சூரியதேவனுக்குத் தன் பராக்கிரமத்தைப்பற்றி , தன் அழகைப்பற்றி, தனக்குத் தேவ உலகில் கொடுக்கப்படும் மரியாதையைப்பற்றி எப்போதும் ஒருவித கர்வம் மனதில் ஓடிக்கொண்டே இருக்கும். தன்னைச் சுற்றிவரும் கிரகங்கள், தன்னைச் சார்ந்துவரும் மற்ற வானுலக பூலோக அமைப்புகள், தன்னிடமிருந்து வெளிச்சம்பெறும் கிரகங்கள் என்று எல்லாமே தன்னுள் அடக்கம் என்ற எண்ணம் சூரியதேவனை எப்போதும் ஓர் உயர்ந்த பீடத்திலேயே வைத்திருக்கும்.
இன்று சூரியன், விஷ்வகர்மாவின் மகள் ஸந்த்யாவைப் பார்த்து மயங்கியது உண்மைதான். அந்த அழகுப் பதுமையுடன் சற்றுமுன் கலந்து உறவாடியதைப் பற்றி எண்ணும் போதெல்லாம் அவன் நெஞ்சிலும் உடலிலும் இன்ப அலைகள் பெருகிப் பிரவாகம் எடுத்துக் கொண்டிருக்கின்றன என்பதும் அவனுக்கு நன்றாகப் புரிகிறது. ஆனால் ஸந்த்யாவிற்காகத் தரையில் இறங்கியதால் தன்னை இந்தத் தேவதச்சர் எப்படிக் குறைபாடு உள்ளவன் என்று கூறமுடியும் ? ‘என்னிடம் குறைபாடு இருக்கிறது என்ற எண்ணமே தவறல்லவா? ‘ என்று சூரியதேவன் ஆணித்தரமாக நம்பியதின் விளைவாக உலகங்களைப் படைக்கும் விஷ்வகர்மாவைச் சுட்டெரிக்கும் கண்களால் நோக்கினான்.
விஷ்வகர்மாவுக்கு சூரியதேவனின் கோபக்கனல் புன்னகையையே வரவழைத்தது. எந்த ஆண்பிள்ளைக்கும் கையும் களவுமாகப் பிடிபடும்பொழுது அவனுக்கு வரும் கோபத்தின் அளவிற்கு அர்த்தம் இல்லை என்பது அவருக்குத் தெரியாதா என்ன? அதுவும் பெண்ணின் தந்தையிடமே பிடிபட்டுவிட்டோமே என்ற ஆத்திரமும் அவனிடம் சேர்ந்திருக்கிறது. அவை எல்லாவற்றையும்விட ‘நான் அவனைக் குறைபாடு உள்ளவன் என்று சொன்னது அவனை அதிகம் பாதித்திருக்கிறது’ என்பதை உணர்ந்த விஷ்வகர்மா அவனைச் சமாதானம் செய்யப்புறப்பட்டார்.
‘சூரிய தேவனே ! நீ தான் என் மகள் ஸந்த்யாவிற்குத் தகுந்த கணவன் என்பதை நான் அவள் பிறந்த உடனேயே தீர்மானம் செய்துவிட்டேன். நீயே அவளைத் தேடிவரும் காலம் வரும் என்பதை நான் ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன். ஆனால் அவளைப் பார்த்ததும் நீ நேரே என்னிடம் வருவாய், நானும் உன் கவுரவத்திற்கு ஏற்றபடி மிகச் சிறப்பாக உங்கள் திருமணத்தை முடிக்கவேண்டும் என்றும் எண்ணியிருந்தேன். பார்த்ததும் காதல், அதுவும் உடனே காந்தர்வத் திருமணத்தில் முடிவடைந்துவிட்டது என்றால் இதற்கு மேல் நான் என்ன சொல்ல? இருப்பினும் ஸந்த்யாவின் தேக ஸௌந்தர்யத்தில் ஒரு மந்திர முடிச்சு இருக்கிறது. அதைச் சரிசெய்யும் காலமும் வந்து விட்டது. ” என்று விஷ்வகர்மா தனது இரண்டாவது அஸ்திரத்தையும் வீசினார் சூரியதேவன் மீது.
