இதோ குப்தர் வருகிறார் ! பராக்! பராக் !
பகலவன் உலகை ஒளியூட்டுமுன்…
அது முதலில் அடிவானத்திலிருந்து சிவப்புக் கம்பளம் வீசுகிறது.
இந்தியாவின் பொற்காலம் குப்தர்கள் ஆட்சியில் 300 ஆண்டுகள் சூரியனைப்போல் ஒளிவீசியது.
சந்திரகுப்தர்-1, சமுத்திரகுப்தர், சந்திரகுப்தர்-2 என்று மாமன்னர்கள் நாட்டை பொற்காலமாக்கினர்.
ஆனால் அதற்கு அடித்தளமிட்டு சிவப்புக் கம்பளம் வீசியது யாரென்று சற்று பார்ப்போம்.
முதலில் ஸ்ரீகுப்தன்!
குஷான பேரரசில் பெரு நிலக்கிழாராக இருந்த ஸ்ரீகுப்தன் தற்கால பிகார் மாநிலமான மகதத்தில் கி பி 240-இல் குப்தப் பேரரசை நிறுவி, கி பி 280 முடிய ஆண்டான்.
ஸ்ரீகுப்தன்… சரித்திரப்பாடத்தில் ஆர்வம் கொண்டவன் போலும்!
முன்னாளில் பிம்பிசாரன் செய்தது போலவே ..
லிச்சாவி நாட்டு இளவரசியை மணந்து மகதத்தை சீதனமாகப் பெற்று மகத நாட்டை விரிவு படுத்தினான்.
வைணவ மதத்தைச் சேர்ந்திருந்தாலும் – சீனாவிலிருந்து வந்த புத்த துறவிகளுக்கு நாளந்தா அருகிலுள்ள மிருகஷிகவன என்ற இடத்தில் ஒரு கோவிலைக் கட்டிக் கொடுத்தான்.
பின்னாள் வந்த இரண்டாம் சந்திரகுப்தனின் மகள் பிரபாவதி குப்தா ஸ்ரீகுப்தனை ‘மகாராஜா ஸ்ரீகுப்தன்” என்றும் குப்த சாம்ராஜியத்தை நிறுவினவர் (ஆதி ராஜா) என்றும் ‘புனே கல்வெட்டுகளில்’
குறித்திருக்கிறாள்.
ஸ்ரீகுப்தரின் மகன் கடோற்கஜன் குப்த நாட்டை கி பி 280 முதல் 319 முடிய ஆண்டான்.
(கடோற்கஜ குப்தன்)
இவர்களது தலைநகரம் – பாடலிபுத்திரம்.
அது … பிம்பிசாரன் காலத்திலிருந்து மௌரியர்கள் காலம் கடந்து பல சாம்ராஜ்யங்களின் மாபெரும் தலைநகரம்.
ருத்ரதாமன் தொடங்கிய சம்ஸ்கிருத மொழி குப்தர்களின் ஆட்சி மொழி ஆயிற்று.
கடோற்கஜ குப்தனின் மகன் முதலாம் சந்திர குப்தன்…
மகாராஜாதிராஜா என்று பட்டம் சூட்டப்பட்டவன்.
மனைவி – குமாரதேவி.
அவள்.. லிச்சாவி நாட்டு இளவரசி.
மனைவி அமைவதெல்லாம்…
இறைவன் கொடுத்த வரம்…
அது சில மகாராஜாக்களை மகாராஜாதிராஜாவாக ஆக்குகிறது!!
குப்தர் பரம்பரை அப்போது தான் பிறந்திருந்தது.
ஆனால் லிச்சாவி பரம்பரை பல நூற்றாண்டுகளாக புகழ் பெற்று விளங்கியது.
மணாளன் மன்னாதி மன்னனாக இருக்கும் போது …
மனைவியர் பெரும்பாலும் ‘மஹாராணி’ என்று மட்டுமே பெயர் எடுப்பர்.
அதில் வெகு சில ராணிகளே அரசியலிலும் பெயர் பெற்றவர்கள்.
குமார தேவி இரண்டாம் ரகத்தைச் சேர்ந்தவள்.
பெரும் மதிப்பும் மரியாதையும் அளிக்கப்பட்டவள்!
நாணயத்தில் உருவம் பொறிக்கப்பட்ட முதல் அரசி – குமாரதேவி!
உலக சரித்திரத்திலே இது முதல் முறை!!
முதலாம் சந்திர குப்தருக்குப் பின் ஆட்சிக்கு வந்த அவர் மகன் சமுத்திர குப்தர் தன்னை பெருமையுடன் ‘லிச்சாவி தகித்ரா’ என்று அழைத்துக் கொண்டு – தனது தாய் வழியைப் பெருமைப் படுத்துகிறார்.
‘குப்தன் மகன்’ என்று கூறாமல் ‘லிச்சாவி மகளின் மகன்’ என்று தன்னைக் கூறி மகிழ்கிறான்.
இப்படியாக… முதலாம் சந்திரகுப்தன் குப்தப்பேரரசை துவக்கிவைத்தான்.
இங்கு ஒரு கதை விரிகிறது.
