நான் இங்கிலாந்தில் லண்டன் நகரில் வாழ்ந்து கொண்டிருந்த ஒரு வருடம். 1966ல். அப்போது லண்டன் ரீஜெண்ட் தியேட்டரில் ‘THE MOUSE TRAP’(எலிப்பொறி) என்னும் ஒரு அகதா கிரிஸ்டியின் பிரபலமான திட்டமிட்டுக் கொலை புரிந்த கதையை ‘யார் அதை செய்தார்கள்?’(whodunit?) என்றவாறு அமைக்கப்பட்ட விறுவிறுப்பான நாடகத்தைப் பார்த்தேன்!
அந்த நாடகத்தைப் பற்றிய விவரங்களைச் சொன்னால் நீங்கள் அதை நம்பப்போவதில்லை!!!
1952ல் தொடங்கிய நாடகம் நான் பார்த்த நாள் 1966ல் அதே தியேட்டரில் 14 வருடங்களாக தினமும் ஹவுஸ் ஃபுல்லாக நடந்து 14*52*6 கணக்கில் 4368 ஷோக்களைத் தொட்டது.
இப்போது 2017ம் வருடம். இன்னமும் தினமும் தியேட்டரில் முழுமையாக நிரம்பி 65 வருடங்களுக்குப் பின் 26500 ஷோக்களையும் தாண்டி கின்னஸ் வேர்ல்டு ரிக்கார்டில் இடத்தை பெற்றிருக்கிறது!! !!
நாடகம் 1972ம் ஆண்டு பக்கத்திலேயே இருக்கும் பெரிய செயிண்ட் மார்ட்டின் தியேட்டருக்கு மாற்றப்பட்டு அதிலேயே தொடர்ந்து நடைபெற்று மக்களை மகிழ்வித்துக் கோண்டிருக்கிறது!
கனடாவில் ஒன்டாரியோ, டொராண்டோவில் டிரக் தியேட்டரில் 9000 ஷோக்களை நிரப்பி சிங்கப்பூர், கோலாலம்பூர் , பேங்க்காக் போன்ற அயல் நாடுகளிலும் போடப்பட்டிருக்கின்றது!! உலகம் முழுவதும் முக்கியமாக ஐரோப்பாவிலிருந்து நாடகம் பார்ப்பதற்கென்றே மக்கள் குவிந்தவண்ணம் இருக்கிறார்கள். நாடகம் இயங்கும் நேரம் 2 மணி 20 நிமிடங்கள்.
அந்த நாடகத்தின் கதை இப்படிப் போகிறது:
லண்டனில் உள்ள ஆள் நடமாட்டமில்லா ஒதுக்குப்புறத்தில் அமைந்துள்ள ஒரு சிறு கெஸ்ட்ஹௌஸாக மாற்றப்பட்ட ‘மான்க்ஸ்வெல் மேனர்’ என்னும் பழைய அரச எஸ்டேட். அதன் உரிமையாளர்கள் மாலி மற்றும் ஜைல்ஸ் என்னும் புது மண தம்பதிகள். முதல் வாடிக்கையாளர்களுக்காக கெஸ்ட்ஹவுஸை ரெடி செய்து காத்திருக்கிறார்கள். வெளியில் பலத்த சூறாவளிக் காற்றுடன் பனி மழை பொழிந்து கொண்டிருக்கிறது. தம்பதிகள் முதல் வாடிக்கையாளர்களின் வருகையைப் பாதிக்குமோ என்று பயம் கொள்கிறார்கள். அப்போது ரேடியோவில் அதே தெருவில் ஹோட்டலுக்கு அருகாமையில் உள்ள வீடு ஒன்றில் நடந்த மௌரீன் என்ற ஒரு பெண்மணியின் கொலையைப் பற்றி ஓர் அறிவிப்பு வருகிறது. அந்தச் செய்தி