விஷ்வகர்மாவின் இந்த இரண்டாவது கணையும் சூரியனைப் பாதித்தது. அவன் கண்களில் சஞ்சலத்தின் ரேகை படிய ஆரம்பித்தது. அதைக் கண்ணுற்ற விஷ்வகர்மா ‘சூரிய தேவா! கலங்க வேண்டாம்! நாம் அரண்மனைக்குச் சென்று இதுபற்றி முடிவெடுக்கலாம்! அந்தத் தங்கப் பொய்கையில் இருவரும் முழுகி விட்டு நம் அரண்மனைக்கு வாருங்கள். உங்களை வரவேற்க ஏற்பாடுகள் செய்ய நான் முன்னே செல்கிறேன். உங்கள் இருவருக்கும் என் ஆசிகள்! ” என்று கூறிவிட்டு முன்னே நடந்தார் விஷ்வகர்மா !
தந்தை நகர்ந்ததும் மறைவிடத்திலிருந்து ஸந்த்யா வெளியே வந்தாள். தந்தையின் வார்த்தைகள் அவளுக்கு அமிர்தம்போல் இனித்தன. சூரியதேவனின் கால்களில் விழுந்தாள். சூரியனும் அவளை அப்படியே வாரிஎடுத்து அணைத்துக் கொண்டான். இருவருக்கும் இடையே வாய்ச் சொற்கள் தேவையில்லாமல் இருந்தன. அவள் கரத்தைப் பிடித்துக்கொண்டுத் தங்கப் பொய்கையை நோக்கி நடந்தான். அவன் முதலில் தண்ணீரில் இறங்கிப் பிறகு மெதுவாக ஸந்த்யாவிற்கும் கைலாகு கொடுத்துத் தண்ணீரில் இறக்கினான். இருவரும் தண்ணீரில் ஒரே சமயம் மூழ்கினார்கள். சூரியன் முதலில் நீரிலிருந்து வெளியே வந்தான். முதல் நாளே அவனை மயக்கிய ஸந்த்யாவின் பொன்னிற முதுகு தண்ணீருக்குள்ளிருந்து மெதுவாக வரத் தொடங்கியது.
அதன் அழகைப் பருகியவண்ணம் இருந்த சூரியன் கண்களில் ஏதோ ஒன்று புதியதாகத் தென்பட்டது. ‘ அது என்ன அவள் முதுகில் சிவப்பாக .. ஒரு திட்டு போல.. முதல் நாள் ரதத்திலிருந்து பார்த்த போதும் ஏன் இன்றைக்குப் பார்த்த போதும் , ஏன் அதற்கும் மேலாகச் சற்று முன் இன்ப உறவில் ஈடுபட்டிருந்த சமயத்திலும் அது தென்படவில்லையே! ஒருவேளை ஆசை மயக்கத்தில் கவனிக்கத் தவறிவிட்டேனா? நிச்சயமாக இருக்க முடியாது. எது எப்படி இருந்தாலும் அவன் கண்களின் கூர்மையைப் பற்றி அவனுக்குச் சந்தேகம் என்றைக்கும் இருந்ததில்லை. இருக்கப் போவதும் இல்லை !
அப்படியானால் அது என்ன? பொன்னில் செம்பு கலந்தாற்போல அது என்ன சிறிய திட்டு?
மெல்ல எழுந்தாள் ஸந்த்யா. அவள் முகத்திலும் பொட்டு வைத்தது போல அதே மாதிரி சிறிய சிவந்தத் திட்டு ! அது அவள் அழகுக்கு அழகூட்டுவதாக இருந்தாலும் அவன் கண்களை ஏனோ அது உறுத்தியது. “ஸந்த்யா! இது என்ன சிவந்த திட்டு முதுகிலும் முகத்திலும் ?” என்று அவன் கேட்டதும் அவள் திடுக்கிட்டு ” இருங்கள் இன்னும் இரு முறை முழுக வேண்டும்” என்று சொல்லி அவன் கரங்களிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டு இரண்டாவது முறை நீரில் முழுகி மெதுவாக எழுந்தாள். ‘என்ன ஆச்சரியம்! முதுகில் இருந்த அந்தச் சிவப்புத் திவலை மறைந்து விட்டதே! முகத்திலும் அதைக் காணவில்லையே? மூன்றாவது முறை அவள் நீரில் மூழ்கினாள். மூழ்கியவள் மூழ்கியவள்தான் . எழுந்திருக்கவே இல்லை ! அப்படியே மறைந்து விட்டாள்.
