சைக்கிள் காலம்!
அப்போது எனக்கு பத்து வயதிருக்கலாம் – கமலீஸ்வரன் கோயில் தெரு குள்ள ஸ்ரீதர் வாடகை சைக்கிளில் ரவுண்டு அடித்துக்கொண்டிருந்தான் – குரங்குப் பெடல் இல்லை – சீட்டில் உட்கார்ந்து!
அவன் ஓட்டிக்கொண்டிருந்தது, எங்கள் வீட்டில் இருந்த பச்சைக்கலர் ஹெர்குலெஸ் சைக்கிள் மாதிரி இல்லை. சின்னதாக நா..னே காலூன்றிக் கொள்ளுமளவுக்கு – (அந்த நீண்ட ’ஏ’காரம் என் குட்டை உருவத்தைக் குறிக்க!) – சிறுவர் சைக்கிள்!
தேய்ந்த பிரேக்குகள், துருவேறிய வீல் கார்டு, பெடலில் தொங்கும் நடு ரப்பர்க் கட்டை, 45 டிகிரியில் வானம் பார்த்த மரக்கட்டை சீட்டு, வளைந்த ஹாண்டில் பார், வாய்பிளந்த பிரேக் லீவர்கள் – முதன் முதலில் இந்த சைக்கிளை ஓட்டிய பையனுக்கு இப்போது குறைந்தது ஐம்பது வயாதாகியிருக்கலாம்!
ஏக்கமாயிருந்தது – ஸ்ரீதர் கொஞ்சம் பெரியவன், வயதில்! ஒரு ரவுண்டு கேட்டால் தரமாட்டான். பாட்டியும் காசு தரமாட்டாள் (ஒரவருக்கு பத்தோ, இருபதோ பைசாதான்) – “விழுந்து அடி பட்டுண்டா யாரு டாக்டர் வீட்டுக்கு அலையறது?”
சின்ன வயது சைக்கிள் அனுபவம் பற்றி ஒவ்வொருவரிடமும் நிச்சயம் ஒரு கதை இருக்கும் – சைக்கிள் அன்றைய வெகுஜன சினேகிதன்! எல்லோர் வீட்டிலும் ஒரு சைக்கிள் – அவசரத்துக்கு சட்டென்று ஒரு சட்டையை மாட்டிக்கொண்டு, பக்கத்துத் தெரு பொட்டிக்கடைக்குப் போய் ஒரணாவுக்குத் தக்காளியோ, வெங்காயமோ வாங்கி வர சைக்கிளை விட வேறு டிரான்ஸ்போர்ட் ஏது?
ஆறாம் கிளாஸில் என்னுடன் படித்த நடராஜனுக்கு இரண்டு காலிலும் போலியோ – மெடல் காலிபர்ஸ் காலை இறுக்க, சின்ன சைக்கிளில் ஒரு மாதிரி கோணலாய் உட்கார்ந்து பெடலடித்தபடி வருவான். ஹாண்டில்பார் பிடிகளிலும், சக்கர கார்டுகளிலும் கலர்க் கலராய்க் குஞ்சலங்கள் ஆடிவரும் – போலியோ குறையை அந்தச் சின்ன சைக்கிள் நட்புடன் தீர்த்து வைத்தது!
என் தாத்தா சைக்கிளோட்டி நான் பார்த்ததில்லை. எத்தனை மைல்களானாலும் நடராஜா சர்வீஸ்தான்! ஆனால் அப்பா, மார்கெட், சலவைக்கடை, ஆபீஸ் – எங்கும் சைக்கிளில்தான் செல்வார் – அம்மாவைவிட அவரது ஹெர்குலஸ் சைக்கிள்தான் அவருக்கு மிகவும் நெருக்கம்! மடித்துக் கட்டிய வேட்டியுடன் லாவகமாக முன்பக்கமாக நொடியில் ஏறிச் செல்வார்! நாளொன்றுக்கு முப்பது கிமீ சலிக்காமல் எழுபது வயது வரை சைக்கிளில் பவனி வந்திருக்கிறார். காலை நடையை விட இது சிறந்த உடற்பயிற்சி அவருக்கு!