கெஸ்ட் ஹவுஸ் தம்பதிகளை அவ்வளவாகப் பாதிக்கவில்லை. கடைசியில் ஒருவர் பின் ஒருவராக ஐந்து வாடிக்கையாளர்கள் வந்து சேர்கிறர்கள். முதலாதவர் மன நிலையினால் சற்று பாதிக்கப்பட்ட கிரிஸ்டஃபர் என்னும் இளைஞர், தம்பதிகளுக்கு சிறிது மன உளைச்சலை கொடுக்கிறார். இரண்டாதவர் திருமதி பாயில். ஒன்றுமே பிடிக்காதவர். பிறர் உணர்ச்சிகளை மதிக்கத் தெரியாதவர். மூன்றாமவர் எப்போதும் பட்டாளத்தைப் பற்றியே பேசும் நடுத்தர வயதுள்ள மேஜர் மெட்காஃப். நான்காதவர் கேஸ்வெல் என்னும் இளைமையான பெண். ஏற்கெனவே ரேடியோவில் ஒலிபரப்பானக் கொலையைப் பற்றித் தனக்குத்தெரிந்த சில உண்மைகளைச் சொல்லுகிறார். திடீரென நுழைந்த பரவுசீனி என்னும் ஐந்தாதவர் தன் கார் பனிமழை சூறாவளியால் கவிழ்ந்து விட்டதாகக் கூறிக்கொண்டே வந்து சேருகிறார்.
அடுத்த நாள் போலிஸ் டிடெக்டிவ் சார்ஜெண்ட் ட்ராட்டர் கெஸ்ட் ஹவுசுக்கு வருகிறார். அவர் ரேடியோவில் அறிவிக்கப்பட்ட கொலை செய்யப்பட்டப் பெண்மணி மௌரீனைப் பற்றிப் பேசத் தொடங்குகிறார். சில வருடங்களுக்குமுன் நீதிமன்றம் மூன்று குழந்தைகளை, கவனித்துப் பாதுகாத்து வளர்க்க மௌரீன் வீட்டிற்கு அனுப்பியது. ஆனால் அங்கு குழந்தைகள் பாலியல் கொடுமைக்கு உள்ளானார்கள். அதை அறிந்த நீதிமன்றம் குழந்தைகளை அங்கிருந்து அகற்றுமுன் ஒரு குழந்தை மட்டும் பலியாகி இறந்துவிடுகிறது. மௌரீன் பெண்மணி அக்குழந்தைகளை பாலியல் கொடுமைக்கு உள்ளாக்கியவள். மௌரீன் சிறை தண்டனை பெற்றாள். தண்டனை முடிந்த பிறகு கெஸ்ட் ஹவுசிற்கு அருகில் வசித்து வந்தாள். அங்குதான் அவள் கொலை செய்யப்பட்டாள். அவள் வீட்டில் போலீஸ் கண்டுபிடித்த நோட்புக்கில் ‘மூன்று குருட்டு மூஞ்சூருகள்’ கொல்லப்படுவார்கள்’ என்றும் ‘கெஸ்ட் ஹவுஸ்’ மற்றும் ‘மௌரீன்’ விலாசங்களும் எழுதப்பட்டிருந்தன. அவள் உடலில் ஒரு குறிப்பில் ‘இதுதான் முதலாவது’ என்றும் எழுதப் பட்டிருந்தது.
திருமதி பாயில் மேஜரிடம், நீதிபதியாய் இருந்தபோது குழந்தைகளை மௌரீனிடம் அனுப்பியது அவர்தான் என்பதை ஒப்புக்கொள்கிறார். ட்ராட்டர் அங்கிருப்பவர்களில் யாரோஒருவர் கொலை செய்யப்பட்டவரோடு தொடர்பு கொண்டிருந்ததாக சந்தேகிக்கிறார். எல்லோரும் இதை மறுக்கின்றனர்.