சூரிய தேவன் திடுக்கிட்டான். அதுமட்டுமல்லாமல் அந்தப் பொய்கையின் நீரும் மறைந்து விட்டது. சூரியனின் உடம்பிலிருந்த நீர்த் திவலைகளும் மறைந்து விட்டன. அவன் உடைகளும் மாறியிருந்தன. அவன் கண்ணெதிரே பொய்கை இருந்த இடத்தில் ஒரு சிறு விமானமும் காத்துக்கொண்டிருந்தது.
விஷ்வகர்மாவின் சித்து விளையாட்டு ஆரம்பித்துவிட்டதா?
(முதல் பகுதி தொடரும் – இரண்டாவது பகுதி ஆரம்பம்)
இரண்டாம் பகுதி ……………………….
” அண்ணா ! இது என்ன சொர்க்கபுரியா அல்லது நரகபுரியா? “
ஏன் இப்படிக் கேட்கிறாய் எமி? நீ சென்றால் நரகபுரியும் சொர்க்கமாக மாறிவிடும் என்பது உண்மை தான்! உன் கரம் பட்ட இடமெல்லாம் புண்ணிய பூமியாக மாறிவிடும். அவ்வளவு சிறப்பு வாய்ந்த யமுனை நதி அல்லவா நீ? அப்படி ஒரு வரத்தையல்லவா நம் தந்தை வேண்டிப்பெற்றிருக்கிறார்!”
” ஆனால் அண்ணா ! நான் நடந்து வரும்போது சில இடங்களில் நரகத்தின் காட்சிகளைக் கண்டேன். கொதிக்கும் எண்ணையின் வாசத்தை உணர்ந்தேன். சாட்டையின் சவுக்கடிகள் சத்தமும் கேட்டது. அவை உண்மையா அல்லது என் பிரமையா?”
” ஆகா! உன் கண்களிலிருந்து எதுவும் தப்ப முடியாது. நீ பார்த்தது உண்மைதான். அது சொர்க்கத்தில் இருக்கும் நரகத்தின் ஜன்னல். நிழல். மாயை. சில இடங்களில் மட்டும் இது தெரியும். சொர்க்கபுரி வாசிகளுக்கு அவ்வப்போது நரகத்தின் காட்சி தெரியவேண்டும். உணவை உண்ணும்போது நம்மை அறியாமல் கார மிளகாயைக் கடிக்கவேண்டும். மலர்ப்படுக்கையில் துயிலும்போது சிறு முள் முதுகைப் பதம் பார்க்க வேண்டும். பாடல் கேட்கும்போது சிறிது அபசுரம் தட்ட வேண்டும். அப்போதுதான் நாம் பெற்றிருக்கும் பொருளின் மதிப்பு நமக்குப் புரியும். அதற்காகத்தான் இந்த நிழற்காட்சிகளைப் படைத்திருக்கிறோம் . அதைப்போல நரகாபுரி மக்களுக்கும் சொர்க்கத்தின் நிழற்படம் தெரியும் “
” நன்றாகப் பேசுகிறாய் அண்ணா? எமபுரியில் நீ அதிகம் பேசுவதேயில்லை என்று எல்லோரும் சொல்லிக் கொண்டார்கள்!”
” உண்மை எமி ! உன்னிடம்தான் நான் அதிகம் பேசுவதாக நானே உணருகிறேன். அதுமட்டுமல்லாமல் இன்று சொர்க்கபுரியில் ஒரு கூட்டத்தில் நான் பேசவேண்டும். “
“அது என்ன கூட்டம்? “
” தீபாவளித் திருநாளை முன்னிட்டு ஓர் இலக்கியக்கூட்டம் ஏற்பாடு செய்திருக்கிறார்கள். “
“என்னது? இலக்கியக் கூட்டமா? சொர்க்கத்திலா? பூலோகத்திலிருந்து வந்தவர்களுக்கு இந்த ஆசை இன்னும் விடவில்லையா? “
” அது எப்படித் தீரும் ? எத்தனைப் பிறவிகள் எடுத்தாலும் மனிதர்களின் பாரம்பரியக் குணம் மட்டும் போகவே போகாது. கோபம், ஆசை, காமம், பேச்சு, இசை, பாசம், புத்தி, பயம், சாதுரியம், போன்றவை அவன் ஆன்மாவில் ஒட்டிக்கொண்டிருக்கும். இது தேவர்களுக்கும், முனிவர்களுக்கும் , கந்தவர்களுக்கும் பொருந்தும்.”