’சைக்கிள் ஓட்டக் கற்றுக்கொள்வது’ ஒவ்வொரு சம்மரிலும் நடக்கும் ஒரு விவகாரம்! ஒருவர் சைக்கிளைப் பிடித்துக் கொண்டு பின்னால் ஓடிவர, கற்றுக்கொள்பவர் நேராகப் பார்த்துக்கொண்டு, ஹாண்டில்பாரை பாலன்ஸ் செய்துகொண்டு, பெடலை மிதிப்பது எந்த நாட்டியத்தை விடவும் நளினமானது, கீழே விழும் வரையில்! உடன் வருபவர் மூச்சுத் திணறி பாதியிலேயே நின்றுவிட, பேச்சுக்குரல் இல்லாததால் ஓட்டுபவர் திரும்பிப் பார்க்க, பயத்தில் பாலன்ஸ் தவறி விழுந்து தெருவில் சில்லறை பொறுக்குவதும், விழுப்புண்கள் பெறுவதும், சைக்கிள் சரித்திரத்தில் திரும்பத் திரும்ப வருவன!
படிப்படியாக இரண்டு வருடங்களில் நானே சைக்கிள் ஓட்டக் கற்றுக் கொண்டதில் எனக்குக் கொஞ்சம் பெருமைதான்! சைக்கிள் ஸ்டாண்ட் போடுவதில் தொடங்கி, சாயாமல் தள்ளிக்கொண்டு போவது, இடது காலைப் பெடல் மீது வைத்துக்கொண்டு,வலது காலால் தரையில் உந்தி உந்தி சில நிமிடங்கள் கால் தரையில் படாமல், சைக்கிள் பெடல் சவாரி செய்வது, கொரங்கு (?குரங்கு) பெடல் அடிப்பது என்று சுயப்பயிற்சி! பிளாட்பாரமோ, மைல் கல்லோ – அதன் மீது காலூன்றி முதலில் பாரில், பின்னர் சீட்டில் அமர்ந்து சைக்கிள் சவாரி!
இதற்குள் சுள்ளி பொறுக்கிச் சென்ற செல்லாத்தாவின் பின்புறம் சைக்கிளால் மோதி – ப்ரேக் பிடிக்காமல் – கெட்ட வார்த்தையில் வாங்கிய திட்டு, மாது மாமாவின் புது வெள்ளை வேட்டியில் முன்சக்கரம் பட்டு அழுக்கானதற்கான திட்டு, கட்டியிருந்த நாலு முழ வேட்டி, சைக்கிள் செயினில் மாட்டிக் கிழிந்து, எண்ணை/கிரீஸ் கறையில் கலர் மாறியது, தெரு முனையில் திரும்பிய குதிரை வண்டியைப் பார்த்து மிரண்டு, இடதுபுறம் சைக்கிளோடு சரிந்து, தெருவோரச் சாக்கடையில் சங்கமித்தது எல்லாம் சைக்கிள் கால வரலாற்று உண்மைகள்!
இரண்டு கைகளையும் விட்டு, சிட்டுக்களுக்கு முன்னால் சீன் போட்ட மறு நிமிடம், ஹாண்டில்பார் நொடிந்து ‘தடால்’ என கீழே விழுந்து தரை பெருக்காத வாலிபர்கள் குறைவு!
அந்தக்காலத்தில்,இரவு நேரத்தில் விளக்கில்லாமல் சைக்கிளில் போவது குற்றம். அதற்கான விளக்கை தினமும் துடைத்து, மண்ணெண்னை விட்டு ரெடி செய்வது ஒரு வேலை! பின்னால் வந்த முன்னேற்றம், சக்கரத்தில் உராய்ந்தபடி டைனமோவும் – அதனால் பிரகாசமாய் எரியும் கூம்பு வடிவ எலெக்ட்ரிக் லைட்டும்!