திடீரென்று படிப்பறையில் திருமதி பாயில் கொலை செய்யப்பட்டு விட்டதாக மாலி அறிவிக்கிறார். ட்ராட்டர் எல்லோரையும் பாயில் கொலை செய்யப்பட்டபோது எங்கிருந்தார்கள் என்பதை விசாரணை செய்கிறார். அதற்கு உண்மையான பதில் கிடைக்கவில்லை. மூன்று குழந்தைகளில் மற்றொன்றின் இருப்பிடம் தெரியவில்லை. ஒவ்வொருவரும் மற்றவர்களைச் சந்தேகிக்கிறார்கள். அங்கிருப்பவர்கள் அனைவரும் மௌரீன் கொலையில் எதோ ஒரு காரணத்திற்காகத் தொடர்பு கொண்டிருப்பதாகத் தெரிகிறது. பட்டாளத்தில் சேர்ந்த விலாசமில்லாத எஞ்சியுள்ள பெரியதாய் வளர்ந்துள்ள குழந்தைதான் இப்போது முதலாம் சஸ்பெக்ட் எனவும் தெரியவருகிறது. எல்லோரும் அவர்களில் அந்த கொலைகாரன் பதுங்கியிருப்பதை உணர்கிறார்கள். யார் அந்தக் கொலையாளி? அடுத்து கொலைபடப்போகும் அந்த நபர் – ‘குருட்டு மூஞ்சூரு’ யார்? சஸ்பென்ஸ் அதிகரிக்கிறது. சிதறடிக்கும் முடிவில் ‘அந்த கொலையை செய்தவர் யார்’ என்ற உண்மையை நேர் மாறான திசையில் திருப்பிக் கொலைகாரனைக்காட்டி செயலின் நோக்கத்தையும் வெளிப்படுத்தி நம்மை ஒரு குலுக்கு குலுக்கிவிடுகிறார் அகதா கிருஸ்டி.
எலிஸபெத் ராணி II மூலம் உச்ச பிரிட்டிஷ் டேம்(dame) தலைப்பு பெற்ற அகதா கிரிஸ்டியின் உன்னத பாணியின் அதிர்வுறும் சஸ்பென்ஸில் அற்புதமான சிக்கல்கள் அடங்கிய சதித்திட்டம் எந்த மூலை முடுக்களிலெல்லாம் பதுங்கியிருக்கிறதோ அங்கெல்லாம் அவர்களின் ஸ்டைலின் முடிவை ஊகித்துத் தெரிந்துகொள்ள இயலாத தன்மையின் உயர்வு தெரியவருகிறது.
கொலைகாரர் கடைசியில் நாடகம் பார்ப்பவர்களை அவரைப் பற்றியும் கதையின் முடிவைப்பற்றியும், யாரிடமும் பகிர்ந்துகொள்ள வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்படுவதுடன் நாடகம் முடிவடைகிறது! நானும் ஓருவரிடமும் பகிரப்போவதில்லை!!!
ஆரம்பத்தில் ரிச்சார்ட் அட்டென்பரௌ நடித்து பின்னர் அடிக்கடி நடிகர்கள் மாற்றப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். மற்றும் ஓர் அதிசயம் கின்ன்ஸ் புக்கில் இடம் பெற்ற டெரிக் கைலெர் 4515 ஷோவிற்குப் பிறகு இன்றும் உயிருடன் இருக்கிறார்!! அவரின் குரல் FMல் தினமும் ஒலித்துக் கொண்டிருக்கிறது!!!
ஆஸ்கார் விருது பெற்ற இயக்குநர் ரிச்சர்டு அட்டன்பரோவின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக அமீர் ரஸா ஹுசைன் மற்றும் விராட் ஹுசைன் இயக்கத்தில் ‘தி மவுஸ் டிராப்’ நாடகத்துக்கு ஏர்செல் ஏற்பாடு செய்திருந்தது. 2016 ஆம் ஆண்டு செப்டம்பர் 21, 22 ஆகிய நாட்களில் சென்னை பார்க் ஷெராட்டன் ஹோட்டலில் நடைபெற்ற இந்நாடகத்தைப் பார்வையாளர்கள் வெகுவாக ரசித்தனர்.