” புதுமையாக இருக்கிறது. சொர்க்கவாசிகளுக்கே இவ்வளவு ஒட்டிக் கொண்டிருக்கிறது என்றால் நரக வாசிகளுக்கு இன்னும் அதிகமான குணங்கள் ஒட்டிக் கொண்டிருக்குமே? . அங்கே இந்த மாதிரி அமைப்புகளெல்லாம் கிடையாதா? “
” சொன்னால் நம்பமாட்டாய்! இங்கே இருப்பதைவிட அங்கே இது போன்ற அமைப்புகளும் நிகழ்வுகளும் மிக மிக அதிகம். இன்றைய இலக்கியக் கூட்டத்தில் பங்கேற்க சொர்க்கபுரி எழுத்தாளர்களும் நரகபுரி எழுத்தாளர்களும் சேர்ந்தே வருவார்கள்.
“அதெப்படி அண்ணா?”
“இந்தக் கருத்து புரியவேண்டுமானால் உனக்கு இன்னொரு ரகசியத்தையும் சொல்லவேண்டும். சொர்க்கம் நரகம் என்பது நீ நினைப்பதைப்போல இரண்டும் தனித் தனி இடங்கள் அல்ல. இவை இரண்டிற்கும் இடையில் இருக்கும் சுவரும் உண்மையான சுவரும் அல்ல. இது இரண்டும் நான் பார்க்கும் பார்வையில் தான் இருக்கின்றன. சித்திரகுப்தனுக்கும் தர்மத்வஜனுக்கும் இந்தப் பார்வை உண்டு. இதை ‘மெய்நிகர்’ என்றும் சொல்வார்கள். அதாவது உண்மையைப் போல இருக்கும் ஆனால் உண்மை அல்ல. இதே இடத்தை நரகபுரியாக மாற்ற என் பார்வையைச் சற்றுத் திருப்பினால் போதும். நாம் நரகபுரியில் இருப்பதை நீ உணர்வாய். இதோ பார் !”
“இது என்ன மாயம்? என் உடம்பு எரிவதைப் போல இருக்கிறதே? எங்கே போயிற்று சொர்க்கபுரியின் சுகந்த மணம் ? நான் யமுனை நதியாக மாறினால் தான் இந்தத் தீயின் ஜ்வாலையிலிருந்து என்னைக் காத்துக் கொள்ள முடியும் என்று தோன்றுகிறதே?
” கவலைப்படாதே! நாம் நரகபுரிக்கு நாளைக்குத் தான் செல்கிறோம். இதோ நீ தொடர்ந்து வந்த சொர்க்கபுரி ! அதோ தெரிகிறது பார் இலக்கியக்கூட்டம்.”
” ஆமாம்! ஒரு சின்ன சந்தேகம்! இலக்கியவாதிகள் அனைவரும் சொர்க்கபுரியில் தானே இருப்பார்கள்?
” முதலிலேயே நான் சொன்னேன் இந்தக் கூட்டத்திற்கு இரு சாராரும் வருவார்கள். ஆனால் யார் சொர்க்க புரியில் இருக்கிறார்கள் யார் நரக புரியில் இருக்கிறார்கள் என்பது எங்களில் சிலரைத் தவிர மற்றவர்களுக்குத் தெரியாது. அதனால் இலக்கியவாதிகள் சொர்க்கபுரிவாசியாகவும் இருக்கலாம் நரகபுரிவாசியாகவும் இருக்கலாம்.”
” நீங்கள் இந்தக் கூட்டத்தில் என்ன பேசப்போகிறீர்கள்? “
“நான் மட்டுமல்ல, நீயும் பேசப்போகிறாய் !”
” நானா? “
கூட்டத்தைத் துவக்கி வைத்துப் பேசப் போகிறவன் நான். நன்றி தெரிவித்துக் கூட்டத்தை முடிக்கப் போகிறவள் நீ “
“அது சரி! என்ன தலைப்பு? யார் தலைமை வகிக்கிறார்கள்? “
” தலைப்பு அக்கினிப் பிரவேசம் தலைமை வகிப்பவர் ஜெயகாந்தன் “
” எனக்கு மட்டும் சொல்லுங்கள் அண்ணா ! இவர் எந்த புரியைச் சேர்ந்தவர். அப்போது தான் நான் நன்றி உரை கூறுவேன். “
” சொல்லக்கூடாதது பெண்ணிடம் ரகசியம் என்று சொல்வார்கள். ஆனால் தங்கையிடம் சொல்லலாம்”
சொன்னான்.
(தொடரும்)