடிப்பது..? யோசிச்சேன்.. ம்… இந்த அழகு ராணியைக் கண்டு பிடிக்கறதா கஷ்டம்..?
பூமா : (நாணத்தோடு) போங்க….
நீல : கண்டுபிடிச்சு அசடாய் நடிச்சு உன்னைத் துரத்தினேன்.
பூமா : ஆமா.. நீங்க, ‘ஏதோ உளறினேன்.. எனக்கு உண்மையா
அவங்க கேட்ட கேள்விகளுக்கு பதில் தெரியாதுன்னு சொன்னீங்களாமே..!
நீல : (உரக்கச் சிரித்து) பாவம் ரவி, உங்கிட்டே அதைச் சொன்னானா..? உன்னை ரொம்ப லவ் பண்ணிட்டிருந்திருக்கான். எல்லோர் கண்களும் ஒரே மாதிரி இருக்காது பார். நான் உன் கேள்விகளுக்கு சரியான பதில் சொல்லி, நீ என்னைப் பார்த்து மயங்கி, அதைப் பார்த்து எல்லோரும் பொறாமைப் பட.. ஐயோ, அப்ப.. என் ராணியின் அழகு என்ன ஆறது?
பூமா : (நாணத்தோடு) ஐயோ போதுமே…
நீல : அந்த எண்ணத்தாலேதான் அவன்கிட்டே அதுமாதிரி
சொன்னேன். நான் மகாபாரதத்தை பத்து முறை படிச்சிருக்கே-
னாக்கும்… ஆனா ரவியை நீ இதுமாதிரி ஏமாத்தி இருக்கக்
கூடாது.
பூமா : அவரை இல்லேன்னா ஒங்கள ஏமாத்தி இருக்கணும்.
நீல : என்னை எப்படி ஏமாத்தி இருக்க முடியும்..? நானொண்ணும்
உனக்காக ஏங்கலையே..?
பூமா : உக்கும்… க்விஸ் போட்டி நடந்துட்டிருக்கும்போது என்
பக்கமே நீங்க பார்த்துட்டிருந்தது எனக்குத் தெரியாதாக்கும்..?
நீல : அடி கள்ளி.. அப்ப நீ என்னையே….
(சிரிக்கிறான்.. அவளும் அவனுடன் சிரிப்பில் கலந்து
கொள்கிறாள்)