நாணல் படத்தில் விளக்கு இல்லை என நாகேஷை நடுரோட்டில் போலீஸ்காரர் நிறுத்த, மெதுவாய் அவரைச் சுற்றி வந்து, தோள்மீது கைபோட்டு சைக்கிளை நிறுத்துவார் – “பிளாட்ஃபாரமும் இல்லே, லைட் போஸ்ட்டும் இல்லே; நடு ரோட்டுல நிக்கச் சொன்னா, எப்படி சைக்கிள நிறுத்தறது? அதான் இப்படி…” என்பார்!
தமிழ் சினிமாக்களில் காதல் சொல்லும் சைக்கிள்கள் – நீதிக்குப் பின் பாசம் (எம்ஜிஆர் – சரோஜாதேவி), கல்யாணப் பரிசு (ஜெமினி – சரோஜாதேவி). அண்ணாமலை (ரஜினி, குஷ்பு) ! சைக்கிள் ஓட்டும் போதுதான் தத்துவப் பாட்டும் வரும் – பாவமன்னிப்பு (சிவாஜி). ஏழ்மையின் சின்னமும் சைக்கிள்தான் (நிறைய படங்கள்).
தபால்காரர், பால்காரர், பேப்பர் போடுபவர் எனப் பலரின் உற்ற தோழன் சைக்கிள் வண்டிதான்!
இரண்டு, மூன்று சக்கர சைக்கிள், சர்க்கஸ் பஃபூன் ஓட்டும் ஒரு சக்கர சைக்கிள், இரண்டுபேர் பெடல்செய்து போகும் மூன்று சக்கர சைக்கிள் எனப் பல ரகங்கள்.
முன்பக்க பார் இல்லாத லேடீஸ் சைக்கிள் பிரத்தியேகமாக பெண்களுக்கானது – ஓர் ஆண் அதை ஓட்டும்போது, பெண்ணுக்கான நளினத்துடன் ஓட்டுவதைப் போல் தோன்றுவது விந்தையானது!
சைக்கிள்கள் ஒரு தலைமுறையின் கலாச்சாரத்தைச் சொல்கின்றன. இன்றும் கிராமங்களின் முக்கியமான போக்குவரவு சாதனமாக இருப்பது சைக்கிள்கள்தான். காரியரில் தேங்காய்க் குலை, வைக்கோல் பிரி, கோழிகள் அடைத்த கூடை என வரப்புகளில் வளைந்து, வளைந்து சைக்கிளை ஓட்டிச்செல்வது அழகாய் இருக்கும்!
ஒலிபெருக்கி அலற, சுற்றிலும் காகிதத் தோரணங்கள் தொங்க, 24 மணி நேரம் இடைவிடாத சைக்கிள் சவாரி, ஊர்ப் பக்கங்களில் பிரபலம்.
நேரத்திற்குக் குழாய் வைத்த எவர்சில்வர் கேனில் டீயுடன் வரும் சைக்கிளுக்கு மவுசு கொஞ்சம் கூடதான்!
இன்று சைக்கிள் ஓட்டுவது ஒரு பயிற்சியாகச் செய்யப்படுகிறது! சுரங்கத்தில் வேலை செய்பவரைப்போல முன் விளக்குடன் ஒரு ஹெல்மெட், ஸ்போர்ஸ் ஷூவுடன் இருபது, முப்பது கிமீ சைக்கிள் சவாரி செய்யும் இளைஞர்கள் (ஞிகளும்) இப்போது நகர்ப்புறங்களில் அதிகம் காணப்படுகின்றனர்!
வீட்டுக்குள் காலைப் பயிற்சி சக்கரமில்லாத ‘ஸ்டாடிக்’ சைக்கிளில் தொடங்குகிறது – அது வெளியில் சைக்கிளில் சுற்றுவதற்கு ஈடாகுமா?