சந்திரகுப்தனுக்கு இரண்டு மகன்கள்.
பெரியவன் கச்சா!
சிறியவனின் பிற்காலப் பெயர் சமுத்திரகுப்தன்!
சமுத்திரகுப்தன் மாவீரன்.
இருபத்தைந்து வயது கொண்ட வாலிபன்.
உடல் வலி கொண்ட வாட்டசாட்டமான பலசாலி.
சந்திரகுப்தன் அடைந்த போர் வெற்றிகளுக்கு சமுத்திரகுப்தனின் வீரமே காரணமாக இருந்தது.
அவன் உடலில் போர்க்களத்தில் பெற்ற தழும்புகள் நூற்றுக்கும் மேலானவை.
(பொன்னியின் செல்வர் ரசிகர்களே! இவன் அண்ணன் பழுவேட்டரையின் அண்ணன்!!)
சந்திரகுப்தன் சமுத்திரகுப்தனைப் பெரிதும் விரும்பினான்.
சந்திரகுப்தன் வயது முதிர்ந்து நோய்வாய்ப்பட்டிருந்த சமயம்…
தனக்குப் பின் யார் அரசனாவது என்று முடிவு செய்யும் நேரம்..
அரசவையைக் கூட்டினான்.
மந்திரிகள் குழுமியிருந்தனர்.
மன்னரின் ஆலோசகர்கள், தளபதிகள் தங்கள் இருக்கையில் இருந்ததனர்.
இளவரசர்கள் மன்னன் அருகே தங்கள் ஆசனத்தில் அமர்ந்திருந்தனர்.
சந்திரகுப்தன் மெல்ல எழுந்தான்.
‘அனைவருக்கும் வணக்கம்!
இத்துணை நாள் என்னுடன் பயணித்து இந்த குப்தராஜ்யத்தை உருவாகிய உங்கள் அனைவருக்கும் நன்றி.
இந்த குப்த ராஜ்ஜியம் – மேலும் பல நாடுகளை வென்று – மாபெரும் சாம்ராஜ்யமாக வர வேண்டும்.
பின்னால் வரும் குப்த மன்னர்கள் கலை, கல்வி, இலக்கியம், அறிவியல் என்று பல துறைகளிலும் இது வரை நாம் காணாத சாதனை படைக்க வேண்டும்.
மௌரியர்கள் ஆட்சியை விட சிறப்பாக நமது ராஜ்ஜியம் இருக்கவேண்டும்.
அவர்கள் மக்களுக்கு நிகழ்த்திய கொடுமைகளை குப்தர்கள் நிகழ்த்தகூடாது.
நாட்டில் அமைதியும் ஒழுக்கமும் என்றும் நிலவ வேண்டும்.
இது இந்த பார்த்திபனின் கனவு!
இதை நிறைவேற்றும் பெரும் பொறுப்பு அடுத்து வரும் மன்னர் கரங்களில் இருக்கிறது.
நான் மன்னன் பதவியிலிருந்து விலகும் நாள் வந்து விட்டது.
எனக்குப்பின் குப்த மன்னனாக நான் அறிவிப்பது….”
இங்கு ஒரு மௌனம் …
அனைவரது இதயமும் அந்த மௌனத்தில் நின்று விட்டது…
‘சமுத்திர குப்தன்’- என்று கூறினான்.
சபையில் அனைவரும் ‘ஆஹா’ என்று மகிழ்ச்சியுடன் கரவொலி எழுப்பினர்.
மூத்தவன் கச்சாவின் முகம் வெகு பயங்கரமாக மாறியது.
இதை அவன் எதிர்பார்த்திருக்கிறான் என்று தோன்றியது.
அரசவையில் தன் ஆட்களை அவன் குவித்திருந்தான்.
‘தந்தையே.. மூத்தோன் இருக்க இளையோன் அரசாள்வது என்பது நடக்காது. இந்த அரியாசனம் எனது”
அவனது ஆட்கள் மன்னரை அரியணையிலிருந்து அப்புறப்படுத்தினர்.
கச்சா அரியணையில் அமர்ந்தான்.
‘இன்று முதல் நானே குப்த மன்னன்’ என்று பிரகடனம் செய்தான்.
அவையோர் திக்பிரமையில் உறைந்து நின்றனர்.
கச்சாவின் வீரர்கள் சமுத்திரகுப்தனை நெருங்கு முன் அவன் அரண்மனையை விட்டு வெளியேறி விட்டான்.
கச்சாவின் வீரர்கள் சமுத்திரகுப்தனைத் தேடிக்கொண்டிருந்தனர்.
கச்சாவின் சட்டவிரோதமான அரசு தொடர்ந்தது.
கச்சா தன் பெயரில் தங்க நாணயங்கள் வெளியிட்டான்.
மாவீரன் சமுத்திரகுப்தன் விரைவில் படை திரட்டி- கச்சாவை வென்று – குப்த ராஜ்யத்திற்கு மன்னனாக முடி சூட்டிக்கொண்டான்.
இந்தியாவின் பொற்காலம் ஊர்ஜிதப்படுத்தப்பட்டது.
இனி நடப்பது விரைவில் காணுவோம்…